உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w96 1/15 பக். 30
  • சட்டப்பூர்வமான வெற்றி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சட்டப்பூர்வமான வெற்றி
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
w96 1/15 பக். 30

சட்டப்பூர்வமான வெற்றி

ஏப்ரல் 1995-ல், கவனிக்கத்தக்க வழக்குமன்ற வெற்றி கிடைத்தது. லூஸ் நெரேடா ஆசிவேடோ க்வீல்ஸ், ஜனவரி 28, 1992-ல், பியூர்டோ ரிகோவிலிருக்கும் எல்பூயேன் பாஸ்டர் மருத்துவமனையில் அறுவை மருத்துவ சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டபோது இதெல்லாம் தொடங்கினது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவுடன், அவள், தான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவளாக இரத்தமேற்றுதலை ஏற்கமாட்டாளென வாய்முறையாகவும் எழுத்திலும் கூறினாள். (அப்போஸ்தலர் 15:28, 29) அவளுக்குச் சிகிச்சை செய்த மருத்துவர் உட்பட, அதில் உட்பட்ட மருத்துவ பணியாளர் யாவரும் அவளுடைய விருப்பங்களை நன்றாய் அறிந்திருந்தனர்.

லூஸுக்கு அறுவை சிகிச்சை செய்த இரண்டு நாட்களுக்குப் பின், இரத்தப்போக்கின் காரணமாக அவள் அதிக அளவான இரத்தத்தை இழந்ததனால் கடும் இரத்தச் சோகை உண்டாயிற்று. கவனித்துவந்த மருத்துவர், டாக்டர் ஹோசே ராத்ரீகேத், அவளுக்கு உதவிசெய்வதற்கான ஒரே வழி இரத்தமேற்றுதலேயென நம்பினார். ஆகையால், அவளுக்குத் தெரியாமல் அல்லது அவளுடைய ஒப்புதல் இல்லாமல் லூஸுக்கு இரத்தமேற்றும்படி வழக்குமன்ற கட்டளையைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்தார்.

லூஸ் முழு உணர்வு நிலையில் இருந்து தனக்காகப் பேசக்கூடியவளாக இருந்தபோதிலும், டாக்டர் ராத்ரீகாத், அவசர நிலைமையின் காரணமாக, எவருடைய அனுமதியையும் கேட்பதற்கு நேரமில்லை என்று வற்புறுத்தினார். மாவட்ட வழக்கறிஞர், எட்வார்டோ பேரேத் சோட்டோ அந்தப் படிவத்தில் கையொப்பமிட்டார். மாவட்ட நியாயாதிபதியாகிய மதிப்புக்குரிய ஏன்கல் லூயிஸ் ராத்ரீகாத் ராமோஸ், இரத்தமேற்றுவதற்கான வழக்குமன்ற கட்டளை கொடுத்தார்.

இவ்வாறு, ஜனவரி 31, 1992-ல் லூஸ் அறுவை சிகிச்சை அறைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கே அவளுக்கு இரத்தமேற்றப்பட்டது. இரத்தமேற்றுகையில், மருத்துவமனை பணியாளர் சிலர் சிரிப்பதை அவள் கேட்டாள். மற்றவர்கள், அவளுக்குச் செய்யப்படுவது அவளுடைய சொந்த நன்மைக்கே என்று சொல்லி, அவளைத் திட்டினர். தன்னால் கூடியவரை அவள் போராடினாள்—எல்லாம் வீணாயிற்று. அந்த நாளின் முடிவுக்குள் லூஸ் நான்கு யூனிட்டுகள் இரத்தம் ஏற்றப்பட்டிருந்தாள்.

பியூர்டோ ரிகோவில் இரத்தமேற்றுதல்களும் யெகோவாவின் சாட்சிகளும் சம்பந்தப்பட்டதில் லூஸின் காரியம் முதலாவதும் இல்லை கடைசியானதும் இல்லை. அவளுடைய அனுபவத்திற்கு முன்பாக, வயதுவந்த யெகோவாவின் சாட்சிகளுடைய விருப்பங்களுக்கு எதிராகக் குறைந்தது 15 வழக்குமன்ற கட்டளைகளாவது அளிக்கப்பட்டிருக்கின்றன, மேலும் அதன் பின்னும் அதிகம் அளிக்கப்பட்டிருக்கின்றன. வருந்தத்தக்கதாய், ஒருவர் காரியத்தில், நோயாளி உணர்விழந்து இருந்தபோது வழக்குமன்ற கட்டளையை நிறைவேற்றி வற்புறுத்தலால் இரத்தமேற்றப்பட்டது.

