மதத்தைப் பற்றி பேசுவதால் வரும் பலன் என்ன?
பெற்றோர், தங்கள் குழந்தை முதல்முதலில் சொல்லப்போகும் வார்த்தைகளுக்காக ஏங்கி காத்திருக்கின்றனர். கலகலவென்ற சப்தத்தின் மத்தியில் ஒரு வார்த்தையை, ஒருவேளை “அம்மா” அல்லது “அப்பா” என்று திரும்பத்திரும்ப சொல்லப்படுவதைக் கேட்கும்போது, அவர்களுடைய இருதயங்கள் ஆனந்தத்தால் பொங்குகின்றன. உடனே இந்தச் செய்தியை நண்பருடனும் அயலாருடனும் பகிர்ந்து கொள்கின்றனர். நிச்சயமாகவே, குழந்தையின் முதல் பேச்சுத்தொடர்பு மகிழ்ச்சி தரும் நற்செய்தியாகும்.
அந்தச் சிறு குழந்தையின் உணர்ச்சிகளினால் ஈர்க்கப்படும் ஒலிகள், காட்சிகள், முகர்வுகள் ஒரு பிரதிபலிப்பைத் தூண்டுகின்றன. பிரதிபலிப்புகள் வித்தியாசப்படும் என்பது எதிர்பார்க்கப்பட வேண்டியதே. ஆனால் கொஞ்ச காலம் கழித்து ஒரு குழந்தை இந்தத் தூண்டுதல்களுக்குப் பிரதிபலிக்க தவறியதென்றால், பிள்ளையின் வளர்ச்சி தடைபட்டுவிடுமோ என்று பெற்றோர் கவலைப்படுவது வாஸ்தவந்தான்.
குழந்தைகள் தங்களுக்குத் தெரிந்த ஆட்களிடம் சிறந்த விதத்தில் பிரதிபலிக்கின்றன. தாய் குழந்தையைச் செல்லங்கொஞ்சுகையில் சாதாரணமாகப் பெரிய புன்சிரிப்பு வருகிறது. ஆனாலும், விஜயம் செய்யும் உறவினர் தொடுவதானது குழந்தையை அழச் செய்யலாம்; அவரால் தூக்கப்படுவதையும் பிடிவாதமாக மறுக்கலாம். இதை அனுபவிக்கும் உறவினர்கள் பெரும்பான்மையர் இதற்காகத் தூக்காமல் இருப்பது கிடையாது. அவர்களுக்குச் சந்தோஷமளிக்கும் விதமாக, அந்தக் குழந்தை அவர்களை நன்றாக அறியவருகையில், அவர்களைத் தெரியாதிருக்கிற நிலையென்னும் தடுப்பு நீக்கப்பட்டு, குழந்தை மெல்லமாகச் சிரிக்கத் துவங்குகிறது.
அதேவிதமாக, பெரியவர்கள் பலர் நீண்டகாலமாகப் பழகாத ஒருவரிடம் மத நம்பிக்கைகளை மனந்திறந்து பேசத் தயங்குகின்றனர். தனிப்பட்ட விஷயமாயிருக்கும் மதத்தைப் பற்றி முன்பின் தெரியாத ஒரு நபர் பேச விரும்புவதற்கான காரணம் அவர்களுக்கு விளங்காமலிருக்கலாம். இதன் விளைபயன் என்னவென்றால் அவர்களுக்கும் படைப்பாளரைப் பற்றி பேசுபவருக்கும் இடையே ஒரு தடுப்பு உருவாக அவர்கள் அனுமதிக்கின்றனர். என்னவிருந்தாலும், மனிதவர்க்கத்தின் பிறவி குணமாக இருக்கும் வழிபடுவதற்கான ஆசையைப் பற்றி பேசுவதையுங்கூட மறுக்கின்றனர்.
