பொறுமை—ஏன் அவ்வளவு அரியதாக இருக்கிறது?
ஏமில்யோ 60 வயதைத் தாண்டிவிட்டிருந்தார்.a அவர் ஒரு சங்கடமான காரியத்தைச் செய்ய—வயதுவந்த தன் மகனை அடக்கம்பண்ண—அவாஹூவுக்கு வந்திருந்தார். ஒரு குன்றின் பக்கமாகவுள்ள அமைதியான தெருவில் சில நண்பர்களுடன் பேசிக்கொண்டு நடந்துசெல்கையில், ஒரு வீட்டிற்கு வழிநடத்தும் பாதையில் பின்நோக்கி வேகமாக வரும் ஒரு கார் ஏமில்யோவைத் திடுக்கிட வைத்தது. அந்தக் கார் கிட்டத்தட்ட அவரை இடித்தது; கோபமடைந்தவராயும் பொறுமை இழந்தவராயும், ஏமில்யோ ஓட்டுநரைப் பார்த்து சத்தம்போட்டுவிட்டு தன் கையால் காரை ஓங்கி அறைந்தார். தர்க்கம் ஒன்று தொடர்ந்தது. அந்த ஓட்டுநர் ஏமில்யோவைத் தள்ளியதால், அவர் விழுந்து அந்த மேடான பாதை ஓரத்தில் தலையை இடித்துக்கொண்டதாகத் தெரிகிறது. ஒருசில நாட்களில், ஏமில்யோ தலையில் பட்ட காயத்தால் இறந்துவிட்டார். எவ்வளவு வருத்தகரமான விளைவு!
பொறுமை ஓர் அரிய பண்பாக இருக்கும் ஓர் உலகில் நாம் வாழ்கிறோம். அதிகமதிகமான வாகன ஓட்டிகள் அதிவேகத்தில் ஓட்டுகின்றனர். மற்றவர்கள், கொடுக்கப்பட்டிருக்கும் வேக வரம்பில் செல்லும் கார்களை ஒட்டி பின்தொடர்கிறார்கள். இன்னும் மற்றவர்கள், மற்றொரு வாகனத்திற்குப் பின் செல்ல விரும்பாமல் அவசரப்பட்டு, ஒரு லேனிலிருந்து மற்றொரு லேனுக்குள் புகுந்து செல்கின்றனர். வீட்டில், குடும்ப அங்கத்தினர்கள் கோபாவேச வெளிப்பாடுகளுக்கு இடங்கொடுத்து, வன்முறையுடன் செயல்படக்கூடும். சில கிறிஸ்தவர்கள்கூட தங்களுடைய ஆவிக்குரிய சகோதரர்களின் குற்றங்கள் அல்லது குறைகளால் அளவுக்கதிகமாக வருத்தமடையக்கூடும்.
பொறுமை ஏன் அவ்வளவு அரியதாக இருக்கிறது? அது எப்போதும் அவ்வாறு இருந்திருக்கிறதா? நம்முடைய காலத்தில் பொறுமையாக இருப்பது ஏன் அவ்வளவு கடினமாக இருக்கிறது?
பொறுமையின்மையின் உதாரணங்கள்
மிக முக்கியமான ஒரு தீர்மானத்தை எடுப்பதற்குமுன் தன் கணவனுடன் கலந்துபேசும்படி காத்திராத ஒரு பெண்ணைப்பற்றி பைபிள் பேசுகிறது. அவளுடைய பெயர் ஏவாள். ஒருவேளை, ஓரளவுக்கு பொறுமையின்மையின் காரணமாக, அவள் ஆதாமுக்குக் காத்திருக்காமல், விலக்கப்பட்டிருந்த பழத்தைச் சாப்பிட்டாள். (ஆதியாகமம் 3:1-6) அவளுடைய கணவனைப் பற்றி என்ன? உதவிக்காக அல்லது வழிநடத்துதலுக்காகத் தன்னுடைய பரலோக தகப்பனாகிய யெகோவாவை முதலில் அணுகாமல், ஏவாளைப் பின்பற்றுவதன்மூலம் அவனும் பொறுமையின்மையை வெளிக்காட்டி பாவத்திற்குள்ளானான். பாவத்திற்கு வழிநடத்திய பொறுமையின்மையுடன் ஒருவேளை அவர்களுடைய பேராசையும் சேர்ந்து, நம்மெல்லாருக்கும் ஆபத்தான விளைவுகளைக் கொண்டிருந்தது. ஆணவம் மற்றும் பொறுமையின்மை உட்பட பாவம் செய்வதற்கான மனச்சாய்வையும் அவர்களிடமிருந்து சுதந்தரமாகப் பெற்றிருக்கிறோம்.—ரோமர் 5:12.
