டொமினிகன் குடியரசு கண்டுபிடிப்புக்கு இன்னும் வாய்ப்புண்டு
ஓர் இளைஞனாக கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் கடலில் மேற்கொண்ட வாழ்க்கை இன்று மேற்கிந்திய தீவுகள் என்றறியப்படும் தீவுகளைக் கண்டுபிடிப்பதற்கு இறுதியாக அவரை வழிநடத்தியது. டிசம்பர் 1492-ல் அவருடைய கொடி கப்பலான சான்டா மரியா எஸ்பநோலா தீவின் வடகரைக்கு அப்பால் தரையைத் தொட்டது. இன்று ஹிஸ்பானியோலா என்றழைக்கப்படுகிற இதை ஹைதியும் டொமினிகன் குடியரசும் பகிர்ந்துகொண்டிருக்கிறது. அங்கே கொலம்பஸ் முதல் ஐரோப்பிய குடியிருப்பை நிறுவி, அவசரமாக ஒரு கோட்டையைக் கட்டி அதற்கு லா நாவிதாத் என்று பெயர் சூட்டினார். இந்தத் தீவு மேலுமான ஆய்வுப்பயணங்களுக்கு மைய இடமானது.
குறிப்பிடத்தக்க விதமாக, அழகுள்ள, நம்பகமான மற்றும் உபசரிக்கும் குணமுள்ள டேய்னோ இந்தியர்கள் இந்தத் தீவில் குடியிருந்ததை கொலம்பஸ் கண்டுபிடித்தார். அந்தச் சமயத்தில் இவர்கள் 1,00,000 பேர் இருந்ததாக கணக்கிடப்பட்டது. என்றபோதிலும், முக்கியமாக தங்கத்தைக் கண்டுபிடிக்கும் அக்கறையோடு வந்த அயல்நாட்டவர் கொடூரமாக இவர்களை நடத்தியதன் காரணமாக, உள்ளூர்வாசிகளின் மக்கள்தொகை வேகமாக குறைந்துவிட்டது. 1570-க்குள் சுமார் 500 டேய்னோ இந்தியர்கள் மட்டுமே இருந்ததாக சொல்லப்படுகிறது.
இன்று, டொமினிகன் குடியரசில் பற்பல இனத்தவரும் நிறத்தவரும் குடியிருக்கின்றனர், இவர்களுடைய மூதாதையர் பிற இடங்களிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்கள். அப்படியிருந்தாலும், டேய்னோவினரின் நல்ல பண்புகள் பலவற்றை இவர்கள் கொண்டிருப்பதாக தெரிகிறது. அடிப்படையில் இவர்கள் சிநேகப்பான்மையுள்ள, சுகமாக இருக்க விரும்பும் ஆட்களாக இருக்கின்றனர். இதோடுகூட, கடவுளில் உண்மையான நம்பிக்கையும் பைபிளுக்கு மதிப்பும் கொண்டவர்களாக இருப்பது, யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க மற்றும் போதிக்கும் வேலையை இந்தத் தேசத்தில் கவனிக்கத்தக்க வகையில் வெற்றிவாய்ப்புள்ளதாக்கி இருக்கிறது.
மற்றொரு வகையான கண்டுபிடிப்பு
முதலில் உவாட்ச் டவர் சொஸைட்டியின் மிஷனரிகளான லெனாட்டும் வெர்ஜினியா ஜான்சனும் ட்ரூஜில்லோ என்ற சர்வாதிகாரியின் ஆட்சி காலத்தில் டொமினிகன் குடியரசில் வந்திறங்கினர். அநேகர் பைபிள் செய்திக்கு விரைவாகவும் சாதகமாகவும் பிரதிபலிப்பதைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். என்றபோதிலும், இது, அதிகாரிகளுக்கும் அவர்களுடைய மத ஆலோசகர்களுக்கும் விருப்பமாயில்லை. ஆகவே துன்புறுத்தலின் அலை அவர்களைத் தாக்கியது, ஆரம்பகால டொமினிகன் சாட்சிகளின் விசுவாசம் கடுமையாக பரீட்சிக்கப்பட்டது. மரணம் வரையாக அவர்கள் உண்மைத்தவறாமையையும் விசுவாசத்தையும் காத்துக்கொண்டது இன்று வரையாக பேசப்பட்டுவருகிறது.
