ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
‘அவர்கள் இடைவிடாமல் தொடர்ந்தனர்’
இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய அப்போஸ்தலரின் நாட்கள் முதற்கொண்டே, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி பிரசங்கிக்கப்படுவதைத் தடைசெய்யும் முயற்சிகளில், மதத் தலைவர்கள் தங்களால் முடிந்தவற்றை எல்லாம் செய்திருக்கிறார்கள். அப்போஸ்தலரை “இயேசுவின் நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று” மீண்டும் மீண்டுமாக எருசலேமிலுள்ள உள்ளூர் அதிகாரிகள் உறுதியாகக் ‘கட்டளையிட்டார்கள்.’ (அப்போஸ்தலர் 5:27, 28, 40) இருந்தபோதிலும், “தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று,” என்பதாக பைபிள் பதிவு குறிப்பிடுகிறது.—அப்போஸ்தலர் 6:7.
இரண்டாயிரம் வருடங்கள் கழித்து, இன்னும் இஸ்ரேலில் உள்ள மதத் தலைவர்கள், அந்த நாட்டிலுள்ள உண்மை கிறிஸ்தவர்களின் வேலையைத் தடைசெய்வதற்கு உள்ளூர் அதிகாரிகள்மீது செல்வாக்குச் செலுத்துவதைக் காண்கிறோம். தீவிர மதவாதிகளின் அழுத்தத்தால், நவம்பர் 1987-ல், உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகத்திலுள்ள ராஜ்ய மன்றத்தில் கிறிஸ்தவ கூட்டங்களை நடத்துவதை சாட்சிகள் நிறுத்தும்படி இஸ்ரேலின் டெல் அவிவிலுள்ள உள்ளூர் அதிகாரிகள் கட்டளையிட்டார்கள். அந்த ஆணை அக்டோபர் 1989-ல் அமலுக்கு வந்தது. அதற்கிணங்க, அவர்களுடைய ராஜ்ய மன்றம் முற்றிலும் பயன்படுத்தப்படாமல் இருக்கையில், அப்பகுதியில் வாடகைக்கெடுத்த இடங்களில் சாட்சிகள் மூன்று வருடங்களாகக் கூடிவந்தார்கள்.
இதற்கிடையில், இந்த விஷயம் இஸ்ரேலின் உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. சாட்சிகளால் அளிக்கப்பட்ட வாதத்தை அந்நாட்டின் வழக்குரைஞர் அலுவலகம் பரிசீலனைசெய்தது; விதிக்கப்பட்ட தடையில் உட்பட்டிருந்த படுமோசமான மதத் தப்பெண்ணத்தைக் கருதுகையில், அவர்களுடைய முறையீட்டுக்கு எதிராக எந்த வாதமும் இல்லை என்று அறிவித்தது. இதன் விளைவாக, அந்த உள்ளூர் அதிகாரிகளுக்குத் தங்கள் தீர்மானத்தை மாற்றிக்கொள்வதைத் தவிர வேறு ஒரு வழியுமில்லை. யெகோவாவின் சாட்சிகள் மகிழ்ச்சியாகத் தங்கள் ராஜ்ய மன்றத்திற்குத் திரும்பிச் சென்றனர்.
அந்த வருடங்களில், பைபிள் சத்தியங்களைப் பிரசங்கிக்கும் வேலை பின்தங்கியதா? நிச்சயமாக இல்லை! ராஜ்ய மன்றம் மூடப்பட்ட சமயத்தில் டெல் அவிவில் இரண்டு சபைகளும் அருகிலுள்ள லாட் என்ற நகரத்தில் தனி பைபிள் படிப்பு தொகுதி ஒன்றும் இருந்தன. மூன்று வருடங்கள் கழித்து, ராஜ்ய மன்றம் மறுபடியும் திறக்கப்பட்டபோது, யெகோவாவின் சாட்சிகள் நான்கு சபைகளாக வளர்ந்திருந்தனர்; பீர் செபாவில் ஒரு புதிய பைபிள் படிப்பு தொகுதி இருந்தது.
இஸ்ரேலில் வளர்ச்சி, அரபிக் மற்றும் எபிரெய மொழிகளாகிய முக்கிய மொழித் தொகுதிகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதாக இல்லை. முன்னாள் சோவியத் யூனியனிலிருந்து திரளான மக்கள் குடிபெயர்ந்து வந்திருக்கின்றனர்; ஆகவே ரஷ்ய மொழி பேசும் யெகோவாவின் சாட்சிகள் அவர்களுடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் தற்போது மும்முரமாக இருக்கிறார்கள். மூன்று சபைகளில், ரஷ்ய மொழி கூட்டங்கள் சில நடத்தப்படுகின்றன; சமீபத்தில் ரஷ்ய மாநாடு ஒன்றிற்கு நூற்றுக்கும் அதிகமானோர் கூடிவந்திருந்தனர்.
சந்தேகமின்றி, தப்பெண்ணமுள்ள மதவாதிகள், உண்மை வணக்கத்திற்கு எதிரான தங்கள் போராட்டத்தைத் தொடருவார்கள். ஆனால் எதிர்ப்பின் மத்தியிலும் ராஜ்ய அறிவிப்பாளர்கள், “இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்த” முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் பின்பற்றுகிறார்கள்.—அப்போஸ்தலர் 5:42.