இமயத்தைவிட உயரமானதோர் மலைக்கு ஏறுதல்
இமய மலை! இது எதை உங்கள் மனக்கண்களுக்குமுன் கொண்டுவருகிறது? கடுங்காற்றோடுகூடிய மலைப்பூட்டும் பனிபடர்ந்த மலைச்சிகரங்களையா? பூமியின் மிக உயரமான மலைச்சிகரத்தில் நிற்கும் சாதனை உணர்ச்சியா? நம்மில் அநேகருக்கு, நேப்பாளத்திலுள்ள இமய மலைத்தொடரிலிருக்கும் எவரெஸ்ட் சிகரத்துக்கு ஏறுவது கூடாத காரியமாக இருக்கும். இருந்தாலும், இன்று நேப்பாளத்திலுள்ள அநேக மக்கள் இமயத்தைவிட உயர்ந்ததோர் மலையில் ஏறுகிறார்கள்! ஆனால் மகத்தான மலைக்குச் செல்லும் இந்தப் பயணத்தைப்பற்றி கண்டறிவதற்குமுன், சிறிய, அழகிய ராஜ்யமாகிய நேப்பாளத்தைச் சற்றுக் காண்போம்.
நேப்பாளம்—மலை ராஜ்யம்
உலகில் மீந்திருக்கிற ஒருசில முடியாட்சிகளில் ஒன்றாகவும், சமயசார்பற்ற ராஜ்யமாக இல்லாமல் மதச்சார்பான ராஜ்யமாகவும் இருப்பதால் நேப்பாள ராஜ்யம் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. உலகில் நேப்பாளம் மட்டுமே ஒரே இந்து நாடாக இருக்கிறது. அதில் குடியிருக்கும் இரண்டு கோடி மக்களில் பெரும்பான்மையானோர் இந்துக்கள். என்றாலும், அதன் மக்களுடைய இனங்களின் தொடக்கங்களில் அதிக வேற்றுமை இருக்கிறது. வடக்கிலுள்ள மலைப் பகுதியில் வாழ்பவர்கள் பெரும்பாலும் திபெத்து-பர்மா மரபுமூலத்தை உடையவர்களாகவும், அதேசமயம் தெற்கு சமவெளிகளில், மக்கள் பெரும்பாலும் இந்திய-ஆரிய பின்னணியைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். நேப்பாளி அந்த நாட்டின் ஆட்சி மொழியாகவும், சுமார் 60 சதமான மக்களின் தாய் மொழியாகவும் இருக்கிறது. மீதமானவர்கள் 18-க்கும் அதிகமான இனமொழிகளைப் பேசுகிறார்கள்.
நேப்பாளம் கிழக்கிலிருந்து மேற்கு வரையாக 880 கிலோமீட்டரையும் வடக்கிலிருந்து தெற்கு வரையாக 200 கிலோமீட்டரையும் கொண்டிருந்து, ஓரளவுக்கு நீள்சதுர வடிவமைப்புடையதாக இருக்கிறது. வடக்கு எல்லையாக இருக்கும் மலைப்பூட்டும் இமயம், உலகிலேயே உயரமான சிகரமாக இருக்கும் 8,848 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தையும் 8,000 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள இன்னும் எட்டு சிகரங்களையும் கொண்டிருக்கிறது. மத்திய நேப்பாளத்தில், தாழ்வான மலைகளும் ஏரிகளும் பள்ளத்தாக்குகளும் இருக்கின்றன. தென் தொலைவில், இந்திய எல்லையை ஒட்டி, முக்கியமான விவசாயப் பகுதியாகிய செழிப்பான டாரை இருக்கிறது.
மையப் பகுதியில் அமைந்திருக்கிற தலைநகரமாகிய காட்மாண்டு சுற்றுலா பயணிகளுக்கு உண்மையிலேயே பரவசமூட்டும் இடமாக இருக்கிறது. கம்பீரத்தோற்றமுடைய மலைகளின்மேலாக செல்லும் விமான தடங்களையும், வனவிலங்கு பூங்காக்களுக்கு பயணங்களையும், உள்ளூரில் காண்பதற்குரிய அநேக இடங்களையும் உடையதாய் இருக்கிறது. சிலசமயங்களில் நேப்பாளம், தெய்வங்களின் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது, ஏனென்றால், மதம் அங்குள்ள மக்களின் வாழ்க்கையில் அதிக செல்வாக்கைச் செலுத்துகிறது. உலகெங்கும் இலட்சக்கணக்கானோர் இமயத்தைவிட உயர்ந்த ‘மலைக்கு’ பயணப்படுவதற்கும் மதமே காரணமாக இருக்கிறது.