உண்மையில், நம்முடைய படைப்பாளரைப் பற்றி கற்றுக்கொள்வதில் நாம் ஆர்வமுள்ளவர்களாக இருக்கவேண்டும், பிறரோடு சம்பாஷிப்பது, கற்றுக்கொள்ளும் நிலையில் நம்மை வைக்கும். இது அவ்வாறிருப்பது ஏனென்றால் கடவுள் நீண்டகாலமாக வெளிப்படையான பேச்சுத்தொடர்புடன் இணைக்கப்பட்டுப் பேசப்பட்டிருக்கிறார். இது எவ்வாறு என்று நாம் பார்க்கலாம்.
‘செவிசாய்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்’
ஏதேன் தோட்டத்தில் ஆதாமோடு பேச்சுத்தொடர்புகொண்டதே கடவுள் மனிதனோடு கொண்ட முதல் பேச்சுத்தொடர்பாகும். எனினும், ஆதாமும் ஏவாளும் பாவம் செய்த பிறகு, கடவுள் அவர்களோடு மேலுமாகப் பேச்சுத்தொடர்புகொள்ள விரும்பியபோது, அவர்கள் மறைந்திருக்கவே ஆசைப்பட்டனர். (ஆதியாகமம் 3:8-13) என்றாலும், கடவுளிடமிருந்து பேச்சுத்தொடர்பை வரவேற்ற ஆண்களையும் பெண்களையும் பற்றிய விவரங்களை பைபிள் பதிவுசெய்கிறது.
நோவா காலத்திலிருந்த பொல்லாத உலகிற்கு வரவிருந்த அழிவைப் பற்றி சொல்ல கடவுள் அவரோடு தொடர்புகொண்டார், இதனால் நோவா ‘நீதியைப் பிரசங்கித்தவர்’ ஆனார். (2 பேதுரு 2:5) தன் தலைமுறைக்குக் கடவுள் சார்பாகப் பேசுபவராக, மனிதனோடு கடவுள் கொண்ட செயல்தொடர்புகளின்பேரில் நோவா விசுவாசத்தை மாத்திரம் காட்டாமல், தான் யெகோவாவின் பக்கத்தில் இருப்பதை வெளிப்படையாக அறிக்கையிடவும் செய்தார். நோவா என்ன பிரதிபலிப்பைக் கவனித்தார்? பரிதாபகரமாக, அவர் காலத்தில் வாழ்ந்த ஆட்களில் பெரும்பான்மையர், “ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்.” (மத்தேயு 24:37-39) ஆனால் நமக்குச் சந்தோஷம் தரும் விதமாக, நோவாவின் குடும்பத்தில் ஏழு பேரும் செவிசாய்த்து, கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, பூகோள ஜலப்பிரளயத்தைத் தப்பிப்பிழைத்தனர். அவர்களிலிருந்தே இன்று உயிரோடிருக்கும் மனிதர்கள் அனைவரும் வந்தனர்.
பிற்பாடு, கடவுள் பூர்வ இஸ்ரவேலரடங்கிய ஒரு முழுத் தேசத்தோடும் தொடர்புகொண்டார். மோசேயின் மூலம், கடவுள் பத்துக் கட்டளைகளையும் அதற்கிணையாகக் கட்டுப்படுத்திய சுமார் 600 இதர சட்டங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார். இவை யாவற்றிற்கும் இஸ்ரவேலர் கீழ்ப்படிய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்த்தார். வருடாந்தர கூடாரப் பண்டிகையின்போது, ஒவ்வொரு ஏழாம் வருஷமும் கடவுளுடைய சட்டம் சப்தமாக வாசிக்கப்பட வேண்டும் என்று மோசே கட்டளையிட்டார். ‘புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் உன் வாசல்களிலிருக்கும் அந்நியர்களுமான ஜனத்தைக் கூட்டு’ என்று அவர் அறிவுறுத்தினார். எதற்கு? அவர்கள் “கேட்டு [“செவிசாய்த்து,” NW] கற்றுக்கொண்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும்படிக்கு.” அனைவரும் செவிசாய்த்துக் கற்றுக்கொள்ள வேண்டியவர்களாக இருந்தனர். கேட்ட காரியங்களைப் பற்றி பேசுவதில் அவர்கள் எவ்வளவு மகிழ்ந்தனுபவித்திருக்க வேண்டும் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்!—உபாகமம் 31:10-13.
