யெகோவாவைப் போல் பொறுமை காண்பியுங்கள்
‘யெகோவா தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல் . . . நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.’—2 பேதுரு 3:9.
1. ஒப்பற்ற என்ன பரிசை யெகோவா மனிதர்களுக்குக் கொடுக்கிறார்?
எவராலுமே கொடுக்க முடியாத ஒன்றை யெகோவா நமக்குக் கொடுக்கிறார். அது உண்மையிலேயே மனதைக் கவருகிற, மிகமிக அரிய ஒன்றாகும். ஆனால், அதை விலைக்கு வாங்கவோ, ஊதியமாகப் பெற்றுக்கொள்ளவோ முடியாது. ஆம், அவர் நமக்குக் கொடுக்கும் பரிசு நித்திய ஜீவன் ஆகும்; நம்மில் பெரும்பாலோருக்குப் பரதீஸ் பூமியில் கிடைக்கப்போகும் முடிவில்லா வாழ்வை அது குறிக்கிறது. (யோவான் 3:16) ஆஹா, அது எத்தனை இன்பமாயிருக்கும்! சொல்லொண்ணா துயரங்களுக்குக் காரணமான சண்டை சச்சரவு, வன்முறை, வறுமை, குற்றச்செயல், வியாதி, ஏன் மரணம்கூட இனி இருக்காது. கடவுளுடைய ராஜ்யத்தின் அன்பான ஆட்சியின் கீழ் ஜனங்கள் பூரண சமாதானத்துடனும் ஐக்கியத்துடனும் வாழ்வார்கள். அப்படிப்பட்ட பரதீஸுக்காக நாம் எவ்வளவாய் ஏங்குகிறோம்!—ஏசாயா 9:6, 7; வெளிப்படுத்துதல் 21:4, 5.
2. சாத்தானின் உலகத்தை யெகோவா ஏன் இன்னமும் அழிக்காதிருக்கிறார்?
2 பூமியை ஒரு பரதீஸாய் மாற்றப்போகும் காலத்திற்காக யெகோவாவும்கூட மிக ஆவலோடு காத்திருக்கிறார்; நீதி நியாயத்தில் அவர் பிரியமுள்ள தேவனாயிற்றே! (சங்கீதம் 33:5) தமது நீதியுள்ள நியமங்கள்மீது துளிகூட அக்கறையில்லாத அல்லது அவற்றை எதிர்க்கிற இந்த உலகத்தை, அதுவும் தமது அதிகாரத்தை வெறுத்தொதுக்கி, தமது ஜனங்களைத் துன்புறுத்துகிற இந்த உலகத்தை, பார்த்துக்கொண்டிருக்க அவருக்குக் கொஞ்சங்கூட விருப்பம் இல்லை. என்றாலும், சாத்தானின் கட்டுப்பாட்டுக்குள் கிடக்கிற இந்த உலகத்தை அவர் இன்னமும் அழிக்காதிருப்பதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன. அவருடைய பேரரசுரிமையை உட்படுத்தும் தார்மீக விவாதங்களோடு அவை சம்பந்தப்பட்டிருக்கின்றன. அந்த விவாதங்களைத் தீர்த்துவைப்பதில் யெகோவா வெகு அருமையான ஒரு குணத்தைக் காண்பிக்கிறார்; அந்தக் குணம் இன்று அநேகருக்கு இல்லை.—அதுதான் பொறுமை என்ற குணம்.
3. (அ) பைபிளில் “பொறுமை” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க, எபிரெய வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன? (ஆ) இப்போது நாம் என்ன கேள்விகளைச் சிந்திக்கப்போகிறோம்?
3 புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள், ஒரு கிரேக்க வார்த்தையை “பொறுமை” என மூன்று முறை மொழிபெயர்த்திருக்கிறது. சொல்லர்த்தமாக அவ்வார்த்தை “நீடித்த மனப்பான்மை” எனப் பொருள்படுகிறது; எனவே, அவ்வார்த்தை அநேக இடங்களில் “நீடிய பொறுமை” என்றும், ஒரேவொரு இடத்தில் ‘பொறுமையாய் இருப்பது’ என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “பொறுமை” என்பதற்கான எபிரெய, கிரேக்க வார்த்தைகளுக்கு சகித்திருப்பது, கோபப்பட தாமதிப்பது ஆகிய அர்த்தங்கள் உள்ளன. யெகோவாவின் பொறுமை நமக்கு எப்படி நன்மை அளிக்கிறது? யெகோவாவும் அவருடைய உண்மையுள்ள ஊழியர்களும் காண்பித்த பொறுமையிலிருந்தும் சகிப்புத்தன்மையிலிருந்தும் நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? யெகோவாவின் பொறுமைக்கு ஓர் எல்லை உண்டு என்பது நமக்கு எப்படித் தெரியும்? இந்த விஷயங்களை இப்போது நாம் சிந்திக்கலாம்.
