உலகமுழுவதிலும் விரோதத்துக்கு ஓர் முடிவு
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சிறுபான்மைத் தொகுதியினர் விரோதத்துக்கு இலக்கானார்கள். பூர்வ கிறிஸ்தவர்களிடமாக ரோமர்கள் கொண்டிருந்த பொதுவான மனப்பான்மையை டெர்ட்டூலியன் விளக்குகிறார்: “வானங்கள் மழை பொழியாவிட்டால், நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டால், பஞ்சமோ அல்லது வியாதியோ வந்தால், உடனடியாக கூக்குரல், ‘கிறிஸ்தவர்களை சிங்கங்கள் தின்பதற்காக கொண்டுபோங்கள்!’ என்று இருக்கும்.”
பூர்வ கிறிஸ்தவர்கள் விரோதத்துக்கு இலக்கானவர்களாக இருந்தபோதிலும், இழைக்கப்பட்ட அநீதிக்காக பழிதீர்த்துக்கொள்ளும் சோதனையை எதிர்த்தனர். தம்முடைய புகழ்பெற்ற மலைப்பிரசங்கத்தில் இயேசு கிறிஸ்து சொன்னார்: “உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; . . . உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.”—மத்தேயு 5:43, 44.
‘ஒரு சத்துருவை பகைப்பதே’ செய்யவேண்டிய சரியான காரியம் என்று யூதர்களின் வாய்மொழியான பாரம்பரியம் வலியுறுத்தியது. ஆனால், இயேசு, நம்முடைய நண்பனை மட்டுமல்ல, நாம் நம்முடைய சத்துருவைச் சிநேகிக்க வேண்டும் என்று சொன்னார். இது கடினம், ஆனால் கூடாதகாரியமல்ல. சத்துருவை சிநேகிப்பது என்பது அவருடைய எல்லா வழிகளையும் அல்லது செயல்களையும் விரும்புவதை அர்த்தப்படுத்துகிறதில்லை. மத்தேயுவின் பதிவில் காணப்படும் கிரேக்க சொல் அகாப்பே என்ற சொல்லிலிருந்து வருகிறது, நியமங்களுக்கு இசைவாக செயல்படும் அன்பை அது குறிக்கிறது. அகாப்பே அல்லது நியமங்களின் பேரில் சார்ந்த அன்பை வெளிக்காட்டும் நபர், அவரை விரோதித்து மோசமாக நடத்தும் சத்துருவுக்கும்கூட நன்மை செய்கிறார். ஏன்? ஏனென்றால் அதுதான் கிறிஸ்துவைப் பின்பற்றும் வழியாக இருக்கிறது, விரோதத்தை வெல்வதற்கு வழியாக இருக்கிறது. ஒரு கிரேக்க கல்விமான் குறிப்பிட்டார்: “கோபமும் கசப்புத்தன்மையும் காண்பிக்கும் இயல்பாயுள்ள நம்முடைய மனச்சாய்வை வெல்வதற்கு [அகாப்பே] நமக்கு உதவுகிறது.” ஆனால் இன்றைய விரோதம்-நிரம்பிய உலகில் இது செயல்படுமா?