நம்முடைய முதற்பெற்றோர் பாவம் செய்து சுமார் 2,500 வருடங்களுக்குப் பிறகு, கடவுளுடைய தெரிந்துகொள்ளப்பட்ட மக்களாகிய இஸ்ரவேலர், ஆழ்ந்த, விடாப்பிடியான முறையில் விசுவாசமின்மையையும் பொறுமையின்மையையும் வெளிக்காட்டினர். அப்போதுதான் யெகோவா அவர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து அற்புதகரமாக விடுவித்திருந்தபோதிலும், அவர்கள் சீக்கிரமாய் “அவருடைய கிரியைகளை மறந்தார்கள்;” ‘அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திருக்கவில்லை.’ (சங்கீதம் 106:7-14) அவர்கள் பொறுமையாக இராததால் மீண்டும் மீண்டும் பெரிய தவறுகளைச் செய்தார்கள். அவர்கள் பொன் கன்றுகுட்டி ஒன்றைச் செய்து வணங்கினார்கள்; யெகோவா அவர்களுடைய சரீரத் தேவைக்காகக் கொடுத்த மன்னாவைக் குறித்து முறுமுறுத்தார்கள்; யெகோவாவால் நியமிக்கப்பட்ட அவருடைய பிரதிநிதியாகிய மோசேக்கு விரோதமாகக்கூட அவர்களில் அநேகர் கலகம் செய்தனர். உண்மையிலேயே, அவர்கள் பொறுமையின்மை கவலைக்கும் கேட்டிற்கும் வழிநடத்தியது.
இஸ்ரவேலின் முதல் மனித அரசனாகிய சவுல், தன்னுடைய மகன்கள் அவருக்குப் பிறகு ஆட்சியில் வருவதற்கான வாய்ப்பை இழந்துவிட்டார். ஏன்? யெகோவாவுக்கு ஒரு பலியை செலுத்தவேண்டியவராக இருந்த தீர்க்கதரிசியாகிய சாமுவேலுக்கு அவர் காத்திருக்கத் தவறியதாலேயே. பலி செலுத்துவதில் சாமுவேலுக்காகக் காத்திருக்காமல் முந்திக்கொண்டு செல்லும்படி மனிதருக்கான பயம் சவுலைத் தூண்டியது. சவுல் அந்த ஆராதனையை முடித்தவுடனேயே சாமுவேல் அங்கு வந்தபோது சவுலுக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்! இன்னும் கொஞ்ச நேரம் அவர் காத்திருந்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!—1 சாமுவேல் 13:6-14.
அவசரப்பட்டு அந்தப் பழத்தைச் சாப்பிடுவதற்குப் பதிலாக ஏவாள் மட்டும் ஆதாமுக்காகக் காத்திருந்திருந்தால்! இஸ்ரவேலர் மட்டும் யெகோவாவின் ஆலோசனைக்காகக் காத்திருக்க மறக்காமல் இருந்திருந்தால்! ஆம், பொறுமை, அவர்களையும் நம்மையும் அதிகப்படியான கவலையிலிருந்தும் வேதனையிலிருந்தும் பாதுகாத்திருக்கும்.
