சுமைகளும் சுகம்தரும்—யெகோவாவின் சேவையில்
ஜார்ஜ் ஸ்கிப்பியோ என்பவர் சொன்னது
அது 1945-ஆம் வருடம், டிசம்பர் மாதம். ஆஸ்பத்திரி வார்டில் கிடந்தேன். கைகளும் பாதங்களும் தவிர வேறெதுவுமே விளங்கவில்லை. இந்த முடக்குவாதம் கொஞ்ச நாளுக்குத்தான் என்று நான் நினைத்தேன். ஆனால் மற்றவர்களுக்கோ இனி நான் எழுந்து நடப்பேன் என்ற நம்பிக்கை இல்லை. 17 வயதில் இளமைத் துடிப்போடு ஓடியாடிக் கொண்டிருந்த எனக்கு இப்படியொரு சோதனை! மற்றவர்கள் பயந்தபடி எனக்கு எதுவும் நடந்துவிடாது என நினைத்தேன். எத்தனை எத்தனையோ திட்டம்போட்டு வைத்திருந்தேன்; அதற்கடுத்த வருடம் என் முதலாளியோடு இங்கிலாந்துக்கு செல்லவும் திட்டமிட்டிருந்தேன்.
நாங்கள் வசித்த செ. ஹெலினா தீவெங்கும் இளம்பிள்ளைவாதம் பரவியிருந்தது. அது என்னையும் விட்டுவைக்கவில்லை. 11 பேரின் உயிரைக் குடித்து, எண்ணற்றவர்களை முடமாக்கியது. வாழ்ந்த கொஞ்ச காலம், இனி வாழவிருந்த காலம் போன்றவற்றை யோசித்துப் பார்ப்பதற்கு எனக்கு நேரத்திற்கு பஞ்சமேயில்லை. படுக்கையில் கிடந்தபடியே இதை யோசிக்க யோசிக்க, வியாதியின் மத்தியிலும் சந்தோஷப்படுவதற்கான காரணம் இருப்பது புரிந்தது.
எளிய ஆரம்பம்
என் அப்பா டாம் ஒரு போலீஸ்காரர், பாப்டிஸ்ட் சர்ச்சில் உதவி குருவாகவும் பணியாற்றினார். 1933-ல், எனக்கு ஐந்து வயதாயிருக்கும்போது, அப்பாவுக்கு இரண்டு யெகோவாவின் சாட்சிகள் சில புத்தகங்களைக் கொடுத்தார்கள். அவர்கள் பயனியர்கள், அதாவது முழுநேர ஊழியம் செய்தவர்கள். கொஞ்ச நாளுக்கு எங்கள் தீவுக்கு வந்திருந்தார்கள்.
கடவுளின் சுரமண்டலம் (ஆங்கிலம்) என்பது அவர்கள் கொடுத்த புத்தகங்களில் ஒன்று. இதை வைத்துத்தான் அப்பா எங்களோடும் ஆர்வம் காட்டிய மற்றவர்களோடும் பைபிளைப் படித்தார். அதில் ஆழமான விஷயங்கள் இருந்ததால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனால் அதில் சொல்லப்பட்ட ஒவ்வொரு வசனத்தையும் என் பைபிளில் குறித்துவைத்துக்கொண்டேன். நாங்கள் படித்துக்கொண்டிருந்ததுதான் உண்மை என அப்பா சீக்கிரத்திலேயே புரிந்து கொண்டார். பாப்டிஸ்ட் சர்ச்சில் இவ்வளவு காலம் தான் கற்றுக்கொடுத்த விஷயங்கள் தவறு என்றும் தெரிந்து கொண்டார். மற்றவர்களிடம் இதைப் பற்றி பேச ஆரம்பித்தார். திரித்துவம், எரிநரகம், அழியாத ஆத்துமா இதெல்லாம் சுத்தப் பொய் என சர்ச்சிலேயே பிரசங்கிக்க தொடங்கினார். இதனால் சர்ச்சில் அமளி ஏற்பட்டது.