யெகோவாவின் பொறுமையைச் சிந்தித்துப்பாருங்கள்
4. யெகோவாவின் பொறுமையைக் குறித்து அப்போஸ்தலன் பேதுரு என்ன எழுதினார்?
4 யெகோவாவின் பொறுமையைக் குறித்து அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் வருஷம் போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள் போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்க வேண்டாம். தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.” (2 பேதுரு 3:8, 9) யெகோவாவின் பொறுமையைப் பற்றிப் புரிந்துகொள்ள உதவும் இரண்டு குறிப்புகள் இவ்வசனத்தில் இருப்பதைக் கவனியுங்கள்.
5. நேரத்தைக் குறித்த யெகோவாவுடைய கண்ணோட்டம் அவருடைய செயல்களை எவ்வாறு பாதிக்கிறது?
5 முதல் குறிப்பு: நேரத்தைக் குறித்ததில் நம்முடைய கண்ணோட்டம் வேறு, யெகோவாவுடைய கண்ணோட்டம் வேறு. சதா காலங்களுக்கும் ஜீவிக்கிற அவருக்கு, ஆயிரம் வருஷம் என்பது ஒரு நாள் போல்தான். நேரத்தால் அவர் கட்டுப்படுவதும் இல்லை, நெருக்கப்படுவதும் இல்லை, என்றாலும் செயல்படுவதில் அவர் தாமதிக்கிறவர் அல்ல. எந்த நேரத்தில் செயல்பட்டால் சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் நல்லதாக அமையும் என்பதை அளவில்லா ஞானமுடைய அவர் மிகத் துல்லியமாக அறிந்திருக்கிறார்; அந்த நேரத்திற்காகப் பொறுமையோடும் காத்திருக்கிறார். ஆனால், அதுவரைக்கும் அவருடைய ஊழியர்கள் அனுபவிக்கிற பிரச்சினைகளை அவர் கண்டுகொள்ளாதிருக்கிறார் என்று நாம் முடிவுசெய்துவிடக் கூடாது. அவர் ‘உருக்கமான இரக்கமுள்ள’ தேவன், அன்பே உருவானவர். (லூக்கா 1:77; 1 யோவான் 4:8) துன்பங்களை இப்படித் தற்காலிகமாக அனுமதிப்பதால் விளைகிற எல்லாத் தீங்கையும் அவரால் முழுமையாகவும் நிரந்தரமாகவும் சரிகட்ட முடியும்.—சங்கீதம் 37:10.
6. கடவுளைப் பற்றி நாம் எந்த முடிவுக்கு வந்துவிடக் கூடாது, ஏன்?
6 உண்மைதான், நாம் ஏங்கும் ஒன்றிற்காகக் காத்திருப்பது அத்தனை எளிதல்ல. (நீதிமொழிகள் 13:12) எனவே, ஜனங்கள் தங்களுடைய வாக்குறுதிகளைச் சட்டென நிறைவேற்றாதபோது, அவர்களுக்கு அப்படியொரு உத்தேசமே இல்லையென மற்றவர்கள் முடிவுசெய்துவிடலாம். கடவுளைப் பற்றி அவ்வாறு நினைப்பது எப்பேர்ப்பட்ட முட்டாள்தனம்! கடவுள் பொறுமையாய் இருக்கிறார் என்று நினைப்பதற்குப் பதிலாக, அவர் தாமதிக்கிறார் எனத் தவறாக நினைத்தோமானால், காலம் செல்லச்செல்ல எளிதில் நாம் சந்தேகப்பட ஆரம்பித்துவிடுவோம், ஊக்கமிழந்துவிடுவோம். அதுமட்டுமல்ல, ஆன்மீக ரீதியில் மந்தமாகிவிடுவோம். இன்னும் மோசமாக, முன்பு பேதுரு எச்சரித்திருந்த ஆட்களால், அதாவது விசுவாசமற்ற பரியாசக்காரர்களால் வஞ்சிக்கப்பட்டும்விடுவோம். அப்படிப்பட்டவர்கள் ஏளனமாக இவ்வாறு சொல்கிறார்கள்: “அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்த பின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்த விதமாயிருக்கிறதே.”—2 பேதுரு 3:4.