பொறுமையின்மையின் காரணங்கள்
இன்று பொறுமையின்மையின் ஒரு முக்கிய காரணத்தைப் புரிந்துகொள்ள பைபிள் நமக்கு உதவுகிறது. இரண்டு தீமோத்தேயு 3-ம் அதிகாரம், ‘கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்களில்’ (NW) வாழ்வதாக நம் சந்ததியை விவரிக்கிறது. மக்கள் “தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், . . . இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்” இருப்பார்கள் என்று சொல்கிறது. (வசனங்கள் 2, 3) அப்படிப்பட்ட பேராசையும் தன்னலம் கருதுவதுமான மனநிலை அநேக மக்களின் உள்ளங்களிலும் மனங்களிலும் இருக்கிறது; இது, எல்லாருக்கும், உண்மை கிறிஸ்தவர்களுக்கும்கூட பொறுமையாய் இருப்பதைக் கடினமாக்குகிறது. உலகப்பிரகாரமான ஆட்கள் அதிவேகத்தில் ஓட்டுவதையோ வரிசைகளில் மற்றவர்களை முந்திக்கொண்டு முன்சென்று நிற்பதையோ நம்மைப்பார்த்து சரமாரியாக வசைச்சொற்களைப் பொழிவதையோ பார்க்கும்போது, நம்முடைய பொறுமை அளவுக்கதிகமாகச் சோதிக்கப்படலாம். நாமும் அவர்களைப் பின்பற்றும்படி அல்லது அவர்களை எதிர்க்கும்படியாகச் சோதிக்கப்படலாம்; அதன்மூலம் அவர்களுடைய தன்னலமான பெருமை நிலைக்கு நாமும் இறங்கிவிடலாம்.
சிலநேரங்களில் நம்முடைய தவறான முடிவுகள்தாமே பொறுமையை இழக்கச் செய்கின்றன. அவசரப்பட்டு, தவறாக சிந்திப்பதற்கும் பொறுமையற்ற, கோபமான நடத்தைக்கும் உள்ள தொடர்பை அரசனாகிய சாலொமோன் எவ்வாறு விளக்குகிறார் என்பதைக் கவனியுங்கள்: “பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன். உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.” (பிரசங்கி 7:8, 9) எந்த ஒரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு முன்பு, அந்த நிலைமையைப்பற்றிய முழு திருத்தமான விவரத்தையும் பெற நேரத்தை எடுத்துக்கொண்டோமானால், நாம் மற்றவர்களிடமாக அதிக புரிந்துகொள்ளுதலோடும், அதிக பரிவோடும், அதிக பொறுமையோடும் நடந்துகொள்ளும் சாத்தியம் இருக்கிறது. மறுபட்சத்தில், பெருமையுள்ள, தன்னலமுள்ள மனநிலையானது மோசேயை வருத்தப்படுத்திய முறுமுறுக்கும், வணங்காக் கழுத்துள்ள இஸ்ரவேலரைப் போல நம்மை குறுகிய நோக்குள்ளவர்களாகவும், பொறுமையற்றவர்களாகவும், வெறுப்புற்றவர்களாகவும் ஆகும்படி செய்யக்கூடும்.—எண்ணாகமம் 20:2-5, 10.
உலகில் பொறுமையின்மை அதிகரிப்பதற்கான மற்றொரு காரணம், யெகோவாவிடமிருந்து விலகியதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் அதன் நம்பிக்கையற்ற நிலைமையாகும். யெகோவாவை நம்பியிருப்பதற்கான மனிதனின் தேவையை தாவீது எடுத்துக்கூறினார்: “என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்.” (சங்கீதம் 62:5) யெகோவாவைப் பற்றி அறியாத அநேகர், வரையறுக்கப்பட்ட, மங்கலான ஒரு எதிர்நோக்கையே கொண்டிருக்கின்றனர்; ஆகவே தங்களுடைய காலம் முடிவதற்குள் தங்களாலான ஒவ்வொரு துளி இன்பத்தையும் லாபத்தையும் பற்றிப்பறித்துக்கொள்ள முயலுகின்றனர். தங்களுடைய ஆவிக்குரிய தந்தையாகிய பிசாசாகிய சாத்தானைப் போலவே அவர்களும் பெரும்பாலும் தங்களுடைய செயல்கள் எப்படி மற்றவர்களைப் புண்படுத்தும் என்பதைக் குறித்துக் கவலைப்படுவதில்லை.—யோவான் 8:44; 1 யோவான் 5:19.
