கோபதாபத்தை தொடர்ந்து வைத்திராதேயுங்கள்
யாராவது ஒருவர் நம்முடைய உணர்ச்சிகளை புண்படுத்திவிட்டால், கோபதாபமடைந்துவிடுவதைத் தவிர்ப்பது அதிக கடினமானதாக இருப்பதாக தோன்றலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளுக்கு பைபிள் நடைமுறையான புத்திமதியை அளிக்கிறது. “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது.”—எபேசியர் 4:26.
எவராவது நமக்கு தீமை செய்தார்கள் என்றால், ஓரளவு கோபம்கொள்வது இயல்பானதே. “கோபங்கொண்டாலும்” என்று பவுல் சொல்வது, கோபம் சில சமயங்களில் சரியானதாக இருக்கலாம் என்பதை அர்த்தப்படுத்துகிறது—ஒருவேளை நேர்மையற்ற விதத்தில் நடத்தப்பட்டதற்காக அல்லது நீதி வழங்குதலில் தவறு ஏற்பட்டதற்காக கோபமடைந்திருக்கலாம். (2 கொரிந்தியர் 11:29-ஐ ஒப்பிடுக.) ஆனால் தீர்க்கப்படாமல் விடப்படும்போது, நேர்மையான கோபமும்கூட துக்கமான விளைவுகளைக் கொண்டுவந்து பெரும் பாவத்துக்கு வழிநடத்தக்கூடும். (ஆதியாகமம் 34:1-31; 49:5-7; சங்கீதம் 106:32, 33) ஆகையால் நீங்கள் கோபப்படுவதற்கு தூண்டப்படும்போது என்ன செய்யலாம்?
சிறிய மீறுதல்கள் உட்பட்ட பெரும்பாலான விஷயங்களில், நீங்கள் அதை உங்கள் இருதயங்களில் “அமைதியாய்” தீர்த்துக்கொள்ளலாம் அல்லது உங்களைப் புண்படுத்தியவரை அணுகி அந்த விஷயத்தைக் கலந்து பேசலாம். (சங்கீதம் 4:4; மத்தேயு 5:23, 24) ஏதாவது ஒரு விதத்தில் அந்த விஷயத்தை சீக்கிரத்தில் முடிவுக்குக் கொண்டுவருவது நல்லது, அப்போது கோபதாபம் அதிகமாகி, துயரமான விளைவுகளைக் கொண்டுவராமல் இருக்கும்.—எபேசியர் 4:31.
யெகோவா நம்முடைய பாவங்களை தாராளமாக மன்னிக்கிறார், நாம் அறியாமல் செய்யும் பாவங்களையும்கூட மன்னிக்கிறார். அதே போல் உடன் மானிடர் ஒருவரின் சிறிய மீறுதல்களை நாம் மன்னிக்க வேண்டாமா?—கொலோசெயர் 3:13, NW; 1 பேதுரு 4:8.
அக்கறைக்குரியவிதமாக, ‘மன்னிப்பு செய்’ என்ற கிரேக்க வார்த்தை “விட்டுவிடு” என்று சொல்லர்த்தமாக பொருள்படுகிறது. நாம் தவறை கூடியவரை குறைப்பது அல்லது பொறுத்துக்கொள்வது என்பதை மன்னித்தல் தேவைப்படுத்துவதில்லை. சில சமயங்களில் அது வெறுமனே அந்த சூழ்நிலையை விட்டுத்தள்ளுவதை உட்படுத்தலாம், ஏனென்றால் கோபதாபத்தை தொடர்ந்து வைத்திருப்பது உங்களுடைய பாரத்தை அதிகரிக்கச்செய்து கிறிஸ்தவ சபையின் ஒற்றுமையை தகர்த்துவிடும். மேலும், கோபதாபத்தை தொடர்ந்து வைத்திருப்பது உங்களுடைய ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கக்கூடும்!—சங்கீதம் 103:9.