கிறிஸ்தவர்கள் என உரிமைபாராட்டிக்கொள்ளும் அனைவருமே கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்ற தீர்மானமாயில்லை என்பதை மறுக்கமுடியாது. ருவாண்டாவில் சமீபத்தில் நடந்த அட்டூழியங்கள் இனத்தொகுதிகளால் நிறைவேற்றப்பட்டன, அத்தொகுதிகளின் அங்கத்தினர்களில் அநேகர் தங்களைக் கிறிஸ்தவர்கள் என உரிமைபாராட்டிக்கொள்கின்றனர். ருவாண்டாவில் 20 வருடங்களாக வேலை செய்துகொண்டிருந்த பீலர் டீஸ் எஸ்பிலோசீன் என்ற ஒரு ரோமன் கத்தோலிக்க கன்னியாஸ்திரீ ஒரு குறிப்பை உணர்த்தும் சம்பவத்தைத் திரும்பவும் நினைவுபடுத்தி சொல்கிறார்கள். ஒரு ஆள் தான் உபயோகித்துக்கொண்டிருந்த ஈட்டியை வீசிக்கொண்டு அவர்களுடைய சர்ச்சை அணுகினான். அக்கன்னியாஸ்திரீ அவனைக் கேட்டார்கள்: “எல்லா பக்கங்களிலும் சென்று ஆட்களை ஏன் கொலை செய்துகொண்டு இருக்கிறீர்கள்? கிறிஸ்துவைப் பற்றி நீங்கள் நினைப்பதில்லையா?” கிறிஸ்துவைப் பற்றி நினைப்பதாக அவன் உரிமைபாராட்டி, சர்ச்சுக்குள் நுழைந்து, முழங்கால்படியிட்டு, ஜெபமாலையை மனப்பாடமாக ஆர்வத்தோடு ஓத ஆரம்பித்தான். ஆனால் அதை சொல்லிமுடித்த பின்பு, தொடர்ந்து கொலை செய்வதற்கு விரைவாக புறப்பட்டுச் சென்றான். “நாம் சுவிசேஷத்தை சரியாக கற்பிப்பதில்லை என்பதை இது காண்பிக்கிறது,” என்று அந்தக் கன்னியாஸ்திரீ ஒப்புக்கொண்டார்கள். இருப்பினும், இப்படிப்பட்ட தோல்விகள் இயேசுவின் செய்தி குறைபாடுடையது என்பதை அர்த்தப்படுத்தாது. மெய்க் கிறிஸ்தவத்தை அப்பியாசிப்பவர்களால் விரோதம் உண்மையிலேயே வெல்லப்படமுடியும்.
ஒரு சித்திரவதை முகாமில் விரோதத்தை வெல்லுதல்
சர்வநாசத்தை அனுபவித்து அதிலிருந்து தப்பிவந்தவரான மாக்ஸ் லீப்ஸ்ட்டர் பிறப்பின்படி ஒரு யூதர். அவருடைய குடும்பப் பெயர் “அன்புக்குரியவர்” என்ற அர்த்தத்தை உடையதாக இருந்தாலும், அவர் அளவுகடந்த விரோதத்தைக் கண்டிருக்கிறார். அன்பு மற்றும் விரோதத்தைப் பற்றி நாசி ஜெர்மனியில் அவர் என்ன கற்றறிந்தார் என்பதை விவரிக்கிறார்.
“நான் ஜெர்மனியில் மான்ஹீம்-க்கு அருகே 1930-களில் வளர்ந்து வந்தேன். எல்லா யூதர்களும் கொள்ளை லாபமடித்து ஜெர்மன் நாட்டவரைச் சுரண்டிப் பிழைக்கும் பணக்காரர்கள் என்று ஹிட்லர் உரிமைபாராட்டினான். ஆனால் உண்மை என்னவெனில், என் தந்தை வெறும் காலணி செய்யும் ஓர் எளிய மனிதராக மட்டுமே இருந்தார். இருப்பினும், நாசி பிரச்சார செல்வாக்கின் காரணமாக, அயலகத்தார் எங்களுக்கு விரோதமாக செயல்பட ஆரம்பித்தனர். நான் ஒரு பருவவயதினனாக இருந்தபோது, ஒரு கிராமவாசி வலுக்கட்டாயமாக என் நெற்றியில் பன்றியின் இரத்தத்தை தடவிவிட்டான். படுமோசமாக இழிவுபடுத்தும் இந்தச் செயல் எதிர்காலத்தில் நிகழப்போகிறவற்றின் முன்னனுபவமாக மட்டுமே இருந்தது. 1939-ல் ஜெர்மன் காவற்படையினர் என்னைக் கைதுசெய்து என் உடைமைகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
“ஜனவரி 1940-லிருந்து மே 1945 வரை நான் சாக்சன்ஹாவ்சன், நாயென்காமே, ஆஷ்விட்ஸ், பியூனா மற்றும் புக்கென்வால்ட் ஆகிய ஐந்து வித்தியாசமான சித்திரவதை முகாம்களில் உயிர்பிழைப்பதற்காக போராடினேன். சாக்சன்ஹாவ்சனுக்கு அனுப்பப்பட்ட என் தந்தையும்கூட, 1940-ஆம் ஆண்டின் கடுமையான குளிர்காலத்தின்போது இறந்து போனார். நானே அவருடைய சவத்தைத் தகனம் செய்யுமிடத்திற்கு சுமந்து சென்றேன், அங்கே எரிப்பதற்காக செத்த உடல்களின் குவியல் ஒன்று காத்திருந்தது. மொத்தமாக, என் குடும்பத்தில் எட்டு பேர் முகாம்களில் இறந்து போயினர்.
