விரோதம் எப்போதாவது முடிவுக்கு வருமா?
நீங்கள் வெகு சில தொலைக்காட்சி செய்தி அறிக்கைகளை மட்டுமே பார்த்திருந்தாலும்கூட விரோதத்தைப் பற்றி நன்கு அறிய வந்திருப்பீர்கள். இவ்வுலகில் ஏறக்குறைய தினந்தோறும் நடைபெறும் படுகொலைகள் விட்டுச்செல்லும் இரத்தக்கறை படிந்த தடத்துக்குப் பொதுவாக அடிப்படையாய் அமைவது விரோதம் என்ற பண்பே. பெல்ஃபாஸ்ட்டிலிருந்து பாஸ்னியா வரை, ஜெரூசலமிலிருந்து ஜோஹன்ஸ்பர்க் வரை, உலகின் பல்வேறு பாகங்களில் அப்பாவிகளாக தெரு ஓரங்களில் நின்றுகொண்டிருப்பவர்கள் இரக்கமின்றி கொலை செய்யப்படுகின்றனர்.
தாக்குபவர்களுக்கு இப்படிப்பட்ட துன்பங்களுக்கு ஆளாகுபவர்களைப் பொதுவாக முன்பின் தெரியாது. “எதிராளியின்” பக்கத்தைச் சேர்ந்தவர்களாயிருப்பதே அவர்கள் செய்யும் ஒரே “குற்றம்.” பழிக்குப் பழிவாங்கும் இந்தக் கொடூரமான செயலில், இப்படிப்பட்ட சாவுகள் அதற்கு முன்பாக செய்யப்பட்டிருந்த ஏதோ அட்டூழியத்துக்கான பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் அல்லது “ஒரு குறிப்பிட்ட இனத்தைப் பூண்டோடு அழிப்பதற்காக” இருக்கலாம். ஒவ்வொரு சுற்று வன்முறையும் பகைமையுணர்ச்சியுள்ள தொகுதிகளுக்கிடையே உள்ள விரோதத்தை அதிகரிக்கிறது.
இப்படி தொடர்ச்சியாக நடைபெறும் திடுக்கிடவைக்கும் பயங்கரமான விரோதங்கள் அதிகரித்து வருவதாக தோன்றுகிறது. பழங்குடி மக்கள், இனங்கள், குலங்கள் அல்லது மதத் தொகுதிகளுக்கிடையே ஓயாச் சண்டை சச்சரவுகள் எழும்பிக்கொண்டேயிருக்கின்றன. எப்போதாவது விரோதம் முற்றிலுமாக நீக்கப்படமுடியுமா? அதற்கு பதிலளிக்க, விரோதத்தை உண்டுபண்ணும் காரணங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும், ஏனென்றால் நாம் விரோதிக்கும் இயல்போடு பிறக்கவில்லை.
விரோதத்தின் விதைகளை விதைத்தல்
சரஜெவோவிலிருக்கும் ஸ்லாட்டா ஃபெலிபோவிக் என்ற ஒரு இளம் பாஸ்னிய பெண் விரோதத்தைக் காண்பிக்க இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. அவள் தன்னுடைய டயரியில் இன வன்முறையைப் பற்றி கருத்தாழமுள்ள விதத்தில் பின்வருமாறு எழுதுகிறாள்: “ஏன்? எதற்காக? யார் இந்தக் குற்றத்துக்குக் காரணம்? என்று நான் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். நான் கேட்கிறேன், ஆனால் அதற்குப் பதில் ஒன்றும் கிடைப்பதில்லை. . . . என்னுடைய சிநேகிதிகள், எங்களுடைய நண்பர்கள், எங்களுடைய குடும்பத்தார் மத்தியில் செர்பியர்கள், குரோஷியர்கள், முகமதியர்கள் இருக்கின்றனர். . . . நாங்கள் நல்ல ஜனங்களோடு கூட்டுறவு கொள்கிறோம், கெட்டவர்களோடு அல்ல. நல்லவர்கள் மத்தியில் செர்பியர்களும் குரோஷியர்களும் முகமதியர்களும் இருப்பது போல கெட்டவர்கள் மத்தியிலும் இருக்கின்றனர்.”
மறுபட்சத்தில், வயதில் பெரியவர்களாயிருக்கும் அநேகர் வேறுவிதமாக நினைக்கின்றனர். விரோதிப்பதற்குப் போதுமான காரணம் இருப்பதாக அவர்கள் நினைக்கின்றனர். ஏன்?