இன்று பொறுமை அவ்வளவு அரியதாக இருப்பதைக்குறித்து ஆச்சரியமேதுமில்லை. இந்தப் பொல்லாத, தன்னல காரிய ஒழுங்குமுறையும், அதன் கடவுளாகிய சாத்தானும், நம்முடைய பாவமுள்ள மாம்சத்தின் பாவ மனச்சாய்வுகளும், பொறுமையாயிருப்பதை அனைவருக்கும், உண்மை மனதுடன் இருப்பவர்களுக்குக்கூட கடினமானதாக்குகிறது. இருந்தாலும், பைபிள் நம்மை ‘பொறுமையாய்’ இருக்கும்படி, குறிப்பாக கடவுளுடைய நோக்கங்கள் நிறைவேறுவதைக் குறித்ததில் அவ்வாறு இருக்கும்படி அறிவுறுத்துகிறது. (யாக்கோபு 5:8) பொறுமை ஏன் அவ்வளவு மதிப்பு வாய்ந்ததாக இருக்கிறது? அது நமக்கு என்ன நன்மைகளைக் கொண்டுவரக்கூடும்?
பொறுமை—ஏன் அவ்வளவு மதிப்புவாய்ந்தது
‘பொறுமையாய் காத்துநிற்பவர்களும் சேவை செய்கிறார்கள்.’ அந்த வார்த்தைகள் ஆங்கில கவிஞராகிய ஜான் மில்டனால், “தன் பார்வையின்மையைக் குறித்து” என்ற பதினான்குவரி செய்யுளில் முந்நூற்றுக்கும் மேலான வருடங்களுக்கு முன் சொல்லப்பட்டது. அவர் தன்னுடைய 40-களில் பார்வையற்றவரானதன் காரணமாக கடவுளை முழுமையாகச் சேவிக்க முடியாதவராக உணர்ந்த தன் ஏமாற்றம் மற்றும் கவலையை அந்தச் செய்யுளின் தொடக்கப் பகுதியில் வெளிக்காட்டினார். ஆனால் மேலே மேற்கோள் காட்டப்பட்டுள்ள அந்தச் செய்யுளின் கடைசி வரி காண்பிக்கிறபடி, உபத்திரவத்தைப் பொறுமையாக சகிப்பதன்மூலமும் சேவை செய்வதற்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை அமைதலாகத் தேடுவதன் மூலமும் ஒருவர் கடவுளை வணங்க முடியும் என்பதை அவர் உணர ஆரம்பித்தார். கடவுளைப் பொறுமையுடன் சார்ந்திருப்பதன் முக்கியத்துவத்தை மில்டன் கண்டுகொண்டார்.
நம்மில் பெரும்பான்மையோருக்கு நல்ல கண்பார்வை இருக்கக்கூடும், ஆனால் நம் எல்லாருக்கும் நம்மைக் கோபப்படுத்தக்கூடிய அல்லது கவலைப்படுத்தக்கூடிய வரம்புகள் இருக்கின்றன. நாம் எப்படி பொறுமையைப் பெற்று அதைக் காத்துக்கொள்ள முடியும்?
