உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீப காவற்கோபுர இதழ்களை படித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா என்று பாருங்களேன்:
◻ “கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து” என்ற பவுலின் சொற்றொடர், அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு எப்படி பொருந்தும்? (2 கொரிந்தியர் 5:20)
பூர்வ காலங்களில், முக்கியமாக போர்க்காலங்களில், சண்டையை தவிர்க்கமுடியுமா என்பதைப் பார்க்க ஸ்தானாபதிகள் அனுப்பப்பட்டனர். (லூக்கா 14:31, 32) அதைப் போலவே, கடவுளிடம் இருந்து விலகி இருக்கும் பாவம் நிறைந்த மனிதவர்க்கத்திற்கு சமரசத்துக்கான விதிமுறைகளை தெரியப்படுத்தி, கடவுளோடு சமாதானத்தை நாட, அபிஷேகம் பண்ணப்பட்ட ஸ்தானாபதிகளை அனுப்புகிறார்.—12/15, பக்கம் 18.
◻ ஆபிரகாமின் விசுவாசத்தை பலப்படுத்திய நான்கு காரியங்கள் யாவை?
ஒன்று, கடவுள் பேசும்போது அவருக்கு செவிகொடுத்து கேட்பதன் மூலம் யெகோவாவிடத்தில் இருந்த விசுவாசத்தை மெய்ப்பித்துக் காட்டினார் (எபிரெயர் 11:8); இரண்டு, அவருடைய விசுவாசமும் நம்பிக்கையும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்ததாய் இருந்தது (ரோமர் 4:18); மூன்று, ஆபிரகாம் அடிக்கடி யெகோவாவோடு பேசினார்; நான்கு, தெய்வீக வழிநடத்துதலை பின்பற்றும்போது யெகோவாவின் ஆதரவை ஆபிரகாம் பெற்றார். இதே காரியங்கள் இன்று நம்முடைய விசுவாசத்தையும் பலப்படுத்த முடியும்.—1/1, பக்கங்கள் 17, 18.
◻ “எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல்” என்ற பதத்தின் அர்த்தம் என்ன? (மத்தேயு 6:13)
கீழ்ப்படியாமையின் சோதனையை நாம் எதிர்ப்படும்போது, அதில் வீழ்ந்து போகாமல் நம்மை காக்கும்படி கடவுளை கேட்கிறோம். சோதனையில் சிக்கி, நைந்துவிடாமலும் “பொல்லாங்கனாகிய” சாத்தான் நம்மை ஜெயிக்காமலும் இருக்க யெகோவா நம்மை வழிநடத்த முடியும். (1 கொரிந்தியர் 10:13)—1/15, பக்கம் 14.
◻ குற்றத்திற்காக கடவுளுடைய மன்னிப்பைப் பெற ஒருவர் என்ன செய்ய வேண்டும்?
கடவுளிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டு, மனந்திரும்புதலையும் அதோடுகூட “மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளையும்” பிறப்பிக்க வேண்டும். (லூக்கா 3:8) மனந்திரும்புதலுக்கான மனநிலையும் தவறை சரி செய்யும் ஆவலும் கிறிஸ்தவ மூப்பர்களிடம் ஆவிக்குரிய உதவியை பெற ஒருவரை தூண்டும். (யாக்கோபு 5:13-15)—1/15, பக்கம் 19.
◻ தாழ்மையாய் இருக்க நாம் ஏன் கடும்முயற்சி எடுக்க வேண்டும்?
மனத்தாழ்மையுள்ள ஒருவர், பொறுமையோடும் சகிப்புத்தன்மையோடும் இருப்பார். சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் முணுக்கென்று கோபப்படமாட்டார். நேசமுள்ள, மெய்யான நண்பர்களை மனத்தாழ்மை உங்களிடத்தில் கூட்டிச் சேர்க்கும். மிக முக்கியமாக, இது யெகோவாவின் ஆசீர்வாதங்களை கொண்டு வரும். (நீதிமொழிகள் 22:4)—2/1, பக்கம் 7.
◻ இயேசுவின் மரணத்துக்கும் ஆதாமின் மரணத்துக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் என்ன?
