உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w98 12/15 பக். 26-29
  • சிகிச்சை உரிமை—நீதிமன்றத் தீர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சிகிச்சை உரிமை—நீதிமன்றத் தீர்ப்பு
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • துணை தலைப்புகள்
  • சமுதாய ஒழுங்கும் ஒழுக்கமும்
  • எதிர்பாராமல் கிடைத்த ஊக்குவிப்பு
  • தீர்ப்பு
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
w98 12/15 பக். 26-29

சிகிச்சை உரிமை—நீதிமன்றத் தீர்ப்பு

சர்வலோகத்திலேயே மிகவும் உன்னதமான ஒரு நபர், தகவலறிந்து அதன் அடிப்படையில் நாம் தெரிவு செய்வதை ஆதரிக்கிறார். அவர் நம் படைப்பாளர். மனிதரின் தேவைகளைக் குறித்து எல்லையில்லாத அறிவை அவர் பெற்றிருப்பதால் அவர் அநேக அறிவுரைகளையும் எச்சரிப்புகளையும் தருகிறார். எந்தப் பாதையில் செல்வது என்பதைக் குறித்து வழிநடத்துதலையும் தருகிறார். அதே சமயத்தில் அறிவுக்கூர்மையுள்ள அவருடைய படைப்புகளுக்கு அவர் கொடுத்திருக்கும் தெரிவு செய்யும் சுயாதீனத்தையும் அவர் மதிக்கிறார். அவருடைய தீர்க்கதரிசி மோசே கடவுளுடைய கருத்தை இங்கே வெளிப்படுத்தினார்: “நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன்,  . . . ஆகையால் நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்து[கொள்].”—உபாகமம் 30:19.

இந்த நியமம் மருத்துவ துறைக்குப் பொருந்துகிறது. அறிவூட்டப்பட்ட தெரிவு (informed choice) அல்லது விவரமறிந்து சம்மதம் தெரிவிக்கும் (informed consent) பழக்கம் ஜப்பானிலும் மற்ற நாடுகளிலும் வரவேற்பை பெற்றுவருகிறது. முன்பெல்லாம் இப்படி இல்லை. டாக்டர் மிச்சிடாரோ நாக்கமூரா விவரமறிந்து சம்மதம் தெரிவிப்பதை இவ்வாறு விவரிக்கிறார்: “என்ன விதமான சிகிச்சையை பெற விருப்பம் என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கு நோயாளிக்கு உரிமை இருப்பதை மருத்துவர் மதித்து, தெளிவாக புரிந்துகொள்ள முடிகிற நடையில் என்ன நோய் வந்திருக்கிறது, என்ன சிகிச்சை அளிக்கப்படப் போகிறது, என்ன பக்கவிளைவுகள் வரக்கூடும் என்பதை அவர் நோயாளிக்கு விளக்கவேண்டும்.”—ஜப்பான் மெடிக்கல் ஜர்னல்.

பல வருடங்களாக ஜப்பானில் உள்ள மருத்துவர்கள் நோயாளிகளுக்கு இந்த முறையில் சிகிச்சையளிப்பதை எதிர்த்து பல்வேறு சாக்குப்போக்குகளை சொல்லி வந்திருக்கிறார்கள். நீதிமன்றங்களும் இந்த மருத்துவ பழக்கத்தைக் குறித்து தீர்ப்பு சொல்வதை ஒத்திப்போட்டுக்கொண்டே இருந்திருக்கின்றன. இதன் காரணமாகவே, 1998, பிப்ரவரி 9 அன்று டோக்கியோ உயர்நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி டாக்கியோ இனாபி விவரமறிந்து சம்மதம் தெரிவிப்பதற்கு ஆதரவாக தீர்ப்பு சொன்னது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியானது. அந்தத் தீர்ப்பு என்ன, மேலும் அதை நீதிமன்றத்துக்குக் கொண்டுவந்த அந்த சம்பவம் என்ன?