கடைசியில் இந்தப் பிரச்சினைக்கு முடிவுகட்ட அங்கு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. “யாரெல்லாம் பாப்டிஸ்ட் கட்சி?” என கேட்கப்பட்டது. முக்கால்வாசிபேர் எழுந்து நின்றனர். அடுத்ததாக, “யாரெல்லாம் யெகோவா கட்சி?” என கேட்கப்பட்டபோது சுமார் 10, 12 பேர் நின்றார்கள். அவர்களை சர்ச்சை விட்டு வெளியேறச் சொன்னார்கள்.
இதுதான் செ. ஹெலினாவில் ஒரு புதிய மதம் எளிமையாய் ஆரம்பமான கதை. அப்பா ஐக்கிய மாகாணங்களிலுள்ள உவாட்ச் டவர் சொஸைட்டியின் தலைமையகத்தைத் தொடர்புகொண்டார். பதிவுசெய்யப்பட்ட பைபிள் பேச்சுக்களை பொதுமக்களுக்குப் போட்டுக் காண்பிப்பதற்காக ஒரு ட்ரான்ஸ்க்ரிப்ஷன் மெஷினைக் கேட்டார். ஆனால் அந்த மெஷின் மிகப் பெரியதாய் இருந்ததால் செ. ஹெலினாவுக்கு அனுப்புவது மிகக் கடினம் என சொன்னார்கள். அதற்குப் பதிலாக ஒரு சிறிய ஃபோனோகிராஃப் ப்ளேயரை அனுப்பினார்கள். அதன்பின் இன்னும் இரண்டு ப்ளேயர்களை சகோதரர்கள் ஆர்டர் செய்தார்கள். நடந்தும் கழுதைமீது சவாரிசெய்தும் அவர்கள் தீவுவாசிகளுக்கு ராஜ்ய செய்தியைப் பிரசங்கித்தார்கள்.
செய்தி எந்தளவுக்கு பரவியதோ அந்தளவுக்கு எதிர்ப்பும் அதிகமானது. “ஸ்கிப்பியோ வந்தாச்சு, ரெக்கார்ட போட்டாச்சு, காது என்னாச்சு, காணாம போயாச்சு!” என்று ஸ்கூல் பசங்க பாடுவாங்க. பிரண்ட்ஸுங்க மனம் கோணாமல் நடக்க விரும்பிய மாணவனான எனக்கு இது ஒரு பெரிய சோதனையாக இருந்தது. ஆனால் இதையெல்லாம் சகித்திருக்க எனக்கு உதவியது எது தெரியுமா?
நாங்கள் குடும்பாக பைபிளைத் தவறாமல் படித்ததுதான். எங்களுடையது பெரிய குடும்பம். நாங்கள் ஆறு பிள்ளைகள். தினமும் காலை டிபன் சாப்பிடுவதற்கு முன்பும் ஒன்றுசேர்ந்து பைபிள் படிப்போம். பல வருடங்களாக சத்தியத்தில் நிலைத்திருக்க எங்கள் குடும்பத்திற்கு உதவியிருப்பது இதுதான் என்று அடித்து சொல்வேன். சிறுவயதிலேயே எனக்கு பைபிள் மீது பிரியம் ஜாஸ்தி. இப்போது வரை, தவறாமல் பைபிள் படிக்கும் பழக்கம் உண்டு. (சங்கீதம் 1:1-3) 14 வயதில் பள்ளிப் படிப்பை முடிப்பதற்குள் சத்தியம் என் ரத்தத்தில் ஊறிவிட்டது. மனதில் யெகோவாவிற்கான பயபக்தி நிறைந்திருந்தது. இதுதான், சோதனைகளின் மத்தியிலும் யெகோவாவில் சந்தோஷமாயிருக்க எனக்கு உதவியது.
தொடரும் இன்பதுன்பங்கள்
சிறுவயது சம்பவங்களையும் எதிர்காலத்தையும் பற்றி யோசித்தவாறே ஆஸ்பத்திரியில் படுத்திருந்தேன். பைபிளின்படி கடவுள் எனக்கு இந்த வியாதியை தண்டனையாக கொடுக்கவும் இல்லை, அது ஒரு சோதனையும் இல்லை என்பது தெளிவாய் தெரிந்தது. (யாக்கோபு 1:12, 13) இருந்தாலும் போலியோவால் பாதிக்கப்பட்டது ஒரு கொடுமை என்றுதான் சொல்வேன். வாழ்நாள் முழுவதும் அவதிப்பட வேண்டுமே.
