ஊழியத்தில் தேவை—பொறுமை
1. மனிதர்களிடம் யெகோவா எப்படிப் பொறுமையைக் காட்டிவந்திருக்கிறார்?
1 மனிதர்களிடம் யெகோவா தேவன் மிகுந்த பொறுமையைக் காட்டுகிறார். (யாத். 34:6; சங். 106:41-45; 2 பே. 3:9) அன்பினால் தூண்டப்பட்டு அவர் காட்டுகிற பொறுமைக்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டு உலகளாவிய பிரசங்க வேலை! கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளாக யெகோவா மனிதர்களிடம் பொறுமையைக் காட்டி வந்தாலும் இன்றுவரை நல்மனமுள்ள ஆட்களைத் தம் பக்கம் ஈர்த்துக்கொண்டிருக்கிறார். (யோவா. 6:44) யெகோவாவைப் போலவே நாமும் எப்படி ஊழியத்தில் பொறுமையைக் காட்டலாம்?
2. நம் பிராந்தியத்தில் ஊழியம் செய்யும்போது நாம் எப்படிப் பொறுமையைக் காட்டலாம்?
2 வீட்டுக்கு வீடு ஊழியம்: துளியும் ஆர்வம் காட்டாத பிராந்தியத்திலும்கூட நாம் “இடைவிடாமல்” பிரசங்கிப்பதன் மூலம் யெகோவாவின் பொறுமையைப் பிரதிபலிக்கிறோம். (அப். 5:42) ஊழியத்தில் ஆட்கள் நம்மை அலட்சியம் செய்யும்போது, கேலி செய்யும்போது, எதிர்க்கும்போது அவற்றைச் சகிப்பதன் மூலம் பொறுமையைக் காட்டுகிறோம். (மாற். 13:12, 13) சில சமயங்களில், ஆர்வம் காட்டியவர்களை வீடுகளில் பார்ப்பது அபூர்வமாக இருக்கிறது. என்றாலும்கூட அவர்களுடைய மனதில் நாம் விதைத்த சத்திய விதைகளுக்குத் தொடர்ந்து நீர்பாய்ச்சுவதற்காக விடாமுயற்சியுடன் செல்வதன் மூலம் பொறுமையைக் காட்டுகிறோம்.
3. மறுசந்திப்புகள் செய்யும்போதும் பைபிள் படிப்புகள் நடத்தும்போதும் நமக்கு ஏன் பொறுமை தேவை?
3 பைபிள் படிப்புகள்: ஒரு செடியை நட்டு வளர்க்க அதிக பொறுமை தேவை. அது நன்கு வளருவதற்காக நாம் நீர் பாய்ச்சி, உரம் போடலாம். ஆனால், அது வேகமாக வளர வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. (யாக். 5:7) அதேபோல்தான் ஒருவருடைய ஆன்மீக வளர்ச்சியும் இருக்கும்; அது படிப்படியாகத்தான் நடக்கும். (மாற். 4:28) பொய் மத நம்பிக்கைகளையும் பைபிளுக்கு விரோதமான பழக்கவழக்கங்களையும் விட்டுவிடுவது நம்முடைய பைபிள் மாணவர்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். எனவே, சத்தியத்தில் அவர்கள் சீக்கிரமாக முன்னேற வேண்டுமென எதிர்பார்த்து, மாற்றங்கள் செய்யச்சொல்லி அவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது. அந்த மாணவரின் இருதயத்தில் கடவுளுடைய சக்தி செயல்படுவதற்கு நேரம் எடுக்கும் என்பதால் நாம் பொறுமையாக இருக்க வேண்டும்.—1 கொ. 3:6, 7.
4. சத்தியத்தில் இல்லாத உறவினர்களுக்குச் சிறந்த விதத்தில் சாட்சி கொடுக்க பொறுமை நமக்கு எப்படி உதவும்?
4 சத்தியத்தில் இல்லாத உறவினர்கள்: நம்முடைய உறவினர்கள் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமென நாம் ரொம்பவே ஆசைப்படலாம்; என்றாலும், நம்முடைய நம்பிக்கைகளை அவர்களிடம் சொல்வதற்கான சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்வரை நாம் காத்திருப்பதன் மூலமும், அளவுக்குமீறி விஷயங்களைத் திணிப்பதைத் தவிர்ப்பதன் மூலமும் பொறுமையைக் காட்ட வேண்டும். (பிர. 3:1, 7) என்றாலும், நம்முடைய நடத்தை அவர்களுக்குச் சாட்சி கொடுக்க வேண்டும்; சத்தியத்தில் இருப்பதால் நம் வாழ்க்கையில் என்ன நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பது அவர்களுக்குப் பளிச்சென்று தெரிய வேண்டும். அதேசமயம், நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றிச் சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும் பேசத் தயாராக இருக்க வேண்டும். (1 பே. 3:1, 15) ஆம், ஊழியத்தில் நாம் பொறுமையைக் காட்டினால், நிறையப் பலன்களைப் பெறுவோம், நம் பரலோகத் தகப்பனின் மனதையும் சந்தோஷப்படுத்துவோம்.