உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w99 4/1 பக். 3-7
  • இதோ! பொன்மொழிகள் பொதிந்த நூல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இதோ! பொன்மொழிகள் பொதிந்த நூல்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மனச்சோர்வால் வாடுகிறீர்களா?
  • உங்களுக்கு வீட்டுப் பிரச்சினைகளா?
  • உங்களுடைய வாழ்வை செழிப்பாக்க விரும்புகிறீர்களா?
  • நீங்கள் பையை திறப்பீர்களா?
  • “ஞானத்தைக் கண்டடைந்திருக்கிற மனிதன் சந்தோஷமுள்ளவன்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • உண்மையான ஞானம் சத்தமாக அழைக்கிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
  • ‘ஞானம் எனும் பொக்கிஷங்களெல்லாம். . . ’
    என்னைப் பின்பற்றி வா
  • ‘பரலோகத்திலிருந்து வருகிற ஞானத்தை’ நீங்கள் உங்கள் வாழ்க்கையில் காட்டுகிறீர்களா?
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
w99 4/1 பக். 3-7

இதோ! பொன்மொழிகள் பொதிந்த நூல்

“பைநிறைய முத்துக்களைப் பார்க்கிலும் பைநிறைய ஞானம் மதிப்புமிக்கது” என மொழிந்தார் பூர்வகால முற்பிதாவாகிய யோபு—அக்காலத்தில் வாழ்ந்த மிகப் பெரிய சீமான்களில் இவரும் ஒருவர். (யோபு 1:3; 28:18; 42:12; NW) ஒருவருடைய வாழ்க்கை செழித்தோங்க பொருட்செல்வங்களைக் காட்டிலும் உண்மையில் ஞானமே மிக மிக மதிப்புமிக்கது. “ஞானம் கேடகம், திரவியமும் கேடகம்,” ஆனால் “ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்” என்று சொன்னார் ஞானியாகிய சாலொமோன்.—பிரசங்கி 7:12.

ஆனால் இத்தகைய ஞானத்தை இன்று எங்கே கண்டுபிடிக்கலாம்? பத்திரிகையில் எழுதும் ஆலோசகர்களையும், மனோவியல் மருத்துவர்களையும், உளநோய் மருத்துவர்களையும், ஏன் ஹேர்-டிரெஸர்களையும் டாக்ஸி டிரைவர்களையும்கூட பிரச்சினைகளுக்கு ஆலோசனை தேடி மக்கள் போகின்றனர். எந்த விஷயத்திற்கும் ஆலோசனை வழங்க ஏகப்பட்ட நிபுணர்கள் தயாராக இருக்கின்றனர்—தகுந்த கட்டணத்துடன். ஆனால் இத்தகைய “ஞானமான” வார்த்தைகள் ஏமாற்றத்திற்கும் அழிவுக்கும்தான் அழைத்துச் சென்றிருக்கின்றன. அப்படியானால், உண்மையான ஞானத்தை நாம் எங்கே கண்டுபிடிக்கலாம்?

மானிட விவகாரங்களை நன்கு அறிந்தவராகிய இயேசு கிறிஸ்து ஒருதடவை இவ்வாறு சொன்னார்: “ஞானம் அதன் செயல்களால் நீதியாக நிரூபிக்கப்படுகிறது.” (மத்தேயு 11:19, NW) இன்று மக்களுடைய வாழ்க்கையை மொய்க்கும் பொதுவான பிரச்சினைகள் சிலவற்றை அலசிப்பார்த்து, ஞானமான எந்த வார்த்தைகள் உண்மையிலேயே அவர்களுக்கு உதவியிருக்கின்றன, மேலும் ‘பைநிறைய முத்துக்களைப் பார்க்கிலும்’ அதிக மதிப்புமிக்கவையாக நிரூபித்திருக்கின்றன என்பதை ஆராய்வோமாக. நீங்களும்கூட அந்தப் ‘பைநிறைய ஞானத்தை’ கண்டுபிடிக்கலாம், அதிலிருந்து நன்மையும் அடையலாம்.

மனச்சோர்வால் வாடுகிறீர்களா?

