உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w95 12/1 பக். 28-31
  • “பணம் எங்கேயிருந்து வருகிறது?”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “பணம் எங்கேயிருந்து வருகிறது?”
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பண்டைய இஸ்ரவேலர் வைத்த முன்மாதிரி
  • இன்றுள்ள தேவை
  • பணம் எங்கே செல்கிறது?
  • யெகோவா உங்களுக்கு பலனளிப்பார்
  • ராஜ்ய பிரசங்கிப்பு வேலைக்குச் சிலர் எப்படி நன்கொடை கொடுக்கிறார்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • ‘உன் விலைமதிப்புள்ள பொருட்களால் யெகோவாவை கனம்பண்ணு’—எவ்வாறு?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • ‘நன்மையான எந்த ஈவையும்’ கொடுப்பவர்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • ஏன் யெகோவாவுக்கு கொடுக்க வேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
w95 12/1 பக். 28-31

“பணம் எங்கேயிருந்து வருகிறது?”

“யெகோவாவின் சாட்சிகள்—அந்தப் பெயருக்குப் பின்னாலிருக்கும் அமைப்பு” (ஆங்கிலம்) என்ற தலைப்பைக் கொண்ட உவாட்ச் டவர் சொஸைட்டியின் வீடியோவைக் காண்பவர்கள் அதிகமாகக் கவரப்படுகின்றனர். அவர்கள் பல்வேறு இனங்களிலிருந்தும் பின்னணிகளிலிருந்தும் வரும் தகுந்த தோற்றத்தையுடைய ஆண்களும் பெண்களும் புன்சிரிப்போடு ஒன்றாக சேர்ந்து ஒற்றுமையாக வேலை செய்வதைக் காண்கின்றனர். மகிழ்ச்சியான வேலையாட்கள் ஆயிரக்கணக்கில் இருப்பது மட்டும் அவர்களுடைய கவனத்தைக் கவருவதில்லை, சங்கத்தின் புருக்லின் தலைமை அலுவலகத்திலும், வால்க்கில், நியூ யார்க்கில் உள்ள அவர்களுடைய பண்ணையிலும் இருக்கும் பெரிய கட்டட வளாகங்களும்கூட அவர்களுடைய கவனத்தை ஈர்க்கின்றன. இந்த கட்டடங்களுக்குள் நவீன நாளைய தொழில்நுட்பம் காணப்படுகிறது—புத்தகங்களை அச்சிடுவதற்கும் பைண்டிங் செய்வதற்கும் தேவையான உச்ச-வேகத்தையுடைய சாதனங்கள் ஒவ்வொரு மாதமும் அநேக லட்சம் பிரசுரங்களை அச்சடிக்கின்றன, பல்வகைப்பட்ட கம்ப்யூட்டர் சாதனங்களும் பிரசுரங்களை பிரசுரிப்பதற்கு ஆதரவாக இருக்கும் அநேக இலாக்காக்களும் இருப்பதை அந்த வீடியோ காண்பிக்கிறது.

இது பெரும் அளவில் பணம் செலவிடுவதை உட்படுத்துகிறது. ஆகையால் சிலர், “பணம் எங்கேயிருந்து வருகிறது?” என்று கேட்கின்றனர்.