சுமார் 2,700 வருடங்களுக்கு முன்பு, எபிரெய தீர்க்கதரிசியான ஏசாயா இவ்வாறு முன்னறிவிக்கும்படி ஏவப்பட்டார்: “கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, . . . திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கு . . . போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்.” (ஏசாயா 2:2, 3) பிரபஞ்சத்தின் சிருஷ்டிகரும் சர்வலோக பேரரசருமாகிய யெகோவாவின் மேம்பட்ட உண்மையான வணக்கம், மலைபோன்ற மற்றெல்லா வகையான வணக்கத்திற்கும் மேலாக உயர்த்தப்பட்ட ஒரு மலைக்கு இங்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. சத்தியத்திற்கான பசியுடன் இருக்கும் மக்கள் யெகோவாவின் வழிகளைப்பற்றி கற்றுக்கொள்வதற்கு உதவுகிற உலகளாவிய கற்பிக்கும் வேலையின் பொருள் அதுவே. நேப்பாளத்தில் இந்த வேலை எப்படி தொடங்கலாயிற்று?
சிறிய ஆரம்பங்கள்
இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் படையில் இருந்த படைவீரர் ஒருவர் உண்மையான மதத்தைத் தேடிக்கொண்டிருந்தார். அவருடைய நேப்பாள-இந்து பெற்றோர் கத்தோலிக்கத்திற்கு மதம்மாறி இருந்தனர். அவர் வளர்ந்துவந்தபோது, விக்கிரக வணக்கத்தின் பயனற்றத்தன்மையைக் கண்டு, எரிநரகக் கோட்பாடு போன்ற போதனைகளை ஏற்க மறுத்து, புராட்டஸ்டன்ட் சர்ச்சுகளின் நம்பிக்கைகளை ஆராய ஆரம்பித்தார். ஆனால் அவர் திருப்தி அடையவில்லை.
பர்மாவில் அப்போது ரங்கூன் என்று அழைக்கப்பட்ட இடத்திலிருந்த ஜப்பானியர்களால் சிறைகொண்டு போகப்பட்ட இந்தப் படைவீரர், உண்மை வணக்கத்திற்கான தன்னுடைய தேடுதலைத் தொடரும்படியாக கட்டாய உழைப்பு முகாம்களின் கடுமையை அவர் தப்பிப்பிழைக்கும்படியாக ஜெபம் செய்தார். பின்னர், அவர் தன்னை சிறைகொண்டு சென்றவர்களிடமிருந்து தப்பித்து, பள்ளி ஆசிரியர் ஒருவரால் உதவிசெய்யப்பட்டார்; ஜே. எஃப். ரதர்ஃபர்டால் எழுதப்பட்ட மரித்தோர் எங்கே இருக்கின்றனர்? என்ற சிறிய ஆங்கில புத்தகத்தை அவருடைய வீட்டில் கண்டார். சத்தியத்தின் தொனியை உணர்ந்துகொண்டவராய், 1947-ல் ரங்கூனில் யெகோவாவின் சாட்சிகள் அவரைச் சந்தித்தபோது, படிப்பதற்கு ஆவலுடன் ஒத்துக்கொண்டார். ஒருசில மாதங்களில் அவரும், தொடர்ந்து சிறிது காலத்தில் அவருடைய இளம் மனைவியும் முழுக்காட்டப்பட்டனர். அவர்கள் இந்தியாவுக்குத் திரும்பி, வடகிழக்கு மலைகளிலுள்ள அவர்களுடைய சொந்த ஊராகிய காலிம்பாங்கில் குடியிருக்க தீர்மானித்தனர். இங்கு அவர்களுடைய இரண்டு பிள்ளைகளும் பிறந்து, கல்வி பயின்றனர். மார்ச் 1970-ல் அவர்கள் காட்மாண்டுவுக்குக் குடிபெயர்ந்தனர்.
