மங்கியெரிகிற திரியை நீங்கள் அணைப்பீர்களா?
கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை இயேசு கிறிஸ்து எல்லா வகையான மக்களுக்கும் அறிவித்தார். அவர்களில் அநேகர் ஒடுக்கப்பட்டவர்களாக, மனச்சோர்வுற்றவர்களாக இருந்தனர். ஆனால் இயேசு அவர்களுக்கு உற்சாகமூட்டும் ஒரு செய்தியை அளித்தார். துன்புறும் மக்களுக்கு அவர் பரிவைக் கொண்டிருந்தார்.
ஏசாயாவால் பதிவு செய்யப்பட்ட ஒரு தீர்க்கதரிசனத்திற்கு கவனத்தை ஈர்ப்பதன்மூலம் சுவிசேஷ எழுத்தாளராகிய மத்தேயு இயேசுவின் பரிவை சிறப்பித்துக் காட்டினார். கிறிஸ்துவால் நிறைவேற்றப்பட்ட வார்த்தைகளை மேற்கோள் காட்டுகிறவராக, மத்தேயு எழுதினார்: “அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்.” (மத்தேயு 12:20; ஏசாயா 42:3) இந்த வார்த்தைகளின் அர்த்தம் என்ன, மேலும் இயேசு இந்தத் தீர்க்கதரிசனத்தை எப்படி நிறைவேற்றினார்?
தீர்க்கதரிசனத்தின்மீது ஒரு நோட்டம்
நாணல் சாதாரணமாக சதுப்புநிலத்தில் வளர்கிறது; அது திடமும் உறுதியுமுள்ள தாவரம் அல்ல. ‘நெரிந்த நாணல்’ ஒன்று நிச்சயமாகவே பலமற்றதாக இருக்கும். ஆகவே அது, ஓய்வுநாளில் இயேசு குணப்படுத்திய சூம்பின கையையுடைய மனிதனைப்போன்ற ஒடுக்கப்பட்டிருக்கும் அல்லது துன்புறும் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகத் தோன்றுகிறது. (மத்தேயு 12:10-14) ஆனால் விளக்குத்திரியைக் குறித்த தீர்க்கதரிசன மேற்கோளைப் பற்றியதென்ன?
பொ.ச. முதல் நூற்றாண்டில், பொதுவாக வீட்டில் பயன்படுத்தப்படும் ஒரு விளக்கு, ஒரு வளையக் கைப்பிடியுடன்கூடிய சிறிய கூஜாபோன்ற ஒரு மண்கலமாகும். அந்த விளக்கு பொதுவாக ஒலிவ எண்ணெயால் நிரப்பப்பட்டது. நுண்குழல் ஈர்ப்பின் மூலம், சணலால் உண்டாக்கப்பட்ட திரி, தீச்சுடரை அணையாமல் வைத்துக்கொள்வதற்காக எண்ணெயை மேல்நோக்கி உறிஞ்சுகிறது. நிச்சயமாகவே, ‘மங்கியெரிகிற திரி’ ஒன்று, சீக்கிரத்தில் அணைந்துபோகும் ஒன்றாக இருக்கும்.
அடையாள அர்த்தத்தில், வளைக்கவும் அடிமேல் அடி கொடுக்கவும்பட்ட நெரிந்த நாணலைப்போல இருந்த அநேகருக்கு இயேசு தம்முடைய ஆறுதலான செய்தியை அறிவித்தார். அவர்களுடைய வாழ்க்கையின் கடைசி உயிர்த்துடிப்பு கிட்டத்தட்ட அணைக்கப்படும் நிலையில் இருந்ததால் இந்த மக்களும் மங்கியெரிகிற சணல் திரியைப் போல இருந்தனர். அவர்கள் உண்மையில் ஒடுக்கப்பட்டவர்களாகவும் மனச்சோர்வடைய வைக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர். என்றபோதிலும், அடையாளப்பூர்வமான நெரிந்த நாணலையோ அடையாள அர்த்தமுள்ள மங்கியெரிகிற திரியையோ இயேசு நசுக்கிவிடவில்லை. அவருடைய அன்பான, கனிவான, பரிவான வார்த்தைகள் துன்புறும் மக்களை மேலுமாக உற்சாகமிழக்கவும் சோர்வடையவும் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, அவருடைய குறிப்புகளும் அவர்களுடன் அவர் செயல்தொடர்பு கொண்ட விதமும், மேம்படுத்தும் செல்வாக்கைக் கொண்டிருந்தன.—மத்தேயு 11:28-30.