7. ஜனங்கள் மனந்திரும்ப வேண்டுமென்ற யெகோவாவின் விருப்பம் அவருடைய பொறுமையுடன் எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது?
7 பேதுருவின் வார்த்தைகளிலிருந்து நாம் புரிந்துகொள்ளும் இரண்டாவது குறிப்பு: எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்புவதால் யெகோவா பொறுமையாக இருக்கிறார். கெட்ட வழிகளை விட்டுவிட பிடிவாதமாய் மறுப்பவர்கள் யெகோவாவின் கரத்தில் மரணத்தைச் சந்திப்பார்கள். என்றாலும், துன்மார்க்கருடைய மரணத்தில் கடவுள் பிரியப்படுவதில்லை. மாறாக, ஜனங்கள் மனந்திரும்பி, தங்கள் பொல்லாத வழிகளை விட்டுவிட்டு, தொடர்ந்து ஜீவிப்பதைப் பார்க்கவே அவர் விரும்புகிறார். (எசேக்கியேல் 33:11) அதனால்தான் பொறுமையாக இருக்கிறார், அதோடு ஜனங்கள் தொடர்ந்து ஜீவிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பெற்றுக்கொள்வதற்கு உலகெங்கும் தமது ஊழியர்கள் மூலமாக நற்செய்தியையும் அறிவிக்கிறார்.
8. இஸ்ரவேல் தேசத்தை கடவுள் நடத்திய விதத்திலிருந்து அவருடைய பொறுமை எவ்வாறு விளங்குகிறது?
8 பூர்வ இஸ்ரவேல் தேசத்தை நடத்திய விதத்திலிருந்தும் கடவுளுடைய பொறுமை விளங்குகிறது. நூற்றாண்டுகளாக, அந்தத் தேசத்தின் கீழ்ப்படியாமையை அவர் பொறுத்துக்கொண்டார். தமது தீர்க்கதரிசிகள் மூலம், “நீங்கள் உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பி, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டதும், என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளைக்கொண்டு உங்களுக்குச் சொல்லியனுப்பினதுமான நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொள்ளுங்கள்” எனத் திரும்பத்திரும்ப அவர்களை ஊக்குவித்தார். விளைவு? வருத்தகரமாக, அந்த ஜனங்கள் ‘செவிகொடுக்கவில்லை.’—2 இராஜாக்கள் 17:13, 14.
9. இயேசு தமது பிதாவின் பொறுமையை எப்படிப் பிரதிபலித்தார்?
9 கடைசியில், யெகோவா தம்முடைய மகனை அனுப்பினார்; கடவுளுடன் சமரசமாகும்படி அவர் அந்த யூதர்களிடம் ஓயாமல் கேட்டுக்கொண்டார். தமது பிதாவின் பொறுமையை இயேசு அச்சுப்பிசகாமல் பிரதிபலித்தார். வெகு சீக்கிரத்தில் தாம் கொல்லப்படப்போவதை அறிந்திருந்த அவர் இவ்வாறு சொல்லி மனம் வருந்தினார்: “எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.” (மத்தேயு 23:37) உருக்கமான இந்த வார்த்தைகள் ஒருவருக்குத் தண்டனை வழங்கத் துடிக்கிற கடுகடுப்பான ஒரு நீதிபதியின் வார்த்தைகள் அல்ல, ஆனால் ஜனங்களிடம் பொறுமையாயிருக்கும் அன்பான ஒரு நண்பரின் வார்த்தைகளே. ஜனங்கள் மனந்திரும்பி, ஆக்கினைத் தீர்ப்பிலிருந்து தப்பிக்க வேண்டுமென பரலோகத்திலுள்ள தம் பிதாவைப் போலவே இயேசு விரும்பினார். இயேசு விடுத்த எச்சரிப்புகளுக்குச் சிலர் செவிசாய்த்தார்கள், அதனால் பொ.ச. 70-ன்போது எருசலேமுக்கு ஏற்பட்ட பயங்கர அழிவிலிருந்து உயிர்தப்பினார்கள்.—லூக்கா 21:20-22.