ஜூலை 1992-ல் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரான 63 வயது மிசாயி டாக்கிடா, டோக்கியோ பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மருத்துவமனைக்கு சென்றாள். கல்லீரலில் அவளுக்கு புற்றுநோய்க் கட்டி வளர்ந்திருந்தது. அறுவை சிகிச்சை செய்து அதை அகற்றவேண்டும். இரத்தத்தைப் பயன்படுத்தக்கூடாது என்ற பைபிளின் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதில் அவள் மிகவும் கவனமாக இருந்தாள். ஆகவே இரத்தமில்லாமல் தனக்கு சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என்றும் அதையே தான் விரும்புவதாகவும் மருத்துவர்களிடம் தெளிவாக சொல்லிவிட்டாள். (ஆதியாகமம் 9:3, 4; அப்போஸ்தலர் 15:28) அவள் எடுத்த இந்தத் தீர்மானத்தினால் வரக்கூடிய எந்த விளைவுக்கும் மருத்துவர்களும் மருத்துவமனையும் பொறுப்பில்லை என்று கூறும் விடுதலைப் பத்திரத்தை மருத்துவர்கள் ஏற்றுக்கொண்டனர். அவளுடைய விருப்பத்தின்படியே செய்யப்படும் என்பதாக மருத்துவர்கள் உறுதியளித்தனர்.

ஆனால் அவர்கள் சொன்ன வார்த்தையை காப்பாற்றவில்லை. அறுவை சிகிச்சை முடிந்து, மிசாயி இன்னும் மயக்கம் தெளியாத நிலையில் இருந்தபோது தெள்ளத்தெளிவாக அவள் வெளிப்படுத்தியிருந்த விருப்பங்களுக்கு நேர்மாறாக அவளுக்கு இரத்தமேற்றப்பட்டிருந்தது. அனுமதியில்லாமல் அவர்கள் இரத்தமேற்றியதை இரகசியமாக வைக்க எடுத்த முயற்சி வீணாயிற்று, ஏனென்றால் மருத்துவமனையில் வேலைபார்த்துவந்த ஒருவர் விஷயத்தை ஒரு செய்தி நிருபரிடம் போட்டு உடைத்துவிட்டார். அனுமதியில்லாமல் தனக்கு இரத்தம் ஏற்றப்பட்டதை கேள்விப்பட்ட அந்த உண்மையான கிறிஸ்தவ பெண் மனதுக்குள் பட்ட பாட்டை உங்களால் புரிந்துகொள்ளமுடிகிறதா? மருத்துவர்கள் தங்கள் வார்த்தையைக் காப்பாற்றுவார்கள், தன் மத நம்பிக்கைகளை மதிப்பார்கள் என்று மருத்துவர்கள்மீது அபாரமான நம்பிக்கை வைத்திருந்தாள் அந்த அப்பாவிப் பெண். இந்த மீறுதலினால் மருத்துவர்/நோயாளி உறவு முறிந்துபோனது. அதனால் ஏற்பட்ட மனவேதனையாலும் இந்த நிலை மற்றவர்களுக்கு வந்துவிடக்கூடாதே என்ற நல்லெண்ணத்தினாலும் அவள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாள்.

