சவ அடக்க பழக்கவழக்கங்களைப் பற்றிய கிறிஸ்தவ கருத்து
அன்புக்குரிய ஒருவரின் எதிர்பாராத திடீர் மரணம் பெரும் துயரத்தை உண்டாக்குகிறது. அது நம்மை அதிர்ச்சியில் உறையவைக்கும், தாளா துயரில் ஆழ்த்திவிடும். பல நாட்களாய் வியாதியில் வேதனைப்படும் நமது அன்பானவர், மெல்ல மெல்ல செத்துக்கொண்டிருப்பது நமக்குத் தெரியும்தான். ஆனாலும் அவர் இறக்கும்போது ஏற்படும் துக்கத்தையும் இழப்பையும் நம்மால் தாங்கிக்கொள்ளவே முடியாது.
அன்புக்குரிய ஒருவர் எவ்வித சூழ்நிலையில் இறந்திருந்தாலும்சரி, இழப்புக்கு ஆளானவருக்கு ஆதரவும் ஆறுதலும் தேவை. இழப்புக்கு ஆளான ஒரு கிறிஸ்தவர், வேதவசனங்களுக்கு முரணான சவ அடக்க பழக்கவழக்கங்களில் உட்படும்படி வற்புறுத்துவோரிடமிருந்து துன்புறுத்துதலையும் எதிர்ப்பட வேண்டியதாக இருக்கலாம். இது அநேக ஆப்பிரிக்க நாடுகளிலும் உலகின் வேறு சில பாகங்களிலும்கூட சகஜமானதே.
இழப்புக்கு ஆளான ஒரு கிறிஸ்தவர், வேதவசனங்களுக்கு முரணான சவ அடக்க பழக்கவழக்கங்களைத் தவிர்ப்பதற்கு எது உதவிசெய்யும்? இத்தகைய இக்கட்டான சமயங்களில் உடன் விசுவாசிகள் எவ்வாறு உதவியாக இருக்கலாம்? யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்ய நாடுகிற எல்லாருக்கும் இந்தக் கேள்விகளுக்குரிய பதில்கள் அக்கறைக்கேதுவானவையாக இருக்கின்றன; ஏனெனில், “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.”—யாக்கோபு 1:27.
இப்பழக்கங்களுக்கு காரணமான நம்பிக்கை
முன்னோர்கள் காணக்கூடாத பிரதேசத்தில் வாழ்கின்றனர் என்ற நம்பிக்கை, சவ அடக்க பழக்கவழக்கங்களுக்கு பொதுவான ஒரு காரணமாக உள்ளது. அவர்களைத் திருப்திப்படுத்துவதற்கு ஏதோ சில சடங்குகளை செய்ய தாங்கள் கடமைப்பட்டிருப்பதாக துக்கிப்போர் பலர் உணருகின்றனர். அல்லது, அந்தச் சடங்குகளைச் செய்யாவிட்டால், அந்தச் சமுதாயத்திற்குத் தீங்கு வரும் என்று நம்புகிற அக்கம்பக்கத்தாரின் கோபத்திற்கு ஆளாகலாம் என்று பயப்படுகிறார்கள்.
உண்மையானக் கிறிஸ்தவர், மனிதனுக்குப் பயப்படும் பயத்திற்கு இடமளித்து, கடவுளுக்குப் பிரியமில்லாத பழக்கவழக்கங்களில் பங்கெடுக்கக்கூடாது. (நீதிமொழிகள் 29:25; மத்தேயு 10:28) மரித்தோர் உணர்வற்றவர்களாக இருக்கிறார்கள் என்று பைபிள் காட்டுகிறது, அது சொல்வதாவது: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; . . . நீ போகிற பாதாளத்திலே [“ஷியோலில்,” NW] செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.” (பிரசங்கி 9:5, 10) ஆகையால், மரித்தோரைத் திருப்திப்படுத்துவதாக, அல்லது அவர்களோடு தொடர்புகொள்வதாக எண்ணி எதையும் செய்ய முயல வேண்டாம் என்று யெகோவா தேவன் தம்முடைய பூர்வகால ஜனங்களை எச்சரித்தார். (உபாகமம் 14:1; 18:10-12; ஏசாயா 8:19, 20) இந்த பைபிள் சத்தியங்கள், பிரபலமான அநேக சவ அடக்க பழக்கவழக்கங்களுடன் முரண்படுகின்றன.
