‘தாவீதின் வீட்டார்’ நிஜமா கற்பனையா?
ஓர் இசைப்பாடகனாக, ஒரு கவிஞனாக, ஒரு படைவீரனாக, ஒரு தீர்க்கதரிசியாக, ஒரு அரசனாக ஆன இளம் மேய்ப்பனாகிய தாவீது, அதிக முக்கியத்துவத்துடன் குறிப்பிடத்தக்கவராக பைபிளில் காணப்படுகிறார். அவருடைய பெயர் 1,138 தடவைகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது; ‘தாவீதின் வீட்டார்’ என்ற கூற்று—பெரும்பாலும் தாவீதின் வம்சத்தைக் குறிப்பதாய்—25 தடவைகள் (NW-ல்) பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (1 சாமுவேல் 20:16, NW) அரசனாகிய தாவீதும் அவருடைய வம்சமும் கற்பனைதானா? அகழாய்வு எதை வெளிப்படுத்துகிறது? வட கலிலேயாவிலுள்ள டெல் தாணில் செய்யப்பட்ட அகழாய்வு ஒன்றின் குறிப்பிடத்தக்க சமீபத்திய கண்டுபிடிப்பு ஒன்று தாவீது மற்றும் அவருடைய வம்சத்தின் வரலாற்றுப்பூர்வ உண்மைத்தன்மையை ஆதரிப்பதாக அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது.
1993-ன் கோடை காலத்தில், பேராசிரியர் அவ்ரயாம் பிரானால் வழிநடத்தப்பட்ட அகழாய்வு குழு, பண்டைய தாணின் புற வாசலுக்கு வெளியே உள்ள ஒரு பகுதியில் புதர்களை வெட்டி நிலத்தைத் திருத்தியது. தளவரிசையிட்ட சதுக்கம் ஒன்றை அவர்கள் கண்டுபிடித்தனர். நிலத்திலிருந்து நீண்டுகொண்டிருந்த கருப்பு தீக்கல் ஒன்று எளிதாக நகர்த்தப்பட்டது. மதிய வெயில் நேரத்தில் அந்தக் கல் புரட்டப்பட்டபோது, அந்த எழுத்துக்கள் தெளிவாகத் தெரிந்தன. “கடவுளே, ஓர் எழுத்துப்பொறிப்பு இருக்கிறது!” என்று வியந்து கூறினார், பேராசிரியர் பிரான்.
எருசலேமின் எபிரெய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிரானும் அவருடைய சக ஊழியராகிய பேராசிரியர் யோஸெஃப் நாவேயும், அந்த எழுத்துப்பொறிப்பைக் குறித்து உடனடியாக ஒரு அறிவியல் ஆய்வு அறிக்கையை எழுதினார்கள். இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, மார்ச்/ஏப்ரல் 1994, பைபிள் சார்ந்த அகழாய்வு பரிசீலனை (ஆங்கிலம்) பத்திரிகையிலுள்ள ஒரு கட்டுரை இவ்வாறு வாசிக்கிறது: “அகழாய்வு கண்டுபிடிப்பு ஒன்று தி நியூ யார்க் டைம்ஸ்-ன் முன்பக்க செய்தியாக அடிக்கடி வருவதில்லை (டைம் பத்திரிகையைக் குறித்து சொல்லவே வேண்டாம்). ஆனால், ஜோர்டான் ஆற்றின் ஊற்றுமூலங்களில் ஒன்றின் அருகே, எர்மோன் மலை அடிவாரத்தில், வட கலிலேயாவிலுள்ள ஓர் அழகிய சிறுகுன்றாகிய டெல் தாணில் செய்யப்பட்ட கண்டுபிடிப்புக்கு கடந்த கோடைகாலத்தில் அதுவே நடந்தது.
“அங்கு அவ்ரயாம் பிரானும் அகழாய்வாளர்களாலான அவருடைய குழுவும், ‘தாவீதின் வீட்டாரையும்,’ ‘இஸ்ரவேலின் ராஜாவையும்’ பற்றி குறிப்பிடும், பொ.ச.மு. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க எழுத்துப்பொறிப்பு ஒன்றைக் கண்டுபிடித்தனர். பைபிளைத் தவிர, வேறு ஏதாவது பண்டைய எழுத்துப்பொறிப்பில் தாவீதின் பெயர் காணப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். அந்த எழுத்துப்பொறிப்பு, ‘தாவீதை’ மட்டும் குறிப்பிடாமல், தாவீதின் வீட்டாரை, மகா இஸ்ரவேல் அரசனின் வம்சத்தைக் குறிப்பிடுவதால் அது இன்னும் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.