“ஜெர்மன் எஸ்எஸ் காவலர்களைக் காட்டிலும் காபோஸ் சிறைவாசிகள் மற்ற சிறைவாசிகளால் அதிகமாக விரோதிக்கப்பட்டனர். காபோஸ் சிறைவாசிகள் எஸ்எஸ் காவலரோடு ஒத்துழைத்தனர், அதனால் சில சலுகைகளை அனுபவித்தனர். அவர்கள் உணவு விநியோகிப்பை மேற்பார்வையிடும்படி நியமிக்கப்பட்டனர், அவர்கள் மற்ற சிறைவாசிகளைக் கடுமையாகவும்கூட அடித்தனர். அவர்கள் பெரும்பாலும் நேர்மையற்றவிதத்திலும் மனம்போனபோக்கிலும் செயல்பட்டனர். எஸ்எஸ்-ஐயும் காபோஸ்-ஐயும் விரோதிப்பதற்கு எனக்கு ஏராளமான காரணங்கள் இருந்தபோதிலும், விரோதத்தைக் காட்டிலும் அன்பு அதிக வல்லமைவாய்ந்தது என்பதை என் சிறைவாசத்தின்போது கற்றுக்கொண்டேன்.
“யெகோவாவின் சாட்சிகளாய் இருந்த சிறைவாசிகளின் மனவுரம், அவர்களுடைய விசுவாசம் வேதாகமத்தின் பேரில் சார்ந்திருந்தது என்பதை என்னை நம்பும்படி செய்தது—நானே ஒரு சாட்சியாக ஆனேன். நாயென்காமே சித்திரவதை முகாமில் நான் சந்தித்த எர்ன்ஸ்ட் வாவுர் என்ற யெகோவாவின் சாட்சி கிறிஸ்துவின் மனநிலையை வளர்த்துக்கொள்ளும்படி என்னை ஊக்குவித்தார். “அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்” என்று பைபிள் சொல்கிறது. (1 பேதுரு 2:23) நான் அதையே செய்ய முயற்சி செய்தேன், அனைவருக்கும் நியாயாதிபதியாயிருக்கும் கடவுளின் கைகளில் பழிவாங்குதலை விட்டுவிட்டேன்.
“ஜனங்கள் அறியாமையின் காரணமாக தீமையான காரியங்களைச் செய்கின்றனர் என்பதை முகாம்களில் செலவழித்த ஆண்டுகள் எனக்குக் கற்பித்தன. எல்லா எஸ்எஸ் காவலர்களுமே கெட்டவர்களாக இருக்கவில்லை—அவர்களில் ஒருவர் என் உயிரையே காப்பாற்றினார். ஒரு சமயம் நான் கடுமையான வயிற்றுப்போக்கினால் கஷ்டப்பட்டேன், வேலைசெய்யுமிடத்திலிருந்து முகாமுக்கு நடந்துசெல்ல கஷ்டப்படுமளவு அதிக பெலவீனமாயிருந்தேன். அடுத்த நாள் காலை ஆஷ்விட்ஸ் விஷவாயு அறைக்கு என்னை அவர்கள் அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் ஜெர்மனியில் நான் வசித்து வந்த அதே பகுதியிலிருந்து வந்த ஒரு எஸ்எஸ் காவலர் என் சார்பாக குறுக்கிட்டார். எஸ்எஸ் சிற்றுண்டிசாலையில் எனக்கு வேலை வாங்கிக்கொடுத்தார், உடல் நலமடையும் வரை எனக்கு அங்கே சிறிது ஓய்வு கிடைத்தது. ஒரு நாள் அவர் என்னிடம் இவ்வாறு வெளிப்படையாகத் தெரிவித்தார்: ‘மாக்ஸ், அதிவிரைவாயும் கட்டுப்பாடின்றியும் செல்லும் ஒரு இரயிலில் பிரயாணம் செய்துகொண்டிருப்பது போல் உணருகிறேன். நான் இரயிலிலிருந்து குதித்துவிட்டால், கொல்லப்படுவேன். அதிலே தொடர்ந்து இருந்தால், நொறுங்கி விடுவேன்!’