சமுதாய ஒழுங்கும் ஒழுக்கமும்

வழக்கை விசாரித்த டோக்கியோ மாவட்ட நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் மருத்துவர்களுக்கு ஆதரவாகவும் விவரமறிந்து சம்மதம் தெரிவிக்கும் உரிமைக்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கினார்கள். மார்ச் 12, 1997 அன்று அவர்கள் வெளியிட்ட தீர்ப்பு, இரத்தமில்லாத சிகிச்சைக்காக செய்யப்படும் எந்த ஒப்பந்தமும் சட்டப்படி செல்லாது என்று கூறுகிறது. ஒரு நெருக்கடியான நிலை ஏற்பட்டால்கூட இரத்தம் செலுத்தப்படாது என்று ஒரு விசேஷமான ஒப்பந்தத்திற்கு மருத்துவர் உடன்படுவது கோஜோ ரையோசோக்குவைa அல்லது சமுதாய நியதியை மீறுவதாக இருக்கும். உயிரைக் காப்பாற்றுவதுதான் மருத்துவரின் கடமை. ஆகவே நோயாளியின் மத நம்பிக்கைகள் என்னவாக இருந்தாலும் இப்படிப்பட்ட ஒரு ஒப்பந்தம் ஆரம்பத்திலிருந்தே சட்டப்படி செல்லாது என்பது அவர்களுடைய கருத்து. ஒட்டு மொத்தமாக பார்த்தால், ஒரு நோயாளியின் எந்த ஒரு மருத்துவ வேண்டுகோளுக்கும் மேலாக மருத்துவரின் தொழில்முறை கருத்துக்கே அதிக முக்கியத்துவம் தரப்படவேண்டும் என்று முடிவுசெய்தனர்.

மேலுமாக இதே காரணங்களுக்காக, மருத்துவர் அறுவை சிகிச்சையில் என்னென்னவெல்லாம் செய்வார் என்பதையும், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் ஆபத்துகளையும் விளக்கும்படி எதிர்பார்க்கப்பட்டாலும் ஒரு மருத்துவர் “இரத்தம் செலுத்தப்போகிறாரா இல்லையா” என்பதை சொல்லவேண்டியதில்லை என்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டார்கள். அவர்கள் அளித்த தீர்ப்பு: “எந்தச் சூழ்நிலையிலும் இரத்தமேற்றக்கூடாது என்ற வாதியின் விருப்பத்தைப் புரிந்துகொண்டு அவளுடைய விருப்பங்கள் நிறைவேற்றப்படும் என்று பாவனை செய்து, அவளை அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ளச்செய்வதன் மூலம் பிரதிவாதிகளான மருத்துவர்கள் செய்வது சட்டவிரோதமானது என்றோ தவறானது என்றோ முடிவுசெய்து விடமுடியாது.” மருத்துவர்கள் அப்படி செய்யாவிட்டால் நோயாளி ஆபரேஷனும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு மருத்துவமனையிலிருந்து கிளம்பிவிடுவார் என்பது அவர்கள் கருத்தாகும்.

விவரமறிந்து சம்மதம் தெரிவிப்பதை ஆதரிக்கும் ஆட்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார்கள். டாக்கிடா வழக்கின் தீர்ப்பையும் ஜப்பானில் விவரமறிந்து சம்மதம் தெரிவிப்பது எதையெல்லாம் உட்படுத்தும் என்பதையும் ஆராய்ந்த முதன்மை உள்நாட்டு சட்ட வல்லுநரான பேராசிரியர் டாக்குவோ யாமடா இவ்வாறு எழுதினார்: “இந்தத் தீர்ப்பின் வாதம் சட்டப்படி செல்லுபடியாகும் என்று நிலைநாட்டப்பட்டுவிட்டால் இரத்தமேற்றிக்கொள்ள மறுப்பதும் விவரமறிந்து சம்மதம் தெரிவிப்பதின் சட்ட நியதியும் படிப்படியாக மறைந்துபோய்விடும்.” (ஹோக்காக்கு கையோஷிட்சு சட்ட இதழ்) விருப்பத்துக்கு மாறாக வற்புறுத்தப்பட்ட இந்த இரத்தமேற்றுதல் “நம்பிக்கைத்துரோகம், கோழைத்தனமாக மறைந்து நின்று தாக்குவதற்கு ஒப்பானது” என்பதாக கடுமையான வார்த்தைகளில் அதை அவர் கண்டித்தார். நம்பிக்கையை கொன்றுபோடும் இத்தகைய செயல் “ஒருபோதும் அனுமதிக்கப்படக்கூடாது” என்பதாக பேராசிரியர் யாமடா மேலுமாகச் சொன்னார்.