சங்கத்தின் உலகத் தலைமை அலுவலகத்துக்கு விஜயம் செய்பவர்கள் அதே போல் கவரப்படுகின்றனர். புதிய 30-மாடி குடியிருப்பு கட்டடத்தை காண்பதற்கு அவர்கள் தங்கள் கழுத்தை நீட்டிப் பார்க்க வேண்டியதாயிருக்கிறது, இது 3,000-க்கும் மேற்பட்ட மனமுவந்த வேலையாட்கள் தங்குவதற்கு பயன்படுத்தப்படும் அநேக கட்டடங்களில் ஒன்று. புருக்லினிலிருந்து வடக்கே சுமார் 110 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புதிய உவாட்ச்டவர் கல்வி மையத்தை பார்ப்பதும்கூட அநேகரை பெரிதும் வியப்படையச் செய்கிறது. அங்கு கட்டட வேலை இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறபோதிலும், அது 1,200 வேலையாட்கள் தங்குவதற்கு இடவசதி அளிக்கிறது. ஒவ்வொரு வருடமும் இரண்டு வகுப்பு மிஷனரிகள் அங்கு பயிற்றுவிக்கப்படுகிறார்கள், பின்னர் அவர்கள் வேறே நாடுகளில் சேவை செய்வதற்கு அனுப்பப்படுகின்றனர். ஐக்கிய மாகாணங்களில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய 10,000-க்கும் மேற்பட்ட சபைகளுக்கு வழிநடத்துதல் இந்த இடத்திலிருந்துதான் அளிக்கப்படுகிறது. உலகமுழுவதிலுமுள்ள அநேக கிளை அலுவலகங்களும்கூட சமீபத்தில் தங்கள் வசதிகளை விரிவாக்கியிருக்கின்றன அல்லது அவ்வாறு செய்யும் தறுவாயில் இருக்கின்றன. இந்த வேலைகள் அனைத்தையும் செய்துமுடிப்பதற்கு பெரும் அளவில் பணம் தேவைப்படுகிறது. ஆகையால் “பணம் எங்கேயிருந்து வருகிறது?” என்று ஜனங்கள் கேட்கின்றனர்.

நம்மைப் போன்ற சாதாரணமான நபர்களிடமிருந்து வருகிறது என்பதுதான் அக்கேள்விக்கான பதில். முக்கியமான கிறிஸ்தவ வேலைகளாகிய பிரசங்கித்தல், போதித்தல் போன்றவற்றை முன்னேற்றுவிப்பதற்கு தங்களால் ஆன எல்லாவற்றையும் செய்ய விருப்பமுள்ளவர்களாய் இருக்கும் உலகமுழுவதிலுமுள்ள நபர்கள். அப்படிப்பட்ட மனமுவந்த ஆவிக்கு முன்னோடி இல்லாமல் இல்லை.

பண்டைய இஸ்ரவேலர் வைத்த முன்மாதிரி

3,500 வருடங்களுக்கு முன்பு, தாராளமாக நன்கொடைகள் கொடுப்பதற்கான தேவை ஒன்று எழும்பியது. யெகோவா தம் வணக்கத்தில் பயன்படுத்துவதற்கென்று ஒரு வாசஸ்தலம் அல்லது “ஆசரிப்புக் கூடாரம்” ஒன்றை கட்ட வேண்டும் என்று மோசேக்கு கட்டளை கொடுத்திருந்தார். தெய்வீக ஏவுதலால் கொடுக்கப்பட்ட மாதிரிப்படம் பல்வேறு வகையான விலைமதிப்புள்ள பொருட்களை தேவைப்படுத்தியது. யெகோவா கட்டளையிட்டார்: “உங்களுக்கு உண்டானதினாலே கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டு வந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்.” (யாத்திராகமம் 35:4-9) ஜனங்கள் எவ்வாறு பிரதிபலித்தனர்? “பின்பு எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும், அதின் சகல ஊழியத்துக்கும், பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள்” என்று பதிவு நமக்கு சொல்கிறது. இப்படி ‘மனமுவந்து கொடுத்த காணிக்கை’ படிப்படியாக பெருமளவாக ஆனது, ‘கர்த்தர் செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை ஜனங்கள் கொண்டு வந்து கொடுத்தனர்.’ (யாத்திராகமம் 35:21-29; 36:3-5) என்னே ஒரு சுயநலமற்ற தாராளமான ஆவியை ஜனங்கள் வெளிப்படுத்திக் காண்பித்தனர்!