“எனக்குத் தேவையாயிருந்தது போலவே இப்படிப்பட்ட ஜனங்களுக்கும் அன்பு தேவையாயிருந்தது. உண்மையில், அந்தத் துயரமிகுந்த நிலைமைகளையும், மரண தண்டனை கிடைக்கும் என்று அன்றாட பயமுறுத்தப்படுவதையும் சமாளிப்பதற்கு, அன்பும் இரக்கமும் அதோடுகூட கடவுள் பேரில் என் விசுவாசமுமே எனக்கு உதவின. எவ்வித தீங்கும் ஏற்படாமல் தப்பிவந்தேன் என்று என்னால் சொல்லமுடியாது, ஆனால் என்னுடைய உணர்ச்சிசம்பந்தமான காயங்கள் மிகக் குறைவாகவே இருந்தன.”
50 வருடங்களுக்குப் பிறகு மாக்ஸ் இன்னும் வெளிக்காட்டிக்கொண்டிருக்கும் அனலான அன்பும் இரக்கமும் அவருடைய வார்த்தைகள் உண்மையென மிகச் சிறந்தமுறையில் சாட்சிபகருகின்றன. மாக்ஸ்-ன் விஷயத்தில் மட்டும் இது உண்மையாயில்லை. விரோதத்தை மேற்கொள்வதற்கு அவர் பலமான காரணத்தைக் கொண்டிருந்தார்—அவர் கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்பினார். வேதாகமத்தினால் வழிநடத்தப்பட்ட வாழ்க்கையைக் கொண்டிருந்த மற்றவர்களும் அதே விதத்தில் செயல்பட்டிருக்கின்றனர். பிரான்ஸில் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராயிருக்கும் சிமோன் என்னும் பெண் சுயநலமற்ற அன்பு உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை தான் எவ்வாறு கற்றுக்கொண்டார் என்று விளக்குகிறார்.
“ஜனங்கள் பெரும்பாலும் அறியாமையின் காரணமாக தீங்கிழைக்கின்றனர் என்று இரண்டாம் உலக யுத்தத்துக்குச் சிறிதுகாலத்துக்கு முன் சாட்சியாக ஆன என் தாய் எம்மா எனக்குக் கற்றுக்கொடுத்தார்கள். அவர்கள் நம்மை விரோதிப்பது போல் நாமும் அவர்களை விரோதித்தால் நாம் மெய்க் கிறிஸ்தவர்கள் அல்ல, ஏனென்றால் நம்முடைய சத்துருக்களை சிநேகிக்க வேண்டும் என்றும் நம்மைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம்பண்ண வேண்டும் என்றும் இயேசு சொன்னார் என்று அவர்கள் விளக்கினார்கள்.—மத்தேயு 5:44.
“இந்த நம்பிக்கையின் பலத்தை சோதித்த அதிகக் கடினமான சூழ்நிலைமை ஒன்று எனக்கு ஞாபகம் வருகிறது. பிரான்ஸில் நாசி குடியிருப்பாட்சியின்போது, எங்களுடைய கட்டடத்தில் இருந்த ஒரு அயலாரிடமிருந்து என் தாய் பெரும் கஷ்டத்தை அனுபவித்தார்கள். அவர்கள் ஜெர்மன் காவற்படையினரிடம் என் தாயைப் பற்றி புகார் செய்தார்கள். அதன் காரணமாக என் தாய் இரண்டு வருடங்கள் ஜெர்மன் கான்சன்ட்ரேஷன் முகாம்களில் செலவழித்தார்கள், அங்கே என் தாய் ஏறக்குறைய இறக்கும் நிலைக்கு மோசமடைந்தார்கள். போருக்குப் பின், இந்தப் பெண் ஜெர்மன் நாட்டவருக்கு உடந்தையாயிருந்ததாக குற்றம்சாட்டி ஒரு தாளில் கையெழுத்திடும்படி பிரெஞ்சு காவல்துறையினர் என் தாயைக் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் என் தாய், ‘நன்மைக்கும் தீமைக்கும் கடவுளே நியாயாதிபதியும் பலனளிப்பவருமாயும் இருக்கிறார்,’ என்று சொல்லி மறுத்துவிட்டார்கள். சில வருடங்களுக்குப் பிறகு, இதே அயலார் சாவுக்கேதுவான புற்றுநோயினால் பாதிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட இன்னலின் காரணமாக கெட்ட எண்ணத்தோடு மகிழ்ச்சியடையாமல், அவர்களுடைய வாழ்க்கையின் கடைசி மாதங்களை முடிந்தளவு சௌகரியமுள்ளதாக ஆக்குவதற்கு என் தாய் அநேக மணிநேரங்களை செலவழித்தார்கள். விரோதத்தின் மீது அன்பு வெற்றிசிறந்த இக்காரியத்தை நான் மறக்கவேமாட்டேன்.”