நேப்பாளத்தின் அரசமைப்புச் சட்டம் மதமாற்றம் செய்வதைத் தடைசெய்தது. அந்நிய மதம் எனப்பட்ட ஒன்றைப் பரப்புவதாக ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டால், அவர் ஏழு வருட சிறையிருப்பிற்கு உள்ளாக்கப்படுவார்; அப்படிப்பட்ட மதத்தில் சேர்ந்துகொண்ட ஒருவருக்கு மூன்று வருட சிறை தண்டனையும் அதோடு பெரும் அபராத தொகையும் விதிக்கப்படலாம். ஆகவே சாட்சிபகருதல் ஜாக்கிரதையாகச் செய்யப்படவேண்டும். ஒரு வீட்டிற்குச் சென்று சந்தித்துவிட்டு, பின்பு, வேறொரு பகுதிக்குச் சென்று அங்கு ஒருவரைச் சந்திப்பது என்ற முறையில் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யப்பட வேண்டியிருந்தது. புரிந்துகொள்ளத்தக்கபடி, நற்செய்தியைப் பரப்புவதில் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தல் பெரும்பாகத்தை வகித்தது.
முன்னேற்றம் மெதுவாகவே ஏற்பட்டது. சுமார் ஒரு கோடி மக்கள்தொகை உள்ள இடத்தில், ஊழியம் சோர்வூட்டுவதாய் இருந்தது. இந்தத் தனிக் குடும்பத்தினர் தங்களுடைய நண்பர்கள், பழக்கமானவர்கள், தங்களை வேலைக்கு அமர்த்தியிருப்பவர்கள், மற்றும் உடன் வேலையாட்களுக்குச் சாட்சிகொடுத்ததன்மூலம் சத்தியத்தின் விதைகள் விதைக்கப்பட்டன. அவர்கள் தங்கள் வீட்டில் ஒழுங்காகக் கூட்டங்களை நடத்தினார்கள்; அக்கறைகாட்டும் ஆட்களை அவர்களோடு சேர்ந்துகொள்ளும்படி அழைத்தார்கள். முடிவாக, நான்கு வருடங்கள் விடாமுயற்சியுடன் நட்டு, தண்ணீர் பாய்ச்சியபின், மார்ச் 1974-ல், நேப்பாளத்தின் முதல் கனி வந்தது—அதுவும் எதிர்பாராத ஒரு மூலத்திலிருந்து வந்தது!
ஒரு வீட்டிற்குச் சென்றபோது, அந்தப் பிரஸ்தாபி ஒரு செல்வந்தரிடம் பேசினார்; அவர் ஒரு அரச குடும்பத்தின் அங்கத்தினர் ஒருவருக்கு செயலராக இருந்தார். “என்னுடைய மகனிடம் பேசுங்கள்,” என்று அவர் சொன்னார். ஒரு பைபிள் படிப்புக்கு அவருடைய மகன் ஒத்துக்கொண்டார். சில காலம்கழித்து, அவர் தன்னுடைய வேலையை மாற்றிக்கொண்டார், ஏனென்றால் அவர் ஒரு சூதாட்டக் கூடத்தில் வேலை செய்தார். இந்துமதப்பற்றுள்ள அவருடைய தந்தை அவரை எதிர்த்தார். இருந்தபோதிலும், இந்த இளைஞர் யெகோவாவுக்காகத் தன் நிலைநிற்கையை எடுத்தார். விளைவு என்னவாக இருந்தது? பின்னர் அவருடைய தந்தை எதிர்ப்பதை நிறுத்திவிட்டார்; ஒரு தொகுதியாக நெருங்கிய உறவினர் பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டனர். அவர் இப்போது கிறிஸ்தவ சபையின் ஒரு மூப்பராகச் சேவை செய்கிறார்.
ஆவிக்குரிய விதத்தில் பலமுள்ளவர்களாகத் தொடர்ந்திருக்கவும் ஒன்றுகூடி வருவதை விட்டுவிடாமல் இருக்க வேண்டும் என்ற வேதப்பூர்வ கட்டளைக்கு இசைவாகவும், இந்தச் சிறிய தொகுதியினர் காட்மாண்டுவில் ஒருவருடைய வீட்டில் ஒழுங்காகக் கூட்டங்களை நடத்தினர். ஆனால், சகோதரர்களால் பெரும்பாலும் பெரிய கூட்டங்களுக்கு ஆஜராக முடியவில்லை. அவ்வாறு செல்ல முடிந்தவர்கள் மாநாடுகளுக்காக இந்தியாவிற்குப் பயணப்பட்டார்கள்; அது மலைத் தொடர்களின் வழியாகச் செல்லும் நீண்ட மற்றும் செலவுமிக்க ஒரு பயணமாகும்.