உடல்நிலை தேறியபோது மறுபடியும் ‘நடைபயில’ ஆரம்பித்தேன். என் கை தசைகளில் சில செயலிழந்தன. ஒவ்வொரு நாளும் கணக்கு வழக்கில்லாமல் விழுந்து எழுந்திருத்தேன். இருந்தாலும் 1947-க்குள், விடாமுயற்சியினாலும் உள்ளப்பூர்வமான ஜெபத்தினாலும் ஒரு தடியின் உதவியோடு நடக்க ஆரம்பித்தேன்.
அப்போதுதான் டாரிஸ் என்ற இளம் பெண்ணை காதலித்தேன். அவளும் என் மதத்தைச் சேர்ந்தவள்தான். அப்போது எங்களுக்கு கல்யாணத்தை பற்றி நினைக்கிற வயதில்லை. ஆனால் எப்படியாவது விடாமல் முயற்சி செய்து இன்னும் நன்றாய் நடக்க வேண்டுமென்ற வைராக்கியம் எனக்குள் ஏற்பட்டது. வேலையையும் விட்டுவிட்டேன். ஏனென்றால் அந்தச் சம்பளத்தை வைத்து மண வாழ்க்கையை ஓட்ட முடியாது. ஆகவே சொந்தமாக ஒரு டென்ட்டல் லெபாரட்டிரியை ஆரம்பித்து, அடுத்த இரண்டு வருடங்களாக அதை நடத்திவந்தேன். 1950-ல் எங்கள் திருமணம் நடந்தது. அதற்குள், ஒரு சிறிய கார் வாங்குமளவுக்கு பணம் சம்பாதித்திருந்தேன். இப்போது என்னால் சகோதரர்களை கூட்டங்களுக்கும் வெளி ஊழியத்திற்கும் கூட்டிக்கொண்டு போக முடிந்தது.
தீவில் ஏற்பட்ட தேவராஜ்ய முன்னேற்றங்கள்
1951-ல் சங்கத்தின் சார்பாக ஒரு சகோதரர் எங்கள் தீவிற்கு வந்தார். அவர் யாக்கோபூஸ் வான் ஸ்டாடன். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இளம் வாலிபர். நாங்கள் அப்போதுதான் ஒரு பெரிய வீட்டிற்கு குடிபுகுந்திருந்தோம். ஆகவே ஒரு வருடத்திற்கு அவரை எங்கள் வீட்டிலேயே தங்கவைக்க முடிந்தது. எனக்கே சொந்த தொழில் இருந்ததால், அவரோடு சேர்ந்து நிறைய நேரம் பிரசங்கிக்க முடிந்தது. அதன் மூலம் எவ்வளவோ நல்ல நல்ல விஷயங்களை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.
யாக்கோபூஸ்—அவரை கோஸ் என்றுதான் கூப்பிடுவோம்—சபைக் கூட்டங்களை ஏற்பாடு செய்தார். நாங்கள் எல்லாரும் அதில் சந்தோஷமாக கலந்துகொண்டோம். போக்குவரத்துதான் ஒரு பிரச்சினையாக இருந்தது. ஏனென்றால் எங்கள் எல்லாரிடமும் சேர்ந்து இரண்டே கார்கள்தான் இருந்தன. கரடுமுரடான பாதை, நிறைய குன்றுகள் வேறு. அப்போதெல்லாம் நல்ல ரோடுகளும் கிடையாது. அதனால் எல்லாரையும் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வது ஒரு சவாலாகவே இருந்தது. சிலர் அதிகாலையிலேயே நடக்க ஆரம்பித்துவிடுவார்கள். என் குட்டிக் காரில் மூன்று பேரை ஏற்றிக்கொண்டு சிறிது தூரம் சென்று இறக்கிவிடுவேன். பின் அங்கிருந்து அவர்கள் நடக்க ஆரம்பிப்பார்கள். அதற்குள் நான் திரும்பிச்சென்று இன்னும் மூன்று பேரை கூட்டிக்கொண்டு அதேவிதமாய் சற்று தூரத்தில் இறக்கிவிட்டு மறுபடியும் செல்வேன். இப்படியே எல்லாரும் கூட்டத்திற்கு போய் சேருவோம். கூட்டம் முடிந்த பிறகும் இதே விதமாய் எல்லாரும் வீடு திரும்புவோம்.