10. கடவுளுடைய பொறுமை நமக்கு எவ்விதத்தில் நன்மை அளித்திருக்கிறது?
10 கடவுளுடைய பொறுமை அதிசயிக்க வைக்கிறது, அல்லவா? மனிதர்கள் இந்தளவுக்குக் கீழ்ப்படியாதபோதிலும், அவரைப் பற்றித் தெரிந்துகொண்டு, இரட்சிப்புக்குரிய நம்பிக்கையை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை நம் ஒவ்வொருவருக்கு மட்டுமல்ல, லட்சோப லட்சம் பேருக்கும் அவர் அளித்திருக்கிறார். “நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்” என்று சக கிறிஸ்தவர்களுக்கு பேதுரு எழுதினார். (2 பேதுரு 3:15) யெகோவாவின் பொறுமை நம்முடைய இரட்சிப்புக்கு வழிசெய்திருப்பதால் நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும், அல்லவா? அனுதினமும் யெகோவாவுக்குச் சேவைசெய்யும்போது, அவர் நம்முடன் தொடர்ந்து பொறுமையோடு இருக்க வேண்டுமென ஜெபிக்க வேண்டும், அல்லவா?—மத்தேயு 6:12.
11. யெகோவாவின் பொறுமையைப் பற்றிப் புரிந்துகொள்ளும்போது என்ன செய்ய நாம் தூண்டப்படுவோம்?
11 யெகோவா ஏன் பொறுமையாய் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளும்போது, அவர் அளிக்கப்போகும் இரட்சிப்புக்காக நாம் பொறுமையுடன் காத்திருப்போம், அதோடு தமது வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர் தாமதிக்கிறார் என்ற முடிவுக்கும் வந்துவிட மாட்டோம். (புலம்பல் 3:26) கடவுளுடைய ராஜ்யம் வருவதற்காக நாம் தொடர்ந்து ஜெபித்துக்கொண்டிருந்தாலும், அந்த ஜெபத்திற்குப் பதில் அளிப்பதற்கான சிறந்த நேரத்தைக் கடவுள் அறிந்திருக்கிறார் என்பதை உறுதியாக நம்புகிறோம். அதோடு நம்முடைய சகோதரர்களிடமும் நாம் பிரசங்கிக்கிற ஆட்களிடமும் யெகோவாவைப் போல் பொறுமை காண்பிக்க மனம் தூண்டப்படுகிறோம். ஒருவருமே அழிந்துபோகாமல், மனந்திரும்பி நம்மைப் போலவே நித்திய ஜீவ நம்பிக்கையைப் பெற வேண்டுமென்று நாமும் விரும்புகிறோம்.—1 தீமோத்தேயு 2:3, 4.
தீர்க்கதரிசிகளின் பொறுமையைச் சிந்தித்துப்பாருங்கள்
12, 13. யாக்கோபு 5:10-ல் சொல்லப்பட்டுள்ளபடி, ஏசாயா தீர்க்கதரிசி எவ்வாறு கடைசிவரை பொறுமையாக இருந்தார்?
12 யெகோவாவின் பொறுமையைப் பற்றிச் சிந்திப்பது, அந்தக் குணத்தை உயர்வாக மதிப்பதற்கும் அதை வளர்த்துக்கொள்வதற்கும் நமக்கு உதவுகிறது. அவ்வாறு பொறுமையை வளர்த்துக்கொள்வது அபூரண மனிதர்களான நமக்கு அத்தனை எளிதல்ல, ஆனாலும் நம்மால் முடியும். பூர்வ காலத்தில் வாழ்ந்த கடவுளுடைய ஊழியர்களின் முன்மாதிரியிலிருந்து நாம் அதைக் கற்றுக்கொள்கிறோம். சீஷனாகிய யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “என் சகோதரரே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக [அதாவது, மாதிரியாக] வைத்துக்கொள்ளுங்கள்.” (யாக்கோபு 5:10) நாம் எதிர்ப்பட வேண்டியிருக்கிற பிரச்சினைகளை வேறு பலரும் வெற்றிகரமாய் எதிர்ப்பட்டிருந்தார்கள் என்பதை அறிவது ஆறுதலையும் ஊக்கத்தையும் அளிக்கிறது.