அவர்கள் கூட்டங்களை நடத்திய வீட்டில், மாவட்ட மாநாட்டின் முழு நிகழ்ச்சியும் அளிக்கப்பட்டபோது அது என்னே ஓர் சந்தோஷமுள்ள சம்பவமாக இருந்தது! இந்திய கிளையின் அங்கத்தினர் ஒருவர் உட்பட நான்கு சகோதரர்கள் முழு நிகழ்ச்சியையும் கையாண்டதை யோசித்துப் பாருங்கள்! பைபிள் நாடகமும்கூட இருந்தது. எப்படி? இந்தியாவில் ஆடை அலங்காரத்துடன் நாடகத்திற்கான ஒத்திகைபார்ப்பு ஒன்றின்போது சிலைடுகள் எடுக்கப்பட்டன. நேப்பாளத்தில் இந்த சிலைடுகள் திரையில் காட்டப்படுகையில், அதோடு சேர்த்து நாடக வசனங்கள் பதிவு செய்யப்பட்ட கேசட்டிலிருந்து போடப்பட்டன. வந்திருந்தவர்களுக்கு அது பிடித்திருந்தது. எவ்வளவு பேர் வந்திருந்தார்கள்? பதினெட்டு பேர்!
பிரசங்க வேலையில் அயல்நாட்டினரின் உதவி குறைவாகவே இருந்தது. மிஷனரி வேலையைக் குறித்து கேட்கவே வேண்டாம்; மேலும் அயல்நாட்டினருக்கு உலகப்பிரகாரமான வேலை கிடைப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. என்றபோதிலும், இந்திய சாட்சிகள் இருவருக்கு வெவ்வேறு சமயங்களில், நேப்பாளத்தில் வேலை கிடைத்தது; அவர்கள் பல வருடங்கள் காட்மாண்டுவில் இருந்து, புதிதாக உருவாக்கப்பட்ட சபையைப் பலப்படுத்த உதவிசெய்தார்கள். 1976-ற்குள் காட்மாண்டுவில் ராஜ்ய பிரஸ்தாபிகள் 17 பேர் இருந்தனர். 1985-ல் சகோதரர்கள் தங்கள் சொந்த ராஜ்ய மன்றத்தைக் கட்டினார்கள். அது கட்டி முடிக்கப்பட்டபின், வருடாந்தர மாவட்ட மாநாடுகளும், மற்ற மாநாடுகளும் அங்கு ஒழுங்காக நடத்தப்பட்டன. ஒதுக்கமாயிருந்த இந்த மலைப் பிரதேசத்தில் இந்த மன்றம் உண்மையிலேயே தூய வணக்கத்தின் மையமாக இருந்தது.
கஷ்டங்களின் மத்தியிலும் விஸ்தரிப்பு
அந்த ஆரம்ப வருடங்களில், மிகுந்த ஜாக்கிரதையுடன் செய்யப்பட்ட பிரசங்க வேலை அதிகமாக அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கவில்லை. என்றாலும், 1984-ன் முடிவினிடமாக, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட தொடங்கின. ஒரு சகோதரனும் மூன்று சகோதரிகளும் கைது செய்யப்பட்டு, நான்கு நாட்கள் சிறைகாப்பில் வைக்கப்பட்டார்கள்; தங்கள் நடவடிக்கைகளைத் தொடரக்கூடாது என்ற எச்சரிப்புடன் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். ஒரு கிராமத்தில் ஒன்பது பேர் தங்கள் வீடுகளில் பைபிள் படிப்புகளைக் கொண்டிருக்கும்போது கைதுசெய்யப்பட்டார்கள். ஆறு பேர் 43 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டார்கள். மற்றும் அநேகர் கைது செய்யப்பட்டனர், ஆனால் சட்டப்பூர்வ நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
சமீபத்தில், 1989-ல்கூட, ஒரு சபை புத்தகப் படிப்பிலிருந்த எல்லா சகோதர சகோதரிகளும் கைதுசெய்யப்பட்டு, மூன்று நாட்கள் காவலில் வைக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டார்கள். சில சமயங்களில், அவர்கள் பிரசங்கிக்கமாட்டார்கள் என்று சொல்லக்கூடிய ஒரு அறிக்கையில் கையொப்பமிடும்படி கேட்கப்பட்டார்கள். அவர்கள் மறுத்தனர். அவர்கள் மீண்டும் பிரசங்கிப்பவர்களாக பிடிக்கப்பட்டால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை எதிர்ப்பட தயாராக இருப்பார்கள் என்ற அறிக்கையில் கையொப்பமிட்ட பிறகே சிலர் விடுவிக்கப்பட்டனர்.
