“யெகோவா என் ஜெபங்களுக்குப் பதிலளித்தார்!”
உலகெங்கிலும், கடவுளைப்பற்றியும் மனிதவர்க்கத்திற்கான அவருடைய அற்புதமான நோக்கத்தைப்பற்றியும் திருத்தமான அறிவைப் பெற்றுக்கொள்ள அக்கறையுள்ள மக்களுடன் சுமார் 50 லட்ச வீட்டு பைபிள் படிப்புகளை யெகோவாவின் சாட்சிகள் நடத்துகிறார்கள். யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் பிள்ளைகளும்கூட இந்த வேலையில் ஒரு பங்கைக் கொண்டுள்ளனர். ஜோயேல் என்னும் பெயருடைய ஒரு சிறுவனின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவன் யெகோவாவுக்கு தன்னுடைய ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்தி, தன்னுடைய ஒன்பதாவது வயதில் முழுக்காட்டப்பட்டான். ஒரு வருடத்திற்கு பிறகு அவனுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது:
“வெளி ஊழியத்தில் இருக்கையில், நான் கேண்டி என்னும் பெயரையுடைய ஒரு பெண்ணைச் சந்தித்தேன். ‘இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்’ என்ற சிற்றேட்டை அவருக்கு அளித்தேன். அதை அவர் ஏற்கெனவே வைத்திருந்தார், எனவே நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை அவருக்கு அளித்தேன். அதையும்கூட ஏற்கெனவே வைத்திருந்தார். பிறகு நான் யோசித்தேன், ‘சரி இந்தப் பெண்ணுக்கு ஒரு பைபிள் படிப்பை அளிக்கலாம்.’ அவர் அதை ஏற்றுக்கொண்டார்!
“புற்றுநோயால் சிறிதுசிறிதாக மரித்துக்கொண்டிருந்த கேண்டியினுடைய சகோதரி, அவருடன்கூட வாழ்வதற்காக வந்தார். கூடுதலாக, கேண்டி ஒரு நர்ஸாவதற்காகப் படித்துக்கொண்டிருந்தார். ஆகவே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பைபிள் படிப்பு நிறுத்தப்பட்டது. ஆனால் என் பெற்றோரும் நானும் பத்திரிகைகளை அவரிடத்தில் அல்லது அவருடைய கணவர் டிக்கினிடத்தில் விட்டுவருவதன் மூலம் அவருடன் தொடர்பை வைத்துக்கொண்டிருந்தோம். அந்தப் பத்திரிகைகளை மனைவி தன்னுடைய படுக்கையில் வைத்து, அவற்றை இரவில் படிப்பதாக அவருடைய கணவர் எங்களிடம் கூறினார்.
“கடைசியில், கேண்டியின் சகோதரி இறந்துவிட்டார். என்னுடைய அப்பாவும், அம்மாவும், நானும் இறந்தோரின் நிலைமையைப்பற்றி கேண்டியினிடத்தில் பேசினோம். பைபிள் படிப்பை மீண்டும் தொடர அவர் முடிவுசெய்தார். கேண்டியுடன் சேர்ந்து பைபிள் படிக்கவும், அதை ஒரு குடும்பப் படிப்பாக ஆக்கவும் விருப்பமா என்று டிக்கினிடத்தில் வேறொரு நாள் கேட்டோம். அது ஒரு நல்ல திட்டம் என்பதாக அவர் நினைத்தார். ஆகவே இப்போது, என்னுடைய அப்பாவுடன் சேர்ந்து, டிக்குடனும் கேண்டியுடனும் நான் படித்துக்கொண்டிருக்கிறேன். அவர்கள் நல்ல முன்னேற்றத்தைச் செய்துகொண்டிருக்கிறார்கள், பைபிள் படிப்பிற்காகப் போற்றுதலைத் தெரிவிக்கிறார்கள்.
“ஒரு பைபிள் படிப்பிற்காக நான் ஜெபித்துக்கொண்டிருந்தேன், யெகோவா என் ஜெபங்களுக்குப் பதிலளித்தார்!”