“கொந்தளிக்கும் கடலுக்குள்”
கொந்தளிக்கும் கடலுக்குள் செல்லும் துணிகர முயற்சியை, நேரங்காலம் தெரியாமல் முட்டாள்தனமாக ஈடுபடும் ஆபத்தான செயல் என்று சொல்லுவீர்கள் அல்லவா? இருப்பினும், ஒரு விதத்தில், சிலர் தாங்களாகவே இப்படிப்பட்ட சூழ்நிலைக்குள் சிக்கிக் கொள்கின்றனரென சொல்லலாம். எப்படி? 17-ம் நூற்றாண்டு எழுத்தாளர் தாமஸ் ஃபுல்லர் சொல்லுகிறார்: “கோபாவேசத்தோடு எந்த காரியத்திலும் இறங்காதே. கொந்தளிக்கும் கடலுக்குள் துணிச்சலாய் செல்வதைப் போன்றதே அது.”
கடும் கோபத்தில் இருக்கும்போது செய்யும் எந்த காரியமும் மோசமான விளைவுகளை கொண்டு வரக்கூடும். பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் இதை உறுதிப்படுத்துகிறது. பூர்வ குடும்பத்தலைவன் யாக்கோபின் குமாரர்கள் சிமியோனும் லேவியும், தங்களுடைய சகோதரி தீனாள் கற்பழிக்கப்பட்டபோது, பழிவாங்கும் வெறியோடு மூர்க்கத்தனமாக செயல்பட்டதே அச்சம்பவம். அதன் முடிவோ, ஒட்டுமொத்த கொலையும் சூறையாடலும். ‘நீங்கள் என்னைத் தொல்லைக்கு உட்படுத்திவிட்டீர்கள். இந்நாட்டில் வாழ்வோரிடத்திலும் . . . என்னை இழிவுபடுத்தி விட்டீர்கள்’ என யாக்கோபு அவர்களுடைய பொல்லாத செயலை வன்மையாக கண்டித்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.—ஆதியாகமம் [தொடக்க நூல்] 34:25-30, பொ.மொ.
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள், இதற்கு முற்றிலும் மாறான செயலையே ஞானமான போக்காக அறிவுறுத்துகிறது. “கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்” என சொல்லுகிறது. (சங்கீதம் 37:8) இந்த புத்திமதியை பின்பற்றினால் பெரிய பாவங்களை தவிர்க்கலாம்.—பிரசங்கி 10:4; நீதிமொழிகள் 22:24, 25-ஐயும் காண்க.