500 வருடங்களுக்கும் குறைவான ஆண்டுகளுக்குப் பிறகு, தாராளமாக நன்கொடை கொடுக்கும்படி இஸ்ரவேலருக்கு ஒரு அழைப்பு மறுபடியும் கொடுக்கப்பட்டது. எருசலேமில் யெகோவாவுக்கென்று ஒரு நிரந்தரமான வீட்டைக் கட்டுவதற்கான தாவீது ராஜாவின் விருப்பம் அவருடைய குமாரனாகிய சாலொமோன் மூலம் நிறைவேற்றப்படவிருந்தது. தாவீதுதானே தேவைப்பட்ட பொருட்களின் ஒரு பெரும் பகுதியை சேகரித்து நன்கொடையாக அளித்தார். ‘யெகோவாவுக்கு வெகுமதியைக்’ கொண்டு வாருங்கள் என்று தாவீது அழைப்பு கொடுத்தபோது மற்றவர்கள் சேர்ந்துகொண்டார்கள். அதன் விளைவு? “இப்படி மனப்பூர்வமாய்க் கொடுத்ததற்காக ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்; தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டான்.” (1 நாளாகமம் 22:14; 29:3-9, NW) வெள்ளி மற்றும் பொன்னின் தற்போதைய மதிப்பு மட்டும் சுமார் 5,000 கோடி டாலராக இருக்கும்!—2 நாளாகமம் 5:1.

எவருமே கொடுப்பதற்கு கட்டாயப்படுத்தப்படவில்லை என்று நாம் இந்த உதாரணங்களிலிருந்து கவனிக்கிறோம். அது கண்டிப்பாக ‘மனப்பூர்வமாயும்’ ‘முழு இருதயத்தோடும்’ கொடுக்கப்பட்டது. யெகோவா முழு ஆத்துமாவோடுகூடிய நன்கொடையில் மட்டுமே பிரியப்படுகிறார். அதே போல், தேவையில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு பண உதவி அளிக்க வேண்டிய சந்தர்ப்பம் எழும்பியபோது, ‘அதை வற்புறுத்தி’ பெறக்கூடாது என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். அவர் கூடுதலாக சொன்னார்: “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.”—2 கொரிந்தியர் 9:5, 7.

இன்றுள்ள தேவை

இன்று நன்கொடைகளுக்கான தேவை உள்ளதா? நிச்சயமாகவே உள்ளது, காலம் கடந்து செல்ல செல்ல இன்னும் அதிகம் தேவைப்படும். ஏன்?

இந்த முடிவின் காலத்துக்காக கிறிஸ்தவர்கள் திட்டவட்டமான கட்டளைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றனர். இயேசு தம் சீஷர்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டார்: “ஆகையால் நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.”—மத்தேயு 28:19, 20.

இந்தக் ‘காரிய ஒழுங்கின் முடிவின்’ (NW) இறுதியை நோக்கி நாம் நெருங்கி செல்கையில், இந்தப் பெரும் கற்பிக்கிற வேலையையும் மற்றும் பிரசங்க வேலையையும் செய்து முடிப்பதற்கு, அதிகமான நேரமும் பணமும் தேவைப்படுகிறது. ஏன்? “பூமியின் கடைசிபரியந்தமும்” கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை எடுத்துச் செல்வதில் உட்பட்டிருக்கும் அனைத்தையும் செய்துமுடிப்பதற்கு அது தேவைப்படுகிறது. (அப்போஸ்தலர் 1:8) முதல் நூற்றாண்டில் இருந்த யூதர்களைப் போல் பெரும்பாலான ஜனங்கள் வேதாகமத்தை நன்கு அறிந்தவர்களாய் இல்லை. உண்மையில், பூமியில் குடியிருக்கும் பெரும் எண்ணிக்கையான ஜனங்கள் பைபிளைப் பற்றிய விஷயங்களை அறிந்தில்லை, அதை கடவுளுடைய வார்த்தையாக கருதுவதும் இல்லை. பிரசங்கிப்பாளர்கள் பயிற்றுவிக்கப்பட்டு வெகு தொலைவிலுள்ள தேசங்களுக்கு அனுப்பப்பட வேண்டும். (ரோமர் 10:13-15) அதில் உட்பட்டிருக்கும் மொழிகளின் எண்ணிக்கையை சிந்தித்துப் பாருங்கள்! நாம் பிரசங்கிப்பதைக் கேட்கும் ஆட்களுக்கு பைபிள்களும் பைபிளை அடிப்படையாகக் கொண்ட பிரசுரங்களும் தங்கள் சொந்த மொழியில் வாசிப்பதற்கும் படிப்பதற்கும் தேவைப்படுகின்றன. எல்லாரையும் ஒழுங்காக சென்று சந்தித்து, படிப்படியாக அவர்களை ஆவிக்குரிய முதிர்ச்சிக்கு கொண்டுவந்து, அவர்கள் சென்று மற்றவர்களுக்கு உதவிசெய்யும் நிலைக்கு கொண்டுவருவதற்கு பெரிய அளவில் ஒழுங்கமைப்பு தேவைப்படுகிறது.—2 தீமோத்தேயு 2:2.