“இந்த 20-ம் நூற்றாண்டு கவலை எனும் சகாப்தத்திற்குள் நுழைந்திருந்தால் அது வெளியேறும் வாயில் மனச்சோர்வு எனும் சகாப்தமாகத்தான் இருக்கும்” என்று குறிப்பிடுகிறது லண்டனிலிருந்து வரும் இன்டர்நேஷனல் ஹெரல்ட் ட்ரிப்யூன். “உலகமுழுவதும் இந்நோய் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தீவிர மனச்சோர்வு பற்றிய முதல் சர்வதேச ஆராய்ச்சி காட்டுகிறது. தைவான், லெபனான், நியூ ஜீலாந்து போன்ற வேற்றுமை நிறைந்த தேசங்களில் அடுத்தடுத்துவரும் ஒவ்வொரு சந்ததியும் இந்த வியாதியால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.” 1955-க்குப் பிறகு பிறந்தவர்கள் தங்களுடைய தாத்தா பாட்டிமாரைவிட மூன்றுமடங்கு தீவிர மனச்சோர்வால் பாதிக்கப்படும் வாய்ப்பிருக்கிறது என சொல்லப்படுகிறது.

தீவிர மனச்சோர்வால் பாதிக்கப்பட்ட டோமோ என்பவளுடைய விஷயத்தில் இதுவே உண்மையாக இருக்கிறது. அவளுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை படுக்கையிலேயே கழித்தாள். அவளுடைய இரண்டு வயது மகனை கவனித்துக்கொள்ள முடியாததால், அவள் தன்னுடைய பெற்றோரின் வீட்டிற்குத் திரும்பிச் சென்றாள். டோமோவின் மகன் வயதில் ஒரு மகளையுடைய அண்டை வீட்டு பெண்மணி ஒருத்தி சீக்கிரத்திலேயே அவளுக்கு தோழியானாள். தான் எதற்குமே லாயக்கில்லை என டோமோ சொன்னபோது, அந்த அண்டை வீட்டு பெண்மணி ஒரு புத்தகத்திலிருந்து வசனம் ஒன்றை அவளுக்கு எடுத்துக் காண்பித்தாள். அது இவ்வாறு சொல்கிறது: “கண்ணானது கையைப்பார்த்து; நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது. சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது.”a இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது, எல்லாருமே தேவைதான் என்பதை உணர்ந்தபோது டோமோவின் கண்களில் கண்ணீர் பெருகியது.

இந்தப் பொன்மொழிகள் பொதிந்த புத்தகத்தைப் படித்துப் பார்க்கும்படி அந்த அண்டை வீட்டுப் பெண்மணி அவளிடம் சிபாரிசு செய்தார். அதுவரை அவளால் எதற்குமே சரி என்று பட்டென்று பதில் சொல்ல முடியாதபோதிலும் படித்துப் பார்ப்பதாக டோமோ தலையாட்டினாள். கடைக்குப்போய் சாமான்கள் வாங்கிவருவதிலும் டோமோவுக்கு அந்த அண்டை வீட்டுப் பெண்மணி கைகொடுத்து உதவினாள். ஒவ்வொரு நாளும் அவளோடு சேர்ந்து சாப்பாடு சமைத்தாள். ஒரு மாதத்திற்குப்பின் மற்றெல்லா வீட்டுப் பெண்களைப் போலவே டோமோவும் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து, பண்டம் பாத்திரங்களை விளக்குவது, துணிமணிகளை துவைப்பது, வீட்டைக் கழுவுவது, கடைக்குப் போய் சாமான்கள் வாங்கிவருவது, சமையல் செய்வது என பம்பரமாக சுழல ஆரம்பித்தாள். அவள் அநேக பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருந்தது, ஆனால் அவள் இவ்வாறு சொன்னாள்: “நான் கண்டுபிடிச்ச இந்த ஞானமான வார்த்தைகளின்படி நடந்தால், என்னால் நன்றாக செயல்பட முடியும் என்ற உறுதியான நம்பிக்கை பிறந்தது.”