ஐந்துக்கும் மேற்பட்ட நூற்றாண்டுகளுக்குப் பிறகு, யூத ராஜாவாகிய யோசபாத் யெகோவாவின் சுத்தமான வணக்கத்தை மீண்டும் துவங்குவதற்கான நடவடிக்கையில் பிரபுக்களையும் லேவியர்களையும் ஒழுங்கமைத்தார். இந்த மனிதர்கள் யூத நகரங்கள் எங்கும் பயணஞ்செய்து, யெகோவாவின் சட்டங்களை அத்தேசத்து குடிமக்களுக்குப் போதித்தனர். இந்தச் சட்டங்களை வெளிப்படையாகப் பேசுவதன் மூலம், இந்த ராஜா மெய் வணக்கத்திற்குத் தனக்கிருந்த தைரியத்தை மெய்ப்பித்துக் காட்டினார். அவருடைய குடிமக்களோ, செவிசாய்த்து, கற்றுக்கொள்ள வேண்டியவர்களாக இருந்தனர்.—2 நாளாகமம் 17:1-6, 9.
சம்பாஷணை மூலம் சாட்சிபகருவது
கடவுள், தம் சார்பாகப் பேசுபவராகச் சேவிக்க, பூமிக்குத் தம்முடைய சொந்த குமாரனாகிய இயேசுவை அனுப்பினார். (யோவான் 1:14) மூன்று சீஷர்களும் தங்களுக்கு முன்பாக இயேசு மறுரூபமானதைப் பார்த்தபோது, கடவுளுடைய சொந்த குரல் இவ்வாறு அறிவிப்பதைக் கேட்டனர்: “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள்.” (மத்தேயு 17:5) உடனே அவர்கள் கீழ்ப்படிந்தனர்.
அதேவிதமாக, கடவுளுடைய நோக்கங்களைப் பிறருக்கு அறிவிப்பதில் இயேசு தம்முடைய அப்போஸ்தலருக்குக் கட்டளை கொடுத்தார். ஆனால் பூமியில் சுமார் ஆறு மாத ஊழியக்காலம் மீதமாயிருக்கையில், பரலோக ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிக்கப்படும் வேலை மிகவும் பரந்தளவில் செய்யப்பட வேண்டியிருந்ததால், அதிகமான சீஷர்கள் தேவைப்படுவார்கள் என்று இயேசு அறிவித்தார். அறிமுகமற்றவர்களிடம் எவ்வாறு கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பேசுவது என்று அவர்களில் 70 பேருக்கு அவர் கற்பித்தார், பின்னர் அந்தச் செய்தியை வெளிப்படையாக பரப்ப அவர்களை அனுப்பினார். (லூக்கா 10:1, 2, 9) பரலோகத்தில் தம்முடைய பிதாவிடம் திரும்பச் செல்வதற்கு சற்று முன்பாக, இந்தச் செய்தியைப் பற்றி பிறரிடம் பேச முன்முயற்சி எடுக்கும்படி அவர் தம்மைப் பின்பற்றியவர்களைத் துரிதப்படுத்தினார், இதோடு அவர்களுக்குக் கட்டளையிடவும் செய்தார்: “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.” (மத்தேயு 28:19, 20) உலக முழுவதும், இன்றுள்ள மெய்க் கிறிஸ்தவர்கள் தங்களுடைய அயலகத்தாருடன் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைச் சம்பாஷிப்பதன் மூலம் அந்தக் கட்டளையை நிறைவேற்றி வருகின்றனர். இந்தச் சம்பாஷணைகள் படைப்பாளராகிய யெகோவாவைப் பற்றிய சத்தியத்திற்குச் சாட்சிபகர அவர்களைச் செய்விக்கிறது.—மத்தேயு 24:14.