எனினும், லூஸின் போராட்டம் அறுவை சிகிச்சை அறையில் முடிந்துவிடவில்லை. அக்டோபர் 1993-ல் பியூர்டோ ரிகோவின் பொதுவுரிமையரசுக்கு எதிராக உரிமைக்கோரிக்கை வழக்கு பதிவுசெய்யப்பட்டது. 1995 ஏப்ரல் 18 அன்று இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, லூஸுக்கு ஆதரவாகத் தீர்ப்பு செய்யப்பட்டது. இரத்தமேற்றும்படியான அந்தக் கட்டளை “அரசியலமைப்புக்கு முரண்பட்டது, மற்றும் வழக்காடுபவர் தன் மதத்தை சுயாதீனமாய்க் கடைப்பிடிப்பதற்கான அவளுடைய உரிமையையும், அவளுக்குரிய தனிப்பட்ட நிலையையும், உடல்சம்பந்தப்பட்ட சுயத் தீர்மானத்தையும், சட்ட உரிமை இல்லாமலே பறித்தது” என்று வழக்குமன்றம் கூறியது.

இந்தத் தீர்ப்பு குறிப்பிடத்தக்கது, ஏனெனில், இரத்தமேற்றுதல் சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில், பியூர்டோ ரிகோ வழக்குமன்றம் ஒன்று, யெகோவாவின் சாட்சிகள் சார்பாகத் தீர்ப்பு செய்தது இதுவே முதல் தடவையாகும். இந்தத் தீர்ப்பு பேரளவான பிரதிபலிப்பைத் தூண்டி வெளியிடச் செய்தது. முக்கிய செய்தித்தாள், ரேடியோ, மற்றும் டெலிவிஷன் நிருபர்கள் கூடியிருக்க, செய்தியாளர் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

அதே இரவில் ரேடியோ நிகழ்ச்சி ஒன்று, லூஸின் வழக்கறிஞரில் ஒருவரோடு ஒரு பேட்டிகாணலை காட்சிப்படுத்தியது. அதைக் காண்போர், தொலைபேசியில் கேள்விகள் கேட்கும்படி அழைப்பு கொடுக்கப்பட்டனர். பல மருத்துவரும் வழக்கறிஞரும் தொலைபேசியில் பேசி, இந்த வழக்கில் தங்கள் ஆதரவான பிரதிபலிப்பை வெளிப்படுத்தினர். தொலைபேசியில் பேசின ஒருவர் இவ்வாறு சொன்னார்: “இரத்தமேற்றுதல் உயிரைக் காக்குமென்று விஞ்ஞானம் உறுதிப்படுத்த முடியவில்லை, அவ்வாறு நினைப்பது பிழையான வாதமே.” அவர் மேலும் சொன்னதாவது: “சீக்கிரத்தில், இரத்தமேற்றுதல்கள், நவீன மருத்துவத்தின் மிகப் பெரும் நெறிபிறழ்தல்களிலும் தவறுகளிலும் ஒன்றாகச் சரித்திரத்தில் பதிவுசெய்யப்படும்.”

உயர்வாக மதிக்கப்பட்ட சட்ட பேராசிரியர் ஒருவர், பின்னால் உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகத்தினிடம் தொலைபேசியில் பேசி, “எதிரொலிக்கும் வெற்றி” என்று அவர் அழைத்ததன்பேரில் தன் ஆழ்ந்த திருப்தியை வெளிப்படுத்தினார். வழக்குமன்றத்தின் அந்தத் தீர்ப்பு, யெகோவாவின் சாட்சிகளினுடையவை மாத்திரமல்ல, பியூர்டோ ரிகோவிலிருக்கும் குடிமக்கள் எல்லாருடையவையுமான, சட்ட உரிமைகளைக் காப்பாற்ற ஆதரவளிக்கிறது என்று அவர் மேலும் சொன்னார்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்