தான் கண்டுபிடித்த ஞானத்தைப் பயன்படுத்தி, மனச்சோர்வடைந்த நிலையில் கிடந்த அந்த இருண்ட நாட்களை டோமோ வெற்றிகரமாக கடந்துவந்தாள். தன்னுடைய பிரச்சினைகளை மேற்கொள்ள உதவிய அதே வார்த்தைகளை பொருத்திப் பயன்படுத்த மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் இப்பொழுது டோமோ முழுநேரம் உழைக்கிறாள். இன்றைய மக்கள் அனைவருக்கும் ஏற்ற செய்திகள் அடங்கிய ஒரு பூர்வகால புத்தகத்தில் அந்தப் பொன்மொழிகள் உள்ளன.

உங்களுக்கு வீட்டுப் பிரச்சினைகளா?

உலகமுழுவதும் மணவிலக்கு எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருகிறது. ஒருகாலத்தில் கூட்டுக் குடும்பங்களுக்குப் பெயர்போன கீழை நாடுகளிலும் வீட்டுப் பிரச்சினைகள் கூடிக்கொண்டே வருகின்றன. மண வாழ்க்கைக்கு உண்மையிலேயே பலன்தரும் ஞானமான ஆலோசனையை எங்கே கண்டுபிடிக்கலாம்?

தீராத குடும்ப பிரச்சினைகளைக் கொண்டிருந்த தம்பதி ஷூகோ மற்றும் மிஹோகோவுடைய விஷயத்தை கவனியுங்கள். அற்பமான எல்லா விஷயத்திற்கும் அவர்கள் சண்டை போட்டார்கள். ஷூகோவுக்கு சட்டென்று மூக்குமேல் கோபம் வரும், எடுத்ததற்கெல்லாம் மிஹோகோவை குத்திக் காட்டும்போது பதிலுக்கு அவளும் பொரிந்து தள்ளினாள். ‘எந்த விஷயத்திலும் நாங்க ஒத்துப்போவதற்கு சாத்தியமே இல்லை’ என்றும்கூட மிஹோகோ நினைத்தாள்.

ஒருநாள் மிஹோகோவை ஒரு பெண் சந்தித்து, ஒரு புத்தகத்திலிருந்து இந்த வார்த்தைகளை வாசித்துக் காட்டினார்: “மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.”b மதத்தில் அக்கறையில்லாதபோதிலும், இந்த வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்த அந்தப் புத்தகத்தை வாசிப்பதாக மிஹோகோ ஒத்துக்கொண்டாள். தன்னுடைய குடும்ப வாழ்க்கையை முன்னேற்றுவிக்க வேண்டும் என்பதே அவளுடைய அக்கறை. ஆகவே, உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல்c என்று தலைப்பிடப்பட்ட ஒரு பிரசுரம் கலந்தாலோசிக்கப்படும் கூட்டத்திற்கு ஆஜராகும்படி அவள் அழைக்கப்பட்டபோது, மிஹோகோ உடனடியாக ஒத்துக்கொண்டாள்—அவளுடைய கணவரும்தான்.

கூட்டம் நடைபெறும் இடத்தில், ஆஜரானவர்கள் தாங்கள் கற்றுக்கொண்டதை உண்மையிலேயே பொருத்திப் பயன்படுத்துவதையும் அவர்கள் அதிக சந்தோஷமாக இருந்ததையும் ஷூகோ கவனித்தார். தன்னுடைய மனைவி படித்துக்கொண்டிருந்த அந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்க தீர்மானித்தார். ஒரு வாக்கியம் சட்டென்று அவருடைய கண்ணில் பட்டது: “நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான்.”d இந்த நியமத்தை தன்னுடைய வாழ்க்கையில் பொருத்திப் பயன்படுத்த சிலகாலம் எடுத்தபோதிலும், அவர் செய்த படிப்படியான மாற்றம் அவரை சுற்றியிருந்தவர்களுக்கு, அவருடைய மனைவிக்கும்தான் பளிச்சென்று தெரிய ஆரம்பித்தது.

