இயேசுவுக்கு கடவுளில் விசுவாசம் இருந்திருக்க முடியுமா?
திரித்துவ நம்பிக்கையுள்ளோரின் இரண்டக நிலை
“இயேசுவுக்கு எப்படி விசுவாசம் இருந்திருக்க முடியும்? அவர் கடவுளாயிற்றே; எவர் மீதும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இராதவராய் அவர் எல்லாவற்றையும் அறிந்தும் பார்த்து கொண்டுமிருக்கிறாரே. சரியாக விசுவாசம் என்பது மற்றொருவரின் மீது சார்ந்திருப்பதும் காணப்பட முடியாததை ஒப்புக்கொள்வதுமாகவும் இருக்கிறது; ஆகவே இயேசு-கடவுளுக்கு விசுவாசம் இருந்திருக்க முடியும் என்பது தள்ளிவிடப்படுகிறது.”
பிரெஞ்சு இறையியலர் ஜாக் கீய்யின் பிரகாரம், அது கத்தோலிக்க மதத்தில் முதன்மையான கருத்தாகும். இந்த விளக்கம் உங்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறதா? இயேசு கிறிஸ்தவர்களுக்கு எல்லாவற்றிலும் ஒரு முன்மாதிரியாக இருப்பதன் காரணமாக, விசுவாசத்துக்கும் அவர் மாதிரியாக இருக்கவேண்டும் என்பதாக நீங்கள் நினைத்திருக்கலாம். அவ்விதமாக நீங்கள் நினைத்திருந்தால், நீங்கள் கிறிஸ்தவமண்டலத்தின் திரித்துவ உறுதிக்கோட்பாட்டைப் பற்றி எண்ணிப்பார்த்திருக்கமாட்டீர்கள்.
திரித்துவத்தை “கிறிஸ்தவ விசுவாசம் மற்றும் வாழ்க்கையின் மைய இரகசியம்” என்பதாக நம்பும் கத்தோலிக்க, புராட்டஸ்டன்டு, ஆர்த்தடாக்ஸ் இறையியலருக்கு, இயேசுவின் விசுவாசம் பற்றிய கேள்வி உண்மையில் புரிந்துகொள்ளமுடியாத ஒன்றாகும்.a என்றபோதிலும் இயேசுவின் விசுவாசத்தை எல்லாரும் மறுதலித்து விடுவதில்லை. திரித்துவக் கோட்பாட்டின் வெளிச்சத்தில் அது ஒரு “புரியாப் புதிர்” என்பதை கீய்யி ஒப்புக்கொண்டாலும், ஜாக் கீய்யி “இயேசுவுக்கு விசுவாசம் இல்லை என்பதை ஒப்புக்கொள்வது கூடாத காரியம்” என்பதாக உறுதியாகச் சொல்கிறார்.
பிரெஞ்சு ஜெஸ்யுட் ஜான் காலோவும் அவரைப்போன்ற பெரும்பாலான இறையியலரும், “கிறிஸ்து மெய்யான தேவனும் மெய்யான மனிதனுமாக இருப்பதால் தம்மில்தாமே விசுவாசமுள்ளவராக இருக்கமுடியாது” என்று திட்டவட்டமாகச் சொல்கின்றனர். “விசுவாசம் என்பது தம்மையே நம்புவதை அல்ல, மற்றொருவரை நம்புவதையே உட்படுத்துகிறது,” என்பதாக லா சிவில்டா கட்டோலிக்க என்ற வெளியீடு குறிப்பிடுகிறது. அப்படியென்றால் திரித்துவ கோட்பாடே இயேசுவின் விசுவாசத்தை ஒப்புக்கொள்வதற்கு இடையூறாக உள்ளது, ஏனென்றால் இவ்விரண்டு கருத்துக்களும் தெளிவாகவே ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன.
“சுவிசேஷங்கள் ஒருபோதும் இயேசுவின் விசுவாசத்தைப் பற்றி பேசுவதில்லை,” என்பதாக இறையிலர்கள் கூறுகின்றனர். உண்மையில், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பதங்களாகிய பைஸ்டிவோ (நம்பு, விசுவாசமுடையவராயிரு) மற்றும் பைஸ்டிஸ் (விசுவாசம்) பொதுவாக தம்முடைய பரலோக தந்தையில் இயேசுவின் விசுவாசத்தைக் காட்டிலும் கடவுளில் அல்லது கிறிஸ்துவில் சீஷர்களின் விசுவாசத்தையே குறிப்பிட்டுக் காட்டுகின்றன. இதன் காரணமாக கடவுளுடைய மகனுக்கு விசுவாசம் இருக்கவில்லை என்பதாக நாம் முடிவுசெய்ய வேண்டுமா? அவர் செய்த மற்றும் சொன்னவற்றிலிருந்து நாம் என்ன புரிந்துகொள்ளலாம்? வேதவசனங்கள் என்ன சொல்கின்றன?