இன்றும்கூட, சோர்வூட்டும் அநேகப் பிரச்சினைகளை எதிர்ப்படுவதன் காரணமாக அநேகருக்கு பரிவும் உற்சாகமும் தேவைப்படுகிறது. யெகோவாவின் ஊழியர்கள்கூட எப்போதுமே பலத்தின் சிகரங்களாக இருப்பதில்லை. அவ்வப்போது சிலர் மங்கியெரிகிற திரிகளை ஒத்திருக்கிறார்கள். ஆகவே கிறிஸ்தவர்கள் உற்சாகமளிப்பவர்களாக—தீச்சுடரை எரியச்செய்வதைப் போன்று—இவ்வாறாக ஒருவரையொருவர் பலப்படுத்திக்கொண்டு இருக்கவேண்டும்.—லூக்கா 22:32; அப்போஸ்தலர் 11:23.
கிறிஸ்தவர்களாக நாம் கட்டியெழுப்புகிறவர்களாய் இருக்க விரும்புகிறோம். ஆவிக்குரிய உதவியை நாடும் எவரையும் பலவீனப்படுத்த நாம் வேண்டுமென்றே முயல மாட்டோம். உண்மையில், மற்றவர்களைப் பலப்படுத்துவதில் நாம் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்ற விரும்புகிறோம். (எபிரெயர் 12:1-3; 1 பேதுரு 2:21) உற்சாகமளிக்கப்படுவதற்காக நம்மை நாடிவரும் எவரையும் நாம் நம்மை அறியாமலேயே நொறுக்கிவிடக்கூடும் என்ற உண்மைதானே, நாம் மற்றவர்களிடம் எவ்விதமாக நடந்துகொள்கிறோம் என்பதைக் குறித்து கருத்தாய் சிந்திப்பதற்கு நல்ல காரணமாக இருக்கிறது. ‘மங்கியெரிகிற திரியை அணைத்துவிட’ நாம் நிச்சயமாகவே விரும்புவதில்லை. இதைக் குறித்ததில் என்ன வேதப்பூர்வ வழிகாட்டும் அறிவுரைகள் நமக்கு உதவலாம்?
குறைகூறுதலின் பாதிப்புகள்
ஒரு கிறிஸ்தவன், ‘ஒரு தவறான அடியை எடுத்துவைத்தால், ஆவிக்குரிய தகுதிகளை உடையவர்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவரைச் சீர்பொருந்த முயல வேண்டும்.’ (கலாத்தியர் 6:1) என்றபோதிலும், மற்றவர்களிடம் குறைகளுக்காக நோக்கி, அவர்களைத் திருத்துவதற்காக ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்வது சரியானதாக இருக்குமா? அல்லது தற்போது அவர்கள் எடுக்கும் முயற்சிகள் போதுமானவை அல்ல என்பதை மறைமுகமாகக் குறிப்பிடுவதன்மூலம் அவர்களை அதிகத்தைச் செய்யும்படி வற்புறுத்துவதும், ஒருவேளை குற்ற உணர்ச்சிகளைக் கொண்டிருக்கச் செய்வதும் சரியானதாக இருக்குமா? அதைப் போன்ற எதையும் இயேசு செய்ததாக எவ்வித அத்தாட்சியும் இல்லை. மற்றவர்கள் முன்னேறுவதற்காக உதவுவது நம்முடைய உள்நோக்கமாக இருந்தாலும், தயவற்ற குறைகூறுதலைக் கேட்கிறவர்கள் பலப்படுத்தப்படுவதற்கு மாறாக பலவீனப்படுத்தப்பட்டதாக உணரக்கூடும். ஆக்கப்பூர்வமான குறைகூறுதலும்கூட, அளவுக்கதிகமாக செய்யப்பட்டால் மிகவும் சோர்வூட்டுவதாக இருக்கலாம். மனச்சாட்சிப்பூர்வமாக செயல்படும் ஒரு கிறிஸ்தவனின் மிகச் சிறந்த முயற்சிகள் நிராகரிக்கப்படுவதிலேயே விளைவடையுமானால், அவர் நடைமுறையில் முயற்சியைக் கைவிட்டு, ‘ஏன் முயல வேண்டும்?’ என்று சொல்லக்கூடும். உண்மையில், அவர் முழுமையாகக் கைவிட்டுவிடக்கூடும்.