அநீதி. விரோதத்தை அதிகரிப்பதற்கு அநேகமாக அடிப்படையான காரணமாக இருப்பது அநீதியும் ஒடுக்குதலும் ஆகும். பைபிள் சொல்கிறபடி, ‘ஒடுக்குதல் ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்.’ (பிரசங்கி 7:7, NW) ஜனங்கள் கஷ்டங்களுக்கு அல்லது கொடுமைகளுக்கு ஆளாகும்போது, தங்களை ஒடுக்குகிறவர்களிடமாக விரோதத்தை வளர்த்துக்கொள்வது அவர்களுக்குச் சுலபமானதாயிருக்கிறது. அது ஒருவேளை நியாயமற்றதாக அல்லது ‘பைத்தியக்காரத்தனமானதாக’ இருந்தாலும்கூட, அந்த விரோதம் பொதுவாக ஒரு முழு ஜனத்தொகுதிக்கு எதிராகவே காண்பிக்கப்படுகிறது.
விரோதத்துக்கு முக்கியமான காரணம் அநீதி என்றாலும்கூட, அது மெய்யான அல்லது கற்பனை செய்யப்பட்ட அநீதியாக இருந்தாலும் அது மட்டுமே அதற்கு காரணம் அல்ல. மற்றொரு காரணம் தப்பெண்ணம் ஆகும்.
தப்பெண்ணம். தப்பெண்ணம் பொதுவாக ஒரு குறிப்பிட்ட இனம் அல்லது தேசிய தொகுதியைப் பற்றிய அறியாமையிலிருந்து வருகிறது. கேள்விப்பட்டதன் காரணமாகவோ, பரம்பரை விரோதத்தின் காரணமாகவோ அல்லது ஒன்றிரண்டு நபர்களோடு கொண்டிருந்த கெட்ட அனுபவத்தின் காரணமாகவோ சிலர் ஒரு முழு இனம் அல்லது தேசிய தொகுதிக்கே கெட்ட குணங்கள் இருப்பதாக நினைத்துவிடக்கூடும். தப்பெண்ணம் வேர்கொண்டுவிட்டால், அது சத்தியத்துக்கு ஜனங்களைக் குருடாக்கிவிடக்கூடும். “நாம் சில நபர்களை விரோதிக்கிறோம் ஏனென்றால் நமக்கு அவர்களைப்பற்றி தெரியாது; நாம் அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ளமாட்டோம், ஏனென்றால் நாம் அவர்களை விரோதிக்கிறோம்,” என்று ஆங்கிலேய எழுத்தாளர் சார்ல்ஸ் கேலப் கோல்ட்டன் தன் அபிப்பிராயத்தைத் தெரிவித்தார்.
மறுபட்சத்தில், அரசியல்வாதிகளும் சரித்திர ஆசிரியர்களும் வேண்டுமென்றே தப்பெண்ணத்தை அரசியல் அல்லது தேசியம் சார்ந்த நோக்கங்களுக்காக முன்னேற்றுவிக்கலாம். ஹிட்லர் அதற்கு முதன்மையான உதாரணமாய் இருந்தான். ஹிட்லர் இளைஞர் இயக்கத்தில் முன்பு அங்கத்தினராய் இருந்த கேயார்ஜ் என்பவர் சொல்கிறார்: “நாசிக்களின் பிரச்சாரம் முதலில் யூதர்கள், பின்பு ரஷ்யர்கள், ‘பின்பு நாசி ஆட்சியின் விரோதிகள்’ அனைவரையும் விரோதிக்கும்படி எங்களுக்குக் கற்பித்தது. ஒரு பருவவயதினனாக, என்னிடம் சொல்லப்பட்டதை நான் நம்பினேன். என்னை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதை பின்பு கண்டுபிடித்தேன்.” நாசி ஜெர்மனியிலும் மற்ற இடங்களிலும், விரோதத்துக்கு மற்றொரு காரணமாய் இருக்கும் நாட்டுப்பற்றின் அடிப்படையில், இனத்தைப் பற்றிய தப்பெண்ணம் நியாயமென காட்டப்படுகிறது.