13 உதாரணமாக, தன்னுடைய ஊழிய நியமிப்பில் ஏசாயா தீர்க்கதரிசிக்கு நிச்சயமாகவே பொறுமை தேவைப்பட்டது. அதைச் சுட்டிக்காட்டுபவராக அவரிடம் யெகோவா இவ்வாறு சொன்னார்: “நீ போய், இந்த ஜனங்களை நோக்கி, நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக் கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல். இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு.” (ஏசாயா 6:9, 10) ஜனங்கள் செவிசாய்க்காதபோதிலும், குறைந்தபட்சம் 46 ஆண்டுகளுக்கு யெகோவாவின் எச்சரிப்புச் செய்திகளை ஏசாயா பொறுமையாக அறிவித்தார்! அவ்வாறே, இன்று அநேகர் நற்செய்தியை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், ஊழியத்தில் நாம் தொடர்ந்து ஈடுபட பொறுமை நமக்கு உதவும்.
14, 15. துயரங்களையும் ஊக்கமின்மையையும் சமாளிக்க எரேமியாவுக்கு எது உதவியது?
14 ஆனால், அந்தத் தீர்க்கதரிசிகள் ஊழியத்தில் ஈடுபட்டபோது ஜனங்களுடைய அசட்டை மனப்பான்மையை மட்டுமல்ல, துன்புறுத்தலையும்கூட சகித்தார்கள். எரேமியா தொழுமரத்தில் பூட்டப்பட்டார், ‘விலங்குகள் உள்ள வீட்டிலே’ அடைக்கப்பட்டார், பாழுங்கிணற்றிலே தூக்கியெறியப்பட்டார். (எரேமியா 20:2, NW; 37:15, NW; 38:6, NW) எந்த ஜனங்களுக்கு உதவிசெய்ய விரும்பினாரோ அந்த ஜனங்களிடமிருந்தே அத்தகைய துன்புறுத்தல் அவருக்கு வந்தது. என்றாலும், எரேமியா மனக்கசப்படையவும் இல்லை, பழிவாங்கவும் இல்லை. அத்தகைய துன்புறுத்தலைப் பல பத்தாண்டுகளுக்குப் பொறுமையாகச் சகித்தார்.
15 துன்புறுத்தலும் ஏளனப் பேச்சும் எரேமியாவின் வாயை அடைக்க முடியவில்லை, இன்று நம்முடைய வாயையும் அடைக்க முடிவதில்லை. உண்மைதான், சில நேரங்களில் நாம் ஊக்கமிழந்துவிடலாம். எரேமியாவும்கூட ஒருசமயம் ஊக்கமிழந்துபோனார். “நான் கூறின கர்த்தருடைய வார்த்தை நாள்தோறும் எனக்கு நிந்தையும், பரிகாசமுமாயிற்று. ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன்” என்று அவர் எழுதினார். அதன் பிறகு என்ன நடந்தது? பிரசங்கிப்பதையே நிறுத்திவிட்டாரா? எரேமியா தொடர்கிறார்: “ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப் போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக் கூடாமற்போயிற்று.” (எரேமியா 20:8, 9) இதைச் சற்று கவனியுங்கள்: ஜனங்கள் தன்னை ஏளனம் செய்ததைப் பற்றி யோசித்தபோது, அவர் தன் சந்தோஷத்தையே இழந்துபோனார். ஆனால் அருமையான, முக்கியமான செய்தியைப் பற்றி யோசித்தபோது இழந்த சந்தோஷத்தை மீண்டும் பெற்றார். அதுமட்டுமல்ல, எரேமியா கடவுளுடைய வார்த்தையைப் பக்தி வைராக்கியத்தோடும் தைரியத்தோடும் அறிவிப்பதற்காக, யெகோவா “பயங்கரமான பராக்கிரமசாலியாய்” இருந்து அவரைப் பலப்படுத்தவும் செய்தார்.—எரேமியா 20:11.
16. நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையில் நாம் எப்படித் தொடர்ந்து சந்தோஷமாக இருக்க முடியும்?