உற்சாகமூட்டும் முன்மாதிரிகள்
பைபிள் பொறுமைக்கு பல சிறந்த முன்மாதிரிகளை நமக்கு அளிக்கிறது. யெகோவாவின் பொறுமை, பல கோடி மக்கள் நித்திய ஜீவனைப் பெறுவதைச் சாத்தியமாக்கி இருக்கிறது. (2 பேதுரு 3:9, 15) தம் நுகத்தை நாம் ஏற்றுக்கொண்டு ‘[நம்] ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதலை கண்டடையும்படி’ இயேசு கொடுக்கும் தயவான அழைப்பில் அவர், தம் பிதாவின் சிறந்த பொறுமையை பரிபூரணமாகப் பிரதிபலிக்கிறார். (மத்தேயு 11:28-30) யெகோவா மற்றும் இயேசுவின் முன்மாதிரிகளின் பேரில் தியானிப்பது நாம் அதிக பொறுமையாக இருப்பதற்கு உதவி செய்யும்.
கோபம், வெறுப்புணர்வு, அல்லது பழிவாங்கும் உணர்ச்சியைக் கொண்டிருப்பதற்குப் போதிய காரணத்தைக் கொண்டிருந்தவராகத் தோன்றிய ஒருவர் யாக்கோபின் மகன் யோசேப்பு. அவருடைய சகோதரர்கள் அவரை மிகவும் நியாயமற்ற வகையில் நடத்தினர்; அவருடைய மரணத்தையும் திட்டமிட்டு, கடைசியில் அடிமைத்தனத்திற்கு விற்றார்கள். எகிப்தில் அவர் போத்திப்பாருக்குக் கடமையுணர்ச்சியுடனும், உண்மையுடனும் சேவை செய்தபோதிலும், நியாயமின்றி குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலிடப்பட்டார். அவர் தன்னுடைய எல்லா உபத்திரவங்களையும் பொறுமையோடு சகித்துக்கொண்டார்; அப்படிப்பட்ட சோதனைகள் யெகோவாவின் நோக்கங்களை நிறைவேற்ற உதவும் என்று ஒருவேளை அவர் புரிந்துகொண்டிருக்கலாம். (ஆதியாகமம் 45:5) மனத்தாழ்மையோடும் புரிந்துகொள்ளுதலோடும் யெகோவாவில் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வளர்த்துக்கொண்டதால், யோசேப்பால் சோதனை மிகுந்த சூழ்நிலைமைகளில்கூட பொறுமையைக் காத்துக்கொள்ள முடிந்தது.
யெகோவாவின் பரிசுத்த ஆவி மற்றொரு முக்கியமான உதவியாக இருக்கிறது. உதாரணமாக, நமக்கு முன்கோபப்படும் சுபாவமும் குத்தலாகப்பேசும் நாவும் இருந்தால், நாம் அதன் ஆவியின் கனிகளை வளர்த்துக் கொள்ளும்படி பரிசுத்த ஆவியின் உதவிக்காக ஜெபிக்கலாம். நீடிய பொறுமை, தன்னடக்கம் போன்ற இந்த ஒவ்வொரு கனிகளைக் குறித்தும் தியானிப்பது, இவை எப்படி பொறுமையோடு ஆழமான தொடர்புள்ளவையாக இருக்கின்றன என்பதைக் காண நமக்கு உதவும்.—கலாத்தியர் 5:22, 23.
