அர்த்தமற்ற ஒரு சடங்கா?
பாவ அறிக்கை செய்யும் புனித சடங்கு, நூற்றாண்டுகளாக கத்தோலிக்கர்களால் செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும், அநேகருக்கு அது பயனற்ற ஒரு பழக்கமாகவே தோன்றுகிறது. தன் இளமை காலத்தை நினைவுகூருகிறவராய், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகிய பாப் சொல்கிறார்: “நான் வளரிளமை பருவத்தினனாக இருந்தேன், அப்போதும்கூட நான் அதை முக்கியமானதாகக் கருதவில்லை.” ஏன்? பாவ அறிக்கை செய்வது அவருக்கு அர்த்தமற்ற ஒரு சடங்காகிவிட்டு இருந்தது. அவர் விவரிக்கிறார்: “பாவ அறிக்கை செய்வது, பாவம் நிறைந்த உங்கள் எல்லா பெட்டி பைகளையும் விமான நிலையத்திலுள்ள சுங்க அதிகாரியிடம் கொண்டுவருவதுபோல் இருந்தது. அவர் உங்கள் பாவங்களைப்பற்றி கேள்விகளைக் கேட்கிறார்; பின்னர், நீங்கள் வெளிநாட்டிலிருந்தபோது வாங்கிய சொகுசு பொருட்களுக்கான வரியைச் செலுத்தியபின் உங்களைப் போகவிடுகிறார்.”
அதேவிதமாகவே, பாவ அறிக்கை செய்யும் பழக்கம், “மனந்திரும்புதலைக்குறித்த மனப்பாடம் செய்யப்பட்ட ஜெபத்தின் மூலம் சாதாரண பாவங்களை மேலுமாகக் கவனியாமல் விடுவது முதற்கொண்டு பிராயச்சித்தத்திற்காகப் பெயரளவில் செய்யப்படும் ஒரு சடங்கு வரையாகச் செல்லும் மிகவும் எளிதாக்கப்பட்ட படிப்படியான வழிகாட்டி” என்பதாக ஃப்ராங் வெஸ்லிங் ஐ.மா. கத்தோலிக் (ஆங்கிலம்) என்பதில் எழுதும்போது விவரிக்கிறார். வெஸ்லிங்கின் முடிவு என்ன? “பாவ அறிக்கை செய்வது ஒருவரின் ஆவிக்குரிய நலனுக்கு நல்லது என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் சொல்லுகிறார். “ஆனால் கத்தோலிக்கர்கள் அதைச் செய்யும் முறையே பிரச்சினையாக இருக்கிறது.”
பாவ அறிக்கையை பைபிள் முற்றிலும் வேறுபட்ட விதத்தில் விளக்குகிறது. கடவுளிடம் பாவ அறிக்கை செய்வதே மிகவும் முக்கியமானது. (சங்கீதம் 32:1-5) கிறிஸ்தவ சீஷனாகிய யாக்கோபு எழுதினார்: “உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள். நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்.”—யாக்கோபு 5:14, 16.
பாவத்தால் பாரமடைந்திருக்கும் ஒரு கிறிஸ்தவர், சபை கண்காணிகளை அழைக்கலாம்; அவர்கள் தவறுசெய்தவர் தன்னுடைய பாவமுள்ள போக்கை விட்டுவிடுவதற்கு உதவும்படி தனிப்பட்ட மற்றும் நடைமுறையான ஆலோசனையைக் கொடுக்க முடியும். ஆவிக்குரியவிதத்தில் நோயுற்றிருக்கும் ஒருவருடைய முன்னேற்றத்தைக் கவனித்துக்கொண்டிருக்கையில், கண்காணிகள் போதுமான உற்சாகத்தை அளிக்கலாம். இன்று சர்ச்சுகளில் ஆசாரமாக செய்யப்பட்டுவரும் பாவ அறிக்கை சடங்கிலிருந்து எவ்வளவு முரண்பட்டதாக இருக்கிறது! தவறுசெய்து மனந்திரும்புகிறவர்கள் சபை மூப்பர்களின் தனிப்பட்ட உதவியால் பலப்படுத்தப்பட்டவர்களாக, தாவீது அனுபவித்த நிம்மதியைப் பெறலாம்; அவர் ஒரு சங்கீதத்தில் விவரித்தபடி அது இருக்கும்: “நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்.”—சங்கீதம் 32:5.