“‘இஸ்ரவேலின் ராஜா’ என்ற பதம் அடிக்கடி பைபிளில், விசேஷமாக இராஜாக்களின் புத்தகத்தில் காணப்படுகிறது. என்றபோதிலும், செமிட்டிக் எழுத்துக்களில் பைபிளுக்கு அப்பாற்பட்டு, இஸ்ரவேலைப் பற்றி குறிப்பிடுகிற மிகப் பழமையான மேற்கோள் குறிப்பு இதுவாகவே இருக்கக்கூடும். எல்லாவற்றிற்கும் மேலாக, பைபிளைக் குறைகூறுகிற புலமைவாய்ந்தவர்களின் வாதங்களுக்கு முரணாக, இந்தக் காலப்பகுதியில் இஸ்ரவேலும் யூதாவும் முக்கியமான ராஜ்யங்களாக இருந்தன என்று இந்த எழுத்துப்பொறிப்பு காண்பிக்கிறது.”
எழுத்துக்களின் வடிவம், அந்தக் கல் துண்டின் அருகே காணப்பட்ட மண்பாண்டங்களின் சோதனை, அந்த எழுத்துப்பொறிப்பின் பொருளடக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் காலக்கணக்கீடு செய்யப்பட்டது. மூன்று முறைகளுமே அதே காலப்பகுதியை, பொ.ச.மு. ஒன்பதாம் நூற்றாண்டை, ராஜாவாகிய தாவீதுக்குப் பின் சுமார் நூற்றுக்கும் அதிகமான ஆண்டுகள் கழிந்த காலத்தைச் சுட்டிக் காண்பிக்கின்றன. ‘இஸ்ரவேலின் ராஜாவுக்கும்,’ ‘தாவீதின் வீட்டாரைச் சேர்ந்த [ராஜாவுக்கும்]’ பகைஞனாக இருந்த ஒரு அரமேயனால் தாணில் எழுப்பப்பட்ட வெற்றிக்குரிய நினைவுசின்னத்தின் பாகமாக அந்த எழுத்துப்பொறிப்பு இருந்ததென அறிஞர்கள் நம்புகின்றனர். பிரபல புயல் தெய்வமாகிய ஹாடாடை வழிபட்ட அரமேயர்கள் அவர்களுக்கு கிழக்கே வாழ்ந்து வந்தார்கள்.
1994-ன் கோடைகாலத்தில், இந்தக் கல்வெட்டின் இன்னும் இரண்டு துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. பேராசிரியர் பிரான் இவ்வாறு அறிக்கை செய்கிறார்: “இந்த இரண்டு துண்டுகளிலும், அரமேய தெய்வமாகிய ஹாடாடின் பெயரும், இஸ்ரவேலருக்கும் அரமேயருக்கும் இடையில் நடந்த ஒரு சண்டை பற்றிய குறிப்பும் உள்ளன.”
1993-ல் கண்டெடுக்கப்பட்ட முக்கியமான துண்டு, பழைய எபிரெய எழுத்துக்களில் எழுதப்பட்ட அரைகுறையாக தெரிகிற 13 வரிகளைக் கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில், ஒரு வாசகப் பகுதியிலுள்ள தனித்தனி வார்த்தைகளைப் பிரிக்கிற, வார்த்தை பிரிக்கும் ஏதுக்களாக புள்ளிகள் பயன்படுத்தப்பட்டன. என்றாலும், ‘தாவீதின் வீட்டார்’ என்பது ஒரே வார்த்தையாக எழுதப்பட்டிருக்கிறது; “byt” (வீடு), ஒரு புள்ளி, பின்னர் “dwd” (தாவீது) என்று எழுதப்படுவதற்குப் பதிலாக “bytdwd” (ரோம எழுத்துக்களுக்கு ஒலிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன) என்று எழுதப்பட்டிருக்கிறது. புரிந்துகொள்ளத்தக்க விதமாக, “bytdwd”-ன் அர்த்தத்தைக் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன.
