“பனித்துளிகளைப் பிறப்பித்தவர் யார்?”
பத்தொன்பதாம் நூற்றாண்டு இதழாசிரியர் ஒருவர் பனித்துளிகளை இவ்வாறு வர்ணித்தார்: “பூமியின் நீர் ஆபரணம், காற்றால் உருவானது.” பூர்வகால முற்பிதாவாகிய யோபுவிடம் நம்முடைய படைப்பாளர் இவ்வாறு கேட்டார்: “பனித்துளிகளைப் பிறப்பித்தவர் யார்?” (யோபு 38:28, NW) இந்த அருமையான பனியின் தெய்வீக ஆரம்பத்தைப் பற்றியே யோபுவிடம் கடவுள் நினைப்பூட்டிக் கொண்டிருந்தார்.
பளபளவென மின்னும் ஆபரண அழகோடு மட்டுமல்லாமல், பைபிளில் பனியானது ஆசீர்வாதம், வளமை, செழிப்பு, உயிர் பாதுகாப்பு ஆகியவற்றோடும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. (ஆதியாகமம் 27:28; உபாகமம் 33:13, 28; சகரியா 8:12) இஸ்ரவேலின் வெப்பமிக்க, மழையற்ற பருவத்தில், ‘எர்மோன் பனி’ தேசத்தின் பயிரைப் பாதுகாப்பதன் மூலம் அதன் மக்களைப் பாதுகாத்தது. எர்மோன் மலையின் அடர்ந்த காடுகளும் பனிபடர்ந்த சிகரங்களும், இன்றும்கூட இரவில் நீராவியை தோற்றுவித்து ஏராளமான பனித்துளியை உருவாக்குகின்றன. சங்கீதக்காரன் தாவீது, இந்தப் பனி தரும் புத்துணர்ச்சியை யெகோவாவின் உடன் வணக்கத்தாரோடு ஒற்றுமையாக வாசம்பண்ணும் இன்பமான அனுபவத்திற்கு ஒப்பிட்டார்.—சங்கீதம் 133:3.
தீர்க்கதரிசியாகிய மோசே இஸ்ரவேலருக்கு வழங்கிய அறிவுரைகள் பனித்துளிகளைப் போல் இதமாகவும் புத்துயிரளிப்பதாகவும் இருந்தன. அவர் சொன்னார்: “மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்.” (உபாகமம் 32:2) இன்று, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய ஜீவனளிக்கும் நற்செய்தியை யெகோவாவின் சாட்சிகள் பூமியின் கடைக்கோடிகள் வரை அறிவித்து வருகிறார்கள். (மத்தேயு 24:14) கடவுள் இந்த அழைப்பைக் கொடுக்கிறார்: “தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.” (வெளிப்படுத்துதல் 22:17) எல்லா தேசங்களிலும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் கடவுளிடமிருந்து வரும் ஆவிக்குரிய புத்துணர்ச்சி தரும் இந்த அழைப்பை ஏற்கிறார்கள்; அந்தப் புத்துணர்ச்சியே நித்திய காலத்திற்கும் ஜீவனை காக்கும்.