வீடுகளில் எப்படி நன்றாக பிரசங்கிக்கலாம் என்றும் கோஸ் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். நல்ல நல்ல அனுபவங்கள் கிடைத்தன, கெட்ட அனுபவங்களும் இருக்கத்தான் செய்தன. ஆனால் வெளி ஊழியத்தில் கிடைத்த சந்தோஷத்திற்கு முன்பு எதிர்ப்புகள் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. ஒருநாள் காலை நான் கோஸுடன் ஊழியம் செய்துகொண்டிருந்தேன். கதவருகே சென்றபோது ஏதோ சத்தம் கேட்டது. ஒருவர் பைபிளை உரக்க படித்துக்கொண்டிருந்தார். ஏசாயா 2-வது அதிகாரத்தின் வசனங்களை தெளிவாக கேட்க முடிந்தது. அவர் 4-வது வசனத்திற்கு வந்தபோது நாங்கள் கதவைத் தட்டினோம். வயதான ஒருவர் வந்தார். எங்களை அன்பாக உள்ளே அழைத்தார். நாங்கள் அதே ஏசாயா 2:4-ஐ பயன்படுத்தி, கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பற்றி விளக்கினோம். அவர் வீடு ஒரு மூலைமுடுக்கில் இருந்தபோதும் பைபிள் படிப்பை ஆரம்பித்தோம். அவர் வீட்டிற்குச் செல்ல, முதலில் ஒரு குன்றில் ஏறி இறங்க வேண்டும். அதற்குப்பின் ஒரு ஓடையைக் கடக்க வேண்டும். நல்லவேளை நடந்துசெல்வதற்கு வசதியாக ஓடையில் ஆங்காங்கே கற்கள் இருந்தன. பின்பு, இன்னொரு குன்றிலும் ஏறியிறங்கினால்தான் அவருடைய வீடு. ஆனால் நாங்கள் பட்ட பிரயாசை வீண் போகவில்லை. அந்த தாழ்மையான பெரியவர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு முழுக்காட்டுதல் பெற்றார். கூட்டங்களுக்குச் செல்ல அவர் இரண்டு தடிகளைக்கொண்டு ஒரு இடத்திற்கு நடந்துவருவார். அங்கிருந்து நான் அவரை காரில் அழைத்துச்செல்வேன். இறக்கும்வரை அவர் உண்மையுள்ள சாட்சியாகவே இருந்தார்.
போலீஸ் கமிஷனர் எங்கள் ஊழியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். நாட்டைவிட்டு வெளியேற்றப்போவதாக கோஸை அடிக்கடி மிரட்டினார். மாதா மாதம் கோஸை கூப்பிட்டு விசாரணை நடத்தினார். கோஸ் எப்போதும் நேரடியாக பைபிளை எடுத்து பதில் சொன்னதால் அவர் இன்னும் எரிச்சலடைந்தார். பிரசங்கிப்பதை நிறுத்தவேண்டுமென கோஸை எச்சரித்த ஒவ்வொரு முறையும் சாட்சி பெற்றார். கோஸ் செ. ஹெலினாவைவிட்டு சென்ற பிறகும் அவர் தொடர்ந்து ஊழியத்தை எதிர்த்தார். அதன்பின் வாட்டசாட்டமான அந்தக் கமிஷனருக்கு திடீரென ஏதோ வியாதி வர, எலும்பும் தோலுமானார்! அவருக்கு என்ன நோய் என்றே டாக்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவர் எங்கள் தீவைவிட்டு சென்றுவிட்டார்.