‘பாலின சுத்திகரிப்பைப்’ பற்றியதென்ன?
மத்திய ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றில் மணத்துணையை மரணத்தில் இழந்தவன்[வள்] மரித்தவரின் நெருங்கிய உறவினர் ஒருவரோடு பாலுறவுகள் கொள்ளும்படி எதிர்பார்க்கப்படுகிறான்[றாள்]. இதைச் செய்யாவிட்டால், அந்த மரித்தவர், உயிரோடிருக்கும் குடும்பத்தாருக்குத் தீங்கு செய்வார் என்று நம்பப்படுகிறது. இந்தச் சடங்கு, “பாலின சுத்திகரிப்பு” என்று சொல்லப்படுகிறது. ஆனால், மணத்துணைவரல்லாதவருடனான எவ்வகை பாலுறவையும் ‘வேசித்தனம்’ என்று பைபிள் அழைக்கிறது. கிறிஸ்தவர்கள் ‘வேசித்தனத்திற்கு விலகியோட’ வேண்டியதாக இருப்பதால், வேதவசனத்திற்கு முரணான இந்தப் பழக்கத்தை அவர்கள் தைரியத்துடன் எதிர்க்கிறார்கள்.—1 கொரிந்தியர் 6:18.
மெர்சி என்ற பெயருடைய ஒரு விதவையைக் கவனியுங்கள்.a 1989-ல் அவளுடைய கணவர் மரித்தபோது, அவள், ஓர் ஆண் உறவினரோடு பாலின சுத்திகரிப்பு நடப்பிக்கும்படி உறவினர்கள் சொன்னார்கள். அவள் மறுத்து, அந்தச் சடங்கு கடவுளுடைய சட்டத்திற்கு எதிர்மாறானது என்று விளக்கினாள். எரிச்சலடைந்த உறவினர்கள் அவளைக் கண்டபடி திட்டிவிட்டு சென்றார்கள். ஒரு மாதத்திற்குப் பின்பு அவர்கள் அவளுடைய வீட்டின் கூரையிலிருந்து இரும்பு தகடுகளை நீக்கி, அவள் வீட்டைக் கொள்ளையடித்தார்கள். “உன் மதம் உன்னைக் கவனித்துக்கொள்கிறதா என்று பார்க்கலாம்” என்றார்கள்.
சபையார், மெர்சியை ஆறுதல்படுத்தி, ஒரு புதிய வீட்டையுங்கூட அவளுக்கு கட்டி கொடுத்தார்கள். அக்கம்பக்கத்தார் இச்செயலைக் கண்டு வெகுவாக மனம் கவரப்பட்டு, சிலர் அதில் தாங்களும் பங்குகொள்ளும்படி தீர்மானித்தார்கள். கூரைக்கு புல் கொண்டுவந்த முதல் நபர், தலைமை அதிகாரியின் கத்தோலிக்க மனைவியென்றால் பாருங்களேன்! மெர்சியின் உண்மையுள்ள நடத்தை அவளுடைய பிள்ளைகளை ஊக்குவித்தது. அவர்களில் நான்குபேர் அதன்பின் யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்; அவர்களில் ஒருவர் சமீபத்தில் ஊழிய பயிற்சிப் பள்ளியில் கலந்துகொண்டார்.
பாலின சுத்திகரிப்பு வழக்கத்தின் காரணமாக, கிறிஸ்தவர்கள் சிலர், அவிசுவாசியான ஒருவரை மணம் செய்துகொள்ளும்படியான வற்புறுத்தலுக்கு இணங்கிவிட்டிருக்கிறார்கள். உதாரணமாக, 70 வயதுக்கு மேற்பட்ட ஒருவர், தன் இறந்த மனைவியின் உறவினளான ஓர் இளம் பெண்ணை அவசரமாய் மணந்துகொண்டார். இவ்வாறு செய்ததன்மூலம், தான் பாலின சுத்திகரிப்பு நடப்பித்திருப்பதாக அவர் வெறுமனே சொல்லலாம். எனினும், கிறிஸ்தவர்கள், “கர்த்தருக்குள் மாத்திரமே” மணம் செய்ய வேண்டும் என்ற பைபிளின் அறிவுரையோடு அத்தகைய போக்கு முரண்படுகிறது.—1 கொரிந்தியர் 7:39, NW.
