உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w98 4/1 பக். 6-8
  • குடும்பம்—ஒரு மானிடத் தேவை!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • குடும்பம்—ஒரு மானிடத் தேவை!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இல்லம் ஒரு புகலிடம்
  • உங்களுடைய குடும்பம் நீடித்து நிற்பதற்கு உதவுங்கள்
  • பணத்தைக் குறித்ததில் சரியான மனநிலை
  • பைபிளைக் கற்பதன் முக்கியத்துவம்
  • குடும்ப மகிழ்ச்சிக்கு ஓர் இரகசியம் இருக்கிறதா?
    குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்
  • கிறிஸ்தவக் குடும்பம் காரியங்களை ஒன்றாகச்சேர்ந்து செய்கிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • குடும்ப மகிச்சிக்கு இன்றியமையாத அடிப்படையைக் கண்டடைதல்
    குடும்ப வாழ்க்கை
  • நித்திய எதிர்காலத்திற்காகக் குடும்பமாய்ச் சேர்ந்து கட்டுதல்
    குடும்ப வாழ்க்கை
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
w98 4/1 பக். 6-8

குடும்பம்—ஒரு மானிடத் தேவை!

குடும்பங்கள் தழைத்தோங்கினால்தான் மனித சமுதாயமும் தழைத்தோங்கும் என்று சொல்லப்படுகிறது. குடும்ப ஏற்பாடு வீழ்ச்சியடைகையில், சமுதாயங்கள், நாடுகள் ஆகியவற்றின் பலமும் குன்றிப்போய்விடுவதை சரித்திரம் காட்டுகிறது. பூர்வ கிரீஸில், ஒழுக்க சிதைவு குடும்பங்களை அழித்தபோது, அதன் நாகரிகம் சிதைந்தது; அதுவே ரோமர்கள் அதை எளிதில் கைப்பற்றும் நிலைக்குள்ளாக்கியது. ரோமர்களின் குடும்பங்கள் பலமானவையாக இருந்தவரை ரோம பேரரசும் பலமாக இருந்தது. ஆனால் காலங்கள் உருண்டோடியபோது, ரோமர்களின் குடும்ப வாழ்க்கை பலவீனமடைந்தது; அதோடு அந்தப் பேரரசின் பலமும் குன்றியது. ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பிரஸிடென்ட் சார்லஸ் டபிள்யு. எலியாட் இவ்வாறு கருத்துரைக்கிறார்: “குடும்பம் மற்றும் குடும்ப வாழ்க்கையின் பாதுகாப்பும் மேம்பாடுமே நாகரிகத்தின் முதன்மையான நோக்கங்களாக இருக்கின்றன; அதோடு அவையே அனைத்து தொழில்துறைகளின் உண்மையான குறிக்கோள்களாகவும் இருக்கின்றன.”

ஆம், குடும்பம் மானிடத் தேவையாக இருக்கிறது. அது சமுதாயத்தின் ஸ்திரத்திலும், பிள்ளைகள், எதிர்கால சந்ததிகள் ஆகியோரின் நலனிலும் நேரிடையாக ஆதிக்கம் செலுத்துகிறது. சந்தேகமில்லாமல், எண்ணற்ற ஒற்றைத் தாய்மார்கள் பிள்ளைகளை சிறந்தவர்களாக வளர்ப்பதற்கு மிகவும் கடினமாக உழைக்கின்றனர்; அவர்களுடைய கடின உழைப்புக்காக அவர்கள் பாராட்டுக்குரியவர்களே. இருப்பினும், தாய், தகப்பன் ஆகிய இருவரோடும் சேர்ந்து வாழும்போது, பிள்ளைகள் இயல்பாகவே இன்னும் சிறந்தவர்களாக இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

