வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
பூர்வ நிர்வாகக் குழுவிற்காக ஒரே இன, தேசிய பின்னணி உடையவர்களை—அனைவரையும் யூதர்களிலிருந்து—தெரிந்தெடுத்ததில் கடவுள் பட்சபாதமுள்ளவராக இருந்தாரா?
இல்லை, நிச்சயமாகவே அவர் அவ்வாறு இல்லை. இயேசு தம்முடைய சீஷர்களாக ஆகும்படி முதலில் அழைத்தவர்கள் அனைவரும் யூதர்கள். பின்பு, பொ.ச. 33 பெந்தெகொஸ்தே அன்று யூதர்களும் யூத மதத்துக்கு மாறியவர்களுமே முதலாவதாகப் பரிசுத்த ஆவியால் அபிஷேகம்செய்யப்பட்டு கிறிஸ்துவுடன் பரலோகத்தில் ஆளும் தகுதி பெற்றனர். பின்னர்தான் சமாரியர்களும் விருத்தசேதனமற்ற பிற தேசத்தவரும் சேர்க்கப்பட்டனர். எனவே, அந்தச் சமயத்திலிருந்த நிர்வாகக் குழு அப்போஸ்தலர் 15:2 சொல்கிறபடி, யூதர்களாயிருந்த ‘எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களும் மூப்பர்களும்’ அடங்கியதாக இருந்தது என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. இவர்கள் வேதாகம அறிவில் ஆழமான புரிந்துகொள்ளுதலும் மெய் வணக்கத்தில் பல வருட அனுபவமும் உள்ளவர்கள்; முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவ மூப்பர்களாக வளருவதற்கு அவர்களுக்கு அதிக நேரமும் இருந்தது.—ரோமர் 3:1, 2-ஐ ஒப்பிடுக.
அப்போஸ்தலர் 15-ம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள நிர்வாகக் குழுவின் அந்தக் கூட்டம் நடத்தப்பட்ட காலத்துக்குள், அநேக புறஜாதியார் கிறிஸ்தவர்களாக ஆகியிருந்தனர். ஆப்பிரிக்கர், ஐரோப்பியர், இன்னும் மற்ற பகுதிகளிலுள்ள மக்கள் இவர்களில் உட்பட்டிருந்தனர். இருப்பினும், கிறிஸ்தவத்தை யூதர்கள் அல்லாதவர்களுக்குக் கவர்ச்சிகரமானதாக ஆக்குவதற்காக நிர்வாகக் குழுவில் புறஜாதியார் எவரும் அப்போது சேர்க்கப்பட்டதாக பதிவு எதுவும் இல்லை. புதிதாக மதம் மாறிய இந்தப் புறஜாதி கிறிஸ்தவர்கள் ‘தேவனுடைய இஸ்ரவேலின்’ சம அந்தஸ்துள்ள அங்கத்தினர்களாக இருந்தபோதிலும், அப்போது நிர்வாகக் குழுவின் அங்கத்தினர்களாக இருந்த அப்போஸ்தலர் போன்ற யூத கிறிஸ்தவர்களின் முதிர்ச்சியையும் அதிகப்படியான அனுபவத்தையும் அவர்கள் மதித்திருப்பார்கள். (கலாத்தியர் 6:16) அப்படிப்பட்ட அனுபவம் எவ்வளவு உயர்வாகக் கருதப்பட்டது என்பதை அப்போஸ்தலர் 1:21, 22-ல் கவனியுங்கள்.—எபிரெயர் 2:3, 4; 2 பேதுரு 1:18; 1 யோவான் 1:1-3.