மிசாயி பயந்த சுபாவமுள்ளவள். அதனால் செய்திகளில் அடிக்கடி அவளுடைய பெயர் அடிபடும் என்பதை நினைத்தபோது அவளுக்கு சங்கடமாக இருந்தது. ஆனால் யெகோவாவின் பெயரையும் இரத்தத்தின் புனிதத்தன்மையின் சம்பந்தமாக அவருடைய நீதியுள்ள தராதரங்களையும் நிலைநாட்டுவதில் தனக்கும் ஒரு பங்கு இருப்பதை நினைத்துப்பார்த்த போது தான் செய்ய வேண்டியதை அவள் தீர்மானித்துவிட்டாள். தன்னுடைய சட்ட ஆலோசகருக்கு இவ்வாறு எழுதினாள்: “நான் தூசிக்குச் சமானம். என்னைப்போன்ற உதவாக்கரையை கடவுள் ஏன் கருவியாக பயன்படுத்துகிறார் என்று நான் நினைப்பதுண்டு. ஆனால் யெகோவா—கல்லுகளை பேச வைக்க வல்லமையுள்ளவர்—சொல்வதை செய்ய நான் முயலும்போது அவர் என்னைப் பலப்படுத்துவார்.” (மத்தேயு 10:18; லூக்கா 19:40) விசாரணையின்போது நம்பிக்கைத்துரோகத்தின் விளைவாக தான் அனுபவித்த உணர்ச்சிப்பூர்வமான வேதனையை சாட்சிக்கூண்டில் நிற்கையில் நடுங்கும் குரலில் அவள் விவரித்தாள்: “நான் கற்பழிக்கப்பட்ட பெண்ணைப் போல உணர்ந்தேன்.” அவள் நீதிமன்றத்தில் அன்று கொடுத்த வாக்குமூலத்தைக் கேட்டு அநேகர் கண்ணீர்வடித்தார்கள்.

எதிர்பாராமல் கிடைத்த ஊக்குவிப்பு

மாவட்ட நீதிமன்றம் இப்படித் தீர்ப்பளித்துவிட்டதால் வழக்கு உடனடியாக உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. மேல்முறையீடுகளை ஆராயும் நீதிமன்றத்தில் வழக்கு ஜூலை 1997-ல் முதல் முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது வெளிறிப்போன முகத்தோடும் ஆனால் திடத்தீர்மானத்தோடும் காணப்பட்ட மிசாயி சக்கர நாற்காலியில் இருந்தாள். திரும்பவும் புற்றுநோய் வளர்ந்திருந்தது, அவள் முன்பிருந்ததைவிட இன்னும் பலவீனமாக ஆகியிருந்தாள். நீதிமன்றம் எடுக்கவிருந்த நடவடிக்கையைப் பற்றி முதன்மை நீதிபதி சொன்னபோது மிசாயி மிகவும் உற்சாகமடைந்தாள், அது வழக்கில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. நோயாளியின் விருப்பத்துக்கு இசைவாக செய்வதாக சொல்லி ஆனால் அதை அலட்சியப்படுத்திவிட்டு இரகசியமாக வேறு ஒன்றைச் செய்வதற்கு மருத்துவருக்கு உரிமை உண்டு என்று லோயர் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. ஆனால் இந்தத் தீர்ப்பை அப்பீல் கோர்ட் ஏற்க மறுப்பதை அவர் தெளிவாகச் சொன்னார். “ஷிராஷிமு பெக்காராஸு யோராஷிமு பேஷி”b அதாவது “நோயாளிக்கு எந்தத் தகவலும் தெரிவிக்க வேண்டாம், நீங்களே கதி என இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்” என்ற கொள்கையை நீதிமன்றம் ஆதரிக்காது என்று முதன்மை நீதிபதி சொன்னார். அதற்கு மிசாயி பிறகு இவ்வாறு சொன்னாள்: “நீதிபதியின் பாரபட்சமற்ற கருத்தைக் கேட்கையில் எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை, மாவட்ட நீதிமன்றம் கூறின தீர்ப்பிலிருந்து இது முற்றிலும் வித்தியாசமானது. யெகோவாவிடம் நாள்தோறும் கேட்டுக்கொண்டிருந்ததெல்லாம் இதுவே.”