16 தீர்க்கதரிசியான எரேமியா தன் வேலையில் சந்தோஷத்தைக் கண்டடைந்தாரா? ஆம், நிச்சயமாகவே! யெகோவாவிடம் அவர் இவ்வாறு சொன்னார்: “உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; . . . கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.” (எரேமியா 15:16) மெய்க் கடவுளைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கும் அவருடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதற்கும் தனக்கிருந்த பாக்கியத்தை எண்ணி எரேமியா பெருமகிழ்ச்சி அடைந்தார். நாமும்கூட பெருமகிழ்ச்சி அடையலாம். அதுமட்டுமா, உலகெங்கும் இத்தனை அநேகர் ராஜ்ய செய்தியை ஏற்றுக்கொண்டு, மனந்திரும்பி, நித்திய ஜீவ பாதையிலே நடக்க ஆரம்பிப்பதைப் பார்த்து பரலோகத்திலுள்ள தேவதூதர்கள் சந்தோஷப்படுவதைப் போல் நாமும் சந்தோஷப்படுகிறோம்.—லூக்கா 15:10.
‘யோபுவின் சகிப்புத்தன்மை’
17, 18. யோபு எவ்விதத்தில் சகிப்புத்தன்மை காண்பித்தார், அதன் விளைவு என்னவாக இருந்தது?
17 பூர்வ காலத்து தீர்க்கதரிசிகளைப் பற்றிச் சொன்ன பிறகு, சீஷனாகிய யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “யோபின் பொறுமையை [“சகிப்புத்தன்மையை,” NW] குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.” (யாக்கோபு 5:11) “சகிப்புத்தன்மை” என்று இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையும், இதற்கு முந்தின வசனத்தில் “நீடிய பொறுமை” என்று யாக்கோபு பயன்படுத்திய வார்த்தைக்கும் ஒரேவிதமான அர்த்தம் இருக்கிறது. இவ்விரண்டு வார்த்தைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் காண்பிப்பவராக, ஓர் அறிஞர் இவ்வாறு எழுதினார்: “முந்தின வசனத்திலுள்ள வார்த்தை ஆட்கள் நம்மை மோசமாக நடத்தும்போது காட்டும் பொறுமையைக் குறிக்கிறது, பிந்தின வசனத்திலுள்ள வார்த்தை துயர்மிகு சூழ்நிலைகளை நாம் எதிர்ப்படும்போது காட்டும் பொறுமையைக் குறிக்கிறது.”
18 யோபு சொல்ல முடியாதளவு அத்தனை துயரங்களை அனுபவித்தார். சொத்துசுகங்களை இழந்தார், பிள்ளைகளைப் பறிகொடுத்தார், வேதனைமிக்க வியாதியால் அவதியுற்றார். அதோடு, யெகோவா அவரைத் தண்டிக்கிறார் என்ற பொய்க் குற்றச்சாட்டை எதிர்த்தும் போராடினார். யோபு தன் வேதனைகளையெல்லாம் மனதிலேயே அடக்கி வைக்கவில்லை; தன் சூழ்நிலை குறித்துப் புலம்பினார், கடவுளைவிட தான் நீதியுள்ளவர் என்பது போலவும் சொன்னார். (யோபு 35:2) என்றாலும், அவர் தன்னுடைய விசுவாசத்தை இழக்கவில்லை, தன்னுடைய உத்தமத்தை முறிக்கவில்லை. சாத்தான் சொன்னதுபோல், கடவுளைத் தூஷிக்கவும் இல்லை. (யோபு 1:11, 21) விளைவு? யெகோவா “யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்.” (யோபு 42:12) யோபுக்கு யெகோவா திரும்பவும் நல்ல உடல் ஆரோக்கியத்தைக் கொடுத்தார், அவருடைய சொத்துசுகங்களை இரு மடங்காக்கினார், அதோடு அவருடைய அன்பானவர்களுடன் சேர்ந்து நிறைவாக, சந்தோஷமாக வாழும் வாழ்க்கையைக் கொடுத்து ஆசீர்வதித்தார். யோபு உண்மையோடு சகித்திருந்தது யெகோவாவை இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவும்கூட அவருக்கு உதவியது.
