உங்கள் ஒளியை பிரகாசிக்கச் செய்யுங்கள்!
அந்த முதியவருக்கு, வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவைப் பார்க்கக்கூடிய நேரம் கடைசியிலே வந்துவிட்டது! ‘கர்த்தருடைய கிறிஸ்துவை காணுமுன்னே [தான்] மரணமடையமாட்டார்,’ என்று தெய்வீக வெளிப்படுத்துதல் மூலம் சிமியோன் அறிந்திருந்தார். (லூக்கா 2:26) தேவாலயத்திற்குள் சிமியோன் வந்தபோது மரியாளும் யோசேப்பும் குழந்தை இயேசுவை அவருடைய கரங்களில் கொடுக்கையில் என்னே ஒரு கிளர்ச்சியூட்டுதலாக இருந்திருக்கும்! கடவுளுக்கு துதியை அவர் இவ்வாறு ஏறெடுத்தார்: “ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர் . . . புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது.”—லூக்கா 2:27-32; ஒப்பிடுக: ஏசாயா 42:1-6.
இயேசு, 30 வயதில் எடுத்த தன் முழுக்காட்டுதலிலிருந்து அவருடைய மரணம் வரையாக, உலகத்திற்கு ஒரு “ஒளி”யாக நிரூபித்தார். எந்த வழிகளில்? அவர் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியும் அவருடைய நோக்கங்களைப் பற்றியும் பிரசங்கிப்பதன் மூலமாக ஆவிக்குரிய வெளிச்சத்தைப் பரப்பினார். பொய்மத போதனைகளை அவர் வெளிப்படுத்தி, அந்தகாரத்திற்குரிய கிரியைகளை தெளிவாக அடையாளம் காட்டினார். (மத்தேயு 15:3-9; கலாத்தியர் 5:19-21) ஆகையால், “நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்,” என்று இயேசு சரியாகவே கூறமுடிந்தது.—யோவான் 8:12.
பொ.ச. 33-ல் இயேசு இறந்தார். அப்போது, ஒளி அணைந்துவிட்டதா? இல்லவே இல்லை! இயேசு பூமியில் இன்னும் இருக்கையிலேயே, தம் சீஷர்களுக்கு இவ்வாறு கூறினார்: “உங்களுடைய வெளிச்சம் மனுஷர் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.” (மத்தேயு 5:16, NW) அந்தப்படியே, இயேசுவின் மரணத்திற்கு பின்பு அவருடைய சீஷர்கள் வெளிச்சத்தை தொடர்ந்து பிரகாசிக்க செய்தார்கள்.
இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, பிரசங்க வேலையில் பங்குகொள்வதன்மூலம் இன்றைய கிறிஸ்தவர்கள் யெகோவாவின் வெளிச்சத்தைப் பிரதிபலிக்கிறார்கள். அவர்கள் ‘வெளிச்சத்தின் பிள்ளைகளாகத் தொடர்ந்து நடந்துகொண்டு,’ கிறிஸ்தவ வாழ்க்கைமுறைக்கு தங்களைப் பிரகாசிக்கிற முன்மாதிரிகளாக நிரூபிக்கிறார்கள்.—எபேசியர் 5:8, NW.