கருவளத்துக்கும் போருக்குமான தேவதைகள்
சிரியாவில் உள்ள எப்லா என்ற இடத்தில் நடந்த தொல்பொருள் ஆராய்ச்சியின்போது, கருவளத்துக்கும் போருக்கும் தேவதையாய் இருந்த இஷ்ட்டார் என்ற பாபிலோனிய தேவதையின் உருவத்தைக் காண்பிக்கும் நினைவுச் சின்னம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. புதைபொருள் ஆராய்ச்சியாளர் பாவோலோ மத்தியே அதைப் பின்வருமாறு விவரிக்கிறார். “ஒரு நீள் உருள் வடிவான முத்திரையின் மீது முறைப்படியான மத வணக்க முறை காட்சி வரையப்பட்டிருந்தது. அதில் ஒரு தனித்த தெய்வீக உருவத்திற்கு முன்பு ஒரு முக்காடு போட்டுக் கொண்டிருந்த புரோகிதி இருந்தாள் . . . அந்த உருவத்தின் தலை ஒரு உயரமான, ஒல்லியான ஆதாரத்தின் மீது பொருத்தப்பட்டிருந்தது.”
அந்த உருவச்சிலை பொ.ச.மு. 18-ம் நூற்றாண்டின் ஆரம்பக் காலப்பகுதியைச் சேர்ந்ததாய் இருப்பதால், அக்கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாய் உள்ளது. மத்தியே என்பவரின்படி, இஷ்ட்டார் வணக்கம் சுமார் 2,000 வருட காலமாக பரவி இருந்தது என்பதற்கு “முடிவான அத்தாட்சியை” இது அளிக்கிறது.
இஷ்ட்டார் வணக்கம் பாபிலோனில் ஆரம்பமானது, அதைப் பின்தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் ரோமப் பேரரசு முழுவதும் பரவியது. பொய் மதம் விட்டுச்சென்ற எல்லா அடையாளத்தையும் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து நீக்கிப்போட வேண்டும் என்று யெகோவா இஸ்ரவேலருக்கு கட்டளையிட்டிருந்தார். ஆனால் அவர்கள் அதைச் செய்யத் தவறினதன் காரணமாக, அஸ்தரோத்தின் (இஷ்ட்டாரின் கானானியக் கூட்டாளி) வணக்கம் அவர்களுக்கு ஒரு கண்ணியாக ஆனது.—உபாகமம் 7:2, 5; நியாயாதிபதிகள் 10:6.
இஷ்ட்டாரும் அவளுடைய கூட்டாளியாகிய அஸ்தரோத்தும் இப்போது இல்லையென்றாலும், அவர்கள் பிரதிநிதித்துவம் செய்த பண்புகள்—ஒழுக்கக்கேடும் வன்முறையும்—தீவிரமாக உள்ளன. கருவளத்துக்கும் போருக்குமான தேவதைகளை வணங்கிவந்த அந்தப் பண்டையகால சமுதாயங்களிலிருந்து நவீன நாளைய சமுதாயம் உண்மையிலேயே அவ்வளவு வித்தியாசமாக இருக்கிறதா என்று நாம் ஒருவேளை கேட்கலாம்.
[பக்கம் 20-ன் படம்]
பிள்ளைகளும்கூட டானிட்-க்கு பலியாக செலுத்தப்பட்டனர்
[படத்திற்கான நன்றி]
Ralph Crane/Bardo Museum