வேதப்பூர்வமான அறிவுரையைக் கொடுப்பது முக்கியமாக இருந்தாலும், சபையின் நியமிக்கப்பட்ட மூப்பர்கள் அல்லது மற்றவர்களின் மனநிலையில் அதுதானே சிறந்த அம்சமாக இருக்கக்கூடாது. அறிவுரையை வழங்குவதும் பெறுவதும் கிறிஸ்தவக் கூட்டங்கள் நடத்தப்படுவதற்கான முக்கிய நோக்கம் அல்ல. மாறாக, எல்லாரும் தங்களுடைய கூட்டுறவையும் கடவுளுக்கான தங்கள் பரிசுத்த சேவையையும் அனுபவித்து மகிழ்வதற்கு ஏதுவாக நாம் ஒருவரையொருவர் கட்டியெழுப்புவதற்கும் உற்சாகப்படுத்துவதற்கும் ஒழுங்காக ஒன்றுகூடுகிறோம். (ரோமர் 1:10, 11; எபிரெயர் 10:24, 25) கடுமையான தவறு ஒன்றிற்கும், கவனியாமல் விட்டுவிடுவதே ஞானமானதும் அன்பானதுமாக இருக்கும் அபூரணத்தன்மை ஒன்றிற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை நம்மால் கண்டுணர முடிவது எவ்வளவு நல்லதாக இருக்கும்!—பிரசங்கி 3:1, 7; கொலோசெயர் 3:13, NW.
மக்கள், குறைகூறுதலுக்குப் பிரதிபலிப்பதைவிட உற்சாகத்திற்கு அதிவிரைவில் பிரதிபலிக்கிறார்கள். உண்மையில், தனிநபர்கள் அநியாயமாகக் குறைகூறப்பட்டதாக உணருகையில், அந்தக் குறைகூறப்பட்ட நடத்தையை அவர்கள் இன்னும் இறுகப் பற்றிக்கொள்ளக்கூடும்! ஆனால் நியாயமானவிதத்தில் அவர்கள் பாராட்டப்படும்போது, உற்சாகமூட்டப்பட்டு முன்னேறும்படி தூண்டப்படுகிறார்கள். (நீதிமொழிகள் 12:18) ஆகவே நாம் இயேசுவைப் போல, உற்சாகமளிப்பவர்களாகவும், “மங்கியெரிகிற திரியை” ஒருபோதும் “அணைக்காமலும்” இருப்போமாக.
ஒப்புமைகள் செய்வதைப் பற்றி என்ன?
மற்ற கிறிஸ்தவர்களுடைய நல்ல அனுபவங்களைக் கேட்பது மிகவும் ஊக்கமூட்டுவதாக இருக்கலாம். ராஜ்ய செய்தியைப் பிரசங்கிப்பதில் சீஷர்களுக்குக் கிடைத்த வெற்றியைக் குறித்து கேள்விப்பட்டபோது இயேசுதாமே களிகூர்ந்தார். (லூக்கா 10:17-21) அதேவிதமாக, விசுவாசத்திலுள்ள மற்றவர்களின் வெற்றி, நல்ல முன்மாதிரி, அல்லது உத்தமத்தைப் பற்றி நாம் கேள்விப்படும்போது, நாம் உற்சாகமடைந்தவர்களாகி, நம்முடைய கிறிஸ்தவப் போக்கைத் தொடர்ந்து பற்றியிருப்பதற்கு அதிகத் தீர்மானமுள்ளவர்களாக உணருகிறோம்.