விடிய விடிய விழித்திருக்கும் சடங்குகள்
பல நாடுகளில், துக்கம் கொண்டாடுபவர்கள், மரித்தவரின் வீட்டில் ஒன்றுகூடி இரவு முழுவதும் விழித்திருக்கிறார்கள். இந்த விழிப்பு சடங்குகளின்போது பெரும்பாலும் விருந்தளிக்கப்படுகிறது, உரத்த இசையும் இசைக்கப்படுகிறது. இது, மரித்தவரை சமாதானப்படுத்துவதாகவும், உயிரோடிருக்கும் குடும்பத்தாரைப் பில்லி சூனியத்திலிருந்து பாதுகாப்பதாகவும் நம்பப்படுகிறது. மரித்த ஆளின் தயவைப் பெறும்படி அவரை மட்டுமீறி புகழும் பேச்சுகள் கொடுக்கப்படலாம். ஒரு பேச்சுக்குப் பின், மற்றொருவர் பேசும்படி எழுவதற்கு முன்பாக, மத பாட்டு ஒன்றை துக்கங்கொண்டாடுவோர் ஒருவேளை பாடுவார்கள். இது பொழுது விடியும் வரையில் தொடரலாம்.b
உண்மையான ஒரு கிறிஸ்தவர் இத்தகைய விழிப்பு சடங்குகளில் பங்குகொள்கிறதில்லை; ஏனெனில் மரித்தோர் உயிருள்ளோருக்கு உதவிசெய்யவோ தீங்குசெய்யவோ முடியாது என்று பைபிள் காட்டுகிறது. (ஆதியாகமம் 3:19; சங்கீதம் 146:3, 4; யோவான் 11:11-14) ஆவிக்கொள்கை பழக்கவழக்கங்களை வேதவசனங்கள் கண்டனம் செய்கின்றன. (வெளிப்படுத்துதல் 9:21; 22:15) எனினும், ஆவிக்கொள்கை பழக்கவழக்கங்களை மற்றவர்கள் புகுத்துவதைத் தடுப்பது கிறிஸ்தவ விதவைக்கு கடினமாக இருக்கலாம். அவளுடைய வீட்டில் விழிப்பு சடங்குகள் நடத்துவதை அவர்கள் வற்புறுத்தக்கூடும். இந்தக் கூடுதலான துன்பத்தை எதிர்ப்படுகிற, இழப்புக்கு ஆளான கிறிஸ்தவர்களுக்கு உதவிசெய்ய உடன் கிறிஸ்தவர்கள் என்ன செய்யலாம்?
இழப்புக்கு ஆளானவரின் உறவினரிடமும் சுற்றுப்புறத்தாரிடமும் சபை மூப்பர்கள் விளக்கி பேசுவதனால், அந்தக் கிறிஸ்தவ குடும்பத்திற்கு பெரும்பாலும் உதவி அளிக்க முடிந்திருக்கிறது. அவ்வாறு விளக்கி பேசினபின்பு, இந்த நபர்கள், அந்த வீட்டாரை தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டு சமாதானத்தோடு விட்டுச் சென்று சவ அடக்கத்திற்கு மறுபடியுமாக ஒன்றுகூடி வருவதற்குச் சம்மதிக்கலாம். ஆனால், சிலர் சண்டையிடுவோராக ஆகலாம், அப்போது என்ன செய்வது? அவர்களோடு தொடர்ந்து நியாயம் பேசுவது ஒருவேளை வன்முறையில் விளைவடையலாம். ‘கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், தீமையைச் சகிக்கிறவனாயிருக்க வேண்டும்.’ (2 தீமோத்தேயு 2:24) ஆகையால் ஒத்துழைக்காத உறவினர்கள் காரியங்களைத் தாங்கள் நடத்த முற்பட்டால், கிறிஸ்தவ விதவையும் அவளுடைய பிள்ளைகளும் அதைத் தடுக்க முடியாதவர்களாக இருக்கலாம். ஆனால், தங்கள் வீட்டில் நடக்கும் பொய்மத சடங்காசாரங்கள் எதிலும் அவர்கள் பங்குகொள்ள மாட்டார்கள்; ஏனெனில், இந்த பைபிள் கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிகிறார்கள்: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக.”—2 கொரிந்தியர் 6:14.