ஆதாம், வேண்டுமென்றே தன்னுடைய சிருஷ்டிகருக்கு கீழ்ப்படியாமையை காண்பித்ததினால், மரணத்துக்கு தகுதியானவனே. (ஆதியாகமம் 2:16, 17) ஆனால், அதற்கு மாறாக, ‘பாவஞ்செய்யாத’ இயேசுவோ மரணத்தை ருசிக்க வேண்டிய அவசியமில்லை. (1 பேதுரு 2:22) எனவே, இயேசு மரித்தபோது, விலைமதிப்பில்லா ஒன்றை உடையவராய் இருந்தார். ஆதாம் தன்னுடைய மரணத்தின்போது கொண்டிராத ஒன்றை—பரிபூரண மனித ஜீவனுக்கான உரிமையை—இயேசு கொண்டிருந்தார். ஆகவே, இயேசுவின் மரணம், மனிதகுலத்தை மீட்கும் பலிக்குரிய மதிப்பை உடையதாய் இருந்தது.—2/15, பக்கங்கள் 15, 16.
◻ எசேக்கியேலின் தீர்க்கதரிசன காட்சியில், நகரம் எதை அர்த்தப்படுத்துகிறது?
அந்த நகரம், தீட்டான (பரிசுத்தமில்லாத) தேசத்தின் மத்தியில் இருப்பதால், அது பூமிக்குரிய ஒன்றே. எனவே, நீதியுள்ள சமுதாயத்தின் பாகமாகும் அனைவருக்கும் நன்மை அளிக்கும் பூமிக்குரிய ஆட்சிமுறையை அது அர்த்தப்படுத்துகிறது.—3/1, பக்கம் 18.
◻ பொ.ச. 33-ல் பஸ்காவை ஆசரிக்கும்போது, இயேசு தம்முடைய சீஷர்களின் பாதங்களை ஏன் கழுவினார்?
இயேசு, பாதங்களை கழுவும் சடங்கை தொடங்கி வைக்கவில்லை. மாறாக, தம்முடைய சீஷர்கள் புதிய ஒரு மனநிலையை—மனத்தாழ்மையும் சகோதரர்களுக்காக எந்த கீழ்த்தரமான வேலையையும் மனமுவந்து செய்யும் மனப்பான்மையையும்—ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவினார்.—3/1, பக்கம் 30.
◻ நமக்கு இயல்பாக இருக்கும் திறமைகளைவிட நாம் மற்றவர்களுக்கு கற்பிப்பதில் எது முக்கியம்?
மாணாக்கர்கள் பின்பற்றத்தகுந்த நம்முடைய குணங்களும் நாம் வளர்த்துள்ள ஆவிக்குரிய பழக்கவழக்கங்களுமே. (லூக்கா 6:40; 2 பேதுரு 3:11)—3/15, பக்கங்கள் 11, 12.
◻ பேச்சுக் கொடுப்பவர்கள் பைபிள் வசனங்களை வாசிப்பதை எப்படி சிறப்பாக செய்யலாம்?
பயிற்சியின் மூலமே. ஆம், சரளமாக வாசிக்க வரும்வரை, திரும்ப திரும்ப சத்தமாக வாசித்து பழகவேண்டும். பைபிள் ஆடியோ கேஸட்டுகள் இருந்தால், அதைப் போட்டு கேட்பதன் மூலம், வாசிப்பவர் முக்கிய கருத்தை எப்படி வலியுறுத்தி, நிறுத்தி நிதானமாக வாசிக்கிறார் என்பதையும், பெயர்கள் சிலவற்றையும் தெரியாத சொற்களின் உச்சரிப்பையும் தெரிந்துகொள்வது நல்லது.—3/15, பக்கம் 20.
◻ ஒரு நபர் இறக்கும்போது, எப்படி ‘ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கே திரும்புகிறது’? (பிரசங்கி 12:7)
ஆவி என்பது உயிர் சக்தியே. ஆகையால், அந்த நபரின் எதிர்காலத்திற்கான எந்த நம்பிக்கையும் தேவன்பேரிலேயே முழுவதுமாக சார்ந்திருக்கிறது என்ற அர்த்தத்தில்தான் ஆவி ‘தன்னைத்தந்த தேவனிடத்திற்கே திரும்புகிறது.’ ஒரு நபரை மறுபடியும் உயிரோடு கொண்டுவரும் ஆவியை அல்லது உயிர் சக்தியை கடவுள் மட்டுமே திரும்பக் கொடுக்கமுடியும். (சங்கீதம் 104:30)—4/1, பக்கம் 17.