பைபிள் கையெழுத்துப் பிரதிக்கு கல்விமான் மாற்றிய தேதி
கார்ஸ்டன் பீட்டர் தீடெ பண்டைய புல்தாள் வரைவு ஆய்வின் (பேபைராலஜி) ஜெர்மானிய வல்லுனர். அவர் (மெக்டெலன் புல்தாள் பிரதி என்று அறியப்பட்ட) மத்தேயு சுவிசேஷ கையெழுத்துப் பிரதியின் மூன்று சிறு துண்டு புல்தாள்கள் முதல் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என ஆணித்தரமாக குறிப்பிடுகிறார்.
எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான ஒரு வியாபார ஆவணத்தோடு (மத்தேயு 26-ம் அதிகாரத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய) இந்தத் துண்டுகளை தீடெ ஒப்பிட்டார்; அப்போது அந்த எகிப்திய ஆவணம், “பொதுவாக பார்ப்பதற்கும், வடிவத்திலும், அவற்றில் அடங்கியிருந்த தகவலிலும் மெக்டெலன் புல்தாள் பிரதியை அச்சில்வார்த்ததுபோல் இருந்தது” என்பதை அவர் கவனித்தார். தீடெயும் உடன் ஆசிரியரான மேத்யூ டங்கோனாவும் தங்கள் புத்தகமாகிய இயேசுவுக்கு கண்கண்ட சாட்சி—சுவிசேஷங்களின் தோற்றம் பற்றிய கையெழுத்துப் பிரதியின் வியப்பூட்டும் புதிய ஆதாரம் (ஆங்கிலம்) என்பதில் தங்கள் கருத்தைத் தெரிவிக்கின்றனர். அவர்களுடைய கருத்து? அந்த இரண்டு ஆவணங்களுக்கு இடையே அமைந்துள்ள ஒத்திசைவு அவை ஒரே காலப்பகுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதே. எப்போது? அந்த வியாபார ஆவணம், “‘ஆண்டவராகிய நீரோவின் 12-ம் வருடம், இபிஃப் 30’—நம்முடைய காலண்டரின்படி [பொ.ச.] 66-ம் வருடம், ஜூலை 24” என தேதியிடப்பட்டிருக்கிறது.
“இந்தத் தேதி அச்சுப்பிசகாமல் துல்லியமாக இருந்தால், குறிப்பிடத்தக்க வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கும். ஏனெனில் மத்தேயு சுவிசேஷ கையெழுத்துப் பிரதியின் தேதி, இந்த ஆவணம் எழுதப்பட்ட அதே நூற்றாண்டுக்கு அதை உரித்தாக்குகிறது” என டின்டேல் புல்லட்டின் என்ற பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் ஃபிலிப் டபிள்யூ. கம்ஃபர்ட். அது, இருக்கின்ற எல்லா துண்டுகளிலும் மெக்டெலன் புல்தாள் பிரதியை மிகப் பழமையான சுவிசேஷ துண்டாக ஆக்கும்.
[பக்கம் 29-ன் படம்]
மெக்டெலன் புல்தாள் பிரதி, அதன் உண்மையான அளவில்
[படத்திற்கான நன்றி]
By permission of the President and Fellows of Magdalen College, Oxford