“கட்டுக்கோப்பான குடும்பங்களிலிருந்து வரும் பிள்ளைகளைக் காட்டிலும் பிளவுபட்ட குடும்பங்களிலிருந்து வரும் பருவ வயதினருக்கு பொதுவான உடல்நலக் குறைபாடுகள் அதிகமாக இருந்தன; அதோடு உணர்ச்சிசம்பந்தமான பிரச்சினைகளுக்கான அறிகுறிகளை வெளிக்காட்டுவதற்கான சாத்தியத்தையும், பாலுணர்வு வேட்கைக்கான சாத்தியத்தையும் அதிகமாக கொண்டிருந்தனர்” என்று 2,100-க்கும் அதிகமான வளர் இளம் பருவத்தினரை வைத்து நடத்தப்பட்ட ஒரு ஆஸ்திரேலிய ஆய்வு கண்டுபிடித்தது. பிளவுபட்ட வீடுகளில் உள்ள பிள்ளைகளுக்கு, “விபத்துக்குள்ளாவதற்கு 20-30 சதவீத சாத்தியமும், இறுதிப்பரீட்சையில் தோல்வியடைவதற்கு 40-75 சதவீத சாத்தியமும், பள்ளியிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு 70 சதவீத அதிக சாத்தியமும் இருக்கிறது” என்று சுகாதார புள்ளிவிவரங்களுக்கான ஐ.மா. தேசிய நிலையங்கள் நடத்திய ஆய்வு வெளிப்படுத்தியது. “பாரம்பரிய குடும்பங்களில் வளரும் பிள்ளைகளைக் காட்டிலும் ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களிலுள்ள பிள்ளைகள் குற்றச்செயலில் ஈடுபடுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது” என்று கொள்கை பகுப்பாய்வாளர் ஒருவர் குறிப்பிடுகிறார்.

இல்லம் ஒரு புகலிடம்

அனைவருக்கும் மகிழ்ச்சியான, இன்பகரமான, கட்டியெழுப்புகிற ஒரு இல்லத்தை குடும்ப ஏற்பாடு அளிக்கிறது. “நல்வாழ்வுக்கும் மகிழ்ச்சிக்கும் மிகச் சிறந்த தோற்றுமூலம் குடும்பமே ஒழிய தொழிலோ, பொருட்களோ, விருப்பவேலைகளோ நண்பர்களோ அல்ல” என்று ஸ்வீடன் நாட்டு அதிகாரி குறிப்பிடுகிறார்.

குடும்பங்களின் மகத்தான சிருஷ்டிகரான யெகோவா தேவனே, குடும்ப ஏற்பாட்டை நிறுவியதால் பூமியிலுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் நாமகாரணராக இருக்கிறார் என்று பைபிள் காட்டுகிறது. (ஆதியாகமம் 1:27, 28; 2:23, 24; எபேசியர் 3:14, 15) இருப்பினும், குடும்பத்தின்மீது வரும் கடுமையான தாக்குதலைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் ஆவியால் ஏவப்பட்ட வசனங்களில் முன்னறிவித்தார்; இது கிறிஸ்தவ சபைக்கு புறம்பே, ஒழுக்கமும் மனித சமுதாயமும் சிதைவடைவதில் விளைவடையும். “கடைசிநாட்களில்,” “தேவபக்தியின் வேஷத்தை தரித்த”வர்களின் மத்தியிலும்கூட உண்மைத்தன்மையற்றவர்களும், ‘சுபாவ அன்பு’ இல்லாதவர்களும், பெற்றோருக்கு கீழ்ப்படியாதவர்களும் இருப்பார்கள் என்று அவர் சொன்னார். அத்தகைய நபர்களிடமிருந்து விலகியிருக்கும்படி அவர் கிறிஸ்தவர்களை துரிதப்படுத்தினார். கடவுளுடைய சத்தியத்தினிடம் காட்டும் எதிர்ப்பு குடும்பங்களை பிரிக்கும் என்று இயேசு முன்னறிவித்தார்.—2 தீமோத்தேயு 3:1-5; மத்தேயு 10:32-37.