இந்த நியமம் சவ அடக்கத்திற்கும் பொருந்துகிறது. பொய்மத குரு ஒருவரால் நடத்தப்படும் பாட்டு, ஜெபம், சடங்காசாரங்கள் எதிலும் யெகோவாவின் சாட்சிகள் பங்குகொள்வதில்லை. நெருங்கிய குடும்ப உறுப்பினராக இருக்கும் கிறிஸ்தவர்கள், அத்தகைய ஓர் ஆராதனைக்குச் செல்வதை அவசியமாகக் கண்டாலும், அவற்றில் அவர்கள் பங்குகொள்வதில்லை.—2 கொரிந்தியர் 6:17; வெளிப்படுத்துதல் 18:4.
கண்ணியமான சவ அடக்கக் கூட்டங்கள்
யெகோவாவின் சாட்சிகளால் நடத்தப்படும் சவ அடக்கக் கூட்டங்கள், மரித்தோரைச் சாந்தப்படுத்துவதாகக் கருதப்படும் சடங்குகள் அடங்கியவையாக இல்லை. ராஜ்ய மன்றத்திலாவது, அடக்க ஆயத்த அறையிலாவது, மரித்தவரின் வீட்டிலாவது, பிரேதக்குழியின் அருகிலாவது பைபிள் பேச்சு ஒன்று கொடுக்கப்படுகிறது. மரணத்தையும் உயிர்த்தெழுதலின் நம்பிக்கையையும் பற்றி பைபிளில் சொல்லப்பட்டிருப்பதை விளக்குவதன் மூலம், துக்கத்தில் இருப்போரை ஆறுதல்படுத்துவதே அந்தப் பேச்சின் நோக்கம். (யோவான் 11:25; ரோமர் 5:12; 2 பேதுரு 3:13) இந்த வசனங்களை ஆதாரமாகக்கொண்ட ஒரு பாட்டு பாடப்படலாம், ஆறுதல் தரும் ஒரு ஜெபத்துடன் கூட்டம் முடிவடையும்.
சமீபத்தில், இதைப்போன்ற சவ அடக்கக் கூட்டம் ஒன்று, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவருக்கு நடத்தப்பட்டது; இறந்தவர், தென் ஆப்பிரிக்காவின் குடியரசு தலைவராகிய நெல்சன் மண்டேலாவின் கடைசி தங்கை. இந்தக் கூட்டம் முடிந்த பின்பு, நெல்சன் மண்டேலா பேச்சாளருக்கு உள்ளப்பூர்வமான நன்றியறிதலைத் தெரிவித்தார். அநேக முக்கிய பிரமுகர்களும் உயர் அதிகாரிகளும் வந்திருந்தனர். “இப்படி ஒரு கண்ணியமான சவ அடக்கத்தை இதுவரை நான் பார்த்ததே இல்லை” என்று அமைச்சரவையைச் சேர்ந்த ஒருவர் சொன்னார்.
துக்க ஆடைகள் தேவையா?
அன்புக்குரியவர்கள் இறக்கும்போது யெகோவாவின் சாட்சிகள் துக்கப்படுகிறார்கள். இயேசுவைப்போல் அவர்கள் கண்ணீர் விடலாம். (யோவான் 11:35, 36) ஆனால், ஏதோ ஒரு வெளிப்புற அடையாளத்தால் தங்கள் துக்கத்தை யாவரும் அறியக் காட்டிக்கொள்வது அவசியமென அவர்கள் கருதுகிறதில்லை. (ஒப்பிடுக: மத்தேயு 6:16-18.) பல நாடுகளில், விதவைகள், மரித்தோரை சாந்தப்படுத்துவதற்கு துக்கத்தை வெளிக்காட்டும் விசேஷ ஆடைகளை அணியும்படி எதிர்பார்க்கப்படுகிறார்கள். இந்த ஆடைகளை, சவ அடக்கத்திற்குப் பின்பு பல மாதங்கள் அல்லது ஓர் ஆண்டு காலமளவாகவுங்கூட அணிய வேண்டும். அவற்றை அணிவதை நிறுத்துவதும் மற்றொரு விருந்துக்குரிய சந்தர்ப்பமாக இருக்கிறது.
துக்கம் கொண்டாடுதலுக்குரிய அடையாளங்களைக் காட்ட தவறுவது, மரித்த அந்த ஆளுக்கு விரோதமாய்ச் செய்யும் ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது. இந்தக் காரணத்தின் நிமித்தமாக, ஸ்வாஸிலாந்தின் பாகங்களில் குலமரபு தலைவர்கள், யெகோவாவின் சாட்சிகளை அவர்களுடைய சொந்த வீடுகளைவிட்டும் நிலங்களைவிட்டும் துரத்திவிட்டிருக்கிறார்கள். எனினும் இத்தகைய உண்மையுள்ள கிறிஸ்தவர்கள், வேறு இடங்களில் வாழும் தங்கள் ஆவிக்குரிய சகோதரர்களால் எப்போதும் கவனித்துக் காக்கப்பட்டிருக்கின்றனர்.