சமாதானமுள்ள, கட்டியெழுப்பும் சம்பாஷணைகள்
இயேசுவின் சீஷர்கள் பிறரிடம் எந்த முறையில் தங்கள் நம்பிக்கைகளை சம்பாஷிக்க வேண்டியிருந்தது? அவர்கள் எதிராளிகளை எரிச்சலடையச் செய்யவோ எதிராளிகளோடு வாதாடவோ வேண்டியதாயில்லை. மாறாக, நற்செய்தியை வரவேற்ற ஆட்களைக் கண்டுபிடித்து, பிறகு அதற்கு ஆதாரமாக வேதப்பூர்வ அத்தாட்சியை அளிக்க வேண்டியிருந்தது. நிச்சயமாகவே, தம்முடைய குமாரனின் சீஷர்களோடு பேச்சுத்தொடர்பு கொண்டவர்களின் பிரதிபலிப்புகளைக் கடவுள் கவனித்தார், இயேசுவுங்கூட இவ்வாறு அறிவித்தார்: “உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.” (மத்தேயு 10:40) இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த பெரும்பான்மையர் அவருடைய செய்தியை மறுத்தது என்னே ஒரு நிராகரிப்பாகத் திகழ்ந்தது!
“கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல்” இருக்கவேண்டும் என்று கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் புத்திமதி சொன்னார். மாறாக, “எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும். எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும், . . . சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.” (2 தீமோத்தேயு 2:24-26) கிரீஸிலுள்ள அத்தேனேயர்களுக்கு பவுல் நற்செய்தியை அறிவித்த முறை நல்ல உதாரணமாகத் திகழ்கிறது. யூதர்களோடு அவர்களுடைய ஜெப ஆலயத்தில் அவர் நியாயவிவாதம் செய்தார். சந்தைவெளியில் “எதிர்ப்பட்டவர்களோடு” அவர் தினந்தோறும் உரையாடினார். சந்தேகமில்லாமல், சிலர் புது கருத்துக்களுக்குச் செவிசாய்க்க மாத்திரம் விரும்பியபோதிலும், பவுல் நேர்முகமாகவும் தயவான முறையிலும் பேசினார். தனக்குச் செவிசாய்ப்பவர்களிடம் அவர் கடவுளுடைய செய்தியைச் சம்பாஷித்தார், இப்படியாக மனந்திரும்பும்படி அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். அவர்களுடைய பிரதிபலிப்பு இன்றைய மக்களுடையதைப் போன்றே இருந்தது. “சிலர் இகழ்ந்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை இன்னொருவேளை கேட்போம் என்றார்கள்.” தன் சம்பாஷணையை இழுத்தடிப்பதில் பவுல் விடாப்பிடியாக இல்லை. தன் செய்தியைப் பிரசங்கித்ததும், ‘அவர்களை விட்டுப் போய்விட்டார்.’—அப்போஸ்தலர் 17:16-34.
பிற்பாடு, எபேசுவில் இருந்த கிறிஸ்தவ சபை அங்கத்தினர்களிடம், ‘பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் பிரசங்கித்து, உபதேசம் பண்ணியதாக’ பவுல் சொன்னார். அவர் மேலுமாக ‘தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக் குறித்தும், யூதரோடும் கிரேக்கரோடும் முற்றுமுழுவதுமாகச் சம்பாஷித்திருந்தார்.’—அப்போஸ்தலர் 20:20, 21, NW.
கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்கள் பைபிள் காலங்களில் மதத்தைப் பற்றி எவ்வாறு சம்பாஷித்தனர் என்பதை இந்த வேதப்பூர்வ உதாரணங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஆகையால் இன்று, கீழ்ப்படிதலோடு யெகோவாவின் சாட்சிகள் தங்கள் அயலாரிடம் மதத்தைப் பற்றி சம்பாஷிக்கின்றனர்.