இருப்பினும், கடவுள் நம்மை உதவியற்றவர்களாக விட்டுவிடவில்லை. அவருடைய வார்த்தையில் குடும்ப உறவுகளை குறித்ததில் ஏராளமான தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. குடும்பத்தை வெற்றிகரமானதாக ஆக்குவது எப்படி, குடும்பத்திலுள்ள ஒவ்வொரு அங்கத்தினர்களும் மற்றவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யும் மகிழ்ச்சியான இடமாக இல்லத்தை ஆக்குவது எப்படி என்று அது சொல்கிறது. a—எபேசியர் 5:33; 6:1-4.

குடும்பம் பெரும் அபாயத்தில் இருக்கும் இந்த நாட்களில் இத்தகைய மகிழ்ச்சியான உறவை அடைவது சாத்தியமா? ஆம், சாத்தியமே! கரடுமுரடான, பாலைவனத்தைப் போன்ற இந்த உலகில் உங்களுடைய குடும்பத்தை மகிழ்ச்சியளிக்கிற புத்துணர்ச்சியூட்டும் சோலையாக ஆக்குவதில் நீங்கள் வெற்றிபெறலாம். ஆனால், இது குடும்ப வட்டாரத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் பாகத்தைச் செய்வதைத் தேவைப்படுத்துகிறது. ஒருசில ஆலோசனைகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

உங்களுடைய குடும்பம் நீடித்து நிற்பதற்கு உதவுங்கள்

குடும்பம் ஒற்றுமையாக இருப்பதற்கு மிகச் சிறந்த வழிகளில் ஒன்று, நேரத்தை ஒன்றுசேர்ந்து கழிப்பதே. எல்லா அங்கத்தினர்களும் தங்களுடைய ஓய்வு நேரத்தை குடும்பமாக செலவழிப்பதற்கு முன்வர வேண்டும். அது தியாகம் செய்தலை உட்படுத்தலாம். உதாரணமாக, பருவ வயதினரே, நீங்கள் உங்களுடைய விருப்பமான டிவி நிகழ்ச்சிகளை, விளையாட்டு நிகழ்ச்சிகளை, அல்லது நண்பர்களோடு உலாவ செல்வதை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கலாம். தந்தைமாரே, நீங்கள்தான் சாதாரணமாக குடும்பத்துக்காக சம்பாதிப்பவர்கள்; ஓய்வு நேரத்தை விருப்ப வேலை செய்வதற்கோ மற்ற சொந்த காரியங்களுக்கோ மட்டுமே பயன்படுத்தாதீர்கள். குடும்பத்தோடு சேர்ந்து அனுபவிக்க திட்டமிடுங்கள். வாரயிறுதி நாட்களை எப்படி செலவழிப்பது, எப்படி லீவு நாட்களை ஒன்றுசேர்ந்து கழிப்பது என திட்டம் போடுங்கள். நிச்சயமாகவே, எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்க்கக்கூடிய, அனுபவிக்க முடிந்த ஒன்றை திட்டமிடுங்கள்.

பிள்ளைகளுக்கு, தரமான நேரம் என்று அழைக்கப்படுவதைக் காட்டிலும் அதாவது, அவர்களுடன் செலவழிப்பதற்கென்று தவறாமல் ஒதுக்கிவைக்கப்படும் அரைமணிநேரத்தைக் காட்டிலும் அதிகம் தேவைப்படுகிறது. வெறுமனே குறிப்பிட்ட அளவு நேரம் அவர்களுக்கு போதாது. ஸ்வீடன் நாட்டு செய்தித்தாள் ஆசிரியர் ஒருவர் இவ்வாறு எழுதுகிறார்: “ஒரு நிருபராக, என்னுடைய 15 ஆண்டுகால வாழ்க்கையில், நான் எண்ணற்ற இளம் குற்றவாளிகளை சந்தித்திருக்கிறேன் . . . ஒரு குறிப்பிட்ட அளவு நேரத்தை மட்டுமே பெற்றோர் அவர்களுடன் செலவிட்டிருக்கின்றனர் என்பது அவர்கள் மத்தியில் பொதுப்படையாக தெரிந்தது: ‘என் அப்பா அம்மாவுக்கு ஏது நேரம்.’ ‘நான் என்ன சொல்கிறேன்னு அவங்க எந்த காலத்திலேயும் கேட்டதில்லை.’ ‘அவர் எப்பவும் டூரிலேயே இருப்பார்.’ . . . ஒரு பெற்றோராக, உங்கள் பிள்ளைகளுக்கென்று எவ்வளவு நேரத்தை கொடுப்பீர்கள் என்பதை நீங்கள் எப்போதும் தெரிவு செய்யலாம். உங்களுடைய தெரிவு எப்படிப்பட்டது என்பது 15 ஆண்டுகள் கழித்து, முரட்டுத்தனமான 15 வயது பிள்ளையை வைத்து மதிப்பிடப்படுகிறது.”