ஸ்வாஸிலாந்து உயர் நீதிமன்றம், யெகோவாவின் சாட்சிகளின் சார்பாகத் தீர்ப்பு செய்து, அவர்கள் தங்கள் வீடுகளுக்கும் நிலங்களுக்கும் திரும்பிவரும்படி அனுமதிக்கப்பட வேண்டும் என்று கட்டளையிட்டது. மற்றொரு வழக்கில், ஒரு கிறிஸ்தவ விதவை, தான் துக்க ஆடைகளை அணியக்கூடாது என்று தன் கணவர் தெளிவாகச் சொல்லியிருந்த ஒரு கடிதத்தையும் காஸட்டையும் காட்டினார். அதன்பின், அவளது சொந்த இடத்திலேயே தங்கும்படி அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு, தன் கணவருக்கு நிச்சயமாகவே மரியாதை தருபவளென அவளால் நிரூபிக்க முடிந்தது.
மரணத்திற்கு முன்பாக சவ அடக்க விவரங்களைத் தெளிவாக எழுதி வைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது; முக்கியமாய், வேதவசனங்களுக்கு முரணான பழக்கவழக்கங்கள் சர்வசாதாரணமாக இருக்கும் இடங்களில் அது தேவை. காமரூனில் குடியிருப்பவரான விக்டரின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவர், தன் சவ அடக்கத்தின்போது என்னென்ன செய்யவேண்டுமென எழுதி வைத்தார். அவருடைய குடும்பத்தில், மனித மண்டையோட்டை வணங்குவது உட்பட, மரித்தோர் சம்பந்தமாகத் தீவிரமான பாரம்பரியங்களைக் கடைப்பிடிக்கும் செல்வாக்கு மிகுந்த பலர் இருந்தனர். குடும்பத்தில் நன்கு மதிக்கப்பட்ட உறுப்பினராக இருந்ததால், தன் மண்டையோடும் பெரும்பாலும் அவ்வாறு பயன்படுத்தப்படும் என்று விக்டர் அறிந்திருந்தார். ஆகையால், தன் சவ அடக்கத்தை யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதன்பேரில் தெளிவான விவரங்களைக் கொடுத்தார். இதனால் அவருடைய விதவை மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சூழ்நிலையை சமாளிப்பது எளிதாகிவிட்டது; அந்தச் சமுதாயத்தில் நல்ல சாட்சியும் கொடுக்கப்பட்டது.
வேதவசனங்களுக்கு முரணான பழக்கவழக்கங்களைத் தவிருங்கள்
பைபிள் அறிவுடைய சிலர், மற்றவர்களிலிருந்து வேறுபட்டவர்களாய் நிலைநிற்பதற்கு பயப்படுகின்றனர். துன்புறுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக, மரித்தோருக்கு பாரம்பரிய விழிப்பு சடங்குகள் நடத்துவதுபோல் காட்டிக்கொள்வதன் மூலம் தங்கள் சுற்றுப்புறத்தாரைப் பிரியப்படுத்த முயன்றிருக்கின்றனர். இழப்புக்கு ஆளானோருக்கு ஆறுதல் அளிக்கும்படி அவர்களைப் போய்ப் பார்ப்பது போற்றத்தக்கதாக இருக்கையில், உண்மையான சவ அடக்கத்திற்கு முன்பாக, மரித்தவரின் வீட்டில் ஒவ்வொரு இரவிலும் ஒரு சிறிய சவ அடக்க ஆராதனை நடத்துவதை இது தேவைப்படுத்துகிறதில்லை. இவ்வாறு செய்வது, பார்ப்போருக்கு இடறுதலை உண்டாக்கலாம். ஏனெனில், அதில் பங்குகொள்வோர், மரித்தோரின் நிலைமையைப் பற்றி பைபிள் சொல்வதை உண்மையில் நம்புகிறதில்லை என்ற எண்ணத்தை அது அவர்கள் மனதில் பதிய செய்யக்கூடும்.—1 கொரிந்தியர் 10:33.