மிகவும் பலன்தரும் சம்பாஷணைகள்
‘கடவுளுடைய வார்த்தையைக் கேளுங்கள்.’ ‘அவருடைய கட்டளைகளுக்குச் செவிசாயுங்கள்.’ பைபிளில் எவ்வளவு அடிக்கடி அத்தகைய அறிவுறுத்தல்கள் இடம்பெறுகின்றன! அடுத்த முறை யெகோவாவின் சாட்சிகள் உங்களிடம் பேசுகையில், நீங்கள் இத்தகைய பைபிள் அறிவுரைகளைக் கேட்கலாம். பைபிளிலிருந்து உங்களுக்குக் கொண்டுவரும் செய்திக்குச் செவிசாயுங்கள். இந்தச் செய்தி அரசியல் அல்ல, ஆனால் கடவுள் மூலம் வரும் பரலோக அரசாங்கத்தை, அவருடைய ராஜ்யத்தைப் பிரஸ்தாபம் செய்கிறது. இது, தற்கால போராட்டங்களுக்கான காரணிகளை நீக்க கடவுள் பயன்படுத்தும் உபாயமாயிருக்கிறது. (தானியேல் 2:44) இதற்குப் பிற்பாடு, பரலோகத்திலிருந்து ஆளப்படும் இந்தத் தேவ ஆட்சி, ஏதேன் தோட்டத்தைப்போல முழுப் பூமியும் பரதீஸாக மாற்றப்பட ஏற்பாடு செய்யும்.
முன்னாள் போலீஸ் உளவாளி ஒருவர் பைபிளைப் பற்றி யெகோவாவின் சாட்சிகள் பேசும்போது செவிசாய்ப்பதற்கு அடிக்கடி மறுத்தார். ஆனால், தான் எதிர்ப்பட்ட குற்றச்செயல் அதிகரிப்பின் காரணமாக அவர் வாழ்க்கையின் மெய்ம்மைகளோடு ஏமாற்றமடைந்தார். ஆகவே அடுத்த முறை சந்திக்க வந்த சாட்சியிடம், பைபிள் செய்திக்கான சான்றை ஆராயப்போவதாகச் சொன்னார். ஒழுங்கான சம்பாஷணைகள் பின்தொடர்ந்தன. அந்தப் போலீஸ்காரர் பல்வேறு சமயங்கள் வீடுமாறிச் சென்றாலும், சம்பாஷணைகளைத் தொடர சாட்சிகள் மகிழ்ச்சியோடு அவர் மாறிச்சென்ற ஒவ்வொரு புதிய இடத்திற்கும் சென்று, அவரைத் தேடிக் கண்டுபிடித்தனர். முடிவில் அந்த அதிகாரி ஒப்புக்கொண்டார்: “நான் தேடிக்கொண்டிருந்த சான்று எல்லா சமயத்திலும் பரிசுத்த வேதாகமங்களில் திருத்தமாகச் சொல்லப்பட்டிருந்தது. என்னோடு பேசுவதற்கு அந்தச் சாட்சிகள் விடா முயற்சியோடு இருந்திருக்கவில்லை என்றால், வாழ்க்கை என்றாலென்ன என்று சிந்தித்துக்கொண்டு நான் இன்னும் உலகத்தானாகவே இருந்திருப்பேன். உண்மை என்னவென்றால், நான் சத்தியத்தைக் கற்றுக்கொண்டேன், நான் தேடிக்கொண்டிருந்ததுபோல கடவுளைத் தேடுகிற பிற ஆட்களைக் கண்டுபிடிப்பதில் என் மீதமுள்ள வாழ்நாளைச் செலவழிக்கப் போகிறேன்.”