பணத்தைக் குறித்ததில் சரியான மனநிலை

எல்லா அங்கத்தினர்களும் பணத்தைக் குறித்ததில் சரியான மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தின் பொதுவான செலவினங்களுக்காக தங்களால் முடிந்தவற்றை கொடுப்பதற்கு அவர்கள் தயாராய் இருக்கவேண்டும். அநேக பெண்கள் வயிற்றுப்பிழைப்புக்காக வேலைக்கு செல்லவேண்டியிருக்கிறது; ஆனால் மனைவிமாரே, நீங்கள் எதிர்ப்படக்கூடிய ஆபத்துக்களையும், சோதனைகளையும் குறித்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். “உங்களுடைய ஆசைகளை முழுமையாக அனுபவித்துக் கொள்ளுங்கள்,” “உங்களுக்கு என்ன செய்ய விருப்பமோ அதையெல்லாம் செய்யுங்கள்” என்று இந்த உலகம் துரிதப்படுத்துகிறது. அது உங்களை தன்னிச்சையாய் செயல்படுகிறவர்களாக ஆக்கலாம்; ஒரு தாயாகவும் வீட்டை நிர்வகிப்பவராகவும் கடவுள் உங்களுக்கு கொடுத்திருக்கும் பாகத்தை செய்வதில் திருப்தியற்றவர்களாகவும் ஆக்கிவிடலாம்.—தீத்து 2:4, 5.

தாய்மாராகிய நீங்கள் வீட்டில் இருந்து உங்கள் பிள்ளைகளுக்கு வழிகாட்டியாகவும் நண்பராகவும் இருப்பீர்களென்றால், அது குடும்பத்தை இன்பத்திலும் துன்பத்திலும் கட்டிக் காக்க உதவக்கூடிய பலமான குடும்ப பிணைப்புகளைக் கட்டுவதற்கு நிச்சயமாகவே அதிகப் பங்களிக்கும். இல்லத்தை மகிழ்ச்சிகரமான, பாதுகாப்பான, செயல்நிறைந்த ஒன்றாக ஆக்குவதில் ஒரு பெண் மிகச் சிறந்ததைச் செய்யமுடியும். “ஒரு முகாமை அமைக்க நூறு ஆண்கள் வேண்டும்; ஆனால் ஒரு வீட்டை ஒரு பெண்ணால் அமைத்துவிட முடியும்” என்று 19-ம் நூற்றாண்டு அரசியல்வாதி ஒருவர் சொன்னார்.