விசுவாசமில்லாத ஜெபங்களா?
இயேசு ஜெபம் செய்கிற ஒரு மனிதராக இருந்தார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர் ஜெபித்தார்—அவர் முழுக்காட்டப்பட்ட போது (லூக்கா 3:21); தம்முடைய 12 அப்போஸ்தலர்களைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக முழு இரவும் (லூக்கா 6:12, 13); அப்போஸ்தலர்களான பேதுரு, யோவான் மற்றும் யாக்கோபோடு இருக்கையில் மலையின் மேல் அற்புதமாக மறுரூபமாவதற்கு முன்னால். (லூக்கா 9:28, 29) அவர் ஜெபித்துக்கொண்டிருந்தபோது சீஷர்களில் ஒருவர் அவரிடம் இவ்வாறு கேட்டார்: ‘ஜெபம்பண்ண எங்களுக்குப் போதிக்கவேண்டும்.’ ஆகவே அவர் அவர்களுக்குக் கர்த்தருடைய (“பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே”) ஜெபத்தைக் கற்றுக்கொடுத்தார். (லூக்கா 11:1-4; மத்தேயு 6:9-13) அவர் தனிமையாகவும் அதி காலையில் வெகு நேரமும் (மாற்கு 1:35-39); மாலை நெருங்கி வருகையில் தம்முடைய சீஷர்களை அனுப்பிவிட்ட பின்பு ஒரு மலையின் மேலும் (மாற்கு 6:45, 46); தம்முடைய சீஷர்களோடு சேர்ந்தும் தம்முடைய சீஷர்களுக்காகவும் ஜெபித்தார். (லூக்கா 22:32; யோவான் 17:1-26) ஆம், ஜெபம் இயேசுவின் வாழ்க்கையில் ஒரு முக்கிய பாகமாக இருந்தது.
அற்புதங்களைச் செய்வதற்கு முன்பாக அவர் ஜெபித்தார். உதாரணமாக, அவருடைய நண்பன் லாசருவை உயிர்த்தெழுப்புவதற்கு முன்பாக: “பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள் நிமித்தம் இதைச் சொன்னேன்.” (யோவான் 11:41, 42) அவருடைய தந்தை அந்த ஜெபத்துக்குப் பதிலளிப்பார் என்ற நிச்சயம் அவருடைய விசுவாசத்தின் பலத்தைக் காண்பிக்கிறது. கிறிஸ்து சீஷர்களிடம் பின்வருமாறு சொன்ன காரியத்திலிருந்து, கடவுளிடம் ஜெபிப்பதற்கும் அவரில் விசுவாசம் வைப்பதற்குமிடையே உள்ள இந்த சம்பந்தம், தெளிவாக தெரிகிறது: “நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள்.”—மாற்கு 11:24.
இயேசுவுக்கு விசுவாசம் இல்லையென்றால், அவர் ஏன் கடவுளிடம் ஜெபித்தார்? இயேசு ஒரே சமயத்தில் மனிதராகவும் கடவுளாகவும் இருந்தார் என்ற கிறிஸ்தவமண்டலத்தின் வேத ஆதாரமற்ற போதனை பைபிள் செய்தியை தெளிவற்றதாக்கிவிடுகிறது. பைபிளின் எளிமையானத் தன்மையையும் வல்லமையையும் மக்கள் புரிந்துகொள்வதற்கு இடையூறாக உள்ளது. மனிதனாக இருந்த இயேசு யாரை நோக்கி உதவிக்கு வேண்டினார்? தன்னிடமாகவா? தாம் கடவுளாக இருப்பதை அறியாதிருந்தாரா? அவர் கடவுளாக இருந்து அதை அறிந்திருந்தாரேயானால், அவர் ஏன் ஜெபித்தார்?
இயேசு தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தின் கடைசி நாளன்று செய்த ஜெபங்கள் அவருடைய பரலோக தந்தையில் அவருக்கிருந்த உறுதியான விசுவாசத்தைப் பற்றிய இன்னும் ஆழமான உட்பார்வையை நமக்கு அளிக்கின்றன. நம்பிக்கையையும் நிச்சயமான எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்துகிறவராய் அவர் இவ்வாறு வேண்டிக்கொண்டார்: “பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.”—யோவான் 17:5.