கடவுள் வணக்கத்தைத் தங்கள் வாழ்க்கையில் முதலாவதாக வைக்கும்படியும் தங்கள் நேரத்தை ஞானமாய்ப் பயன்படுத்தும்படியும் கிறிஸ்தவர்களை பைபிள் ஊக்குவிக்கிறது. (மத்தேயு 6:33; எபேசியர் 5:15, 16) எனினும் சில இடங்களில், சவ அடக்கத்தின் காரணமாக, ஒரு வாரத்திற்கு அல்லது அதற்கும் மேற்பட்ட காலத்திற்கு, சபையின் நடவடிக்கைகள் நடைபெறாமல் நின்றுவிட்டிருக்கின்றன. இந்தப் பிரச்சினை ஆப்பிரிக்காவில் மட்டுமே இருப்பதாக இல்லை. ஒரு சவ அடக்கத்தைப் பற்றி தென் அமெரிக்காவிலிருந்து வந்த ஓர் அறிக்கை இவ்வாறு சொல்கிறது: “மூன்று கிறிஸ்தவ கூட்டங்களில், வந்திருந்தோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருந்தது. ஏறக்குறைய பத்து நாட்கள் வெளி ஊழியத்தில் எவரும் கலந்துகொள்ளவில்லை. நம்முடைய சகோதர சகோதரிகள் சிலர் அந்தச் சடங்குகளில் பங்குகொண்டதைக் கண்டதில், பைபிள் மாணாக்கர்களும் சபைக்குப் புறம்பேயுள்ள ஆட்களுங்கூட ஆச்சரியமும் மனசங்கடமும் அடைந்தனர்.”
சில சமுதாயங்களில், இழப்புக்கு ஆளான குடும்பத்தார், சவ அடக்கத்திற்குப் பின்பு, நெருங்கிய நண்பர்கள் சிலரை சிற்றுண்டி உண்பதற்காகத் தங்கள் வீட்டுக்கு வரும்படி ஒருவேளை அழைப்பார்கள். ஆனால், ஆப்பிரிக்காவின் பல பாகங்களில், சவ அடக்கத்திற்கு வருவோரான நூற்றுக்கணக்கானோர், இறந்தவரின் வீட்டுக்குத் திரண்டுவந்து ஒரு விருந்தை எதிர்பார்க்கிறார்கள். அப்போது அங்கு பெரும்பாலும் மிருகங்கள் பலிசெலுத்தப்படுகின்றன. கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த சிலர் இந்த வழக்கத்தைப் பின்பற்றி, மரித்தோரைச் சாந்திப்படுத்துவதற்குச் செய்யும் பழக்கவழக்க விருந்துகளைத் தாங்களும் நடத்துவதைப்போன்ற அபிப்பிராயத்தைக் கொடுத்திருக்கின்றனர்.
யெகோவாவின் சாட்சிகளால் நடத்தப்படும் சவ அடக்கம், இழப்புக்கு ஆளானவரின்மீது பெரும் பணச்செலவு பாரத்தை வைக்கிறதில்லை. ஆகையால், சவ அடக்கத்தை பிரமாண்டமாக செய்துவிட்டு, பின் செலவை ஈடுகட்ட வந்திருப்போரிடமிருந்து பணம் வசூலிப்பதற்கான எந்த ஏற்பாடும் இல்லை. அவசியமான செலவுகளைச் செய்வதற்கு ஏழை விதவைகளால் முடியாதிருந்தால், சபையிலுள்ள மற்றவர்கள் உதவிசெய்வதில் சந்தேகமில்லாமல் சந்தோஷப்படுவார்கள். இத்தகைய உதவி போதுமானதாக இல்லையென்றால், தகுதியுள்ளவர்களுக்கு பொருளுதவி அளிப்பதற்கு மூப்பர்கள் ஏற்பாடு செய்யலாம்.—1 தீமோத்தேயு 5:3, 4.