குடும்பத்தின் மொத்த வருமானத்திற்குள் வாழ்வதற்கு குடும்பத்திலுள்ள அனைவரும் ஒத்துழைத்தார்களென்றால், அது குடும்பத்தில் எழக்கூடிய அநேக பிரச்சினைகளைத் தவிர்க்கும். தம்பதிகள் வாழ்க்கையை எளிமையாக வைத்துக் கொள்ள ஒத்துக்கொண்டு, ஆவிக்குரிய அக்கறைகளை முதலிடத்தில் வைக்க வேண்டும். பிள்ளைகள் திருப்தியுடனிருக்க கற்றுக் கொள்ளவேண்டும்; குடும்பத்தின் பட்ஜெட்டால் தாக்குப்பிடிக்க முடியாத காரியங்களை கேட்பதை தவிர்க்கவேண்டும். ஆசைப்படுவதையெல்லாம் அடைவதைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்! சக்திக்கு மீறியவற்றை வாங்கவேண்டும் என்ற ஆசை, கடனாளியாக ஆவதற்கும், அநேக குடும்பங்கள் தகர்ந்துபோவதற்கும் வழிநடத்தியுள்ளது. புத்துணர்ச்சியூட்டும் பயணம், பயனுள்ளதும் அனுபவிக்கத்தக்கதுமான ஏதாவதொரு பொருளை வீட்டுக்கு வாங்குதல், அல்லது கிறிஸ்தவ சபையை ஆதரிப்பதற்காக நன்கொடையளித்தல் போன்ற ஒருங்கிணைந்த செயலுக்காக தங்களுடைய பணத்தை எல்லாரும் கொடுப்பது குடும்பத்தின் ஒற்றுமைக்கு நன்மை பயப்பதாக இருக்கலாம்.

சுத்தப்படுத்தும் வேலை, பழுதுபார்க்கும் வேலை, வீட்டையும் தோட்டத்தையும் காரையும் பராமரித்தல், இன்னும் இதுபோன்ற மற்ற வேலைகளில் குடும்ப அங்கத்தினர்கள் ஒன்றுசேர்ந்து உழைக்கும்போது அது மகிழ்ச்சியான குடும்பச் சூழ்நிலைக்கு மற்றொரு வகையான “பங்களிப்பாக” இருக்கும். இளம் பிள்ளைகள் உட்பட, ஒவ்வொரு குடும்ப அங்கத்தினர்களுக்கும் ஏதாவதொரு வேலை கொடுக்கப்படலாம். பிள்ளைகளே, நேரத்தை வீணாக்காதிருக்க முயலுங்கள். மாறாக, உதவிசெய்கிற, ஒத்துழைக்கிற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்; இது குடும்ப ஒற்றுமையைக் கட்டிக்காக்கக்கூடிய உண்மையான நட்புறவிலும் தோழமையிலும் விளைவடையும்.

பைபிளைக் கற்பதன் முக்கியத்துவம்

ஒற்றுமையான கிறிஸ்தவ குடும்பத்தில், தவறாமல் பைபிள் படிப்பதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்படுகிறது. தினவசனத்தை தினந்தோறும் கலந்தாலோசிப்பதும், வாராந்தர பைபிள் வாசிப்பும் குடும்ப ஒற்றுமைக்கு அடிப்படையை அளிக்கின்றன. அடிப்படை பைபிள் சத்தியங்களும் நியமங்களும் குடும்பத்திலுள்ள அனைவரின் இருதயத்திலும் செல்வாக்கு செலுத்தும் விதமாக ஒன்றுசேர்ந்து கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.

அத்தகைய குடும்ப படிப்பு நேரங்கள் போதனையளிப்பவையாகவும் அதே சமயத்தில், அனுபவிக்கத்தக்கவையாகவும் உற்சாகமளிப்பவையாகவும் இருக்கவேண்டும். ஸ்வீடனின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த ஒரு குடும்பத்தில் அந்த வாரம் முழுவதுமாக பிள்ளைகள் தங்களுக்கு எழுந்த கேள்விகளை எழுதிவைக்கும் பழக்கம் இருந்தது. இத்தகைய கேள்விகள் அந்த வார பைபிள் படிப்பில் கலந்தாலோசிக்கப்பட்டன. கேள்விகள் பெரும்பாலும் ஆழமானவையாகவும் சிந்தனையைத் தூண்டுபவையாகவும் இருந்தன; அதோடு பிள்ளைகளின் சிந்திக்கும் திறமைகளையும் பைபிள் போதனைகளின் பேரிலான மதித்துணர்வையும் பிரதிபலிப்பவையாக நிரூபித்தன. இவையே அவற்றில் சில கேள்விகள்: “யெகோவா எல்லாவற்றையும் ஒவ்வொரு முறையும் வளரும்படி செய்கிறாரா, அல்லது வெறுமனே ஆரம்பத்தில் மட்டுமே அது வளருவதை துவக்கிவைத்தாரா?” “கடவுள் மனிதனாக இல்லாத பட்சத்தில் கடவுள் மனிதனை ‘தம்முடைய சாயலாக’ சிருஷ்டித்தாரென்று பைபிள் ஏன் சொல்கிறது?” “பரதீஸில் ஆதாமும் ஏவாளும் வெறுங்காலோடும், எந்த உடையும் இல்லாமலிருந்ததால், குளிர்காலத்தில் அவர்கள் உறைந்துபோகவில்லையா?” “இருட்டாக இருக்கவேண்டிய இரவுநேரத்தில் நமக்கு சந்திரன் ஏன் தேவை?” இந்தப் பிள்ளைகள் இப்போது பெரியவர்களாகி கடவுளை முழுநேர ஊழியர்களாக சேவிக்கிறார்கள்.