மிக அதிக கடினமான சோதனைகளும் அவருடைய மரணமும் சமீபித்துவிட்டதை அறிந்தவராக, ஒலிவ மலையின் மேல் கெத்செமனே தோட்டத்தில் அவர் இருந்த அந்த இரவில், “துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.” மேலும் அவர் இவ்வாறு சொன்னார்: “என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது.” (மத்தேயு 26:36-38) பின்னர் அவர் முழங்கால்படியிட்டு இவ்வாறு ஜெபித்தார்: “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது.” அப்பொழுது “வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.” கடவுள் அவருடைய ஜெபத்தைக் கேட்டார். அவருடைய உணர்ச்சி பெருக்கத்தின் காரணமாகவும் சோதனையின் கடுமையின் காரணமாகவும், “அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.”—லூக்கா 22:42-44.
இயேசுவின் பாடுகளும், பெலப்படுத்தப்படுவதற்கான அவசியமும், அவருடைய விண்ணப்பங்களும் எதைச் சுட்டிக்காண்பிக்கின்றன? “ஒரு காரியம் நிச்சயமாக இருக்கிறது,” என்பதாக ஜாக் கீய்யி எழுதுகிறார். “இயேசு ஜெபித்தார், ஜெபம் அவருடைய வாழ்க்கையிலும் நடவடிக்கையிலும் இன்றியமையாத அம்சமாயிருக்கிறது, மனிதர்கள் ஜெபிப்பது போலவும், மனிதர்களுக்காகவும் அவர் ஜெபித்தார். விசுவாசத்தை ஒதுக்கிவிட்டு மனிதரின் ஜெபங்களை நினைத்தும் பார்க்க முடியாது. விசுவாசமில்லாமல் இயேசுவின் ஜெபங்களை நினைத்துப்பார்க்க முடியுமா?”
தம்முடைய மரணத்துக்குச் சற்று முன்பாக கழுமரத்தில் தொங்கிக்கொண்டு, இயேசு பலத்த சப்தத்தோடு தாவீதின் ஒரு சங்கீதத்தை மேற்கோளாகச் சொன்னார். பின்னர், விசுவாசத்தோடு, பலத்த சப்தமாய், முடிவான வேண்டுதலைச் சொன்னார்: “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.” (லூக்கா 23:46; மத்தேயு 27:46) ஓர் இத்தாலிய கலப்பு உட்பிரிவுகளின் மொழிபெயர்ப்பு பரோலா டெல் சின்னியோர் இயேசு பிதாவிடம் ‘தம்முடைய உயிரை ஒப்புக்கொடுத்தார்,’ என்று சொல்கிறது.
ஜாக் கீய்யி குறிப்புச் சொல்கிறார்: “கிறிஸ்து அறையப்பட்டதையும், இஸ்ரவேலரின் சங்கீதங்களை மேற்கோள் காட்டி தம்முடைய தந்தையை நோக்கிக் கூப்பிட்டதையும் நமக்குத் தெரிவிப்பதன் மூலம் சுவிசேஷ எழுத்தாளர்கள் அந்தக் கூப்பிடுதல், ஒரே பேறான குமாரனின் கூப்பிடுதல், முழுமையான துக்கத்தின் கூப்பிடுதல், பூரண நம்பிக்கையின் கூப்பிடுதல், விசுவாசத்தின் ஒரு கூப்பிடுதலாக, விசுவாசத்தோடு மரித்த மரணத்தின் ஒரு கூப்பிடுதலாக இருப்பதை நாம் உறுதியாக நம்பச்செய்கிறார்கள்.”
விசுவாசத்தின் இந்தத் தெளிவான மற்றும் தத்ரூபமான அத்தாட்சியை எதிர்ப்படுகையில், சில இறையியலர்கள் விசுவாசத்துக்கும் ‘நம்பிக்கைக்கும்’ இடையே வித்தியாசத்தை உண்டுபண்ண முயற்சிசெய்கிறார்கள். என்றபோதிலும், இப்படிப்பட்ட ஒரு வித்தியாசம் வேதவாக்கியங்களை ஆதாரமாகக் கொண்டில்லை.
ஆனால் அவர் சகித்த கடுமையான சோதனைகள் இயேசுவின் விசுவாசத்தைப் பற்றி சரியாக எதை வெளிப்படுத்துகின்றன?