இப்பொழுது அத்தேசத்தின் எண்ணிக்கையில் சுமார் 16,000-ஆக இருக்கும் யெகோவாவின் சாட்சிகள் நன்கு அறியப்பட்டிருக்கின்றனர். கொஞ்ச காலத்துக்கு முன்பு, தேசம் முழுவதிலும் ஐந்து தொலைக்காட்சி நிலையங்கள் யெகோவாவின் சாட்சிகள்—அந்தப் பெயருக்குப் பின்னுள்ள அமைப்பு (ஆங்கிலம்) என்ற வீடியோவை ஒளிபரப்பின.a
பெரிய நகரங்களில் மட்டுமல்ல, சிறிய பட்டணங்களிலும் சில கிராமப்புற பகுதிகளிலும்கூட இது சாட்சிகளின் வேலைக்கு நல்ல விளம்பரத்தைக் கொடுத்தது. இதைத் தொடர்ந்து, ஒதுக்கமாயிருந்த இந்த இடங்களைச் சென்றெட்டுவதற்கு ராஜ்ய நற்செய்தியை பிரசங்கிக்கும் வேலையை விரிவாக்கும் விசேஷ ஏற்பாடுகள் ஒழுங்குசெய்யப்பட்டன.
சென்றெட்டியதற்கான ஆசீர்வாதங்கள்
அநேக இளம், சுறுசுறுப்புள்ள, வைராக்கியமான சாட்சிகள் இந்தத் தொலைதூரப் பிராந்தியங்களில் இரண்டு மாத காலங்கள் பிரசங்கிக்க முன்வந்தார்கள். அவர்களுடைய முயற்சிகள் நல்ல பலன்களைத் தந்தன. ஒரு பகுதியில் இரண்டு சாட்சிகள் அசாதாரணமான அக்கறையைக் கண்டுபிடித்தனர். அது இயேசுவின் மரணத்தினுடைய வருடாந்தர நினைவு ஆசரிப்பை அனுசரிப்பதற்கான சமயமாக இருந்தபடியால், அவர்கள் ஏற்பாடுகளைச் செய்து மக்களை வரும்படியாக அழைத்தனர். அறை மக்களால் நிரம்பிவிட்டது, அவர்கள் கூட்டத்தை நடத்தினார்கள். அது முடிவடைந்தபோது, வெளியே மற்றொரு பெரிய கூட்டமாக ஆட்கள் உள்ளேவர காத்துக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தார்கள். ஆகவே அவர்களை உள்ளே அழைத்து நிகழ்ச்சிநிரலை திரும்பவும் கொண்டிருந்தார்கள். இப்பொழுது அந்தப் பகுதியில் ஒரு சபை இருக்கிறது.
மக்களின் தாராள மனப்பான்மையும் சிநேகப்பான்மையுள்ள சுபாவமும் அவர்கள் கற்றுக்கொள்ளும் பைபிள் சத்தியத்தை தங்கள் குடும்ப அங்கத்தினர்களோடும் மற்றவர்களோடும் பகிர்ந்துகொள்ள அவர்களை அநேகமாக தூண்டுகிறது. ஒரு பைபிள் மாணாக்கர் அவர் கடைசியாக வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பங்குகொள்ள தகுதிபெற்றபோது சந்தோஷம் பொங்க உற்சாகமாயிருந்தார். அவர் அக்கம்பக்கத்திலுள்ளவர்களிடம் ஏற்கெனவே ஐந்து பைபிள் படிப்புகளை நடத்திக்கொண்டிருந்தார், ஆனால் அவர் ஊழியத்தில் அதிகமான பங்கைக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சியுள்ளவராக இருந்தார்.