முழுக்காட்டுதலும் சீரான வளர்ச்சியும்
கோஸ் எங்கள் தீவில் மூன்று மாதங்கள் தங்கியபிறகு, முழுக்காட்டுதலுக்கு ஏற்பாடு செய்தார். அதற்கான குளத்தைக் கண்டுபிடிப்பதுதான் பிரச்சினையாக இருந்தது. ஒரு குழி தோண்டி, சிமெண்ட் பூசி, அதில் தண்ணீரைக் கொண்டுவந்து நிரப்ப தீர்மானித்தோம். முழுக்காட்டுதலுக்கு முந்தைய இரவு மழை கொட்டியது. காலையில் பார்த்தால், தொட்டியில் விளிம்பு வரை தண்ணீர் நிரம்பியிருந்தது! நாங்கள் அடைந்த சந்தோஷத்தைக் கேட்கவே வேண்டாம்.
அந்த ஞாயிறு காலையன்று கோஸ் முழுக்காட்டுதல் பேச்சு கொடுத்தார். முழுக்காட்டுதல் பெறுபவர்களை எழுந்து நிற்கும்படி சொன்னபோது நாங்கள் 26 பேர் நின்றோம். வழக்கமான கேள்விகளுக்கு பதிலளித்தோம். எங்கள் தீவில் முழுக்காட்டுதல் பெற்ற முதல் சாட்சிகளாகும் பாக்கியம் கிடைத்தது. வாழ்க்கையிலேயே நான் அதிக சந்தோஷப்பட்ட நாள் அதுதான். ஏனென்றால், எங்கே நான் முழுக்காட்டுதல் எடுப்பதற்கு முன்பாகவே அர்மகெதோன் வந்துவிடுமோ என பயந்துகொண்டே இருந்தேன்.
இறுதியாக, இரண்டு சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன, ஒன்று லெவல்வுட்டில் மற்றொன்று ஜேம்ஸ்டவுனில். அதில் ஒரு சபை 13 கிலோமீட்டர் தூரத்திலிருந்தது. அங்கு தேவராஜ்ய ஊழியப் பள்ளியையும் ஊழியக் கூட்டத்தையும் நடத்துவதற்கு ஒவ்வொரு சனிக்கிழமை சாயங்காலமும் எங்களில் மூன்று அல்லது நான்கு பேர் சென்றோம். ஞாயிற்றுக்கிழமை காலையில் வெளி ஊழியம் செய்தபிறகு, அதே கூட்டங்களையும் காவற்கோபுர படிப்பையும் மதியானமும் சாயங்காலமும் எங்கள் சொந்த சபையில் நடத்தினோம். ஆகவே சனி ஞாயிறுகளில் சந்தோஷம் பொங்க தேவராஜ்ய சேவைகளில் மும்முரமாக ஈடுபட்டோம். முழுநேரமாக ஊழியம் செய்ய நான் துடித்தேன், ஆனால் குடும்பத்தையும் கவனிக்க வேண்டியிருந்தது. அதனால் 1952-ல் பல் மருத்துவராக அரசாங்க வேலையில் மீண்டும் சேர்ந்தேன்.
1955-ல் சங்கத்தின் பயணக் கண்காணிகளாக சேவித்த வட்டாரக் கண்காணிகள் ஒவ்வொரு வருடமும் எங்கள் தீவிற்கு விஜயம் செய்ய ஆரம்பித்தனர். வரும்போதெல்லாம் கொஞ்ச நாட்கள் எங்கள் வீட்டில் தங்கினர். அவர்களால் எங்கள் குடும்பம் அதிக உற்சாகம் பெற்றது. அந்தச் சமயத்தில், தீவுவாசிகளுக்கு சங்கத்தின் மூன்று ஃபிலிம்களைப் போட்டுக்காட்டும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது.