மொழியியல் நிபுணராகிய பேராசிரியர் அன்ஸன் ரேனி இவ்வாறு விளக்குகிறார்: “யோஸெஃப் நாவேயும் அவ்ரயாம் பிரானும் அந்த எழுத்துப்பொறிப்பை விவரமாக விளக்கவில்லை; அப்படிப்பட்ட அமைப்பில், விசேஷமாக அந்த இணைப்பானது நன்கு ஸ்தாபிக்கப்பட்ட தனிப்பெயராக இருந்தால், இரண்டு பாகங்களுக்கு இடையே வார்த்தை பிரிக்கும் ஏது ஒன்று அடிக்கடி விட்டுவிடப்படுகிறது என்பதை வாசகர்கள் அறிந்திருப்பார்கள் என்று ஒருவேளை அவர்கள் நினைத்திருக்கலாம். ‘தாவீதின் வீட்டார்’ என்பது பொ.ச.மு. ஒன்பதாம் நூற்றாண்டின் மத்திபத்தில் அரசியல்ரீதியிலும் புவியியல் ரீதியிலும் நிச்சயமாகவே அப்பேர்ப்பட்ட ஒரு தனிப்பெயராக இருந்தது.”
மற்றுமொரு அகழாய்வு அத்தாட்சி
அந்தக் கண்டுபிடிப்பிற்குப் பிறகு, மீஷா கல்வெட்டு (மோவாபிய கல் என்றும் அழைக்கப்படுவது) நிபுணராகிய பேராசிரியர் ஆன்ட்ரி லாமெர், அதுவும் ‘தாவீதின் வீட்டாரை’ பற்றி குறிப்பிடுவதாக அறிக்கை செய்தார்.a 1868-ல் கண்டுபிடிக்கப்பட்ட மீஷா கல்வெட்டு, டெல் தாண் கல்வெட்டுடன் அதிகத்தைப் பொதுவில் கொண்டிருக்கிறது. அவை இரண்டுமே பொ.ச.மு. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை, ஒரே பொருளால் உண்டாக்கப்பட்டவை, ஒத்த அளவை உடையவை, ஏறக்குறைய ஒத்திருக்கும் செமிட்டிக் எழுத்துக்களால் எழுதப்பட்டவை.
மீஷா கல்வெட்டின் பழுதடைந்த வரி ஒன்றின் புதிய உருவமைப்பைக் குறித்து, பேராசிரியர் லாமெர் எழுதினார்: “டெல் தாணின் கல் துண்டு கண்டுபிடிக்கப்படுவதற்குக் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்னர், மீஷா கல்வெட்டில் ‘தாவீதின் வீட்டார்’ பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தேன். . . . ‘தாவீதின் வீட்டார்’ பற்றி இதில் குறிப்பிடப்பட்டிருப்பது, இதற்கு முன் ஒருபோதும் கவனிக்கப்படாததற்கான காரணம் என்னவென்றால் மீஷா கல்வெட்டு ஒருபோதும் ஒரு சரியான ஏடீடியோ ப்ரின்கெப்ஸை [முதற்பதிப்பை] கொண்டிருக்கவில்லை என்பதே ஆகும். மீஷா கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு 125 வருடங்களுக்குப் பின்னர், அதைத்தான் நான் தயாரித்துக்கொண்டிருக்கிறேன்.”
அப்படிப்பட்ட அகழாய்வு தகவல் அக்கறைக்குரியது, ஏனென்றால், ஒரு தேவதூதனும், இயேசுதாமேயும், அவருடைய சீஷரும், பொதுவில் மக்களும் தாவீதின் வரலாற்றுப்பூர்வ உண்மைத்தன்மைக்குச் சான்று பகர்ந்தனர். (மத்தேயு 1:1; 12:3; 21:9; லூக்கா 1:32; அப்போஸ்தலர் 2:29) அவரும் அவருடைய வம்சமாகிய ‘தாவீதின் வீட்டாரும்’ நிஜமேயல்லாமல் கற்பனை அல்ல என்று அகழாய்வு கண்டுபிடிப்புகள் தெளிவாகவே ஒத்துக்கொள்கின்றன.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரசுரங்களை வாசிப்பவர்கள் மீஷா கல்வெட்டைக் குறித்து அறிந்திருக்கிறார்கள். (ஆங்கில காவற்கோபுரம், ஏப்ரல் 15, 1990, பக்கங்கள் 30-1-ஐப் பார்க்க.) அது பாரிஸிலுள்ள லூவர் அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
[பக்கம் 31-ன் படம்]
வட கலிலேயாவில் பைபிள்பூர்வ நகரமாகிய தாணில் 1993-ல் கண்டுபிடிக்கப்பட்ட டெல் தாண் கல் துண்டு*
*இஸ்ரேல் எக்ஸ்ப்ளோரேஷன் ஜர்னலில் காணப்படும் புகைப்படத்தை ஆதாரமாகக் கொண்ட வரைபடம்.