என்றாலும், ‘இந்தக் கிறிஸ்தவர்களைப்போல நீங்கள் அவ்வளவு சிறப்பானவர்கள் அல்ல, நீங்கள் தற்போது செய்வதைவிட அதிகத்தைச் செய்துகொண்டிருக்க வேண்டும்’ என்பதைக் குறிப்பாக உணர்த்தும் வகையில் ஒரு அறிக்கை கொடுக்கப்பட்டால் எப்படி இருக்கும்? அதைக் கேட்பவர், முன்னேற்றமடைவதற்கான சுறுசுறுப்பான ஒரு திட்டத்தில் ஈடுபடும் சாத்தியம் இருக்கிறதா? விசேஷமாக, அடிக்கடி ஒப்புமைகள் செய்யப்பட்டால் அல்லது மறைமுகமாகக் குறிப்பிடப்பட்டால், அவர் சோர்வடையவும் ஒருவேளை முயற்சியைக் கைவிட்டுவிடவும் சாத்தியம் இருக்கிறது. இது பெரும்பாலும், ‘உன் சகோதரனைப் போல நீ ஏன் இருக்கக்கூடாது?’ என்று பெற்றோர் தன் பிள்ளையிடம் கேட்பதை ஒத்திருக்கும். அப்படிப்பட்ட குறிப்பு கோபதாபத்தையும், சோர்வையும் உருவாக்கக்கூடுமே தவிர, மேம்பட்ட நடத்தையை முன்னேற்றுவிப்பது கடினம். வயதுவந்தவர்கள்மீதும் ஒப்புமைகள் அதுபோன்ற பாதிப்பையே கொண்டிருக்கக்கூடும்; அவர்கள் யாருடன் ஒப்பிடப்படுகிறார்களோ அவர்களிடமாக ஒருவிதமான கோபதாபத்தை உடையவர்களாகும்படியும்கூடச் செய்கிறது.
கடவுளுடைய சேவையில் எல்லாரும் ஒரே அளவைச் செய்யும்படி நாம் எதிர்பார்க்க முடியாது. இயேசுவின் உவமைகள் ஒன்றில், குறிப்பிட்ட எஜமான் ஒருவன் தன் அடிமைகளுக்கு ஒன்று, இரண்டு, அல்லது ஐந்து வெள்ளி தாலந்துகளைக் கொடுத்தார். இவை ஒவ்வொருவனுக்கும் “அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக” கொடுக்கப்பட்டன. ஞானமாக வியாபாரம் செய்து தங்கள் தாலந்துகளை அதிகரித்த இரண்டு அடிமைகள், அவர்களுடைய வேலை வெவ்வேறு பலன்களை அளித்தபோதிலும் அவர்கள் உண்மையாக இருந்ததால் பாராட்டப்பட்டனர்.—மத்தேயு 25:14-30.
பொருத்தமாகவே அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்.” (கலாத்தியர் 6:4) உண்மையிலேயே மற்றவர்களுக்கு உற்சாகமளிப்பவர்களாக இருக்கவேண்டுமானால், நாம் எதிர்மறையான ஒப்புமைகள் செய்வதைத் தவிர்க்க முயல வேண்டும்.
கட்டியெழுப்புவதற்கு சில வழிகள்
சோர்ந்திருப்பவர்களைக் கட்டியெழுப்புவதற்கும் ‘மங்கியெரிகிற திரியை அணைப்பதை’ தவிர்ப்பதற்கும் நாம் என்ன செய்யலாம்? உற்சாகத்தை அளிப்பது, குறிப்பிட்ட ஒரு சூத்திரத்தைப் பின்பற்றும் காரியம் அல்ல. என்றாலும், பைபிள் நியமங்களை நாம் பொருத்திப் பிரயோகித்தால் நம்முடைய வார்த்தைகள் பெரும்பாலும் மற்றவர்களைக் கட்டியெழுப்பும். இவற்றில் சில யாவை?