அநேக நூற்றாண்டுகளாக இஸ்ரவேல் தேசத்தோடு கடவுள் விசேஷித்த விதமாக செயல்தொடர்பு கொண்டிருந்தார்; அதிலிருந்தே இயேசு தம் அப்போஸ்தலரைத் தெரிந்தெடுத்தார். இப்போது தென் அமெரிக்கா அல்லது ஆப்பிரிக்கா அல்லது தூர கிழக்கு போன்றவையாயுள்ள தேசங்களிலிருந்து எந்த அப்போஸ்தலரும் வரவில்லை என்பதில் எந்தத் தவறும் அல்லது அநியாயமும் இல்லை. காலப்போக்கில் அத்தேசங்களிலிருக்கும் ஆண்களும் பெண்களும், பூமியில் ஒரு அப்போஸ்தலனாகவோ, முதல் நூற்றாண்டு நிர்வாகக் குழுவின் அங்கத்தினராகவோ, அல்லது இன்று கடவுளுடைய ஜனங்களின் மத்தியில் வேறு எந்த நியமிப்பை பெறுவதையும்விட அதிக மகத்தான சிலாக்கியங்களைப் பெறும் வாய்ப்பைக் கொண்டிருப்பர்.—கலாத்தியர் 3:27-29.
“தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்” என்றும் சொல்லும்படி ஓர் அப்போஸ்தலன் தூண்டப்பட்டார். (அப்போஸ்தலர் 10:34, 35) ஆம், கிறிஸ்துவின் மீட்கும்பொருளின் பலன்கள் பட்சபாதமின்றி எல்லாருக்கும் கிடைக்கின்றன. பரலோக ராஜ்யத்திலும் பூமியில் என்றென்றும் வாழப்போகும் திரள்கூட்டத்திலும் எல்லா கோத்திரம், மொழி, தேசம் ஆகியவற்றைச் சேர்ந்த தனிப்பட்ட நபர்கள் அடங்கியிருப்பர்.
இன, மொழி, அல்லது தேசிய பின்னணிகளைக்குறித்து அநேக மனிதர் எளிதில் புண்படக்கூடிய உணர்ச்சிகளை உடையவர்களாகின்றனர். கிரேக்க மொழிபேசிய கிறிஸ்தவர்களுக்கும் எபிரெய மொழிபேசிய கிறிஸ்தவர்களுக்கும் மத்தியில் முறுமுறுப்பை உண்டுபண்ணிய ஒரு பிரச்சினையைப் பற்றி நாம் அப்போஸ்தலர் 6:1-ல் வாசிக்கும் விஷயத்தில் இது விளக்கப்பட்டிருக்கிறது. மொழி, இனம், ஜாதி பின்னணி, அல்லது பால் சம்பந்தமாக தற்போது நிலவும் உணர்ச்சிகளோடு நாம் வளர்ந்திருக்கக்கூடும் அல்லது அவற்றை நாம் ஏற்றிருக்கக்கூடும். அப்படிப்பட்ட காரியம் சாத்தியமாக இருப்பதால், நம்முடைய வெளித் தோற்றம் என்னவாக இருந்தாலும், எல்லா மனிதர்களும் கடவுளுக்கு முன்பாகச் சமமானவர்களே என்ற கடவுளுடைய நோக்குநிலைக்கு ஏற்ப நம் உணர்ச்சிகளையும் பிரதிபலிப்புகளையும் மாற்றியமைக்க முயற்சி எடுப்பது பொருத்தமாயிருக்கும். மூப்பர்கள் மற்றும் உதவி ஊழியர்களின் தகுதிகள் பதிவு செய்துவைக்கப்படும்படி கடவுள் ஏற்பாடு செய்தபோது, இன மற்றும் தேசிய பின்னணியைப்பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. இல்லை, சேவை செய்ய இருப்போரின் ஆவிக்குரிய தகுதிகளின் பேரில் அவர் கவனத்தை ஊன்ற வைத்தார். முதல் நூற்றாண்டின் நிர்வாகக் குழுவைக் குறித்ததில் உண்மையாக இருந்தது போலவே, இன்று நம்மிடத்திலுள்ள மூப்பர்கள், பயணக் கண்காணிகள், கிளைக்காரியாலய அங்கத்தினர்கள் ஆகியோரின் விஷயத்திலும் இது உண்மையாயிருக்கிறது.