நோயாளிகளின் உரிமை மதிக்கப்படுகிறது
‘இரத்தம் இல்லாமல் இந்த அறுவை மருத்துவத்தை என்னால் நிச்சயமாக செய்ய முடியாது. அறுவை சிகிச்சை உனக்குத் தேவையானால், என்னுடைய சிகிச்சை முறைக்கு சம்மதிக்கவேண்டும். இல்லையென்றால், வேறொரு மருத்துவரைத்தான் நீ கண்டுபிடிக்கவேண்டும்.’
அ ந்த மருத்துவரின் வார்த்தைகள், தாய்லாந்தில் வசிக்கும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரான ஜங் செ ஜூ என்ற பெண்ணின் விசுவாசத்தை அசைக்கமுடியவில்லை. மெனின்ஜியோமா என்று அழைக்கப்பட்ட ஒரு வகை மூளை கட்டி, அவளுக்கு இருக்கிறது என்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டதால், அறுவை மருத்துவம் உடனடியாகத் தேவைப்படும் மோசமான நிலையில் ஜங் இருந்தாள். ஆனால், “இரத்தத்திற்கு . . . விலகியிருங்கள்,” என்ற பைபிளின் கட்டளைக்குக் கீழ்ப்படிய அவள் உறுதியுடன் இருந்தாள்.—அப்போஸ்தலர் 15:28, 29.
முடிந்தால் தன் சொந்த நாட்டிலேயே சிகிச்சையை மேற்கொள்வது நல்லது என்று கருதி, வேறு இரண்டு ஆஸ்பத்திரிகளுக்கு ஜங் விஜயம் செய்தாள். அவளுக்கு ஏமாற்றமளிக்கும்விதமாக, அங்கேயுள்ள மருத்துவர்களும்கூட இரத்தமில்லா அறுவை மருத்துவத்தை செய்ய மறுத்துவிட்டார்கள். முடிவிலே, தாய்லாந்தில் இருக்கும் மருத்துவ தகவல் சேவைகள் (HIS), ஜங்-கை டோக்கியோ பெண்கள் மருத்துவக் கல்லூரியின் நரம்பியல் நிறுவனத்துடன் தொடர்புகொள்ள வைத்தது. கதிர்வீச்சு சிகிச்சையின் புதிதான அபிவிருத்திகளில் ஒன்றான காமா கத்தி என்ற முறையைப் பயன்படுத்தி, மூளைக்கட்டியுடைய 200-க்கும் மேலான நோயாளிகளுக்கு அந்த மருத்துவமனை சிகிச்சை அளித்திருக்கிறது.
மருத்துவமனைக்கு அருகாமையில் வசிக்கும் ஜப்பானிய சாட்சிகளுடன் ஜங் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தாய் என்ற மொழி பேசும் இரண்டு யெகோவாவின் சாட்சிகளும் HIS-ன் பிரதிநிதியும் உள்ளிட்ட ஒரு [சாட்சிகளின்] குழு, விமானநிலையத்தில் அவளைச் சந்தித்தது. ஒரு வாரகால பரிசோதனைகளுக்குப்பின், ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காமா கத்தி முறையில் சிகிச்சையை மேற்கொண்டாள். வெறும் ஒரு மணிநேரம் மாத்திரமே அந்தச் செயல்முறை எடுத்தது. அடுத்த நாளே மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த ஜங், தாய்லாந்துக்கு ஒரு நாள் கழித்து திரும்பிச் சென்றாள்.
“இந்த ஏற்பாட்டின்மூலமாக, இவ்வளவு உதவி அளிக்கமுடியும் என்று நான் கற்பனைகூட செய்திருக்கவில்லை. எனக்கு காட்டப்பட்ட அன்பும், சம்பந்தப்பட்ட பல குழுவினரிடையே இருந்த ஒத்துழைப்பும், உண்மையிலேயே என் மனதில் பதிந்துவிட்டது,” என்று ஜங் கூறினாள்.
இந்தச் செய்தி விவரத்தை அறிக்கையிடுகையில், மைனிச்சி ஷிம்பூன் என்ற ஜப்பானிய பத்திரிகை இவ்வாறு குறிப்பிட்டது: “இதுவரையாக, இரத்தமேற்றுதலை மறுப்பதற்கு மதசம்பந்தமான காரணங்கள் சிறப்பித்துக் காட்டப்பட்டிருக்கின்றன. ஆயினும், எய்ட்ஸ், ஹெப்படைடிஸ் C போன்ற வைரஸ் தொற்றுநோய்களின் அபாயம், மற்றும் ஒவ்வாமைகள் ஆகிய பக்கவிளைவுகள் இரத்தமேற்றுதலால் வருகின்றன. தங்களுடைய மதநம்பிக்கைகளைப் பொருட்படுத்தாமல், இந்தக் காரணத்திற்காகவே இரத்தமேற்றுதலை விரும்பாத நோயாளிகள் இருக்கிறார்கள்.”
அந்தப் பத்திரிகை மேலுமாக இவ்வாறு கூறியது: “இரத்தமேற்றுதலை மறுத்த அநேக நோயாளிகள் மருத்துவமனைகளை மாற்றும்படி வற்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால், நோயாளியின் விருப்பத்தை மதித்துணர, மருத்துவ நிறுவனங்களுக்குத்தான் ஒரு மாற்றம் தேவையாக இருக்கிறது. தகவலறிந்து ஒப்புதல் அளித்தல் தேவைப்படுகிறதினால், இரத்தமேற்றுதல் இதற்கு விதிவிலக்கல்ல. இது ஒரு குறிப்பிட்ட மத சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல என்று அறியவேண்டும்.”
ஜங் செ ஜூ-வைப்போல், இரத்தமில்லா சிகிச்சையை விரும்புபவர்கள் வேறு மருத்துவமனைகளுக்கு மாறவேண்டும். இருந்தபோதிலும், தங்களுடைய நோயாளிகளின் உரிமைகளை மதிக்க மனமுள்ளவர்களாக இருக்கும் மருத்துவர்களின் முயற்சிகளை அவர்கள் போற்றுகிறார்கள்.
தங்களுடைய நம்பிக்கைகளை மதிக்கிற மருத்துவர்களின் ஒத்துழைப்பைப் பெற மருத்துவ தகவல் சேவைகள், யெகோவாவின் சாட்சிகளால் உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளைகளில் நிறுவப்பட்டன. உலகெங்கும், மருத்துவமனைகளோடும், மருத்துவர்களோடும், சுகாதார பணியாளர்களோடும், வக்கீல்கள் மற்றும் நீதிபதிகளோடும் சுமுகமான உறவுகளை HIS வளர்க்கிறது