குடும்பப் பிரச்சினைகளை கையாளுகையில், பெற்றோராகிய நீங்கள் உடன்பாடாகவும் இன்முகத்தோடும் இருங்கள். புரிந்துகொள்பவராகவும் வளைந்துகொடுப்போராகவும் இருங்கள். ஆனால் முக்கியமான நியமங்களை பொருத்துவதை குறித்தமட்டில் விட்டுக்கொடுக்காதவராகவும் இருங்கள். கடவுள்மீதும் அவருடைய நீதியுள்ள தராதரங்களின் மீதுமான அன்பு, உங்களுடைய தீர்மானங்களை எப்போதும் கட்டுப்படுத்துகிறது என்பதை பிள்ளைகள் அறிய வேண்டும். பள்ளிச்சூழல் பெரும்பாலும் அதிக அழுத்தம் நிறைந்ததாகவும் சோர்வூட்டுவதாகவும் இருக்கிறது; அத்தகைய செல்வாக்கை ஈடுகட்ட பிள்ளைகளுக்கு வீட்டில் அதிக உற்சாகமூட்டுதல் தேவைப்படுகிறது.

பெற்றோரே, பரிபூரணராக இருப்பதைப்போல பாசாங்கு செய்யாதீர்கள். தவறுகளை ஒத்துக்கொண்டு, தேவைப்படும்போது அதற்காக மன்னிப்பும் கேளுங்கள். இளைஞரே, அப்பாவும் அம்மாவும் தவறை ஒத்துக்கொள்ளும்போது, அவர்கள் மீதுள்ள உங்கள் அன்பு அதிகரிக்கட்டும்.—பிரசங்கி 7:16.

ஆம், ஒரு ஒற்றுமையான குடும்பம் சமாதானமான பாதுகாப்பான, மகிழ்ச்சி பொங்குகிற ஒரு வீட்டை உருவாக்குகிறது. ஜெர்மானிய கவிஞர் கூத்தா ஒருசமயம் பின்வருமாறு சொன்னார்: “அரசனோ ஆண்டியோ, வீட்டில் யார் நிம்மதியை கண்டடைகிறானோ அவனே சந்தோஷமுள்ளவன்.” போற்றுதல்மிக்க பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் வீட்டைப் போன்ற இடம் வேறு இல்லை.

உண்மைதான், நாம் வாழும் இந்த உலகின் அழுத்தங்களால், இன்று குடும்பம் மிகப் பெருமளவில் அச்சுறுத்தப்படுகிறது. ஆனால் குடும்பம் கடவுளுடைய ஏற்பாடாகையால், அது நிச்சயமாகவே நிலைத்து நிற்கும். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு கடவுளுடைய நீதியான வழிகாட்டுதலை பின்பற்றினீர்களென்றால் நீங்களும் நிலைத்து நிற்பீர்கள். உங்கள் குடும்பமும் நிலைத்து நிற்கும்.

[அடிக்குறிப்பு]

a இப்பொருளின்பேரில் கூடுதலான தகவலுக்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற 192 பக்க புத்தகத்தைப் பாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்