அதற்கடுத்த மாதம், அன்புள்ள குடும்பத்தாரும், அவளுடைய உறுதியான நம்பிக்கையை புரிந்துகொண்டு அதற்கு மதிப்புக்கொடுத்த வேறொரு மருத்துவமனையின் மருத்துவ பணியாளர் குழுவும் அவளைச் சுற்றி இருக்கையில் மிசாயியின் உயிர் பிரிந்தது. அவள் பிரிவு மிகுந்த துக்கத்தை ஏற்படுத்திய போதிலும் அவளுடைய மகன் மசாமியும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் அவளுடைய விருப்பப்படி அந்த வழக்கை நடத்தி முடித்தே ஆகவேண்டும் என்று தீர்மானமாயிருந்தார்கள்.

தீர்ப்பு

கடைசியாக, 1998, பிப்ரவரி 9 அன்று, லோயர் கோர்ட் அளித்த தீர்மானத்தை தள்ளுபடி செய்து தங்கள் தீர்ப்பை உயர்நீதி மன்றத்தின் மூன்று நீதிபதிகள் வழங்கினர். கோர்ட் அறையில் நிருபர்களும் கல்வியாளர்களும் இந்த வழக்கை கவனமாக கூர்ந்து கவனித்துவந்த மற்றவர்களும் ஏராளமாக குழுமியிருந்தார்கள். முக்கிய செய்தித்தாள்களும் டெலிவிஷன் நிலையங்களும் இந்தத் தீர்ப்பைக் குறித்து அறிக்கை செய்தன: “சிகிச்சைக்கு நோயாளிகள் மறுப்பு தெரிவிக்கலாம்—நீதிமன்றம்”; “இரத்தமேற்றுதல் ஒரு உரிமை மீறல்—உயர்நீதிமன்றம்”; “வற்புறுத்தி இரத்தமேற்றிய மருத்துவருக்கு கோர்ட்டில் தலைகுனிவு”; “இரத்தமேற்றப்பட்டதற்காக யெகோவாவின் சாட்சிக்கு நஷ்ட ஈடு.”

தீர்ப்பு பற்றி செய்யப்பட்ட அறிக்கைகள் திருத்தமாக இருந்தன, இதற்கு பெரிய அளவில் வரவேற்பும் கிடைத்தது. த டெய்லி யோமியுரி இப்படி அறிவித்தது: “நோயாளிக்கு விருப்பமில்லாத மருத்துவ சிகிச்சைமுறைகளை கையாளுவது முறையில்லை” என்று நீதிபதி டேக்கியோ இனாபா குறிப்பிட்டார். அது தெளிவாக இவ்வாறும் சொன்னது: “[இரத்தமேற்றிய] மருத்துவர்கள் அவளுக்கு விருப்பமான சிகிச்சை முறையை தெரிந்தெடுப்பதற்கான வாய்ப்பை பறித்துவிட்டனர்.”