‘நம்முடைய விசுவாசத்தைப் பூரணப்படுத்துகிறவர்’ பூரணராக்கப்பட்டார்
எபிரெயர்களுக்கு எழுதின தன்னுடைய கடிதத்தில் 11-வது அதிகாரத்தில், அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவத்துக்கு முற்பட்ட காலங்களிலிருந்த மேகம்போன்ற திரளான விசுவாசமுள்ள ஆண்களையும் பெண்களையும் பற்றி குறிப்பிடுகிறார். விசுவாசத்தின் மிகப்பெரிய மற்றும் பரிபூரண முன்மாதிரியை சுட்டிக்காட்டுவதன் மூலம் அவர் முடிக்கிறார்: “விசுவாசத்தைத் தொடங்கி வைத்தவரும், அதை நிறைவுபெறச் செய்பவருமான [பூரணப்படுத்துகிறவருமான, NW] இயேசுவின்மேல் கண்களைப் பதிய வைப்போம். அவர் தம் முன்னே வைத்திருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, நிந்தையைப் பொருட்படுத்தாமல், சிலுவையைத் [வாதனை மரத்தைத், NW] தாங்கினார். . . . பாவிகளால் தமக்கு உண்டான எவ்வளவோ எதிர்ப்பைத் தாங்கிக் கொண்ட அவரைச் சிந்தையில் இருத்துங்கள். அப்போது நீங்கள் மனம்சோர்ந்து தளர்ந்துபோகமாட்டீர்கள்.”—எபிரேயர் 12:1-3, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்.
இந்த வசனம் “இயேசுவின் தனிப்பட்ட விசுவாசத்தைப்” பற்றி பேசாமல், மாறாக “விசுவாசத்தைத் தொடங்கி வைத்தவர் அல்லது ஸ்தாபகர்” என்பதாக அவருடைய பங்கைப் பற்றி பேசுவதாக பெரும்பாலான இறையியலர்கள் சொல்கின்றனர். இந்தச் சொற்றொடரில் வரும் டெலியாட்டிஸ் என்ற கிரேக்க பதம் பூரணப்படுத்துகிற ஒருவரை, ஏதோவொன்றை கைக்கூடிவரச்செய்பவரை அல்லது முழுமைப்பெறச் செய்வரைக் குறிக்கிறது. “பூரணப்படுத்துகிறவராக” இயேசு பூமிக்கு வந்து பைபிள் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றி இவ்விதமாக விசுவாசத்துக்கு அதிக பலமான அஸ்திவாரத்தை ஸ்தாபிப்பதன் மூலம் விசுவாசத்தை முழுமைப்பெறச் செய்தார். ஆனால் இது அவருக்கு விசுவாசம் இல்லை என்பதை அர்த்தப்படுத்துமா?
பக்கம் 15-ல் பெட்டியில் நீங்கள் பார்க்கக்கூடிய, எபிரெயர்களுக்கு எழுதிய கடிதத்தின் பகுதிகள் எந்தச் சந்தேகத்தையும் விட்டுவைப்பதில்லை. இயேசு தம்முடைய பாடுகளினாலும் கீழ்ப்படிதலினாலும் பரிபூரணராக்கப்பட்டார். பரிபூரண மனிதனாக ஏற்கெனவே இருந்தபோதிலும், உண்மைக் கிறிஸ்தவர்களின் இரட்சிப்புக்கென்று பிரதான ஆசாரியனாக முழுமையாக அவர் தகுதிபெறும் பொருட்டு அவருடைய அனுபவம், எல்லா காரியங்களிலும், விசுவாசத்திலும்கூட அவரை பரிபூரணராகவும் முழுமைப்பெற்றவராகவும் செய்தது. அவர் தம்முடைய பிதாவிடம் “பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி”னார், அவர் “உண்மையுள்ளவராயிரு”ந்தார், அவர் “பயபக்தி”யுடையவராக இருந்தார். (எபிரெயர் 3:1, 2; 5:7-9) “எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்”டார், அதாவது, எந்த ஓர் உண்மையுள்ள கிறிஸ்தவனுடைய விசுவாசமும் “பலவிதமான சோதனை”களுக்கு உட்படுத்தப்படுவதைப் போலவே என்பதாக எபிரெயர் 4:15 சொல்கிறது. (யாக்கோபு 1:2, 3) இயேசுவை பின்பற்றுகிறவர்களைப் போலவே இயேசுவும் விசுவாசத்தில் சோதிக்கப்படாமல் இருந்தால், நம்மைப் “போல்” சோதிக்கப்பட்டார் என்று நம்புவது நியாயமாக இருக்கிறதா?
