வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெலிஸ்தர்கள் யார்?
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைக் கடவுளின் பண்டையகால ஜனங்கள் சுதந்தரித்துக்கொண்ட போது, கானான் தேசத்தில் பெலிஸ்தர்கள் என்றழைக்கப்பட்ட ஜனங்கள் வாழ்ந்ததைப் பற்றி பைபிள் அடிக்கடி குறிப்பிடுகிறது. நீண்டகாலமாக இந்தப் பண்டையகால பெலிஸ்தர்கள் கடவுளின் ஜனங்களை எதிர்த்தனர். கோலியாத் என்றழைக்கப்பட்ட இராட்சத பெலிஸ்த வீரனை தாவீது எதிர்ப்பட்ட சம்பவத்தில் இது விளக்கமாகத் தெரிகிறது.—1 சாமுவேல் 17:1-3, 23-53.
பண்டைய பெலிஸ்தர்கள் கப்தோரிலிருந்து கானானின் தென்மேற்கு கரையோரத்துக்கு இடம் மாறிச் சென்றனர் என்று பைபிள் குறிப்பிட்டுக் காட்டுகிறது. (எரேமியா 47:4) கப்தோர் எங்கேயிருந்தது? தி இன்டர்நேஷனல் ஸ்டான்டர்ட் பைபிள் என்ஸைக்ளோப்பீடியா (1979) குறிப்பிடுகிறது: “அதிகாரப்பூர்வமான பதிலைக் கொடுப்பதற்கு போதுமான அத்தாட்சி இல்லாதபோதிலும், அவர்கள் அநேகமாய் குடிபெயர்ந்து சென்ற இடம் கிரேத்தா தீவு (அல்லது கிரேத்தா மற்றும் ஏஜியன் தீவுகள், அவை கலாச்சாரத்தில் இணைந்திருக்கின்றன) என்று நவீன-நாளைய புலமை காண்பிக்கிறது.”—புத்தகம் 1, பக்கம் 610.
இதற்கிசைவாக, பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) ஆமோஸ் 9:7-ல் இவ்வாறு வாசிக்கிறது: “நீங்கள் எனக்கு எத்தியோப்பியரின் புத்திரரைப் போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று யெகோவா சொல்லுகிறார்; நான் இஸ்ரவேலை எகிப்து தேசத்திலிருந்தும், பெலிஸ்தரைக் கப்தோரிலிருந்தும், சீரியரைக் கீரிலிருந்தும் கொண்டு வரவில்லையோ?”
இந்தப் பண்டைய கடற்கரை ஜனங்கள் எப்போது கிரேத்தாவிலிருந்து யோப்பாவுக்கும் காசாவுக்கும் இடையே இருந்த தென்மேற்கு கடற்கரைப்பகுதியான பெலிஸ்தியா என்றழைக்கப்பட்ட கானானின் பகுதிக்கு வந்தனர் என்பது தெரியாது. ஆபிரகாம் மற்றும் ஈசாக்கின் நாட்களில் இந்தத் தாழ்வான கடற்கரையோரப் பகுதிகளில் இவர்கள் ஏற்கெனவே இருந்திருப்பதாகத் தோன்றுகிறது.—ஆதியாகமம் 20:1, 2; 21:32-34; 26:1-18.
கடவுள் வாக்குப்பண்ணிக் கொடுத்திருந்த தேசத்துக்குள் இஸ்ரவேலர் பிரவேசித்து நீண்ட காலத்துக்குப் பிறகும் பெலிஸ்தர்கள் தொடர்ந்து வல்லமை வாய்ந்த செல்வாக்கு செலுத்தினர். (யாத்திராகமம் 13:17; யோசுவா 13:2; நியாயாதிபதிகள் 1:18, 19; 3:3, 4; 15:9, 10; 1 சாமுவேல் 4:1-11; 7:7-14; 13:19-23; 1 இராஜாக்கள் 16:15) யூதேயா ராஜாவாகிய உசியாவின் ஆட்சி வரை பெலிஸ்தர்கள் தங்கள் பட்டணங்களாகிய காத், யப்னே, அஸ்தோத் ஆகியவற்றில் குடியிருந்தனர். (2 நாளாகமம் 26:6) பைபிள் பதிவுகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருந்த அவர்களுடைய மற்ற பட்டணங்கள் எக்ரோன், அஷ்க்கலோன், காசா போன்றவை.
மகா அலெக்சாந்தர் பெலிஸ்த பட்டணமாகிய காசாவைக் கைப்பற்றினார், ஆனால் காலப்போக்கில் பெலிஸ்தர்கள் தனி வேறான ஜனங்களாக இருந்தது முடிவுக்கு வந்தது. பிப்ளிக்கல் ஆர்க்கியாலஜி ரிவ்யு (மே/ஜூன் 1991) என்ற புத்தகத்தில் பேராசிரியர் லாரன்ஸ் இ. ஸ்டாஜர் இவ்வாறு எழுதினார்: “பெலிஸ்தர்களும்கூட பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டனர். . . . இருப்பினும் நாடு கடத்தப்பட்ட பெலிஸ்தர்களுக்கு என்ன நேரிட்டது என்பதைப் பற்றி எந்தப் பதிவும் இல்லை. நேபுகாத்நேச்சாரின் வெற்றிக்குப் பின் அஷ்க்கலோனில் தங்கியிருந்தவர்கள் தனிப்பட்ட இனப்பிரிவாக தங்கள் அடையாளத்தை இழந்து போயினர். பெலிஸ்தியர்களைப் பற்றிய சரித்திரப் பதிவு வேறு எதுவும் இல்லை.”
பலஸ்தீனா என்ற நவீன-நாளைய பெயர் லத்தீன் மற்றும் கிரேக்க சொற்களிலிருந்து வருகிறது, இது மேலும் பழமையான எபிரெய வார்த்தையாகிய “பெலிஸ்த”வோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. அரபு மொழியில் உள்ள சில பைபிள் மொழிபெயர்ப்புகள் “பெலிஸ்தர்” என்ற வார்த்தைக்கு ஒரு சொல்லைப் பயன்படுத்துகின்றன, அது நவீன-நாளைய பலஸ்தீனியர்களைக் குறிப்பிடும் சொல்லோடு குழப்பப்பட்டிருக்கிறது. இருப்பினும், டுடேஸ் அரபிக் வர்ஷன் ஒரு வித்தியாசமான அரபு வார்த்தையை உபயோகிக்கிறது, இவ்வாறு பண்டையகால பெலிஸ்தர்களுக்கும் நவீன-நாளைய பலஸ்தீனியர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் காண்பிக்கிறது.
[பக்கம் 31-ன் படம்]
அஷ்க்கலோனில் சில இடிபாடுகள்
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.