அப்பேர்ப்பட்ட கஷ்டங்களின் மத்தியிலும், சகோதரர்கள் ராஜ்யத்தின் நற்செய்தியை வைராக்கியமாகத் தொடர்ந்து பிரசங்கித்தார்கள். உதாரணமாக, 1985-ல் அரசாங்கத் தலையிடுதல் துவங்கியபின், பிரசங்கிப்பவர்களின் எண்ணிக்கையில் 21 சதவிகித அதிகரிப்பு இருந்தது. தூய வணக்கத்தைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதில், அந்த 35 பிரஸ்தாபிகள் ஒரு மாதத்திற்கு சராசரியாக 20 மணிநேரத்தைச் செலவிட்டனர்.
காலம் கடந்து சென்றபோது, நேப்பாளத்தில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. யெகோவாவின் சாட்சிகள் தங்களுக்கு அச்சுறுத்தலாக இல்லை என்பதை அரசாங்க அதிகாரிகள் உணர ஆரம்பித்தனர். உண்மையில், அவர்களுடைய பைபிள் கற்பிக்கும் வேலை, மக்களை நல்ல குடிமக்களாக்கும் விதத்தில் அவர்கள்மீது கட்டியெழுப்பக்கூடிய, நன்மைபயக்கும் விளைவைக் கொண்டிருந்தது. நேர்மை, கடின உழைப்பு, நேர்மையான ஒழுக்க நடத்தை ஆகியவை யெகோவாவை வணங்குபவர்களுக்குரிய அடிப்படை தேவைகளாக அழுத்திக்கூறப்பட்டன என்பதை அதிகாரிகள் கண்டனர்.
முன்னாள் இந்துமதப்பற்றுள்ள பெண்மணி, ஒரு சாட்சியாகி, இரத்தமேற்றுதலை மறுத்தபோது ஒரு நல்ல சாட்சி கொடுக்கப்பட்டது. அவர்களுடைய தயக்கமற்ற, நன்கு விஷயமறிந்த நிலைநிற்கையைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சரியப்பட்டனர். பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! என்ற சிற்றேட்டின் உதவியால் இந்தப் பெண்மணி சத்தியத்தைக் கற்றுக்கொள்ள உதவப்பட்டிருந்தார்கள். அவர்களுடைய குடும்பத்திலிருந்துவந்த எதிர்ப்பு மற்றும் கேலியின் மத்தியிலும் தன்னுடைய 70 வயதை எட்டிக்கொண்டிருக்கையில், 1990-ல் முழுக்காட்டுதல் பெற்றார்கள். பின்னர் அவர்களுடைய கால் உடைந்தது; வேறு கோளாறுகளும் இருந்தன; அவர்கள் பெரிய அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியதாக இருந்தது. இரண்டு வாரமாக, மருத்துவர்களிடமிருந்தும் மற்ற உறவினர்களிடமிருந்தும் இரத்தமேற்றிக்கொள்ளும்படி வந்த அழுத்தத்தை எதிர்த்து நின்றார்கள். கடைசியாக, அறுவை மருத்துவக் குழுவினர், இரத்தமின்றி வெற்றிகரமாக அறுவை சிகிச்சையைச் செய்தனர். நடமாட்டம் குறைந்துவிட்டபோதிலும் இந்த உண்மைத்தன்மையுள்ள சகோதரி ஒவ்வொரு நாள் காலையும் தன்னுடைய வாசலருகே உட்கார்ந்துகொண்டு, அவ்வழியில் செல்பவர்களைத் தன்னுடன் உட்கார்ந்து, மகிழ்ச்சியூட்டக்கூடிய நற்செய்தியைக் கேட்கும்படி அழைக்கிறார்கள்.
இன்றைய நேப்பாளம்
இன்று நேப்பாளத்தில் நிலைமை எப்படி இருக்கிறது? யெகோவாவின் சாட்சிகள் உலகெங்குமுள்ள தங்கள் சகோதரர்களைப் போலவே, அதிகளவான வணக்க சுயாதீனத்தை அனுபவிக்கிறார்கள். அடையாள அர்த்தத்தில், மலையேறுபவர்களில் ஓரிருவர், மெய் வணக்க மலையை ஏறுகிறவர்களைச் சேரத் தொடங்கியதிலிருந்து, அதிகரிக்கும் எண்ணிக்கையான மக்கள், ‘நாம் கர்த்தருடைய பர்வதத்துக்கு போவோம் வாருங்கள்,’ என்று சொல்லியிருக்கிறார்கள். 1989-ல், ஒவ்வொரு மாதமும் பிரசங்க வேலையில் சராசரியாக 43 பேர் பங்கெடுத்தனர்; அந்த வருடம் கிறிஸ்துவின் நினைவு ஆசரிப்புக்கு 204 பேர் வந்திருந்தனர்.