விண்ணப்பங்கள், கீழ்ப்படிதல், பாடுகள், சோதனைகள், உண்மைத்தன்மை மற்றும் தேவபக்தி இயேசுவின் முழுமையான விசுவாசத்துக்கு சான்றாயிருக்கின்றன. அவர் தம்முடைய சொந்த விசுவாசத்தில் பரிபூரணராக்கப்பட்டப் பின்புதானே நம்முடைய “விசுவாசத்தை பூரணப்படுத்து”கிறவரானார் என்பதைக் காட்டுகின்றன. திரித்துவக் கோட்பாடு உறுதியாகக் கூறுவது போல அவர் குமாரனாகிய தேவனாக இருக்கவில்லை என்பது தெளிவாயிருக்கிறது.—1 யோவான் 5:5.
அவர் கடவுளுடைய வார்த்தையை நம்பவில்லையா?
இயேசு “கடவுளுடைய வார்த்தையையும் அதன் செய்தியையும் நம்ப முடியாது,” ஏனென்றால் “உண்மையில் கடவுளுடைய வார்த்தையாக, அந்த வார்த்தையை அவரால் அறிவிக்க மட்டுமே முடியும்,” என்று வற்புறுத்தும் அளவுக்கு வரும்படியாக திரித்துவக் கோட்பாடு இறையியலரின் சிந்தனையைக் கட்டுப்படுத்தி வைக்கிறது.—திருக்கோயில் தொடர்பான இசைவாணை கொண்ட ஜீசூ எல் செனோரே, அஞ்சல்லோ அமாட்டோ எழுதியது.
இருந்தபோதிலும், இயேசு வேதவாக்கியங்களை அடிக்கடி குறிப்பிடுவது உண்மையில் எதைக் காட்டுகிறது? அவர் சோதிக்கப்பட்டபோது, வேதவாக்கியங்களிலிருந்து மூன்று தடவைகள் மேற்கோள் காட்டினார். அவர் கொடுத்த மூன்றாவது பதில், அவர் கடவுளை மாத்திரமே வணங்கியதைச் சாத்தானுக்குச் சொன்னது. (மத்தேயு 4:4, 7, 10) அநேக சமயங்களில், இயேசு தமக்குப் பொருந்தின தீர்க்கதரிசனங்களைக் குறிப்பிட்டு, அவற்றின் நிறைவேற்றத்தில் விசுவாசத்தைக் காண்பித்தார். (மாற்கு 14:21, 27; லூக்கா 18:31-33; 22:37; ஒப்பிடுக: லூக்கா 9:22; 24:44-46.) இந்த ஆய்விலிருந்து, இயேசு தம்முடைய தந்தையால் ஏவப்பட்ட வேதவாக்கியங்களை அறிந்திருந்தார், விசுவாசத்தோடு அவற்றைக் கடைப்பிடித்தார், அவருடைய சோதனைகளையும், பாடுகளையும், மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் முன்னறிவித்த தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தில் முழுமையான நம்பிக்கைக் கொண்டிருந்தார் என்ற முடிவுக்கு நாம் வரவேண்டும்.
இயேசு, பின்பற்றவேண்டிய விசுவாசத்திற்கு முன்மாதிரி
தம்முடைய பிதாவிடம் உத்தமத்தைக் காத்துக்கொள்வதற்கும் ‘உலகத்தை ஜெயிப்பதற்கும்’ இயேசு கடைசிவரையாக விசுவாசத்தின் போராட்டத்தைப் போராட வேண்டியவராக இருந்தார். (யோவான் 16:33) விசுவாசமில்லாமல் இப்படிப்பட்ட ஒரு வெற்றியை அடைவது கூடாதக் காரியமாகும். (எபிரெயர் 11:6; 1 யோவான் 5:4) அந்த வெற்றியுள்ள விசுவாசத்தின் காரணமாக, அவர் தம்மை உண்மையுடன் பின்பற்றுகிறவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தார். அவர் நிச்சயமாகவே மெய்க் கடவுளில் விசுவாசமுடையவராக இருந்தார்.
[அடிக்குறிப்புகள்]
a திரித்துவப் போதனை ஆதாரமற்றது என்பதற்குரிய அதிக விரிவான விளக்கம், உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி பிரசுரித்திருக்கும் நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா? என்ற சிற்றேட்டில் காணப்படுகிறது.
[பக்கம் 15-ன் பெட்டி]
‘பூரணப்படுத்துகிற’ இயேசு பூரணராக்கப்பட்டார்
எபிரெயர் 2:10: “தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது.”
எபிரெயர் 2:17, 18: “அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது. ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.”
எபிரெயர் 3:2: “மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தது போல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார்.”
எபிரெயர் 4:15: “நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.”
எபிரெயர் 5:7-9: “அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, அவர் குமாரனாய் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரண”மானார்.