அதிகளவான பிராந்தியம் ராஜ்ய பிரஸ்தாபிகளால் ஒழுங்காக சந்திக்கப்படாமல் இருப்பதால், பேருந்துகளிலும் வியாபாரம் செய்ய அல்லது பொருட்களை வாங்க நகரங்களுக்கு வருகிற ஆட்களிடமும் பிரசங்கிக்க முயற்சி செய்யப்பட்டுவருகிறது. மகிழ்ச்சியான விளைவுகளுக்கு இது வழிநடத்தியிருக்கிறது. கிளைக்காரியாலயம் பெற்றுக்கொண்ட ஒரு கடிதத்தின் சம்பந்தமாக இது காட்டப்படுகிறது. ஒரு பைபிள் படிப்பைக் கேட்டு எழுதியிருந்த கிராமப்புற பகுதியிலுள்ள இரண்டு ஆண்களிடமிருந்து இது வந்திருந்தது. ஒரு சாட்சி அவர்களைச் சென்று சந்தித்தபோது அந்த ‘ஆண்களின்’ வயது 10 மற்றும் 11-ஆக இருந்தது. ஆனால் அவர்கள் எவ்விதமாக பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி அறிந்துகொண்டார்கள்? ஆம், அந்தக் கிராமத்திலிருந்து ஒரு மனிதன் ஏதோ வியாபார விஷயமாக தலைநகருக்கு வந்திருந்தார். தெருவில் அவரைச் சந்தித்த ஒரு சாட்சி அவருக்கு ஒரு துண்டுப்பிரதியைக் கொடுத்து இலவசமான ஒரு வீட்டு பைபிள் படிப்பை எடுக்க முன்வந்தார். கிராமத்துக்குத் திரும்பிய அந்த மனிதன் 12 வயதுள்ள பக்கத்துவீட்டுப் பெண்ணிடமாக துண்டுப்பிரதியைக் கொடுத்து பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றி அவளுக்குச் சொன்னார். இந்தப் பெண் விஷயத்தை இரண்டு பையன்களிடம் சொல்ல, அவர்கள் உடனடியாக கடிதம் எழுதினார்கள். அந்தப் பையன்கள், அந்தப் பெண், அந்த மனிதன் மற்றும் அவருடைய இரண்டு பிள்ளைகளுக்கு ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
இளம் பிள்ளைகளின் நேர்த்தியான பிரதிபலிப்பு
ஆம், சத்தியத்தில் வளர்க்கப்பட்டவர்களும் மற்ற இளம் பிள்ளைகளும், கடவுளுக்கான தங்கள் வணக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிகிறது. உதாரணமாக, தாமாரும் அவளுடைய தங்கை கேலாவும், இரண்டு பேருமே, 10 வயதில் முழுக்காட்டப்பட்டு 11 வயதில் முழு நேர சேவையை எடுத்துக்கொண்டனர். வென்டி கரோலினா தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் தன்னுடைய ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்தியபோது அவளுக்கு வயது 12, இரண்டு வருடங்களுக்குப் பின்னர் 1985-ல் அவள் ஒழுங்கான பயனியர் செய்ய ஆரம்பித்தாள். இன்று அவள் திறம்பட போதிப்பவளாக, இன்னமும் முழு நேர சேவையை அனுபவித்து வருகிறாள். 10 வயதில் முழுக்காட்டப்பட்ட ஹோவானி, 11 வயதில் ஒரு ஒழுங்கான பயனியராக, நான்கு வீட்டு பைபிள் படிப்புகளை நடத்துகிறாள். பத்து வயதுள்ள ரே பழைய புத்தக வியாபாரி ஒருவர் யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட ஒரு சிறுபுத்தகத்தை வைத்திருந்ததைக் கண்டுபிடித்தபோது, அதைத் தனக்கு வாங்கித்தரும்படி தன் அம்மாவிடம் கெஞ்சினான். அவன் முழு புத்தகத்தையும் படித்தான். அதிகமான பைபிள் இலக்கியங்களுக்காக அவன் தேடியபோது அது அவனைக் கிளைக்காரியாலயத்தோடு தொடர்பு கொள்ள செய்தது. இன்று அவன் முழு நேர சேவையை அனுபவித்து மகிழுகிறான், அவனுடைய அம்மாவும்கூட கடவுளை சேவித்துவருகிறாள்.
இவர்களுக்கும் மற்ற இளம் பிள்ளைகளுக்கும் ஆவிக்குரிய காரியங்களின் மதிப்பைப் போற்றுவதற்கு எது உதவிசெய்திருக்கிறது? அநேகருடைய விஷயத்தில் பெற்றோரின் வழிநடத்துதல் முக்கியமான பங்கை செய்திருக்கிறது. பள்ளி ஆசிரியர்களாக இருக்கும் கிறிஸ்தவப் பெற்றோரையுடைய ஹோசுவாவின் காரியத்தில் இது இப்படித்தான் இருந்தது. பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளில் ஒருவரையாவது முழு நேர ஊழியத்தை வாழ்க்கைத் தொழிலாக எடுத்துக்கொள்ளுவதற்கு உதவ முயற்சிசெய்ய வேண்டும் என்பதாக ஒரு பிரயாணக் கண்காணி ஆலோசனை கூறியபோது, அவர்கள் ஹோசுவாவுக்குக் கவனம் செலுத்தினார்கள். சிறந்த மாணவனாக இருந்தபடியால் ஹோசுவாவுக்குப் பொறியியல் படிப்புக்கு அரசாங்கம் உபகாரச் சம்பளம் வழங்கியது. பல்கலைக்கழகத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, டொமினிகன் குடியரசில் யெகோவாவின் சாட்சிகளுக்கான தலைமைக்காரியாலய கட்டுமானப் பணியில் சேர்ந்துகொள்வதற்கான அழைப்பை ஏற்றான். தங்கள் மகனை யெகோவாவின் சேவைக்காகக் கொடுத்ததை முன்னிட்டு அவனுடைய பெற்றோர் ஆழ்ந்த மனநிறைவை வெளிப்படுத்தினர்.