பொறுமையின் நன்மைகள்
பொறுமையாய் இருப்பது நமக்குப் பல நன்மைகளைக் கொண்டுவரக்கூடும். அது நம் நற்பண்பைப் பலப்படுத்தி அவசரமான, முட்டாள்தனமான செயல்களைச் செய்வதிலிருந்து பாதுகாக்கிறது. கடினமான அல்லது அழுத்தந்தரக்கூடிய சூழ்நிலைகளில் அவசரமாக செயல்பட்டதன் காரணமாக, வருந்தத்தக்க தவறுகளை நம்மில் யார்தான் செய்யாமல் இருந்திருக்கிறோம்? நாம் ஒரு இரக்கமற்ற வார்த்தையைச் சொல்லி இருக்கலாம் அல்லது கடூரமான முறையில் நடந்திருக்கலாம். நமக்கு அன்பான ஒருவருடன், அற்பமான ஒரு காரியத்தை விட்டுக்கொடுக்காததால் அது ஒரு சண்டையாக உருவெடுக்கும்படி நாம் அனுமதித்திருக்கலாம். அதிக கோபம், ஏமாற்றம், மற்றும் மனவேதனைக்குப் பின்னர், ‘நான் மட்டும் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால்,’ என்று பின்னர் வருந்தத்தக்கவிதத்தில் யோசித்திருப்போம். பொறுமையைக் காத்துக்கொள்வது எல்லா வகையான துக்கத்திலிருந்தும் நம்மைப் பாதுகாக்கக்கூடும். அந்த உண்மை மட்டுமே நம் வாழ்க்கைக்கு அவ்வளவு அதிக சமாதானத்தையும், உறுதியையும், திருப்தியையும் தருகிறது.—பிலிப்பியர் 4:5-7.
பொறுமையாக இருப்பது ஒரு அமைதலான, நம்பிக்கையுள்ள உள்ளத்தைக் கொண்டிருக்கவும் நமக்கு உதவி செய்யக்கூடும். இது நாம் உடல், உணர்ச்சி, மற்றும் ஆவிக்குரிய விதத்தில் மேம்பட்ட ஆரோக்கியத்தை அனுபவிப்பதற்கும் வழிநடத்தக்கூடும். (நீதிமொழிகள் 14:30) கட்டுப்படுத்தவில்லையென்றால், கோபாவேசமடைவது கடுமையான உணர்ச்சி மற்றும் சரீரப்பிரகாரமான நோயையும் மரணத்தையும் ஏற்படுத்தக்கூடும். மறுபட்சத்தில், நாம் பொறுமையாக இருப்பதன் மூலம், மற்றவர்களிடம், முக்கியமாக நம் ஆவிக்குரிய சகோதரர்களிடமும் குடும்ப அங்கத்தினர்களிடமும் அதிக நம்பிக்கையான மனநிலையை கொண்டிருக்க முடியும். அப்போது நாம் எளிதில் கோபப்படுகிறவர்களாக, குறைகாண்பவர்களாக இருப்பதற்கு மாறாக, கரிசனையுள்ள, உதவிசெய்யக்கூடிய மனச்சாய்வுள்ளவர்களாக இருப்போம். பதிலாக, மற்றவர்களும் நம்மிடம் கூட்டுறவு கொள்வதை எளிதானதாகவும் அதிக இன்பமானதாகவும் காண்பார்கள்.
கிறிஸ்தவ சபையிலுள்ள மூப்பர்கள் முக்கியமாகப் பொறுமையைக் காத்துக்கொள்ள வேண்டும். சில நேரங்களில், உடன் கிறிஸ்தவர்கள் கடினமான பிரச்சினைகளுடன் அவர்களை அணுகுகிறார்கள். உண்மை மனதுடன் அணுகும் இவர்கள் குழப்பமடைந்தவர்களாக, நிலைகுலைந்தவர்களாக, அல்லது மனச்சோர்வடைந்தவர்களாக இருக்கக்கூடும்; அதேநேரத்தில் அந்த மூப்பர்கள்தாமே தங்களுடைய சொந்த தனிப்பட்ட அல்லது குடும்பப் பிரச்சினைகளால் சோர்வுற்றவர்களாக அல்லது கவனம் திசைதிருப்பப்பட்டவர்களாக இருக்கலாம். இருந்தாலும், அப்படிப்பட்ட சோதனையான சூழ்நிலைகளில் மூப்பர்கள் பொறுமையைக் காத்துக்கொள்வது எவ்வளவு இன்றியமையாததாய் இருக்கிறது! இந்த முறையில் அவர்கள் “சாந்தமாய்” உபதேசிக்கவும், ‘மந்தையைக் கனிவுடன் நடத்தவும்’ முடியும். (2 தீமோத்தேயு 2:24-26; அப்போஸ்தலர் 20:28, 29, NW) விலைமதிப்புள்ள உயிர்கள் அபாயத்தில் இருக்கின்றன. தயவும், அன்பும், பொறுமையுமுள்ள மூப்பர்கள் சபைக்கு என்னே ஒரு ஆசீர்வாதமாக இருக்கிறார்கள்!