மனத்தாழ்மையுடன் இருங்கள். ‘ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல் இருக்கும்படி’ பிலிப்பியர் 2:3-ல் பவுல் அறிவுறுத்துகிறார். அதற்குப் பதிலாக, நாம் மனத்தாழ்மையுடன் பேசவும் நடந்துகொள்ளவும் வேண்டும். ‘மனத்தாழ்மையுடன் மற்றவர்களை நம்மிலும் மேன்மையானவர்களாக எண்ணவேண்டும்.’ நம்மைப் பற்றி எதையுமே எண்ணக்கூடாது என்று பவுல் சொல்லவில்லை. இருந்தாலும், ஏதாவது ஒரு விதத்தில் ஒவ்வொருவரும் நமக்கு மேம்பட்டவர் என்பதை நாம் மதித்துணர வேண்டியவர்களாக இருக்கிறோம். “மேன்மை” என்பதாக இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையானது, ஒருவன் “தன் சொந்த சிலாக்கியங்களிலிருந்து கவனத்தைத் திருப்பி, மற்றவர் மேன்மையானவராக இருக்கும் அவருடைய இயல்புத்திறமைகளைக் குறித்து ஆர்வத்துடன் சிந்தித்துப் பார்க்கிறார்,” என்ற கருத்தை அளிக்கிறது. (ஜான் ஆல்பர்ட் பெங்கலுடைய புதிய ஏற்பாட்டின் வார்த்தை ஆய்வுகள் [ஆங்கிலம்], தொகுதி 2, பக்கம் 432) நாம் இதைச் செய்து மற்றவர்களை மேன்மையானவர்களாகக் கருதினோமென்றால், மனத்தாழ்மையான வகையில் அவர்களுடன் நடந்துகொள்வோம்.
மதிப்பைக் காண்பியுங்கள். நம்மைநாமே நேர்மையாக வெளிப்படுத்துவதன்மூலம், உண்மையுள்ள உடன் விசுவாசிகளை, கடவுளைப் பிரியப்படுத்த விரும்பும் நபர்களாகக் கருதி, அவர்களில் நம்பிக்கை வைக்கிறோம் என்பதைத் தெளிவாகக் காண்பிக்கலாம். ஆனால் அவர்களுக்கு ஆவிக்குரிய உதவி தேவை என்று வைத்துக்கொள்வோம். அப்போது நாம் மதிப்புக்குரிய, பெருந்தன்மைக்குரிய விதத்தில் உதவி செய்வோமாக. பவுல் இவ்விதமாக காரியங்களை விளக்குகிறார்: “கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.”—ரோமர் 12:10.
நன்கு செவிகொடுத்துக் கேளுங்கள். ஆம், சோர்வூட்டும் பிரச்சினைகளை எதிர்ப்படுகிறவர்களை உற்சாகப்படுத்துவதற்காக, நாம் நன்கு செவிகொடுத்துக் கேட்பவர்களாக இருக்கவேண்டும், சொற்பொழிவாற்றுகிறவர்களாக அல்ல. உடனடியான, மேலோட்டமான ஆலோசனைகளை வழங்குவதற்குப் பதிலாக, உண்மையிலேயே அப்போதிருக்கும் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய வேதப்பூர்வ வழிகாட்டும் அறிவுரைகளைக் கொடுப்பதற்கு அவசியமான நேரத்தை எடுத்துக்கொள்வோமாக. என்ன சொல்லவேண்டுமென்று நமக்குத் தெரியாவிட்டால், மற்றவர்களிடம் ஆறுதலாகப் பேசவும் அவர்களைப் பலப்படுத்தவும் பைபிள் ஆராய்ச்சி உதவி செய்யும்.