மெய்சிலிர்க்கவைத்த, தெய்வீக சித்தம் மாநாடு
1958-ல், நியூ யார்க்கில் நடைபெற்ற தெய்வீக சித்தம் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நான் மறுபடியும் அரசாங்க ஊழியத்தை ராஜினாமா செய்தேன். அந்த மாநாடு என் வாழ்க்கையில் ஒரு மைல்கல். யெகோவாவில் சந்தோஷமாயிருக்க அநேக காரணங்களை எனக்குக் கொடுத்தது. அச்சமயத்தில் எங்கள் தீவிற்கு செல்வதற்கு சரியான போக்குவரத்து இருக்கவில்லை. எனவே நாங்கள் ஐந்தரை மாதங்களாக அங்கு செல்ல முடியவில்லை. மாநாடு எட்டு நாட்களுக்கு நடந்தது. காலை ஒன்பது மணியிலிருந்து இரவு ஒன்பது மணிவரை நிகழ்ச்சிநிரல் நீடித்தது. ஆனாலும் எனக்கு சோர்வே ஏற்படவில்லை, சொல்லப்போனால் ஒவ்வொரு நாளையும் ஆவலாக எதிர்நோக்கிக் காத்திருந்தேன். மாநாட்டில் இரண்டு நிமிடங்களுக்கு செ. ஹெலினாவைப் பற்றி பேசுகிற நல்வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. யான்கீ ஸ்டேடியம் மற்றும் போலோ க்ரவுண்ட்ஸில் கடற்கரை மணலைப் போல திரண்டு வந்திருந்தவர்கள் முன் பேசி முடிப்பதற்குள் ஆடிப் போய்விட்டேன்!
அந்த மாநாடு, பயனியராக வேண்டுமென்ற திடதீர்மானம் எடுக்க உதவியது. முக்கியமாக, “கடவுளுடைய ராஜ்யம் ஆட்சிசெய்கிறது—உலக முடிவு நெருங்கி விட்டதா?” என்ற பொதுப்பேச்சு அதிக உற்சாகமளித்தது. மாநாட்டிற்குப் பிறகு, புரூக்ளினிலுள்ள சங்கத்தின் தலைமையகத்திற்குச் சென்று ஃபாக்டிரியை சுற்றிப்பார்த்தோம். அப்போது உவாட்ச் டவர் சொஸைட்டியின் தலைவராயிருந்த சகோதரர் நாரை சந்தித்து, செ. ஹெலினாவில் நடக்கும் முன்னேற்றங்களைப் பற்றி உரையாடினேன். அங்கு வந்து பார்க்க ஆசையிருப்பதாக சொன்னார். எல்லா பேச்சுக்களையும் டேப்பில் பதிவுசெய்து எடுத்துவந்தோம். அதோடு மாநாடு சம்பந்தமான அநேக திரைப்படங்களையும் எடுத்துவந்து குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் போட்டுக்காட்டினோம்.
முழுநேர ஊழியத்தின் இலட்சியம் நிறைவேறியது
எங்கள் தீவில் பல் மருத்துவர் வேறு யாருமே இல்லை. எனவே நான் திரும்பி வந்தபிறகு, அதே வேலைக்காக அழைப்பு வந்தது. ஆனால் நான் முழுநேர ஊழியம் செய்ய விரும்புவதாய் சொன்னேன். நீண்டநேர பேச்சுவார்த்தைக்குப்பின் நான் வாரத்தில் மூன்று நாள் வேலை செய்தால் போதும் என்று சொன்னார்கள். ஆனால் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்தபோது கிடைத்த சம்பளத்தைவிட அதிகம் தருவதாய் சொன்னார்கள். “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” என இயேசு சொன்ன வார்த்தைகளை அப்போது உண்மையிலேயே ருசித்தேன். (மத்தேயு 6:33) பலவீனமான கால்களோடு, மேடுகளும் குன்றுகளும் நிறைந்த தீவில் நடந்துசெல்வது எனக்கு அவ்வளவு சுலபமாக இல்லை. இருந்தாலும் 14 வருடங்களாக நான் பயனியர் ஊழியம் செய்து அநேக தீவுவாசிகளுக்கு சத்தியத்தைக் கற்றுக்கொள்ள உதவியிருக்கிறேன். சந்தோஷப்படுவதற்கு இதைவிட வேறென்ன காரணம் வேண்டும்!
