பறவைகளிலிருந்தும் பூக்களிலிருந்தும் ஒரு பாடம்
மக்கள் இன்று வேறு எதையும்விட பெரும்பாலும் எதில் அக்கறைகொண்டிருக்கிறார்கள்? பெரும்பாலானவர்களுக்கு, அது தங்கள் குடும்பத்தின் பிழைப்புக்குப் போதுமான பணத்தைக் கொண்டிருப்பதை அல்லது தங்கள் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவிப்பதை அர்த்தப்படுத்துகிறது.
பிழைப்புக்குப் போதுமான பணத்தைக் கொண்டிருப்பது இயேசு கிறிஸ்து பூமியிலிருந்தபோதும் ஒரு முக்கிய அக்கறையாக இருந்தது. ஆனால் இந்த நியாயமான அக்கறையானது ஆவிக்குரிய காரியங்களைப் புறக்கணிக்கும் அளவுக்கு மேலோங்கிய கவலையாக ஆகமுடியும் என்று அவர் எச்சரித்தார். இந்தக் குறிப்பை விளக்குவதற்காக, பறவைகளையும் பூக்களையும் கூர்ந்து கவனிக்கும்படியாக இயேசு தம் சீஷர்களிடம் சொன்னார்.
பறவைகள் ஒவ்வொரு நாளும் சாப்பிடவேண்டும்—அவற்றின் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகமாக இருப்பதால் நம்மைவிட அதிகளவில் சாப்பிடுவது அவசியம். மேலுமாக, அவை விதைக்கவோ அறுக்கவோ எதிர்காலத்துக்காக உணவைச் சேமித்து வைக்கவோ முடியாது. இருந்தாலும், இயேசு குறிப்பிட்டபடி, அவற்றை நம் “பரமபிதா பிழைப்பூட்டுகிறார்.” (மத்தேயு 6:26) அதேவிதமாகவே, அழகிய ‘காட்டுப் புஷ்பங்களை’ கடவுள் சிறந்தவிதத்தில் உடுத்துவிக்கிறார்.—மத்தேயு 6:28-30.
பொருள்சம்பந்தமான தேவைகளை நாம் சரியான நோக்கில் வைத்து ஆவிக்குரிய காரியங்களுக்கு முன்னுரிமை கொடுத்தால், தேவையான உணவும் உடையும் நமக்கு இருக்கும்படி கடவுள் பார்த்துக்கொள்வார் என்று இயேசு நமக்கு உறுதி அளிக்கிறார். யெகோவா தேவன், பறவைகளையும் பூக்களையும் கவனித்துக்கொண்டால், அவரில் அன்புகூருகிறவர்களையும் ‘ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் முதலாவது தேடுகிறவர்களையும்’ அவர் நிச்சயமாகக் கவனித்துக்கொள்வார். (மத்தேயு 6:33) உங்களுடைய வாழ்க்கையில் கடவுளுடைய ராஜ்யத்தின் அக்கறைகளை முதலாவதாக வைக்கிறீர்களா?