வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
கடவுளுக்கே “பரலோகத்திலும் பூமியிலுமுள்ள ஒவ்வொரு குடும்பமும் அதன் பெயருக்குக் கடன்பட்டிருக்கிறது,” என்று எபேசியர் 3:14, 15 (NW) சொல்லுகிறது. பரலோகத்தில் குடும்பங்கள் இருக்கின்றனவா, மேலும் மனிதக் குடும்பம் ஒவ்வொன்றும் அதன் பெயரை யெகோவாவிடமிருந்து எவ்வாறாவது பெறுகிறதா?
பூமியிலிருப்பதுபோல், மாம்சப்பிரகாரமாய் எல்லாரும் ஒருவர் மற்றவருக்கு உறவினராக இருக்கும்—ஒரு தகப்பனையும், தாயையும், பிள்ளைகளையும் உடைய குடும்பங்கள் பரலோகத்தில் இல்லை. (லூக்கா 24:39; 1 கொரிந்தியர் 15:50) தேவதூதர்கள் மணம் செய்வதில்லை என்று இயேசு தெளிவாகக் குறிப்பிட்டார், மேலும் எவ்வாறாவது அவர்கள் பிள்ளைகளைப் பிறப்பிப்பார்களென்றும் எதுவும் குறிப்பிடுகிறதில்லை.—மத்தேயு 22:30.
எனினும், யெகோவா தேவன் தம்முடைய பரலோக அமைப்பை மணம் செய்திருப்பதாக அடையாளக் கருத்தில் பைபிள் பேசுகிறது; ஆவிக்குரிய கருத்தில் அவர் மணம் செய்திருக்கிறார். (ஏசாயா 54:5) அந்தப் பரலோக அமைப்பு, தேவதூதர்களைப் போன்று, பிள்ளைகளைப் பிறப்பிக்கிறது. (யோபு 1:6; 2:1; 38:4-7) அப்படியானால், இந்தக் கருத்தில், அதிசயமான ஆவிக்குரிய ஒரு குடும்பம் பரலோகத்தில் இருந்துவருகிறது.
மேலும், இயேசு கிறிஸ்துவும் அவருடைய சபையாகிய மணவாட்டியான 1,44,000 பேரும் அடங்கிய அடையாளக் குறிப்பான ஒரு புதிய குடும்பம் பரலோகத்தில் உண்டாகிவருகிறது. (2 கொரிந்தியர் 11:2) அபிஷேகம் செய்யப்பட்டவர்களான இவர்களில் பெரும்பான்மையர், பரலோக வாழ்க்கையை நோக்கில் கொண்டு, ஏற்கெனவே மரித்திருக்கின்றனர். சிலர், பூமியில் இன்னும் உயிரோடிருக்கின்றனர். எல்லாரும் பரலோக ‘ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணத்திற்காக’ ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். நெருங்கிவந்துகொண்டிருக்கும் பெரிய உபத்திரவத்தின்—மகா பாபிலோனின் அழிவும், பின்பு சாத்தானுடைய ஒழுங்குமுறையின் மீதி பாகம் ஒழிக்கப்படுவதுமான—சமயத்தோடு பைபிள் அந்தக் கலியாணத்தை இணைக்கிறது.—வெளிப்படுத்துதல் 18:2-5; 19:2, 7, 11-21; மத்தேயு 24:21.
பூமிக்குரிய குடும்பங்களைக் குறித்ததில், ஒவ்வொரு தனி குடும்பத் தொகுதியும் அதன் பெயரை யெகோவாவிடமிருந்து நேரடியாகப் பெறுகிறதென்று எபேசியர் 3:15-ல் அப்போஸ்தலன் பவுல் குறிப்பிடுகிறதில்லை. மாறாக, ஒரு பெயரைப் பாதுகாக்கும் விரிவானக் குடும்ப வம்சாவழிகளை பவுல் மனதில் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. யோசுவா 7:16-19 ஓர் உதாரணத்தை அளிக்கிறது. அங்கே யெகோவா ஆகானுடைய பாவத்தை வெளிப்படுத்துகிறார். முதலாவதாக, அந்தக் குற்றம் யூதா கோத்திரத்தின்மீது ஊன்ற வைக்கப்பட்டது அல்லது அதற்கு மட்டுப்படுத்தப்பட்டது. பின்பு அது சேராகியரின் வம்சத்துக்குக் குறுகச் செய்யப்பட்டது. முடிவாக, ஆகானின் வீட்டார் வெளியாக்கப்பட்டனர். ஆகான் தன் மனைவியுடனும் பிள்ளைகளுடனும், ஆகானின் பாட்டனாராகிய சப்தியின் வீட்டாரின் (அல்லது, குடும்பத்தின்) பாகமாகக் கருதப்பட்டனர், அல்லது பேசப்பட்டனர். அந்தக் குடும்பம், தன் முறையாக, அவர்களுடைய முற்பிதாவாகிய சேராகின் பெயரைப் பாதுகாத்த விரிவாக்கப்பட்ட தொகுதியாக இருந்தது.