1961-ல் இரண்டு வருட இலவச பயிற்சிக்காக அரசாங்கம் என்னை ஃபிஜி தீவுகளுக்கு அனுப்ப விரும்பியது. என்னை முழு தகுதிபெற்ற பல் மருத்துவராக்க விரும்பியது. குடும்பமாக அனுப்பி வைப்பதாகக்கூட சொன்னது. அது என் ஆசையைக் கிளப்பத்தான் செய்தது, ஆனால் நன்றாக சிந்தித்துப் பார்த்த பிறகு நான் மறுத்துவிட்டேன். அவ்வளவு காலம் சகோதரர்களை விட்டுப்பிரிய எனக்கு விருப்பமில்லை. அவர்களோடு சேவை செய்யும் பாக்கியத்தைக் கைவிடவும் மனமில்லை. இந்த ஏற்பாட்டைச் செய்திருந்த சீனியர் மெடிக்கல் ஆபீஸருக்கு என் முடிவு கொஞ்சமும் பிடிக்கவில்லை. “உலக முடிவு அவ்வளவு சீக்கிரம் வரப்போவதாக நீ நினைத்தாலும், அதுவரை நீ சம்பாதிக்கும் பணத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாமே” என்றார். நான் மசியவேயில்லை.
அதற்கடுத்த வருடம் ராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்துகொள்ள நான் தென் ஆப்பிரிக்காவிற்கு அழைக்கப்பட்டேன். அது சபை கண்காணிகளுக்கான ஒரு மாத பயிற்சிப் பள்ளி. சபை நியமிப்புகளை இன்னும் திறம்பட கையாளுவதற்கு மிகப் பயனுள்ள ஆலோசனைகள் எங்களுக்கு வழங்கப்பட்டது. பள்ளிக்குப் பின், ஒரு பயணக் கண்காணியோடு ஊழியம் செய்ததில் கூடுதலான பயிற்சி கிடைத்தது. அதன்பின் உதவி வட்டாரக் கண்காணியாக நான் செ. ஹெலினாவிலுள்ள இரண்டு சபைகளில் பத்து வருடங்களுக்கும் அதிகமாக சேவை செய்தேன். அதன்பின் தகுதியுள்ள மற்ற சகோதரர்கள் கிடைக்கவே, நாங்கள் மாறிமாறி பணியாற்றினோம்.
இதற்கிடையில் லெவல்வுட்டில் ஊழியம் செய்வதற்கு அதிக பேர் தேவைப்பட்டதால், நாங்கள் ஜேம்ஸ்டவுனிலிருந்து அங்கு குடிபெயர்ந்தோம். பத்து வருடங்கள் அங்கு வசித்தோம். வேலை என்னை சக்கையாய் பிழிந்தெடுத்துவிட்டது—பயனியர் ஊழியம், வாரத்தில் மூன்றுநாள் அரசாங்க வேலை, அதோடு சிறிய மளிகைக்கடையை நடத்தவேண்டும். சபை சம்பந்தமான வேலைகளையும் கவனிக்கவேண்டியிருந்தது. வளரும் வயதில் நான்கு பிள்ளைகள் வேறு. இத்தனையையும் சமாளிக்க முடியாததால் அரசாங்க வேலையை விட்டுவிட்டு, கடையையும் விற்றுவிட்டு, மூன்று மாத ஓய்வுக்காக தென் ஆப்பிரிக்காவிலுள்ள கேப் டவுனுக்கு குடும்பமாக சென்றேன். அதன்பின் அஸென்ஷன் தீவிற்கு குடிபெயர்ந்தோம். அங்கு வசித்த ஒரு வருடத்தின்போது அநேகருக்கு திருத்தமான பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதன்பின் மீண்டும் செ. ஹெலினாவில் ஜேம்ஸ்டவுனிற்கே வந்தோம். ராஜ்ய மன்றத்தோடு ஒட்டியிருந்த ஒரு வீட்டை நாங்கள் புதுப்பித்தோம். வயிற்றுப் பிழைப்புக்காக, நானும் என் மகன் ஜானும் ஃபார்ட் ட்ரக்கை (Ford truck) ஐஸ்கிரீம் வேனாக மாற்றி, அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஐஸ்கிரீம் விற்றுவந்தோம். இதை ஆரம்பித்த கொஞ்ச நாட்களுக்குள்ளாகவே எனக்கு விபத்து ஏற்பட்டது. வேன் கவிழ்ந்து, என் கால்கள் அதில் சிக்கிக்கொண்டன. அதனால் முழங்காலுக்குக் கீழேயுள்ள நரம்புகள் செயலிழந்தன. பழைய நிலைமைக்கு வர மூன்று மாதங்கள் எடுத்தது.