குடும்பத் தலைவர்கள் தங்கள் குடும்பங்களைப் பொறுமையோடும், புரிந்துகொள்ளுதலோடும், தயவோடும் நடத்தவேண்டும். அவர்கள் இதே பண்புகளைக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் அனைவரும் காண்பிக்கும்படி எதிர்பார்க்கவும் உற்சாகப்படுத்தவும் வேண்டும். (மத்தேயு 7:12) வீட்டில் அன்பும் அமைதியும் நிலவுவதற்கு இது பெரிதும் உதவும்.
வெளி ஊழியத்தில் ஈடுபடும்போது பொறுமையைக் காத்துக்கொள்வது, கிறிஸ்தவ ஊழியர்கள் இந்தச் சேவையை அதிக முழுமையாக அனுபவிப்பதற்கு உதவி செய்யும். எதிர்ப்படக்கூடிய எந்தவிதமான அசட்டை மனப்பான்மையையும் எதிர்ப்பையும் நன்கு சகித்துக்கொள்ள இது உதவியாக இருக்கும். கோபப்படும் வீட்டுக்காரர்களிடம் தர்க்கம் செய்வதற்குப் பதிலாக, பொறுமையுள்ள ஊழியர்களால் ஒரு சாந்தமான பதிலைக் கொடுத்துவிட்டு, அமைதலாகப் போய்விட முடியும்; இவ்வாறு அவர்கள் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் காத்துக்கொள்வார்கள். (மத்தேயு 10:12, 13) மேலுமாக, கிறிஸ்தவர்கள் எல்லாரையும் பொறுமையோடும் தயவோடும் நடத்தும்போது, செம்மறியாட்டைப் போன்றவர்கள் ராஜ்ய செய்தியிடமாக கவர்ந்திழுக்கப்படுவார்கள். பொறுமையுள்ள முயற்சிகளை உலகளாவிய அளவில் யெகோவா ஆசீர்வதித்திருக்கிறார். ஏனெனில் ஒவ்வொரு வருடமும் சத்தியத்தைத் தேடும் சாந்தகுணமுள்ள லட்சக்கணக்கானோர் யெகோவாவின் அன்புள்ள சபைக்குள் திரண்டு வருகின்றனர்.
உண்மையிலேயே, பொறுமையைக் காத்துக்கொள்வது நமக்கு நல்ல பலன்களைக் கொண்டுவரும். அவசரப்பட்டு செயல்படுவதன்மூலம் அல்லது நாம் சிந்திக்காமல் பேசிவிடுவதால் ஏற்படும் அநேக விபத்துக்களையும் பிரச்சினைகளையும் நாம் தவிர்ப்போம். நாம் அதிக மகிழ்ச்சியுள்ளவர்களாகவும் அமைதலுள்ளவர்களாகவும், ஒருவேளை அதிக ஆரோக்கியமுள்ளவர்களாகவும் இருப்போம். நம்முடைய ஊழியத்திலும், சபையிலும், வீட்டிலும் அதிகப்படியான சந்தோஷத்தையும் சமாதானத்தையும் அனுபவிப்போம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுளோடு ஒரு நெருங்கிய உறவை அனுபவிப்போம். ஆகவே யெகோவாவை நம்பி காத்திருங்கள். பொறுமையைக் காத்துக்கொள்ளுங்கள்!
[அடிக்குறிப்புகள்]
a பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.
[பக்கம் 10-ன் படங்கள்]
அன்றாடக வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு பொறுமையாக இருக்கிறீர்கள்?