அநீதியை எதிர்ப்படுகையில் நியமத்தின் பேரில் சார்ந்த அன்பின் வல்லமையை இவ்விரண்டு உதாரணங்களும் எடுத்துக்காட்டுகின்றன. ஆயினும், “சிநேகிக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு” என்று பைபிள் தானே சொல்கிறது. (பிரசங்கி 3:1, 8) அது எப்படி இருக்கமுடியும்?
பகைக்க ஒரு காலமுண்டு
கடவுள் எல்லா விரோதத்தையும் கண்டனம் செய்வதில்லை. இயேசு கிறிஸ்துவைக் குறித்து பைபிள் இவ்வாறு சொல்கிறது: “நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்.” (எபிரெயர் 1:9) இருப்பினும், தவறை விரோதிப்பதற்கும், தவறு செய்தவரை விரோதிப்பதற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது.
அன்புக்கும் விரோதத்துக்கும் இடையேயுள்ள சரியான சமநிலையை இயேசு தம் முன்மாதிரியால் விளக்கிக்காட்டினார். அவர் மாய்மாலத்தை வெறுத்தார், ஆனால் மாய்மாலக்காரர் தங்கள் சிந்தனா முறையை மாற்றிக்கொள்ளும்படி அவர்களுக்கு உதவ முயற்சி செய்தார். (மத்தேயு 23:27, 28; லூக்கா 7:36-50) அவர் வன்முறையை கண்டனம் செய்தார், ஆனால் அவரைக் கொலைசெய்தவர்களுக்காக ஜெபித்தார். (மத்தேயு 26:52; லூக்கா 23:34) உலகம் அவரைக் காரணமின்றி பகைத்தபோதிலும், இவ்வுலகிற்கு உயிரைக் கொடுப்பதற்கு தம் சொந்த உயிரையே கொடுத்தார். (யோவான் 6:33, 51; 15:18, 25) நியமங்களின் பேரில் சார்ந்த அன்பைக் குறித்தும் தெய்வீக விரோதத்தைக் குறித்தும் அவர் நமக்கு ஒரு பரிபூரண முன்மாதிரியை விட்டுச்சென்றார்.
அநீதி நம்மில் ஒழுக்கசம்பந்தமான கோபத்தை எழுப்பக்கூடும், இயேசுவுக்கும் அப்படியே இருந்தது. (லூக்கா 19:45, 46) இருப்பினும், கிறிஸ்தவர்கள் பழிதீர்த்துக்கொள்ளும்படி அதிகாரமளிக்கப்பட்டில்லை. “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்” என்று ரோமில் இருந்த கிறிஸ்தவர்களுக்குப் பவுல் புத்திமதி கூறினார். “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். நீங்கள் பழிவாங்காமல், . . . நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.” (ரோமர் 12:17-21) நாம் தனிப்பட்டவிதமாய் விரோதத்தை மனதில் வைத்திருக்க மறுக்கும்போது அல்லது பழிக்குப் பழி வாங்காமல் இருக்கும்போது அன்பு வெற்றியடைகிறது.
விரோதம் இல்லாத ஓர் உலகம்
உலகளாவிய அளவில் விரோதம் மறைந்துபோக வேண்டுமென்றால், இலட்சக்கணக்கான ஆட்களில் ஆழமாகப் பதிந்திருக்கும் மனநிலைகள் மாற வேண்டும். இது எவ்வாறு அடையப் பெறலாம்? பேராசிரியர் எர்வென் ஸ்டாப் இவ்வாறு சிபாரிசு செய்கிறார்: “நாம் யாருக்குத் தீமை செய்கிறோமோ அவர்களுடைய மதிப்பை குறைத்து விடுகிறோம், நாம் யாருக்கு உதவி செய்கிறோமோ அவர்களுக்கு மதிப்பு தருகிறோம். நாம் யாருக்கு உதவி செய்கிறோமோ, அவர்களை அதிகமாக மதிக்க ஆரம்பித்து, உதவி செய்வதில் அடங்கியிருக்கும் திருப்தியை அனுபவிக்கையில், நாம் நம்மை அதிக அக்கறையுள்ளவர்களாகவும் உதவி செய்கிறவர்களாகவும் காண்போம். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் முடிந்தளவு மிகுதியாக பங்குகொள்ளும் இயல்புள்ள சமுதாயங்களை உண்டாக்குவது நம்முடைய இலக்குகளில் ஒன்றாக இருக்கவேண்டும்.”—தீமையின் வேர்கள் (ஆங்கிலம்).