சவ அடக்க பழக்கவழக்கங்கள், பைபிள் நியமங்களுக்கு முரணாக எல்லா சமயங்களிலும் இருப்பதில்லை. அவ்வாறு அவை இருக்கையில், கிறிஸ்தவர்கள் வேதவசனங்களுக்கு இசைய செயல்படுவதற்குத் தீர்மானிக்கிறார்கள்.c (அப்போஸ்தலர் 5:29) இது, கூடுதலான துயரத்தைக் கொண்டுவருமென்றாலும், கடவுளுடைய ஊழியர் பலர் இத்தகைய பரீட்சைகளைத் தாங்கள் வெற்றிகரமாய் எதிர்ப்பட்டு மேற்கொண்டனர் என்று சாட்சி பகர முடியும். ‘சகலவிதமான ஆறுதலின் தேவனாகிய’ யெகோவா தேவனிடமிருந்து பெற்ற பலத்தினாலும், உபத்திரவத்தில் தங்களுக்கு ஆறுதலளித்த உடன் விசுவாசிகளின் அன்பான உதவியினாலும் அவர்களால் வெற்றிபெற முடிந்திருக்கிறது.—2 கொரிந்தியர் 1:3, 4.
[அடிக்குறிப்புகள்]
a இந்தக் கட்டுரையில் மாற்றுப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
b சில மொழித் தொகுதிகளிலும் நாகரிகங்களிலும் “விழிப்பு” என்ற பதம், இழப்புக்கு ஆளானவர்களை ஆறுதல்படுத்துவதற்காகச் செய்யும் குறுகிய சந்திப்புக்குப் பயன்படுத்தப்படுகிறது. வேதவசனத்திற்கு முரணான எதுவும் உட்படாதிருக்கலாம். மே 22, 1979, ஆங்கில விழித்தெழு! பக்கங்கள் 27-8-ஐக் காண்க.
c சவ அடக்கப் பழக்கவழக்கங்கள் ஒரு கிறிஸ்தவன்மீது கடும் பரீட்சைகளைக் கொண்டுவரக்கூடிய இடங்களில் மூப்பர்கள், முழுக்காட்டுதலுக்கு முன்வருவோரை இப்பரீட்சைகளை எதிர்ப்படுவதற்கு ஆயத்தம் செய்யலாம். நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்திலிருந்து கேள்விகளைக் கேட்டு கலந்து பேசுகையில், “ஆத்துமா, பாவம், மரணம்,” “விசுவாச பரிமாற்றம்” போன்ற பகுதிகளுக்கு விசேஷ கவனம் செலுத்த வேண்டும். இந்த இரண்டும் அவரவர் தெரிவின்படி கலந்தாராய்வதற்கானக் கேள்விகளை உடையவையாக இருக்கின்றன. இங்குதான் வேதவசனங்களுக்கு முரணான சவ அடக்கப் பழக்கவழக்கங்களைப் பற்றிய தகவலை மூப்பர்கள் கொடுக்கலாம். இவ்வாறு, முழுக்காட்டப்பட விரும்பி வந்திருப்பவர், அத்தகைய சந்தர்ப்ப நிலைமைகளைத் தான் எதிர்ப்படுகையில் கடவுளுடைய வார்த்தை என்ன செய்யும்படி தேவைப்படுத்துகிறது என்பதை அறிந்துகொள்வார்.
[பக்கம் 23-ன் பெட்டி]
உறுதியின் நிமித்தம் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்
சிபோங்கிலி என்பவள் ஸ்வாஸிலாந்தில் வாழும் ஒரு கிறிஸ்தவ விதவை. தைரியமிக்கவள். சமீபத்தில் தன் கணவன் மரித்தப் பின்பு, மரித்தோரைத் திருப்திப்படுத்துபவையென பலர் நினைத்தப் பழக்கவழக்கங்களைப் பின்பற்ற மறுத்துவிட்டாள். உதாரணமாக, அவள் மொட்டையடித்துக்கொள்ளவில்லை. (உபாகமம் 14:1) அவளுடைய குடும்ப உறுப்பினரான எட்டுபேர் இதனால் கோபம் மூண்டு பலவந்தமாய் அவளுக்கு மொட்டையடித்தனர். சிபோங்கிலியை சந்தித்து ஆறுதலளிக்க யெகோவாவின் சாட்சிகளையும் அவர்கள் அனுமதிக்கவில்லை. எனினும், ராஜ்ய செய்தியில் அக்கறை காண்பித்த மற்ற நபர்கள், அவளைப் போய்ப் பார்த்து, மூப்பர்கள் எழுதிய ஆறுதல் கடிதங்களைக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைந்தனர். சிபோங்கிலி துக்க ஆடைகளை அணியும்படி எதிர்பார்க்கப்பட்ட நாளில், ஆச்சரியமான ஒன்று நடந்தது. செல்வாக்குமிக்க குடும்ப உறுப்பினர் ஒருவர், துக்கங்கொண்டாடும் பாரம்பரிய பழக்கவழக்கங்களுக்கு இணங்க அவள் மறுத்ததைக் குறித்து கலந்தாலோசிப்பதற்கு ஒரு கூட்டம் நடத்தினார்.