மற்ற தேசங்களிலிருந்து “ஆய்வுப்பயணிகள்”
“அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்” என்ற இயேசுவின் வார்த்தைகள் இங்குள்ள பகுதிக்கு உண்மையாகவே பொருந்தும். (மத்தேயு 9:37) அதிகமான தேவையும் நேர்த்தியான பிரதிபலிப்பும் மற்ற தேசங்களிலுள்ள சாட்சிகளை உண்மையான நவீன நாளைய பொக்கிஷங்களுக்காக—உண்மையாக சத்தியத்தை நாடுவோர்—பிராந்தியத்தை ஆய்வுசெய்வதில் பங்குகொள்வதற்கு வரும்படியாக தூண்டியிருக்கிறது.
அருகிலுள்ள பியூர்டோ ரிகோ தீவிலிருந்து வரும் சாட்சி குடும்பங்கள் டொமினிகன் குடியரசின் பல்வேறு பகுதிகளில் சேவைசெய்வதில் மெய்யான மனநிறைவைக் கண்டிருக்கிறார்கள். ஒரு குடும்பத் தலைவன் இவ்வாறு சொல்கிறார்: “செவிகொடுத்துக் கேட்க மனமுள்ளவர்களுக்கு உங்களுடைய விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வெளியிடமுடிவது, உண்மையில் சத்தியத்தை உயிருள்ளதாக்குகிறது!” இங்குள்ள தேவையை அறியவந்தபோது, ஸ்வீடனிலிருந்து சிசிலியாவும் ஐக்கிய மாகாணங்களிலிருந்து நியாவும் மற்ற அநேக இளம் முழு நேர ஊழியர்களோடு வேலைசெய்வதற்காக வந்தனர். உயரமாகவும் மிதமான சீதோஷணமுமுள்ள உள்நாட்டுப் பகுதியில் அவர்கள் சேவை செய்கிறார்கள். அதேவிதமாகவே, உயரத்தில் குளிர்ச்சியான, ஊசி இலை மரங்கள் நிறைந்த மலைகளில், கனடாவிலிருந்து வந்த இரண்டு குடும்பங்கள் ஐக்கிய மாகாணங்களிலிருந்து திரும்பிய ஒரு டொமினிகன் குடும்பத்தைச் சேர்ந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் சிறிய ஒரு சபையின் பாகமாக இருக்கின்றனர், யெகோவாவின் சாட்சிகளால் பத்து வருடங்களாக சந்திக்கப்படாத ஆட்களை இவர்கள் சென்றெட்டக் கூடியவர்களாக இருக்கின்றனர்.
ஆல்ஃபரடோவும் லூர்டஸும் அவர்களுடைய ஐந்து பிள்ளைகளும் நியூ யார்க் நகரிலிருந்து திரும்பிவந்து, அழகிய சுற்றுலா பயணிகளின் கரையோரப் பட்டணங்கள் ஒன்றில் ஒரு சிறிய சபையோடு கூட்டுறவுக் கொண்டிருக்கிறார்கள். நேர்மை இருதயமுள்ளோரைக் கண்டுபிடிப்பதிலும் சபை வளருவதற்கு உதவிசெய்வதிலும் பங்குகொள்ள முடிவதில் அவர்கள் களிகூருகிறார்கள். ஆஸ்திரியாவிலிருந்து வந்த கம்ப்யூட்டர் ஆப்ரேட்டரான ரோலாண்டும் அவருடைய மனைவி யூட்டாவும் தேசத்தின் உஷ்ணமான, வறண்ட தெற்குப் பகுதியில் குடியேறிவிட்டார்கள். அவர்கள் வந்தது முதல் புதிய ஒரு சபை ஆரம்பமாவதைக் காணும் மகிழ்ச்சியைக் கொண்டிருந்தார்கள். அருகிலுள்ள ஒரு பட்டணத்தில், மூன்று பயனியர் சகோதரிகளும் கலிபோர்னியாவிலிருந்து வந்த ஒரு தம்பதியும் பைபிள் படிப்புகள் கேட்பவர்கள் அத்தனை அநேகர் இருப்பதால் தங்களால் எல்லாவற்றையும் நடத்த முடிவதில்லை என்பதாக தெரிவித்தார்கள். ஆகவே உள்ளூர் ராஜ்ய மன்றத்தில் கூட்டங்களுக்கு ஆஜராயிருந்து, பைபிள் படிப்புகளுக்காக காத்திருப்போர் பட்டியலில் தங்கள் பெயர்களைச் சேர்த்துக்கொள்ளுமாறும் அக்கறையுள்ளவர்களை உற்சாகப்படுத்தினர். யூட்டாவின் தம்பி ஸ்டீஃபான் வடகிழக்கே உள்ள அழகிய சாமனா பட்டணத்தில் ஒரு சிறிய சபையில் உண்மையுடன் சேவித்துவருகிறார். இரண்டே ஆண்டுகளில், ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கானது.