வேறு வார்த்தைகளில் சொன்னால், விரோதத்தை அகற்றுவதற்கு தேவைப்படுவது, ஜனங்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்துகொள்வதன் மூலம் அன்புகாட்ட கற்றுக்கொள்ளும் ஒரு சமுதாயத்தை உண்டாக்குவதும் தப்பெண்ணம், தேசப்பற்று, இனப்பற்று, குலப்பற்று ஆகியவை ஏற்படுத்தும் எல்லா பகையையும் ஜனங்கள் மறந்துவிடும் ஒரு சமுதாயத்தை உண்டாக்குவதுமே ஆகும். அப்படிப்பட்ட ஒரு சமுதாயம் உள்ளதா? சீனாவில் கலாச்சாரப் புரட்சியின்போது தனிப்பட்டவிதமாய் விரோதத்தை எதிர்ப்பட்ட ஒரு நபரின் அனுபவத்தை சிந்தித்துப் பாருங்கள்.
“கலாச்சாரப் புரட்சி ஆரம்பமானபோது, ‘இனவகுப்பு போராட்டத்தில்’ இணங்கிப்போவதற்கு எந்தக் காரணமுமில்லை என்று எங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது. விரோதம் தான் மேலோங்கி நின்ற மனப்பான்மையாக இருந்தது. நான் மாவோ கட்சியின் இளைஞர் படையில் உறுப்பினனாக ஆனேன், ‘இனவகுப்பு விரோதிகளுக்காக’ எங்கும்—என் சொந்த குடும்பத்தார் மத்தியிலும்கூட—தேட ஆரம்பித்தேன். அந்தச் சமயத்தில் பருவவயதினனாக மட்டுமே இருந்தபோதிலும்கூட, வீடுகளை சோதனையிடுவதில் பங்குகொண்டேன், அதில் நாங்கள் ‘பிற்போக்காளர்களின் மனப்பாங்குகள்’ பற்றிய அத்தாட்சிக்காகத் தேடிக்கொண்டிருந்தோம். ‘அப்புரட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்த நபர்களை’ வெளிப்படையாகக் கண்டனம் செய்த ஒரு பொதுக்கூட்டத்தையும்கூட நடத்தினேன். சில சமயங்களில் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் அரசியல் காரணங்களுக்காக அல்லாமல் தனிப்பட்ட விரோதத்தின் பேரில் சார்ந்திருந்தன.
“நான் அநேக ஜனங்களைக் கண்டேன்—இளைஞர்கள், வயதானவர்கள், ஆண்கள், பெண்கள்—அவர்களுக்கு உடலை வேதனைப்படுத்தும் தண்டனை கொடுக்கப்பட்டது, அது அதிகமதிகமாக கொடூரமானது. என் பள்ளி ஆசிரியர்களில் ஒருவர்—நல்ல மனிதர்—ஒரு குற்றவாளியைப் போல் தெருக்களில் கொண்டுசெல்லப்பட்டார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு என் பள்ளியில் நன்கு-மதிக்கப்பட்ட மற்றொரு ஆசிரியர் சூச்சோ நதியில் செத்துக்கிடப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டார், என்னுடைய ஆங்கில ஆசிரியர் தன்னையே தூக்கிலிட்டுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். நான் அதிர்ச்சியுற்று குழப்பமடைந்தேன். இவர்கள் இரக்க இருதயமுள்ள ஆட்கள். இவர்களை இவ்வாறு நடத்துவது தவறு! ஆகையால் நான் மாவோ இளைஞர் படையுடன் கொண்டிருந்த எல்லா தொடர்புகளையும் அறுத்துக்கொண்டேன்.