முதலில் “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்,” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 24:14) ஆகையால் அந்த முக்கியமான வேலையை செய்து முடிப்பதற்கு நம்மால் முடிந்த எல்லாவற்றையும் அர்ப்பணிப்பதற்கு இதுவே நேரம். பொருளாதார செல்வங்கள் எந்த நடைமுறையான மதிப்பும் இல்லாமல் போவதற்கு முன்பு நம்முடைய வள ஆதாரங்களை நாம் நல்ல முறையில் பயன்படுத்தலாம்.—எசேக்கியேல் 7:19; லூக்கா 16:9.

பணம் எங்கே செல்கிறது?

உவாட்ச் டவர் சொஸைட்டி பைபிள் பிரசுரங்களை 230-க்கும் மேற்பட்ட மொழிகளில் பிரசுரிக்கிறது, அதோடுகூட குருடர்களுக்கு பிரேயிலிலும் செவிடர்களுக்கு சைகை மொழியில் வீடியோக்களையும் உற்பத்தி செய்கிறது. அது ஒவ்வொரு மொழியிலும் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் அச்சுப் பார்வைப்படி திருத்துபவர்கள் அடங்கிய குழுக்களைத் தேவைப்படுத்துகிறது. இந்த வேலையனைத்தையும் செய்வதை சற்று சிந்தித்துப் பாருங்கள், விசேஷமாக காவற்கோபுரம் பத்திரிகை ஒவ்வொரு மாதமும் 121 மொழிகளிலும், அவற்றில் 101 மொழிகளில் அந்தப் பத்திரிகை ஒரே சமயத்திலும் பிரசுரிக்கப்படுகிறது. இவை நம்மைத் திகைப்படையச் செய்கின்றன. இருப்பினும், பூமிமுழுவதிலுமுள்ள ஜனங்கள் ஒரே தகவலை கொண்டிருப்பதற்கும் வாசிப்பதற்கும் இது அவசியமாயிருக்கிறது. ராஜ்ய செய்தியை அச்சடிக்கப்பட்ட வடிவில் கொடுப்பதற்கும், ஆடியோ அல்லது வீடியோ பதிவுகளை உற்பத்தி செய்வதற்கும் பயன்படுத்தப்படும் காகிதம், மேலும் மற்ற பொருட்களின் விலைகள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. சகோதரர்களிடமிருந்து வரும் நன்கொடைகளை பயன்படுத்துவதன் மூலம் அப்படிப்பட்ட செலவுகளுக்குக் கொடுக்க வேண்டியிருக்கிறது.

உலகமுழுவதிலும் நடைபெறும் பிரசங்கிக்கும் மற்றும் கற்பிக்கும் வேலை 75,000-க்கும் மேற்பட்ட யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் உள்ள பிராந்தியங்களில் செய்யப்பட்டு வருகிறது. அவர்களை ஒற்றுமைப்படுத்தி உற்சாகப்படுத்துவதற்காக, பயிற்றுவிக்கப்பட்ட பயணக் கண்காணிகள் ஒவ்வொரு சபையையும் ஒரு வருடத்துக்கு இரண்டு தடவைகள் விஜயம் செய்கின்றனர். போதனை அளிப்பதற்கு அசெம்பிளிகளும்கூட ஒரு முக்கியமான பங்கை வகிக்கின்றன. நம் விசுவாசத்தை வெகுவாக பலப்படுத்தும் மாநாடுகளை நடத்துவதற்கு பெரிய வசதிகளையுடைய மன்றங்களை வாடகைக்கு எடுக்க வேண்டியிருக்கிறது. உங்களுடைய நன்கொடைகள் இப்படிப்பட்ட நோக்கங்களுக்காகவும்கூட பயன்படுத்தப்படுகின்றன.