அன்பாக இருங்கள். நாம் உற்சாகப்படுத்த விரும்புகிறவர்களிடமாக அன்பைக் கொண்டிருக்கவேண்டும். யெகோவாவின் உடன் ஊழியர்களுக்குப் பொருத்துகையில், வெறுமனே அவர்களுடைய மிகச் சிறந்த அக்கறைகளைக் கருத்தில்கொண்டு செயல்படுவதைக் காட்டிலும் நம் அன்பு அதிகத்தைக் குறிக்கவேண்டும். அது ஆழ்ந்த உணர்ச்சியை உட்படுத்த வேண்டும். யெகோவாவின் மக்கள் அனைவருக்கும் நாம் அப்படிப்பட்ட அன்பைக் கொண்டிருந்தோமானால், நம் வார்த்தைகள் அவர்களுக்கு உண்மையான உற்சாகமாக இருக்கும். முன்னேற்றத்திற்காக ஒரு ஆலோசனையை அளிப்பது அவசியமாக இருக்கையிலும்கூட, நம்முடைய உள்நோக்கம் வெறுமனே நம் நோக்குநிலையைக் குறிப்பிடுவது அல்ல, ஆனால் அன்பான உதவியை அளிப்பதே என்றிருக்கையில் நாம் சொல்வது தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதற்கோ ஊறு விளைவிப்பதற்கோ அவ்வளவு சாத்தியம் இருக்காது. பவுல் மிகச் சரியாகவே சொன்னதுபோல், “அன்பு கட்டியெழுப்புகிறது.”—1 கொரிந்தியர் 8:1, NW; பிலிப்பியர் 2:4; 1 பேதுரு 1:22.விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், ஆனால் அன்போ கட்டியெழுப்பும்.—1 கொரிந்தியர் 8:1
எப்போதும் கட்டியெழுப்புகிறவர்களாய் இருங்கள்
இந்தக் கொடிய “கடைசிநாட்களில்” யெகோவாவின் மக்கள் பல சோதனைகளை எதிர்ப்படுகிறார்கள். (2 தீமோத்தேயு 3:1-5) சில சமயங்களில் அவர்கள் தங்கள் சகிப்புத்தன்மையின் எல்லையாகத் தோன்றும் நிலை வரையாக துன்புறுகிறார்கள் என்பதில் எவ்வித ஆச்சரியமுமில்லை. யெகோவாவின் ஊழியர்களாக நம்முடைய உடன் வணக்கத்தார் எவரையும் அணையப்போகும் மங்கியெரிகிற திரிகளைப் போல் உணரவைக்கக்கூடிய எதையும் நாம் சொல்லவோ செய்யவோ மாட்டோம்.
அப்படியென்றால், நாம் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவது எவ்வளவு முக்கியம்! சோர்வுற்றிருக்கும் உடன் வணக்கத்தாரிடம் மனத்தாழ்மையாகவும் மதிப்புடன் நடந்துகொள்பவர்களாகவும் இருப்பதன்மூலம் அவர்களைக் கட்டியெழுப்புகிறவர்களாய் இருக்க எல்லா முயற்சியையும் எடுப்போமாக. அவர்கள் நம்மை நம்பிக்கையுடன் அணுகும்போது, கவனமாக செவிசாய்த்து, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிடம் கவனத்தைத் திருப்புவதன்மூலம் அவர்களுக்கு எப்போதும் உதவ முயலுவோமாக. எல்லாவற்றிற்கும் மேலாக, அன்பை வெளிக்காட்டுவோமாக; ஏனென்றால், யெகோவாவுடைய பரிசுத்த ஆவியின் இந்தக் கனி நாம் ஒருவரையொருவர் பலப்படுத்த நமக்கு உதவி செய்யும். ‘மங்கியெரிகிற திரியை அணைக்கும்’ எந்தவிதத்திலும் நாம் ஒருபோதும் பேசாமலும் அல்லது செயல்படாமலும் இருப்போமாக.