உதவிசெய்ய வந்திருக்கும் இவர்களும் மற்றவர்களும் காண்பித்திருக்கும் அன்பும் வைராக்கியமும் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவை. வித்தியாசமான கலாச்சாரத்தையும் பழக்க வழக்கங்களையும் கொண்ட ஒரு புதிய தேசத்துக்கு இடம் மாறிச் செல்லும் சவால் மட்டுமின்றி, பெரும்பாலான சமயங்களில், செம்மறியாடுகளைப் போன்ற ஆட்களின் ஆவிக்குரிய தேவைகளைக் கவனித்துக்கொள்ளும் பொருட்டு புதிய மொழியைக் கற்றுக்கொள்ளும் சவாலையும் ஏற்றிருக்கின்றனர். அவர்களுடைய முயற்சிகள் உள்ளூர்வாசிகளிடமிருந்து உடன்பாடான பிரதிபலிப்பைப் பெற்றுத்தந்திருக்கின்றன.
சில டொமினிகன் குடும்பங்கள் பெரிய நகரங்களின் வசதிகளை விட்டுவிட்டு கிராமப்புறங்களுக்கு இடம் மாறி சென்றிருக்கின்றன. உண்மையாக சத்தியத்தை நாடுவோரான உண்மையான பொக்கிஷங்களைக் கண்டுபிடிப்பதால் வரும் சந்தோஷத்தினால் அனைவரும் வெகுவாக பலனளிக்கப்பட்டுவருகிறார்கள்.
15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பொக்கிஷம் நாடுவோர், உள்ளூர் டேய்னோ மக்களுக்கு ஆசீர்வாதங்களை அல்ல, ஆனால் அடிமைத்தனத்தையும் சொல்லமுடியாத துயரங்களையும் கொண்டுவந்தனர். கொலம்பஸ்கூட வட மற்றும் தென் அமெரிக்காவின் பொக்கிஷங்களால் நன்மையடையவில்லை. அவர் கடைசியாக கைதுசெய்யப்பட்டு அவர் கண்டுபிடித்த தீவிலிருந்து கட்டப்பட்டவராக ஸ்பெய்னுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
இன்று வித்தியாசமான ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அதிக மதிப்புள்ள பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இராஜ்ய நற்செய்திக்குப் பிரதிபலிக்கும் நேர்மை இருதயமுள்ள ஆட்களைத் தேடுவதில் யெகோவாவின் மக்கள் சுறுசுறுப்பாய் இருக்கின்றனர். இதன் விளைவாக அதிகரித்துக்கொண்டே வரும் திரளான மக்கள் கடவுளுடைய வார்த்தை மாத்திரமே கொண்டுவரக்கூடிய சுயாதீனத்தை அனுபவித்து வருகின்றனர். (யோவான் 8:32) மலைகளும், இன்பமூட்டும் நீர்வீழ்ச்சிகளும், அழகான கடற்கரைகளும், கவர்ச்சியான குகைகளும் கொண்ட இந்தத் தேசம் வெறுமனே ஒரு பரதீஸ் தீவாக அல்ல, முழு பூமியையும் சூழ்ந்துகொள்ளும் புதிய உலகின் பாகமாக ஆகப்போகும் சமயத்தை அவர்கள் எதிர்நோக்கியிருக்கின்றனர்.—2 பேதுரு 3:13.
[கேள்விகள்]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி வெளியிட்டது.
[பக்கம் 24-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
டொமினிகன் குடியரசு
[பக்கம் 24, 25-ன் படங்கள்]
இளைஞர் முழுநேர சேவையைப் பின்தொடருவதன் மூலம் ஆவிக்குரிய காரியங்களின் மதிப்பை கண்டுபிடிக்கிறார்கள்