அசெம்பிளிகள் பொதுவாக ஒரு வருடத்துக்கு மூன்று தடவைகள் மட்டுமே நடத்தப்படுகின்றன, ஆனால் உள்ளூர் சபைகள் ஐந்து வாராந்தர கூட்டங்களுக்காக ஒன்றுகூடி வருகின்றன. (யாத்திராகமம் 34:23, 24-ஐ ஒப்பிடுக.) நற்செய்திக்குப் பிரதிபலிக்கும் புதியவர்கள் பெருமளவில் வந்துகொண்டிருப்பதால், ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான புதிய சபைகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சங்கம் கோடிக்கணக்கான ரூபாயை கடனாக கொடுத்து உதவுவதன் காரணமாக ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான புதிய ராஜ்ய மன்றங்கள் கட்டப்படுகின்றன, மற்ற மன்றங்கள் புதுப்பிக்கப்பட்டும் விரிவாக்கப்பட்டும் வருகின்றன. இது சுற்றிவரும் நிதியாக மறுபடியும் மறுபடியுமாக பயன்படுத்தப்பட்டு வந்தபோதிலும், இதற்கான தேவை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

முன்னொருபோதுமில்லாத அளவுக்கு வளர்ச்சி காணப்படும் பிராந்தியங்களில் ஒன்று, முன்னாள் சோவியத் யூனியனுக்கு கீழ்ப்பட்டிருந்த கிழக்கத்திய ஐரோப்பாவில் உள்ள தேசங்கள். அப்படிப்பட்ட இடங்களில் வேலை மறுபடியுமாக ஆரம்பிக்கப்பட்ட செய்தியைப் பற்றி படிப்படியாக அறிந்துகொள்வது எவ்வளவு சந்தோஷமாய் உள்ளது! இப்போது இப்படிப்பட்ட அநேக தேசங்களுக்கு மிஷனரிகள் அனுப்பப்படுகின்றனர். சில தேசங்களில் புதிய கிளை அலுவலகங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன, அது உலகளாவிய பெத்தேல் குடும்பத்தில் மனமுவந்து வேலைசெய்யும் அங்கத்தினர்களின் எண்ணிக்கையை 15,000-க்கும் மேல் அதிகரித்திருக்கிறது. அவர்கள் குடியிருப்பதற்காக கிளை அலுவலகக் கட்டடங்கள் வாங்க வேண்டியிருக்கிறது அல்லது கட்ட வேண்டியிருக்கிறது. அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு உங்களுடைய நன்கொடைகள் உதவுகின்றன.

இந்த எல்லா வேலைகளையும் சாத்தானும் அவனுடைய பேய்களும் கவனியாமல் இருப்பதில்லை. யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களின் முயற்சிகளை குலைத்துப்போட அல்லது அவர்களுக்கு பிரச்சினைகளைக் கொண்டுவர சாத்தானும் அவனுடைய பேய்களும் தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கின்றனர். (வெளிப்படுத்துதல் 12:17) பிரசங்கிப்பதற்கும் அவருடைய நீதியான சட்டங்களுக்கு இசைவாக வாழ்வதற்கும் கடவுளுடைய ஜனங்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு சட்டப்பூர்வமான வழக்குகளின் பாரம் அதிகரித்திருக்கிறது. கூடுதலாக, சாத்தானின் காரிய ஒழுங்கில் போர்களினால் ஏற்படும் நாசங்கள், அதோடுகூட இயற்கை சேதங்கள் ஏற்படுகின்றன. அந்த சமயத்தில் துயரத்தில் இருக்கும் நம்முடைய சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் அவர்களோடு இருக்கும் மற்றவர்களுக்கும் இடர் உதவி அடிக்கடி தேவைப்படுகிறது. இந்த முக்கியமான உதவிக்கு உங்களுடைய நன்கொடைகள் உதவுகின்றன.