எபிரெயருக்குள், இத்தகைய குடும்ப வம்சாவழிகள் மிகுந்த முக்கியத்துவமுடையவையாக இருந்தன, பைபிளில் இவை பல, வரிசையாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. தேவைப்பட்டபோது, உரிமையாளர்கள், மைத்துனர் மணத்தின் மூலமாகக் குடும்பப் பெயரைக் கடத்துவதற்கு ஏற்பாடு செய்ததன்மூலம் அவை பாதுகாக்கப்படுவதைக் கடவுள் ஆதரித்தார்.—ஆதியாகமம் 38:8, 9; உபாகமம் 25:5, 6.
அத்தகைய பெரிய அல்லது விரிவாக்கப்பட்ட குடும்பங்களின் மற்றொரு உதாரணமாக, இயேசுவை தாவீதின் குமாரனாகக் கவனியுங்கள். தெளிவாகவே, அவர், தாவீதின் மரணத்துக்குப் பின்னான பல நூற்றாண்டுகள் வரையில் பிறவாதிருந்ததனால், அரசனாகிய தாவீதின் நேரடியான சந்ததியாக இருக்கவில்லை. எனினும், மேசியாவை அடையாளம் காட்டும் ஒரு அறிகுறியானது, யூதர் பொதுவாக அறிந்திருந்தபடி, அவர் தாவீதின் குடும்பத்தாராக இருக்க வேண்டும். (மத்தேயு 22:42) இயேசு, தம்முடைய தாயின் மூலமாகவும், தம்மைத் தத்து எடுத்த தகப்பனின் மூலமாகவும் தாவீதின் வம்சாவழியில் இருந்தார்.—மத்தேயு 1:1; லூக்கா 2:4.
ஆனால் அத்தகைய குடும்பங்கள் தங்கள் பெயர்களை யெகோவாவிடமிருந்து எவ்வாறு பெறுகின்றன? உண்மை என்னவெனில்—ஆபிரகாமின் மற்றும் ஈசாக்கின் காரியத்தில் இருந்ததுபோல்—ஒரு குடும்பத் தலைவனுக்குச் சொல்லர்த்தமாய் யெகோவா பெயர் கொடுத்த சில சந்தர்ப்பங்கள் இருந்தன. (ஆதியாகமம் 17:5, 19) அவை விதிவிலக்குகளாக இருந்தன. பெரும்பாகமாக, ஒவ்வொரு தனி குடும்பத்துக்கும், அது பிள்ளைகளுக்குக் கடத்துகிற பெயரை யெகோவா கொடுக்கிறதில்லை.
எனினும், ‘பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்’ என்று யெகோவா ஆதாம் ஏவாளுக்குக் கட்டளையிட்டபோது, குடும்ப மூலத்தைத் தொடங்கி வைத்தார். (ஆதியாகமம் 1:28) மேலும் அபூரண ஆதாமும் ஏவாளும் சந்ததியைப் பிறப்பிக்கும்படி யெகோவா அனுமதித்து, இவ்வாறு மனித குடும்பங்கள் எல்லாவற்றிற்கும் அடிப்படையை அமைத்தார். (ஆதியாகமம் 5:3) ஆகையால் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்தில், குடும்பப் பெயர்களைத் தொடங்கி வைத்தவராகக் கடவுள் அழைக்கப்படலாம்.
இன்று பல நாகரிகப் பண்பாடுகள் குடும்பப் பெயர்களைப் பரம்பரைகளாகக் காத்து வைப்பதற்கானத் தேவையை இனிமேலும் உணருகிறதில்லை. எனினும், எல்லா நாடுகளிலும் கிறிஸ்தவர்கள், குடும்ப ஏற்பாட்டிற்காக யெகோவாவுக்கு நன்றிசெலுத்தி, தங்கள் தனிப்பட்ட குடும்பம் ஒன்றை வெற்றிகரமாக்கக் கடினமாய் உழைப்பதன்மூலம் அவருக்கு உயர்மதிப்பைக் கொடுக்கிறார்கள்.