அதைப் பற்றி சிபோங்கிலி சொல்வதாவது: “கருப்புநிற ஆடைகளை அணிந்து துக்கத்தை வெளிப்படுத்திக் காட்டுவதற்கு என் மத நம்பிக்கைகள் என்னை அனுமதிக்கின்றனவாவென அவர்கள் கேட்டார்கள். என் நிலையை நான் விளக்கிக் கூறினபின்பு, என்னை அவர்கள் கட்டாயப்படுத்தப்போவதில்லை என்று சொன்னார்கள். என்னை முரட்டுத்தனமாக நடத்தினதற்காகவும், பலவந்தமாக மொட்டையடித்துவிட்டதற்காகவும் அவர்கள் எல்லாரும் வருத்தம் தெரிவித்தபோது எனக்கே ஆச்சரியமாகிவிட்டது. அவர்கள் ஒவ்வொருவரும் என்னிடம் மன்னிப்பு கேட்டார்கள்.” பின்னர், சிபோங்கிலியின் சகோதரி, யெகோவாவின் சாட்சிகளே உண்மை மதத்தார் என்பதில் தனக்கு சந்தேகமில்லை என்று சொல்லி, தன்னுடன் பைபிள் படிப்பு நடத்தும்படி கேட்டுக்கொண்டாள்.
மற்றொரு உதாரணத்தைக் கவனியுங்கள்: தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெஞ்சமின் என்பவர் 29 வயதில் தன் தந்தையை திடீரென இழந்தார். அந்தச் சமயத்தில் பெஞ்சமின் ஒருவர் மாத்திரமே அவர் குடும்பத்தில் சாட்சியாக இருந்தார். அந்தச் சவ அடக்க ஆசாரத்தின்போது, எல்லாரும் அந்தப் பிரேதக்குழியின் அருகில் வரிசையாகச் சென்று ஒரு கைப்பிடி மண்ணை அந்தச் சவப்பெட்டியின்மீது போடும்படி எதிர்பார்க்கப்பட்டது.* அடக்கத்திற்குப் பின் நெருங்கிய குடும்ப உறுப்பினர் எல்லாரும் மொட்டையடித்துக்கொண்டனர். இந்தச் சடங்குகளில் பெஞ்சமின் பங்குகொள்ளாததால், அவருடைய மரித்த தகப்பனின் ஆவியால் அவர் தண்டிக்கப்படுவார் என்று சுற்றுப்புறத்தாரும் குடும்ப உறுப்பினரும் சொன்னார்கள்.
“நான் யெகோவாவில் நம்பிக்கை வைத்ததனால், எனக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை” என்று பெஞ்சமின் சொல்கிறார். அவருக்கு எந்தத் தீங்கும் ஏற்படாததைக் குடும்ப உறுப்பினர்கள் கவனித்தார்கள். காலப்போக்கில், அவர்களில் பலர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்கத் தொடங்கி, கடவுளுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்ததன் அடையாளமாக முழுக்காட்டப்பட்டார்கள். பெஞ்சமினைப் பற்றியதென்ன? அவர் முழுநேர சுவிசேஷ ஊழியரானார். கடந்த சில ஆண்டுகளாக, பயணக் கண்காணியாக யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளைச் சேவிக்கும் சிறந்த சிலாக்கியம் அவருக்கு இருந்திருக்கிறது.
[அடிக்குறிப்பு]
*பிரேதக்குழியினுள் பூக்களை அல்லது ஒரு கைப்பிடி மண்ணைப் போடுவதில் எந்தத் தவறும் இல்லையென சிலர் கருதலாம். எனினும், மரித்தோரைச் சாந்திப்படுத்தும் ஒரு வழியாக அந்தச் சமுதாயம் அதைக் கருதினால், அல்லது பொய்மத பாதிரியால் தலைமை வகித்து நடத்தப்படும் ஓர் ஆசாரத்தின் பாகமாக அது இருந்தால், அப்பழக்கத்தைக் கிறிஸ்தவர் தவிர்ப்பார்.—மார்ச் 22, 1977, ஆங்கில விழித்தெழு! பக்கம் 15-ஐக் காண்க.