தன்னுடைய கணவன் செய்த மாற்றத்தைக் கண்டு, மிஹோகோவும் தான் கற்றுக்கொண்டு வருவதை பொருத்திப் பயன்படுத்த ஆரம்பித்தாள். முக்கியமாய் பயனுள்ளதாயிருந்த ஒரு நியமம் இதுவே: “நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்.” e ஆகவே, தங்களுடைய நல்ல குணங்களை மட்டுமே பேச வேண்டும் என்றும், ஒருவரையொருவர் குறை கண்டுபிடிப்பதற்குப் பதிலாக தாங்கள் எப்படி முன்னேறலாம் என்பதையே பேச வேண்டும் என்றும் மிஹோகோவும் அவளுடைய கணவரும் தீர்மானித்தார்கள். விளைவு? மிஹோகோ சொல்கிறாள்: “அது உண்மையிலேயே என்னை மகிழ்ச்சியுள்ளவளாக்கியிருக்கிறது. ஒவ்வொரு நாள் சாயங்காலம் சாப்பிடும்போது நாங்கள் இதைச் செய்துவருகிறோம். எங்க மூன்று வயசு பையனும்கூட நாங்க பேசிக்கொண்டிருக்கும்போது சேர்ந்துக்குவான். அது உண்மையிலேயே எங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது!”

இந்தக் குடும்பத்தினர் தங்களுக்கு கிடைத்த அர்த்தமுள்ள அறிவுரையைப் பின்பற்றியபோது, தங்களுடைய திருமண பந்தத்தை முறிவடையும் நிலைக்கு கொண்டுவந்த பிரச்சினைகளை அவர்களால் மேற்கொள்ள முடிந்தது. ஒரு பைநிறைய முத்துக்களைப் பார்க்கிலும் அவர்களுக்கு அதிக மதிப்புமிக்கது அல்லவா?

உங்களுடைய வாழ்வை செழிப்பாக்க விரும்புகிறீர்களா?

வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதே இன்று அநேகருடைய இலட்சியம். ஆனால், கோடிக்கணக்கான டாலரை அறக்கொடை நிறுவனத்திற்கு வாரிவழங்கிய ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஒரு பணக்கார தொழில் அதிபர் ஒருமுறை இவ்வாறு சொன்னார்: “சிலருக்கு பணம் ஒரு கவர்ச்சியாக இருக்கிறது, ஆனால் ஒரேசமயத்தில் ஒருவரும் இரண்டு ஜோடி ஷூவை போட்டுக்கொள்ள முடியாது.” இந்த உண்மையை ஒத்துக்கொள்பவர்கள் வெகுசிலரே, பணத்தை வேட்டையாடுவதை நிறுத்துகிறவர்கள் அதிலும் வெகுசிலரே.

ஹீட்டோஷி என்பவர் ஏழ்மையில் வளர்ந்துவந்தார், ஆகவே பணக்காரராக வேண்டுமென்ற வெறி அவருக்குள் தகதகவென கனன்றுகொண்டிருந்தது. கடன்கொடுத்தவர்கள் கடனாளிகளை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறார்கள் என்பதைப் பார்த்து, அவர் இந்தத் தீர்மானத்திற்கு வந்தார்: “கைநிறைய பணம் சம்பாதிக்கறவரே வாழ்க்கையில் வெற்றிபெற்றவர்.” பணத்தால் மனித உயிரையும் வாங்க முடியும் என்று நினைக்குமளவுக்கு அதன் வல்லமையில் ஹீட்டோஷி அதிக நம்பிக்கை வைத்தார். பணத்தை சம்பாதிப்பதற்கு, பிளம்பிங் பிஸினஸில் முழுமூச்சோடு ஈடுபட்டார், ஒருநாள்கூட லீவ் எடுக்காமல் வருடமுழுக்க உழைத்தார். மிக கடுமையாக உழைத்தபோதிலும், சப்-கான்ட்ராக்டராக இருந்த அவர், தனக்கு வேலைகொடுத்த கான்ட்ராக்டர்களைப் போல பெரிய ஆளாக ஆகவே முடியாது என்பதை சீக்கிரத்திலேயே உணர்ந்தார். ஏமாற்ற உணர்ச்சியும் திவாலாகி விடுவோம் என்ற பயமும் அன்றாடம் அவரை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது.