யெகோவா உங்களுக்கு பலனளிப்பார்

ஆண்டவருடைய வேலையை முன்னேற்றுவிப்பதற்கு நம்முடைய நேரத்தையும் வள ஆதாரங்களையும் தாராளமாக உபயோகிப்பது பெரும் ஆசீர்வாதங்களைக் கொண்டு வருகிறது. எவ்வாறு? இறுதியில் எல்லாவற்றுக்கும் உடைமையாளராக இருக்கும் கடவுள் நமக்கு பலனளிப்பார். நீதிமொழிகள் 11:25 சொல்கிறது: “உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் [“தாராளமாக,” NW] தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.” யெகோவாவுடைய வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்கு நம்முடைய பங்கைச் செய்தோம் என்றால் அவர் உண்மையிலேயே அதில் பிரியப்படுகிறார். (எபிரெயர் 13:15, 16) நியாயப்பிரமாண உடன்படிக்கையின் கீழ் தேவைப்பட்ட நன்கொடைகளைக் கொண்டு வந்த பண்டைய இஸ்ரவேலருக்கு அவர் வாக்களித்தார்: “நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள் மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” (மல்கியா 3:10) இன்று யெகோவாவின் ஊழியர்கள் அனுபவிக்கும் ஆவிக்குரிய செழுமை, கடவுள் அவருடைய வாக்கை நிறைவேற்றுகிறார் என்பதற்கு அத்தாட்சியாய் உள்ளது.

எல்லாருக்கும் இரட்சிப்பின் நாளைப் பற்றி அறிவிப்பதற்கும், ஜீவனுக்குச் செல்லும் பாதையில் நேர்மை இருதயமுள்ள நபர்களை வழிநடத்துவதற்கும் செய்யப்படும் இந்த மகத்தான வேலை எப்போதுமாக தொடர்ந்து இருக்காது. (மத்தேயு 7:14; 2 கொரிந்தியர் 6:2) ஆனால் ஆண்டவரின் “வேறே ஆடுகள்” எல்லாரும் கூட்டிச் சேர்க்கப்பட வேண்டும். (யோவான் 10:16) அந்த சவாலை இன்று எதிர்ப்படுவது எவ்வளவு அவசியமானது! அந்த நீதியான புதிய உலகிலிருந்து கொண்டு ‘அந்த கடைசி கூட்டிச்சேர்க்கும் வேலையில் நான் முழு பங்கைக் கொண்டிருந்தேன்’ என்று சொல்வதில் நம்மில் ஒவ்வொருவரும் எவ்வளவு சந்தோஷப்படுவோம்!—2 பேதுரு 3:13.

[பக்கம் 30, 31-ன் பெட்டி]

ராஜ்ய-பிரசங்கிப்பு வேலைக்குச் சிலர் எப்படி நன்கொடை கொடுக்கிறார்கள்

உலகளாவிய வேலைக்கு நன்கொடைகள்: அநேகர் “சொஸைட்டியின் உலகளாவிய வேலைக்காக நன்கொடைகள்—மத்தேயு 24:14,” எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் நன்கொடை பெட்டிகளில் போடுவதற்கு ஒரு தொகையை ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள் அல்லது அதை வரவுசெலவு திட்டத்தில் சேர்த்துக்கொள்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் சபைகள் இந்தத் தொகைகளை அருகாமையிலுள்ள உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கின்றன.

வெகுமதிகள்: பணமாக மனமுவந்து கொடுக்கப்படும் நன்கொடைகளை நேரடியாக உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டிக்கு அனுப்பலாம். நகைகள் அல்லது மற்ற விலைமதிப்புள்ள பொருட்களும்கூட நன்கொடையாக கொடுக்கப்படலாம். இவை நேரடியான வெகுமதி என்பதைத் தெரிவிக்கும் சுருக்கமான கடிதம் ஒன்று இந்த நன்கொடைகளோடு சேர்ந்து வர வேண்டும்.