19. யோபு பொறுமையோடு சகித்திருந்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
19 யோபு பொறுமையோடு சகித்திருந்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? யோபுவைப் போல, வியாதியாலோ வேறு ஏதாவது பிரச்சினைகளாலோ நாம் திண்டாடிக்கொண்டிருக்கலாம். குறிப்பிட்ட ஒரு சோதனையை நாம் அனுபவிக்க யெகோவா ஏன் அனுமதிக்கிறார் என்பதை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். என்றாலும், ஒன்றைக் குறித்து நாம் நிச்சயத்துடன் இருக்கலாம்: நாம் விசுவாசமாக இருந்தால், நாம் ஆசீர்வதிக்கப்படுவோம். தம்மை ஊக்கமாய்த் தேடுவோருக்கு யெகோவா கட்டாயம் பலன் அளிப்பார். (எபிரெயர் 11:6) இயேசு இவ்வாறு சொன்னார்: “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.”—மத்தேயு 10:22; 24:13.
‘யெகோவாவின் நாள் நிச்சயம் வரும்’
20. யெகோவாவின் நாள் வரும் என்று நாம் ஏன் நிச்சயமாய் இருக்கலாம்?
20 யெகோவா பொறுமையானவராக இருந்தாலும், அவர் நீதியுள்ளவர்கூட, அதனால் பொல்லாப்பை அவர் என்றென்றும் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார். அவருடைய பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. கடவுள் ‘பூர்வ உலகத்தை தப்பவிடவில்லை’ என்று பேதுரு எழுதினார். நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் உயிரோடு பாதுகாக்கப்பட்டார்கள், ஆனால் தேவபக்தியற்ற அந்த உலகம் ஜலப்பிரளயத்தில் அழிந்தது. சோதோம், கொமோரா பட்டணங்களின் மீதும் யெகோவா நியாயத்தீர்ப்பைக் கொண்டுவந்து, அவற்றைச் சாம்பலாக்கிப் போட்டார். இந்த நியாயத்தீர்ப்புகள் “பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு . . . திருஷ்டாந்தமாக” இருக்கின்றன. எனவே, இதைக் குறித்து நாம் நிச்சயமாக இருக்கலாம்: ‘யெகோவாவின் நாள் . . . [நிச்சயம்] வரும்.’—2 பேதுரு 2:5, 6; 3:10.
21. பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் நாம் எப்படிக் காண்பிக்கலாம், அடுத்த கட்டுரையில் எந்தப் பொருளின் பேரில் நாம் சிந்திக்கப்போகிறோம்?
21 அப்படியானால், ஆட்கள் இரட்சிக்கப்படுவதற்காக அவர்கள் மனந்திரும்ப உதவுவதன் மூலம் யெகோவாவைப் போல் பொறுமை காண்பிப்போமாக. அதோடு, ஆட்கள் செவிசாய்க்காவிட்டாலும் நற்செய்தியைப் பொறுமையாக அறிவிப்பதன் மூலம் தீர்க்கதரிசிகளையும் பின்பற்றுவோமாக. அதுமட்டுமல்ல, யோபுவைப் போல் சோதனைகளையெல்லாம் சகித்து தொடர்ந்து உத்தமமாக இருந்தோமானால், யெகோவா நம்மை அபரிமிதமாக ஆசீர்வதிப்பார், அதில் சந்தேகமே இல்லை. உலகெங்கும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக தமது ஜனங்கள் எடுக்கும் முயற்சிகளை யெகோவா எப்படி அபரிமிதமாய் ஆசீர்வதித்திருக்கிறார் என்பதைக் கவனிக்கும்போது, நம்முடைய ஊழியத்தில் நிச்சயமாக நாம் மகிழ்ச்சி காணலாம். அடுத்த கட்டுரையில் இதைப் பற்றிச் சிந்திக்கப்போகிறோம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• யெகோவா ஏன் பொறுமையைக் காண்பிக்கிறார்?
• தீர்க்கதரிசிகளின் பொறுமையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
• யோபு எப்படிச் சகிப்புத்தன்மை காண்பித்தார், அதன் விளைவு என்னவாக இருந்தது?
• யெகோவாவின் பொறுமைக்கு ஓர் எல்லை உண்டு என்பது நமக்கு எப்படித் தெரியும்?
[பக்கம் 18-ன் படம்]
தமது பிதாவின் பொறுமையை இயேசு அச்சுப்பிசகாமல் பிரதிபலித்தார்
[பக்கம் 20-ன் படங்கள்]
எரேமியாவின் பொறுமையை யெகோவா எப்படி ஆசீர்வதித்தார்?
[பக்கம் 21-ன் படங்கள்]
யோபின் சகிப்புத்தன்மைக்கு யெகோவா எப்படிப் பலன் அளித்தார்?