பின்னர், வாக்களிக்கப்பட்ட விதமாகவே, சத்தியத்தைத் தேடுபவர்களை யெகோவா தம்முடைய வீட்டிற்குக் கூட்டிச்சேர்ப்பதைத் தீவிரப்படுத்தினார். (ஏசாயா 60:22) சிறிது காலத்திற்குமுன்பு, காட்மாண்டுவில் இரண்டாம் சபை ஒன்று உருவாக்கப்பட்டது; தற்போது தலைநகருக்கு வெளியே இரு தனி பிராந்தியத் தொகுதிகளும் இருக்கின்றன. ஏப்ரல் 1994-ல், பிரசங்க வேலையை அறிக்கை செய்த 153 கிறிஸ்தவர்கள் இருந்தார்கள்—ஐந்துக்கும் குறைவான வருடங்களில் 350 சதவிகித அதிகரிப்பு! அவர்கள் அக்கறையுள்ள மக்களுடன் 386 வீட்டு பைபிள் படிப்புகளை நடத்தினார்கள். 1994-ன் நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கை கிளர்ச்சியூட்டும் வகையில் 580-ஆக இருந்தது. விசேஷ மாநாட்டு தினம் ஒன்றிற்கு, 635 பேர் அந்த மன்றத்தில் அடைந்திருந்தனர்; 20 பேர் முழுக்காட்டுதலைப் பெற்றனர். ஆகையால், உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகளால் அனுபவிக்கப்படும் பெரிய அதிகரிப்புகள், சிறிய நேப்பாளத்திலும் சம்பவிக்கின்றன.
சமீப வருடங்களில் நேப்பாளி மொழியில் பிரசுரிக்கப்பட்டிருக்கிற பிரசுரங்களின் அளவு பெரிதும் அதிகரித்திருக்கிறது; இது மனத்தாழ்மையுள்ளவர்கள் சத்தியத்தை உறுதியாகப் பற்றிக்கொள்ள உதவுகிறது. இந்திய கிளை அலுவலகத்தில் மொழிபெயர்ப்பு நுட்பங்களிலும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதிலும் பயிற்றுவிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் இப்போது முழுநேரமாக காட்மாண்டுவில் சேவை செய்கிறார்கள். விஸ்தரிப்புக்குத் தயாரானவர்களாய், தேவாட்சிக்குரியவிதத்தில் மலையேறுகிற நேப்பாளியர்கள் முன்னேறிக்கொண்டிருக்கிறார்கள்!
இமயத்தைவிட உயரமாக ஏறுதல்
இமயத்தைவிட உயரமான மலைக்கு ஏறிச்செல்வதை நீங்களும் அனுபவிக்கலாம். அவ்வாறு செய்வதன்மூலம், நீங்கள் நேப்பாளத்தில் உள்ளவர்களை மட்டுமல்லாமல் “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்த” லட்சக்கணக்கானோரையும் சேர்ந்துகொள்வீர்கள். (வெளிப்படுத்துதல் 7:9) அவர்களோடு நீங்களும், நேப்பாளத்தில் உள்ளதைப்போன்று கெம்பீரத் தோற்றமுள்ள மலைகளை உண்டாக்கிய சிருஷ்டிகரால் போதிக்கப்படுவதை அனுபவிப்பீர்கள். சிருஷ்டிகர் ‘காரியங்களைச் சரிசெய்வதை’ காண்பீர்கள்; சுத்திகரிக்கப்பட்ட அழகிய பூமியில் என்றென்றுமாக வாழ்வதை நீங்கள் எதிர்நோக்கி இருக்க முடியும்.—ஏசாயா 2:4, NW.
[பக்கம் 24-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
காட்மாண்டு
எவரெஸ்ட் சிகரம்
[பக்கம் 25-ன் படம்]
காட்மாண்டுவில் ராஜ்ய மன்றத்திற்கு வெளியே
[பக்கம் 26-ன் படம்]
அநேக நேப்பாளியர்கள் பைபிள் படிப்புகளிலிருந்து பயனடைகிறார்கள்