ஒருநாள் ஹீட்டோஷியின் வீட்டிற்கு ஒரு மனிதர் வந்தார்; இயேசு கிறிஸ்து உங்களுக்காக மரித்தார் என்பது தெரியுமா என அவரிடம் கேட்டார். தன்னை போன்ற ஒரு ஆளுக்காக யாருமே மரிக்க மாட்டார் என ஹீட்டோஷி நினைத்ததால், அறிந்துகொள்ள ஆவலுடையவராய் இருந்தார். கூடுதலாக அதைப் பற்றி பேசவும் ஒப்புக்கொண்டார். அதற்கு அடுத்த வாரத்தில், ஒரு சொற்பொழிவை கேட்க வந்தார், ‘கண்களை தெளிவாக வைத்திருங்கள்’ என சொல்லப்பட்ட புத்திமதியைக் கேட்டு ஆச்சரியப்பட்டார். ‘தெளிவான’ கண் என்பது நெடுநாளைய பலனை மனதில் கொள்வதையும், ஆவிக்குரிய காரியங்களில் மனதை ஒருமுகப்படுத்துவதையும் குறிக்கிறது; மறுபட்சத்தில், ‘பொல்லாத,’ அல்லது ‘பொறாமைமிக்க’ கண் என்பது உடனடியாக கிடைக்கும் மாம்ச இச்சைகளில் கண்ணை ஒருமுகப்படுத்துவது, அது குறுகிய மனப்பான்மையுடையது என்று அந்தப் பேச்சாளர் விளக்கினார். “உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்” என்ற அறிவுரை அவரை மிகவும் கவர்ந்தது. f பணம் சம்பாதிப்பதைவிட மிக முக்கியமானது ஒன்றுண்டு! அதைப்பற்றி அவர் அதுவரை கேள்விப்பட்டதே இல்லை.

இது அவரின் மனதைத் தொட்டதால் தான் கற்றதை நடைமுறையில் பின்பற்ற ஆரம்பித்தார். பணத்திற்காக படாதபாடு படுவதற்குப் பதிலாக, வாழ்க்கையில் ஆவிக்குரிய மதிப்பீடுகளை முதலாவதாக வைக்கத் தொடங்கினார். தன்னுடைய குடும்பத்தின் ஆவிக்குரிய நலத்திற்காக அதிக நேரத்தையும் செலவழித்தார். அதனால் வேலையில் முன்போல் நேரம் செலவிட முடியவில்லை. ஆனாலும், அவருடைய வியாபாரம் செழித்தோங்க ஆரம்பித்தது. எப்படி?

தனக்கு கொடுக்கப்பட்ட அறிவுரைக்குப் பிரதிபலித்ததால் மூர்க்க குணத்தைக் காட்டிவந்த அவர், சாந்தமானவராகவும் சிநேகப்பான்மை உடையவராகவும் மாறினார். குறிப்பாக இந்தப் புத்திமதி அவருடைய உள்ளத்தைக் கவர்ந்தது: “கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள். ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொண்டிருக்கிறீர்களே.”g இத்தகைய அறிவுரையைப் பின்பற்றியது அவரை செல்வந்தராக்கவில்லை, ஆனால் அவருடைய ‘புதிய மனுஷத்தன்மை’ அவருடைய வாடிக்கையாளர்களைக் கவர்ந்தது. அவர்களுடைய நம்பிக்கையையும் நாணயத்தையும் சம்பாதித்துக் கொடுத்தது. ஆம், தான் கண்டுபிடித்த இந்தப் பொன்மொழிகள் அவருடைய வாழ்க்கையை செழிப்பாக்க உதவியது. உண்மையில், பைநிறைய முத்துக்களையோ பணத்தையோவிட இவை அவருக்கு அதிக மதிப்புமிக்கவையாக இருந்தன.

நீங்கள் பையை திறப்பீர்களா?

மேற்குறிப்பிடப்பட்ட உதாரணங்களில் கண்ட நபர்களுக்கு மிகவும் மதிப்புமிக்கதாய் நிரூபித்திருக்கிற பைநிறைய ஞானத்தை உங்களால் அடையாளம் காண முடிகிறதா? பைபிளில் காணப்படும் ஞானமே அது. உலகிலேயே மிகப் பரவலாக விநியோகிக்கப்படும், மிக எளிதில் கிடைக்கக்கூடிய புத்தகமும் அதுதான். ஒருவேளை அதில் ஒரு பிரதியை நீங்கள் வைத்திருக்கலாம், அல்லது எளிதில் ஒன்றை பெற்றுக்கொள்ளலாம். ஆனால், மதிப்புமிக்க முத்துக்களை பைநிறைய வைத்திருந்து அதை பயன்படுத்தாமல் இருப்பது அதன் சொந்தக்காரருக்கு நன்மையளிக்காது. அதைப் போலவே வெறுமனே பைபிளை வைத்திருப்பதில்தானே எந்தவித மதிப்புமில்லை. அந்தப் பையைத் திறந்து, பைபிளில் உள்ள ஞானமான அறிவுரையையும் காலத்திற்கேற்ற புத்திமதியையும் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்தி, வாழ்க்கையின் பிரச்சினைகளை வெற்றிகரமாய் சமாளிக்க அது எவ்வாறு உங்களுக்கு உதவும் என்பதை ஏன் பார்க்கக்கூடாது?

