“சந்தோஷமாய் துதிப்போர்” மாவட்ட மாநாட்டை தவறவிடாதீர்கள்
பைபிள் போதனைகள் நிறைந்த, பலனளிக்கக்கூடிய மூன்று நாட்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன. வெள்ளிக்கிழமை காலை 9:40 மணிக்கு இசையோடு நிகழ்ச்சிநிரல் தொடங்கும்போது நீங்கள் அங்கு இருங்கள். “யெகோவாவை சந்தோஷமாய் துதிப்போரே, உங்களுக்கு நல்வரவு!” என்ற ஆரம்பப் பேச்சையும், “சந்தோஷமாய் துதிப்போராக உலகெங்கும் பிரித்தெடுக்கப்பட்டிருத்தல்” என்ற முக்கிய பேச்சையும் கேட்டு மகிழுங்கள்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் நிகழ்ச்சிநிரல் இளைஞர்கள் மீதும், அவர்களுடைய பெற்றோர்கள் மீதும், கல்வியின் மீதும் கவனம் செலுத்தும். “திருமணம் செய்துகொள்வதற்கு நான் தயாராக இருக்கிறேனா?” என்ற பேச்சு அநேகர் கேட்க விரும்பும் ஒன்றாக இருக்கிறது. “தங்களுடைய பிள்ளைகளில் மகிழ்ச்சியைக் கண்டடையும் பெற்றோர்கள்” என்ற பேச்சை பெற்றோர்கள் கூர்ந்து கவனிக்கவேண்டும். பிற்பகல் நிகழ்ச்சிநிரல், “கல்வி—யெகோவாவைத் துதிக்க அதைப் பயன்படுத்துங்கள்” என்ற பேச்சோடு முடிவடையும். இளைஞர்கள் பள்ளிக்கூடத்தில் நிலைமைகளை வெற்றிகரமாக சமாளிக்க, கொடுக்கப்படுகிற பேச்சு உதவக்கூடியதாக இருக்கும்.
சனிக்கிழமை காலையில், “யெகோவாவைத் துதிப்பதற்கான அழைப்பிற்குப் பிரதிபலித்தல்” என்ற தலைப்பிலான தொடர்பேச்சு அநேகரை உற்சாகப்படுத்துவதாக இருக்கும். காலை நிகழ்ச்சிநிரலானது முழுக்காட்டுதல் பேச்சோடு முடிவடையும். மக்களைக் கண்ணியில் சிக்கவைப்பதற்காக சாத்தான் எவ்வாறு பூர்வகாலம் முதற்கொண்டே பாலுறவு ஆசையை உபயோகித்து வந்திருக்கிறான் என்பதைப்பற்றிய வெளிப்படையான கலந்தாலோசிப்பு பிற்பகலில் நடைபெறும். கடவுளுடைய மக்கள் தங்களுடைய ஊழியத்தை மேலும் திறம்பட்ட விதத்தில் செய்யத் தகுதியுடையவர்களாக்குகிற தகவல்களை அளிப்பதோடு அந்நாளின் நிகழ்ச்சிநிரல் முடிவுக்குவரும்.
ஞாயிற்றுக்கிழமை காலைநேர நிகழ்ச்சிநிரல், “மிகுந்த உபத்திரவம்” வருமுன் தாமதியாமல் அடைக்கலத்திற்கு ஓடவேண்டிய அவசரத் தேவையின்பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்தும் உந்துவிக்கவல்ல தகவல்களைச் சிறப்பித்துக் காட்டும். (மத்தேயு 24:21) இந்நிகழ்ச்சிநிரல் “முதிர்வயதிலுள்ள தகுதியுள்ளவர்களைக் கனம்பண்ணுதல்” என்ற தலைப்புள்ள முக்கியமான நாடகத்தோடு முடிவுறும். பிற்பகலில், “நித்திய ராஜாவைத் துதியுங்கள்!” என்ற தலைப்பைக்கொண்ட பொதுப் பேச்சு மாநாட்டின் மற்றொரு சிறப்பம்சமாக இருக்கும்.
இந்தியாவில் மட்டும் 16 மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதால், உங்களுடைய வீட்டுக்கு அருகாமையிலேயே ஒரு மாநாடு நடக்கும். உங்களுக்கு அருகாமையில் நடக்கும் ஒரு மாநாட்டின் நேரத்தையும் இடத்தையும் உள்ளூர் யெகோவாவின் சாட்சிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.