அக்கறையாகக் கேட்கும் ஆட்கள் மேலுமாக அறிந்துகொள்ள உண்மையில் விரும்புகின்றனர். அளிக்கப்பட்ட நம்பிக்கைகளுக்குக் காரணங்களை அவர்கள் சரியாகவே எதிர்பார்க்கின்றனர். (1 பேதுரு 3:15) ஒரு சிறிய பிள்ளை எவ்வாறு தன் பெற்றோரிடம் சரமாரியாகக் கேள்வி கேட்டு, அவர்கள் பதிலளிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறதோ அதேபோல நீங்களும் சாட்சிகளிடமிருந்து உறுதியான பதில்களைக் கொடுக்கும்படி எதிர்பார்க்கலாம். அவர்கள் திரும்பி வந்து சந்தோஷமாக உங்களோடு கூடுதலாக பைபிள் செய்தியைச் சம்பாஷிப்பார்கள் என்று நீங்கள் நிச்சயமாயிருக்கலாம்.
பைபிளைப் பற்றி உங்களுக்கு ஒருவேளை ஏற்கெனவே கொஞ்சம் தெரிந்திருக்கலாம். கடவுள் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது நீங்கள் வாழும் முறையில் சில மாற்றங்களைத் தேவைப்படுத்துவதைக் கண்டுணரக்கூடும். கடவுளுடைய தராதரங்கள் அதிகத்தைக் கேட்கும் என்ற பயத்தின் காரணமாக, காரியங்களைத் தொடர தயங்காதீர்கள். அவை உங்களுக்கு உண்மையான சந்தோஷத்தையே கொண்டுவரும். ஒவ்வொரு சமயமும் படிப்படியாக முன்னேறுகையில் இதை நீங்கள் மதித்துணருவீர்கள்.
முதன் முதலாக, யெகோவா யார் என்றும், அவர் உங்களிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார் மேலும் எதை அளிக்கிறார் என்றும் சிந்தித்துப் பாருங்கள். சாட்சிகளிடம் பைபிள் இதைக் குறித்து என்ன சொல்கிறது என்று காட்டும்படி கேளுங்கள். அவர்கள் சொல்வதை உங்களுடைய சொந்த பைபிளில் சரிபாருங்கள். மதத்தைப் பற்றிய சத்தியத்தை அளிப்பதில் சாட்சிகள் நியாயமாகத்தான் இருக்கின்றனர் என்பதை அறியவருகையில், சந்தேகமில்லாமல் வேதவசனங்களிலிருந்து அவர்கள் உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் மிகப் பலவான நற்காரியங்களை அலசிப்பார்க்க நீங்கள் விரும்புவீர்கள்.—நீதிமொழிகள் 27:17.
உள்ளூரில் சாட்சிகள் கூடும் இடமாகிய ராஜ்ய மன்றத்தில் அவர்களைக் கவனிக்க நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். அங்கே கடவுளுடைய வார்த்தையிலிருந்து பயனுள்ள சம்பாஷணைகளைக் கேட்பீர்கள். அங்கு ஆஜராயிருக்கிறவர்கள் கடவுளுடைய நோக்கங்களைப் பற்றி ஒருவரோடொருவர் பேசுவதில் எப்படிச் சந்தோஷப்படுகின்றனர் என்பதைக் காண்பீர்கள். இன்று கடவுள் நமக்கு என்ன செய்ய சித்தமுள்ளவராக இருக்கிறார் என்ற சத்தியத்தைக் கற்றுத்தருவதில் உங்களுக்கு உதவ, இந்தச் சாட்சிகளை அனுமதியுங்கள். மெய் வணக்கத்தைப் பற்றி சம்பாஷிக்கவும் அவருடைய அங்கீகார புன்னகையையும் பரதீஸில் நித்திய ஜீவனையுங்கூட பெறுவதற்கான கடவுளுடைய அழைப்பிற்குப் பிரதிபலியுங்கள்.—மல்கியா 3:16; யோவான் 17:3.
[பக்கம் 5-ன் படம்]
கடவுளின் நோக்கத்தைக் குறித்து நோவா பகிரங்கமாகப் பேசினார்
[பக்கம் 7-ன் படம்]
பண்டைய அத்தேனே பட்டணத்தில் பவுல் செய்ததுபோல, யெகோவாவின் சாட்சிகள் பிறரிடம் பைபிள் சத்தியங்களைப் போதிக்கின்றனர்