உங்களுக்கு எப்போதாவது பைநிறைய முத்துக்கள் கொடுக்கப்பட்டால், நீங்கள் அதற்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கமாட்டீர்களா? அதை கொடுத்தவருக்கு நன்றி தெரிவிப்பதற்காக அவர் யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சிசெய்ய மாட்டீர்களா? பைபிளை கொடுத்தவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?

பைபிளில் காணப்படும் ஞானத்திற்கு ஊற்றுமூலர் யார் என்பதை பைபிளே வெளிப்படுத்துகிறது. அது சொல்கிறது: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16) “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும்” இருக்கிறது என்றும் அது சொல்கிறது. (எபிரெயர் 4:12) அதனால்தான் பைபிளில் காணப்படும் ஞானமான வார்த்தைகள் காலத்திற்கேற்றவையாகவும் இன்று நமக்கு பலன்தரத்தக்கவையாகவும் இருக்கின்றன. தாராளமாய் கொடுப்பவராகிய யெகோவா தேவனைப் பற்றி கற்றுக்கொடுக்க யெகோவாவின் சாட்சிகள் அதிக மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். இவ்வாறு, பைபிளில்—இன்றைய மக்களுக்கு ஏற்ற பொன்மொழிகள் பொதிந்த நூலில்—உள்ள ‘பைநிறைய ஞானத்தை’ நீங்களும் அனுபவிக்கலாமே.

[அடிக்குறிப்புகள்]

a இந்த மேற்கோள் 1 கொரிந்தியர் 12:21, 22-லிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

b மத்தேயு 7:12.

c உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.

d நீதிமொழிகள் 14:29.

e மத்தேயு 7:1, 2.

f மத்தேயு 6:21-23.

g கொலோசெயர் 3:8-10.

[பக்கம் 4-ன் பெட்டி/படம்]

உணர்ச்சியில் சமநிலையை காத்துக்கொள்ள சில பொன்மொழிகள்

“கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே. உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.”—சங்கீதம் 130:3, 4.

“மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோம்.”—நீதிமொழிகள் 15:13.

“மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும்?”—பிரசங்கி 7:16.

“வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்.”—அப்போஸ்தலர் 20:35.

“நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது.”—எபேசியர் 4:26.

[பக்கம் 5-ன் பெட்டி/படம்]

மகிழ்ச்சி பொங்கும் குடும்ப வாழ்க்கைக்கு சில பொன்மொழிகள்

“ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.”—நீதிமொழிகள் 15:22.

“புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும்.”—நீதிமொழிகள் 18:15.

“ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.”—நீதிமொழிகள் 25:11.

“ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.”—கொலோசெயர் 3:13, 14.

“ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்.”—யாக்கோபு 1:19.

[பக்கம் 6-ன் பெட்டி/படம்]

வாழ்வில் வெற்றிபெற சில பொன்மொழிகள்

“கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது; சுமுத்திரையான நிறைகல்லோ அவருக்குப் பிரியம்.”—நீதிமொழிகள் 11:1.

“அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.”—நீதிமொழிகள் 16:18.

“தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம் போலிருக்கிறான்.”—நீதிமொழிகள் 25:28.

“உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்.”—பிரசங்கி 7:9.

“உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.”—பிரசங்கி 11:1.

“கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.”—எபேசியர் 4:29.

[பக்கம் 7-ன் படம்]

பைபிளை படிப்பதே ‘பைநிறைய ஞானத்தை’ அனுபவிப்பதற்கு முதற்படி

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்