உயிருக்கு ஆபத்தான ஒரு நிலைமையிலும் இரத்தமேற்றப்படாது என்பதாக இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டு செய்த ஒப்பந்தத்திற்கு இந்த வழக்கில் போதிய ஆதாரமில்லை என்பதாக நீதிமன்றம் கருதியபோதிலும் இப்படிப்பட்ட ஒரு ஒப்பந்தமே செல்லாது என்று கூறின லோயர் கோர்ட்டின் கருத்தை நீதிபதிகள் கடுமையாக எதிர்த்தனர் என்பதாக ஆஸாஹி ஷிம்புன் என்ற ஜப்பானிய செய்தித்தாள் சுட்டிக்காட்டியது. அது குறிப்பிட்டதாவது: “சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்குமிடையே, எந்தச் சூழ்நிலைமையிலும் இரத்தம் கொடுக்கப்படக் கூடாது என்ற முன்பே ஒப்புக்கொண்டு செய்யப்பட்ட ஒப்பந்தம் ஒன்று இருக்குமென்றால் அது சமுதாய ஒழுங்குக்கு எதிராக இருப்பதாக நீதிமன்றம் கருதாது, ஆகவே அது செல்லுபடியாகாது.” மேலுமாக “சாவு எல்லாருக்குமே ஒரு நாள் வரத்தானே போகிறது, ஆகவே மரணத்தை நோக்கிச் செல்லும் அந்தப் பாதையில் நடப்பவற்றை தனி நபரே தீர்மானித்துக்கொள்ளலாம்” என்ற நீதிபதியின் கருத்தை இந்தச் செய்தித்தாள் சுட்டிக்காட்டியது.

யெகோவாவின் சாட்சிகள் இந்த விஷயத்தை ஆழமாக ஆராய்ந்திருக்கிறார்கள்; வாழ்வதற்கு மிகச் சிறந்த வழியை தாங்கள் தெரிந்துகொண்டிருப்பதாக உறுதியாக நம்புகிறார்கள். இது இரத்தமேற்றுதலினால் வரக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்த்து, கடவுளுடைய சட்டத்திற்கு இசைவாக அநேக நாடுகளில் பரவலாக இப்போது செய்யப்பட்டுவரும் இரத்தமில்லாத சிகிச்சை முறைகளை பயன்படுத்துவதை உட்படுத்துகிறது. (அப்போஸ்தலர் 21:25) ஜப்பானில் பிரசித்திபெற்ற, அரசியல் சாசன சட்ட பேராசிரியர் இப்படி குறிப்பிட்டார்: “உண்மையில் பார்த்தால், சர்ச்சைக்குரியதாக இருக்கும் இந்த [இரத்தமேற்றுதலை] மறுப்பதால் ‘எப்படி சாவது’ என்பதை அல்ல ஆனால் எப்படி வாழ்வது என்பதைத் தான் ஒருவர் தெரிந்துகொள்கிறார்.”

உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, நிலைமைக்கேற்ப முடிவுசெய்வதற்கு மருத்துவர்களுக்கிருக்கும் உரிமை என சிலர் நினைக்கும் அளவுக்கு இல்லை என்பதற்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆகவே இன்னும் பல மருத்துவமனைகள் நல்லொழுக்க நெறி முறைகளை நிலைநாட்ட வேண்டும். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மொத்தத்தில் வரவேற்கப்பட்டிருக்கிறது; தங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை தீர்மானிக்க உரிமையில்லாத நோயாளிகளுக்கு உற்சாகமளிப்பதாகவும் உள்ளது, ஆனால் எல்லாரும் இதை முழுமனதோடு ஏற்றுக்கொள்ளவில்லை. அரசு மருத்துவமனையும் மூன்று மருத்துவர்களும் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆகவே சர்வலோகத்தின் பேரரசர் செய்வது போலவே ஜப்பானின் உச்ச நீதிமன்றமும் நோயாளிக்கு உரிமை அளிக்குமா என்பதைப் பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.

[அடிக்குறிப்புகள்]

a சட்டத்தில் தெளிவாக சொல்லப்படாத கருத்து, ஒரு மாஜிஸ்ட்ரேட் தன் இஷ்டத்திற்கு விளக்கமளித்து பொருத்துகிறார்.

b இது டோக்குவாகா காலத்தின்போது குடிமக்களின்மீது எவ்வாறு ஆட்சிசெலுத்த வேண்டும் என்பதன் பேரில் பிரபுக்களுடைய கருத்தாக இருந்தது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்