நாட்டுப்பற்று, குலமரபுப்பற்று, இனப்பற்று. விரோதத்தை வளர்த்துக்கொள்ளுதல் என்ற தன் ஆங்கில புத்தகத்தில் சரித்திர ஆசிரியர் பீட்டர் கே முதல் உலக யுத்தம் ஆரம்பித்தபோது என்ன நடந்தது என்பதை விவரிக்கிறார்: “ஒன்றோடொன்று முரண்படும் பற்றுகளுக்கிடையே இருந்த போராட்டத்தில் நாட்டுப்பற்று மற்றவற்றைக்காட்டிலும் அதிக பலமுள்ளதாக நிரூபித்தது. ஒருவருடைய தேசத்தின் மீதான பற்றும், அத்தேசத்தின் எதிரிகளினிடமாக விரோதமும் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்கு அதிக சக்திவாய்ந்த காரணமாக நீண்ட பத்தொன்பதாம் நூற்றாண்டு தோற்றுவித்திருக்கிறது.” ஜெர்மானிய தேசிய உணர்ச்சி போரிடுவதற்கு விருப்பத்தைத் தெரிவிக்கும் “விரோதப் புகழ்பாடல்” என்றறியப்படும் ஒன்றைப் பிரபலப்படுத்தியது. பிரிட்டனிலும் பிரான்ஸிலும் விரோதத்தைக் கிளப்பிவிட்டவர்கள், ஜெர்மன் போர்வீரர்கள் பெண்களைக் கற்பழித்து குழந்தைகளைக் கொலை செய்ததாக பொய்க்கதைகளைக் கட்டினார்கள். சிக்ஃபிரெட் சசூன் என்ற ஆங்கிலேய போர்வீரர் பிரிட்டிஷ் போர் பிரச்சாரத்தின் சுருக்கத்தைப் பின்வருமாறு விவரிக்கிறார்: “ஜெர்மானியர்களின் உயிரைக் குத்தி எடுப்பதற்கென்றே மனிதன் படைக்கப்பட்டதாக தோன்றியது.”
நாட்டுப்பற்றைப் போன்று, ஒரு குறிப்பிட்ட இனத்தொகுதியை அல்லது குலத்தை அளவுக்குமீறி புகழ்வது, மற்ற குலங்கள் அல்லது இனத்தொகுதிகளின் விரோதத்தைத் தூண்டிவிடலாம். இன வேறுபாட்டுணர்ச்சி மேற்கத்திய ஐரோப்பாவையும் வட அமெரிக்காவையும் இன்னும் தொல்லைபடுத்திக்கொண்டே இருக்கையில், அநேக ஆப்பிரிக்க தேசங்களில் குலவேறுபாட்டுணர்ச்சி வன்முறையைத் தொடர்ந்து தூண்டிக்கொண்டேயிருக்கிறது. நாட்டுப்பற்றோடு இணங்கிப்போகக்கூடிய மற்றொரு பிரிவுண்டாக்கும் காரணி மதம்.
மதம். உலகில் நடைபெறும் சண்டைகளுள், கட்டுப்படுத்துவதற்கு அதிகக் கடினமாயிருக்கும் பெரும்பாலான சண்டைகள் பலத்த மதசம்பந்தமான காரணத்தைக் கொண்டிருக்கின்றன. வட அயர்லாந்து, மத்திய கிழக்கு நாடுகள், இன்னும் வேறு இடங்களில் உள்ள மக்கள் தாங்கள் அப்பியாசித்து வரும் மதத்தின் காரணமாக விரோதிக்கப்படுகின்றனர். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஜானத்தன் ஸ்விஃப்ட் என்ற ஒரு ஆங்கிலேய ஆசிரியர் தன் அபிப்பிராயத்தைத் தெரிவித்தார்: “விரோத மனப்பான்மையைக் காண்பிப்பதற்கு நம்மிடம் போதுமான மத செல்வாக்கு இருக்கிறது, ஆனால் நாம் ஒருவரையொருவர் நேசிப்பதற்கு நம்மிடம் போதுமான மத செல்வாக்கு இல்லை.”