நிபந்தனைக்குட்பட்ட நன்கொடை ஏற்பாடு: நன்கொடையாளரின் மரணம் வரையாக உவாட்ச் டவர் சொஸைட்டியின் பொறுப்பாண்மையில் வைத்துக்கொள்ளும்படி பணம் கொடுக்கப்படலாம். சொந்த தேவைக்கு பணம் தேவைப்பட்டால், நன்கொடையாளருக்கு இந்தப் பணம் திருப்பித் தரப்பட வேண்டும் என்ற நிபந்தனையோடு இது கொடுக்கப்படலாம்.

காப்புறுதி: ஓர் ஆயுள்-காப்புறுதி திட்டத்தின் அல்லது பணி ஓய்வூதியத் திட்டத்தின் அனுபவ பாத்தியத்தை உடையதாக உவாட்ச் டவர் சொஸைட்டி பெயரிடப்படலாம். இத்தகைய ஏற்பாட்டைக் குறித்துச் சொஸைட்டிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

வங்கி கணக்குகள்: வங்கி கணக்குகள், வைப்புத்தொகை சான்றிதழ்கள் அல்லது தனி நபரின் ஓய்வூதிய கணக்குகள், உள்ளூர் வங்கி தேவைகளுக்கேற்ப சொஸைட்டியின் பொறுப்பாண்மையில் வைக்கப்படலாம் அல்லது மரணம் நேரிடுகையில் உவாட்ச் டவர் சொஸைட்டி இதைப் பெற்றுக்கொள்ளும்படிச் செய்யப்படலாம். இத்தகைய ஏற்பாடுகள் குறித்துச் சொஸைட்டிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

பங்குகளும் கடன் பத்திரங்களும்: பங்குகளும் கடன் பத்திரங்களும் நிபந்தனை இல்லாத ஒரு வெகுமதியாகவோ அல்லது வருமானம் தொடர்ந்து நன்கொடையாளருக்குக் கொடுக்கப்படும் என்ற ஏற்பாட்டின் கீழோ உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு அளிக்கப்படலாம்.

நிலமும் கட்டடங்களும்: விற்கப்படக்கூடிய நிலமும் கட்டடங்களும் நிபந்தனையில்லாத ஒரு வெகுமதியாக உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு அளிக்கப்படலாம் அல்லது நன்கொடையாளர் தமது வாழ்நாள் முழுவதும் வைத்திருக்கக்கூடிய உடைமையாக, தம்முடைய வாழ்நாளின்போது தொடர்ந்து அவ்விடத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஏற்பாட்டோடு இது செய்யப்படலாம். எந்த நிலத்தையும் கட்டடங்களையும் பத்திரத்தினால் சொஸைட்டிக்கு மாற்றுவதற்கு முன்பு ஒருவர் சொஸைட்டியோடு தொடர்புகொள்ள வேண்டும்.

உயில்களும் நம்பிக்கை பொறுப்புறுதிகளும்: சொத்து அல்லது பணம் சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்பட்ட ஓர் உயில் மூலமாக உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியிடம் ஒப்படைக்கப்படலாம் அல்லது ஒரு பொறுப்பாண்மை ஏற்பாட்டில் அனுபவ பாத்தியத்தை உடைய சொஸைட்டியாகப் பெயரிடப்படலாம். மத அமைப்புக்கு பயன் தரும் ஒரு பொறுப்பாண்மை ஒருசில வரி சலுகைகளைத் தரலாம். உயில் அல்லது பொறுப்பாண்மை ஒப்பந்தத்தின் நகல் ஒன்று சொஸைட்டிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

இந்த விஷயங்களைக் குறித்து கூடுதலான தகவலுக்கு, Watch Tower Bible and Tract Society of India, H-58 Old Khandala Road, Lonavla 410401 Mah., India என்ற முகவரிக்கோ அல்லது உள்ளூர் கிளை அலுவலகத்துக்கோ எழுதுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்