அன்றும் என்றும் அபரிமித ஆசீர்வாதங்கள்
கடந்த பல வருடங்களாக எங்களுக்கு அநேக ஆசீர்வாதங்கள் கிடைத்திருக்கின்றன. இவை சந்தோஷத்திற்கான கூடுதலான காரணங்கள். அவற்றில் ஒன்று: 1985-ல் தேசிய மாநாட்டிற்காக தென் ஆப்பிரிக்கா சென்று, அப்போது கட்டப்பட்டுவந்த புதிய பெத்தேல் வீட்டைப் பார்வையிட்டது. மற்றொன்று: ஜேம்ஸ்டவுன் அருகில் ஒரு அழகிய மாநாட்டு மன்றத்தைக் கட்டுவதில் நானும் என் மகன் ஜானும் சிறு பங்கு வகித்தது. என் மூன்று மகன்கள் மூப்பர்களாய் சேவிப்பதும், பேரன் தென் ஆப்பிரிக்க பெத்தேலில் சேவை செய்வதும் பெருமைக்குரிய விஷயம். இவற்றோடு, பைபிளின் திருத்தமான அறிவைப் பெற அநேகருக்கு உதவியிருப்பதில் பெரும் மகிழ்ச்சியையும் திருப்தியையும் கண்டிருக்கிறோம்.
நாங்கள் ஊழியம் செய்யும் பிராந்தியம் சிறியதுதான். சுமார் 5,000 பேர்தான் வசிக்கிறார்கள். ஆனாலும் அதே பிராந்தியத்தில் மீண்டும் மீண்டும் ஊழியம் செய்வது நல்ல பலன்களைத் தந்திருக்கிறது. ஒருசிலர்தான் மரியாதையில்லாமல் நடத்தியிருக்கிறார்கள். செ. ஹெலினா மக்கள் நட்புக்கு பெயர்போனவர்கள். நீங்கள் எங்கு சென்றாலும், ரோட்டில் நடந்துசென்றாலும் சரி காரில் சென்றாலும் சரி வாழ்த்து சொல்வார்கள். மக்களை எவ்வளவு நன்றாக புரிந்துகொள்கிறோமோ அவ்வளவு நன்றாக அவர்களுக்கு சாட்சி கொடுக்க முடியும் என்பதே என் அனுபவம். இப்போது 150 பிரஸ்தாபிகள் இருக்கின்றனர். அநேகர் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர்.
பிள்ளைகளெல்லாம் வளர்ந்து பெரியவர்களாகி வேறு இடங்களுக்கு சென்றுவிட்டனர். 48 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நானும் என் மனைவியும் தனிமரங்களாகிவிட்டோம். அவள் எப்போதும் எனக்குக் காட்டியிருக்கும் அன்பும் ஆதரவும், பிரச்சினைகளின் மத்தியிலும் யெகோவாவை தொடர்ந்து சேவிக்க எனக்கு உதவியிருக்கிறது. எங்கள் உடல் பலம் குன்றிக்கொண்டே போகிறது, ஆனால் மன பலம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. (2 கொரிந்தியர் 4:16) 17 வயதில் இருந்ததைவிட அதிக ஆரோக்கியத்தைப் பெறவிருக்கும் அந்த அருமையான எதிர்காலத்திற்காக நானும் என் குடும்பத்தாரும் நண்பர்களும் எதிர்நோக்கியிருக்கிறோம். எல்லா விதத்திலும் பரிபூரணமாய் இருப்பதும், அதைவிட முக்கியமாக அன்பும் அக்கறையும் நிறைந்த யெகோவா தேவனையும் அரசாளும் அரசரான இயேசு கிறிஸ்துவையும் எப்போதும் சேவிப்பதுமே எனது நீங்காத ஆசை.—நெகேமியா 8:10.
[பக்கம் 26-ன் படம்]
ஜார்ஜ் ஸ்கிப்பியோவும் மூப்பர்களாய் சேவிக்கும் அவரது மூன்று மகன்களும்
[பக்கம் 29-ன் படம்]
மனைவி டாரிஸூடன் ஜார்ஜ் ஸ்கிப்பியோ