“சீனாவை கொஞ்சகாலம் சூழ்ந்துகொண்டிருந்த இந்த விரோதம் நிறைந்த காலப்பகுதி, இவ்வகையான சம்பவங்களில் இது ஒன்று மட்டுமே நிகழ்ந்தது என நான் நினைக்கவில்லை. இந்த நூற்றாண்டு அநேக விரோத எழுச்சிகளைக் கண்டிருக்கிறது. இருப்பினும், அன்பு விரோதத்தின்மீது வெற்றிகொள்ளக்கூடும் என்று உறுதியாயிருக்கிறேன். இது நானே நேரில் கண்ட ஒன்று. யெகோவாவின் சாட்சிகளோடு கூட்டுறவுகொள்ள ஆரம்பித்தபோது, வித்தியாசமான இனங்கள் மற்றும் பின்னணிகளிலிருந்து வந்த ஜனங்களிடம் அவர்கள் காண்பித்த அன்பினால் கவரப்பட்டேன். பைபிள் வாக்களிக்கிறபடி, அனைவரும் ஒருவரையொருவர் நேசிக்கக் கற்றுக்கொள்ளும் காலத்துக்காக ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.”
ஆம், விரோதம் நீக்கப்படமுடியும் என்பதற்கு யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச சமுதாயம் உயிருள்ள அத்தாட்சியாய் இருக்கிறது. அவர்களுடைய பின்னணி எதுவாக இருப்பினும், தப்பெண்ணத்திற்குப் பதிலாக பரஸ்பர மரியாதையைக் காண்பிக்கவும், குலப்பற்று, இனப்பற்று அல்லது தேசப்பற்று ஆகியவற்றின் தடம் தெரியாமல் முற்றிலுமாக நீக்கிவிடவும் முயற்சி செய்கின்றனர். அவர்களுடைய வெற்றிக்கு ஒரு அடிப்படை காரணம் என்னவென்றால், நியமத்தால் வழிநடத்தப்பட்ட அன்பை வெளிக்காட்டுவதில் அவர்கள் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும் என்று உறுதியாய் இருக்கின்றனர். அவர்கள் எப்படிப்பட்ட அநீதியை அனுபவித்துக்கொண்டிருந்தாலும் கடவுளுடைய ராஜ்யம் அதை முடிவுக்குக் கொண்டுவரும் என்று அவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது மற்றொரு அடிப்படையாகும்.
விரோதம் இல்லாத ஓர் உலகை அடைவதற்கு கடவுளுடைய ராஜ்யமே நிச்சயமான தீர்வு, அவ்வுலகில் விரோதிப்பதற்கு தீமைகூட இருக்காது. பைபிளில் ‘புதிய வானங்கள்’ என்று விவரிக்கப்பட்டிருக்கும் இந்தப் பரலோக அரசாங்கம், அநீதியிலிருந்து விடுபட்ட ஓர் உலகை உத்தரவாதமளிக்கும். அது ‘புதிய பூமியின்மீது’ அல்லது ஒருவரையொருவர் நேசிப்பதற்குக் கற்பிக்கப்பட்டிருக்கும் ஜனசமுதாயத்தின்மீது ஆட்சிசெய்யும். (2 பேதுரு 3:13; ஏசாயா 54:13) மாக்ஸ், சிமோன், இன்னும் மற்ற அநேகரின் அனுபவங்கள் சான்றளிக்கிறபடி இக்கல்வி ஏற்கெனவே நடந்தேறி வருகிறது. விரோதத்தையும் அதன் காரணங்களையும் நீக்குவதற்காக ஒரு உலகளாவிய திட்டத்தின் முற்காட்சியாக அது இருக்கிறது.
தம்முடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் மூலம் யெகோவா அதன் விளைவை விவரிக்கிறார்: “என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.” (ஏசாயா 11:9) கடவுள் தாமே விரோதத்துக்கு ஒரு முடிவை அறிவித்திருப்பார். அது உண்மையிலேயே அன்பு காட்டுவதற்கு ஒரு சமயமாக இருக்கும்.
[பக்கம் 7-ன் படங்கள்]
மாக்ஸ் லீப்ஸ்ட்டரின் இடது கரத்தில் நாசிக்கள் சிறை எண்ணை பச்சை குத்தினர்
[பக்கம் 8-ன் படம்]
விரோதம் சீக்கிரத்தில் கடந்தகால காரியமாக ஆகிவிடும்