1933-ல் ஆஸ்நாபிரூக் பிஷப்பிடம் ஹிட்லர் இவ்வாறு தெரிவித்தார்: ‘யூதர்களைப் பற்றிய விஷயத்தில், கத்தோலிக்க சர்ச் 1,500 வருடங்களாக கைக்கொண்டிருக்கும் அதே கொள்கையை நான் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்.’ ஹிட்லர் பகைமையுணர்ச்சியோடு திட்டமிட்டு செய்த ரஷ்ய நாட்டு யூதர்களின் படுகொலைகளைப் பெரும்பாலான ஜெர்மன் சர்ச் தலைவர்கள் கண்டனம் செய்யவேயில்லை. “தங்கள் சவத்தை தகனம் செய்யவேண்டும் என்று விருப்பம் தெரிவித்து மரண சாசனத்தில் எழுதி வைத்திருந்த கத்தோலிக்கர்களை சர்ச் சபைநீக்கம் செய்தது . . . ஆனால் சித்திரவதை முகாம்கள் அல்லது மரண முகாம்களில் வேலை செய்வதற்கு அது அவர்களைத் தடைசெய்யவில்லை” என்று பால் ஜான்சன் என்பவர் கிறிஸ்தவ மதத்தின் சரித்திரம் என்ற தன் ஆங்கில புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
சில மதத் தலைவர்கள் விரோதத்தைப் பொறுத்துக்கொள்வதற்கும் மேலாக சென்றுவிட்டிருக்கின்றனர்—அதை புனிதமானதாக ஆக்கியிருக்கின்றனர். 1936-ல், ஸ்பானிய உள்நாட்டுப் போர் ஆரம்பித்தவுடன், போப் பயஸ் XI ‘கடவுளை எதிர்க்கும் சாத்தானிய விரோதத்தைக் கொண்டிருந்த’ குடியரசு ஆதரவாளர்களைக்—குடியரசு ஆதரவாளர்களின் சார்பாக கத்தோலிக்க பாதிரிகள் இருந்தபோதிலும்கூட—கண்டனம் செய்தார். அதே போல், உள்நாட்டுப் போரின் போது தலைமை குருவாயிருந்த கார்டினல் கோமா, ‘ஆயுதங்கள் தரித்து போர் செய்யாமல் அமைதியை நிலைநாட்டுவது கூடாதகாரியம்’ என்று சொன்னார்.
மத விரோதம் குறைந்துவருவதாக எந்த அறிகுறியும் இல்லை. கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் அதிகாரிகள் யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக விரோதத்தைத் தூண்டிவிட்டுக்கொண்டிருந்த விதத்தை 1992-ல் எல்லைகளற்ற மனித உரிமைகள் என்ற ஆங்கில பத்திரிகை வெளிப்படையாக கண்டனம் செய்தது. அது அநேக உதாரணங்களை எடுத்துக்காட்டியது, அவற்றில் இரண்டு 14 வயது சாட்சிகளுக்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்த கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பாதிரியின் விஷயத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தது. என்ன குற்றச்சாட்டு? ‘அவருடைய மதத்தை மாற்றுவதற்கு அவர்கள் முயற்சி எடுத்ததாக’ அவர்களை அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
விரோதத்தின் விளைவுகள்
உலகெங்கிலும், அநீதி, தப்பெண்ணம், நாட்டுப்பற்று, மதம் ஆகியவற்றின் மூலம் விரோதத்தின் விதைகள் விதைக்கப்பட்டு நீர்பாய்ச்சப்படுகின்றன. அதனால் ஏற்படும் தவிர்க்கமுடியாத பலன் கோபம், ஆக்கிரமிப்பு, போர், அழிவு. 1 யோவான் 3:15-ல் உள்ள பைபிள் கூற்று இதனுடைய வினைமையான தன்மையைக் காண நமக்கு உதவுகிறது: “தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்.” நிச்சயமாகவே, விரோதம் செழித்தோங்கும் இடத்தில்—சமாதானம் இருந்தாலும்கூட—அது நிலையற்றதாய் இருக்கும்.
நோபல் பரிசு பெற்றவரும், சர்வநாசத்திலிருந்து தப்பிவந்தவருமான ஏல் விசெல் என்பவர் எழுதுகிறார்: “என்ன நடந்தது என்பதைக் குறித்து சாட்சிகொடுப்பது தப்பிவந்தவரின் கடமை . . . இப்படிப்பட்ட காரியங்கள் நடைபெறக்கூடும், தீமை கட்டவிழ்த்துவிடப்படலாம் என்பதைக் குறித்து நீங்கள் ஜனங்களை எச்சரிக்க வேண்டும். இன விரோதம், வன்முறை, உருவ வழிபாடு—இவை இன்னும் தழைத்தோங்குகின்றன.” விரோதம் என்பது படிப்படியாகக் குறைந்து தானாகவே அணைந்துவிடும் தீ அல்ல என்பதற்கு 20-ம் நூற்றாண்டின் சரித்திரம் அத்தாட்சி அளிக்கிறது.
மனிதரின் இருதயங்களிலிருந்து விரோதம் எப்போதாவது வேரோடு அகற்றப்படமுடியுமா? விரோதம் எப்போதும் அழிவுண்டாக்குவதாய் இருக்கிறதா அல்லது பயனுண்டாக்கும் விளைவுகளைக் கொண்டிருக்கிறதா? அதை நாம் பார்க்கலாம்.