வசனத்துக்கு விளக்கம்—சுய விளக்கமா?
“விளக்கம்” என்ற வார்த்தையின் ஒரு அர்த்தம் “ஒருவருடைய நம்பிக்கை, கருத்து அல்லது சூழ்நிலைக்கு ஏற்ப விஷயங்களை விளக்குதல்” என்பதாகும். (வெப்ஸ்டர்ஸ் நைன்த் நியூ காலேஜியேட் டிக்ஷ்னரி) ஆக, ஒருவர் ஒரு விஷயத்துக்குத் தரும் விளக்கம் பொதுவாக அவருடைய அனுபவம், கல்வித்தகுதி, வளர்ப்புமுறை ஆகியவற்றால் செல்வாக்கு செலுத்தப்படுகிறது.
அப்படியானால், பைபிள் விளக்கத்தைப் பற்றி என்ன? நாம் பைபிள் பதிவுகளை விளக்கும் போது, நம்முடைய சொந்த “நம்பிக்கை, கருத்து அல்லது சூழ்நிலைக்கு” ஏற்ப, எப்படி வேண்டுமானாலும் விளக்க நமக்கு உரிமை இருக்கிறதா? பெரும்பாலான பைபிள் கல்விமான்களும் மொழிபெயர்ப்பாளர்களும், தாங்கள் சுயமாக செய்வதில்லை என்றும் கடவுளாலேயே வழிநடத்தப்படுவதாகவும் சொல்கின்றனர்.
“எ கேத்தலிக்” என்ற புனைப் பெயரை கொண்ட ஜான் லிங்கார்ட் என்பவரால், 1836-ல் பிரசுரிக்கப்பட்ட நான்கு சுவிசேஷங்களின் ஒரு புதிய தொகுப்பு (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் காணப்படும் யோவான் 1:1-க்கான அடிக்குறிப்பு, இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. அது இவ்வாறு சொல்கிறது: “தங்கள் கருத்தில் விடாப்பிடியாய் இருப்பவர்கள், தங்களுடைய வினோதமான கருத்துக்களுக்கான ஆதாரம், பரிசுத்த வேதாகமத்திலேயே இருப்பதாக நினைத்துக் கொள்கின்றனர்: உண்மையில், இந்த கருத்துக்களை பைபிள் சொல்வது கிடையாது, ஆனால் அவர்களே இந்தக் கருத்துக்களை தங்களுடைய மனங்களில் பசுமரத்து ஆணிபோல் பதியவைத்துக் கொள்கிறார்கள்.”
அந்த எழுத்தாளர் சொல்வது என்னவோ நியாயம்தான், ஆனால் அந்த எழுத்தாளரின் நோக்கம் என்ன? அந்த எழுத்தாளர் கொடுத்த இந்த விளக்கம், அவர் மொழிபெயர்த்திருந்த வசனத்தின் விளக்கவுரையை ஆதரிக்கும் விதத்திலேயே இருக்கிறது: “ஆதியிலே ‘வார்த்தை’ இருந்தது, அந்த ‘வார்த்தை’ தேவனிடத்திலிருந்தது, அந்த ‘வார்த்தை’ தேவனாயிருந்தது”. திரித்துவ கோட்பாட்டை ஆதரிக்கும் மொழிபெயர்ப்புகளில் இதுவும் ஒன்று.
இந்த எழுத்தாளர் யோவான் 1:1-ஐ திரித்துவ கோட்பாட்டுக்கு ஆதரவாக மொழிபெயர்க்கும்படி எது அவரை தூண்டியது? இவர் மொழிபெயர்த்திருப்பதை ‘பைபிள்’ ஆதரிக்கிறதா? நிச்சயமாக அவ்வாறு இருக்க முடியாது. ஏனென்றால் இந்த திரித்துவ போதனை பைபிளில் எந்த இடத்திலும் காணப்படுவதில்லை. இதைக்குறித்து த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்வதை கவனியுங்கள்: “திரித்துவம் என்ற சொல்லோ, அதைப்போன்ற திட்டவட்டமான கோட்பாடோ புதிய ஏற்பாட்டில் காணப்படுகிறதில்லை.” கூடுதலாக, ஏல் பல்கலைக்கழக பேராசிரியர் ஈ. வாஷ்பர்ன் ஹாப்கின்ஸ் சொல்கிறார்: “இயேசுவும் பவுலும் திரித்துவ கோட்பாட்டை அறியவில்லையென தெரிகிறது; . . . அவர்கள் அதைப்பற்றி ஒன்றுமே சொல்லுகிறதில்லை.”
ஒருவர் யோவான் 1:1-க்கோ அல்லது பைபிளின் வேறெந்த வசனத்துக்கோ, திரித்துவ விளக்கத்தை கொடுக்கிறார் என்றால் அவரைப் பற்றி நாம் என்ன முடிவுக்கு வரலாம்? மிஸ்டர் லிங்கார்ட் சொன்ன விதமாகவே, “இந்த கருத்துக்களை பைபிள் சொல்வது கிடையாது ஆனால் அவர்களே இந்தக் கருத்துக்களை தங்களுடைய மனங்களில் பசுமரத்து ஆணிபோல் பதியவைத்துக் கொள்கிறார்கள்.”
நாம் இதைப்பற்றிய சரியான விளக்கங்களைப் புரிந்துகொள்ள, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் தன் கரம் நீட்டி அழைப்பது என்னே சந்தோஷம். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொல்கிறார்: “வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளை உடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.”—2 பேதுரு 1:20, 21.