உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w00 10/1 பக். 30-31
  • “அழகிய மலையாடு”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “அழகிய மலையாடு”
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
w00 10/1 பக். 30-31

“அழகிய மலையாடு”

ஓர் ஆட்டை வர்ணிக்கையில் நம்மில் பலர் அழகு என்ற பெயரடையை உபயோகிக்கவே மாட்டோம். நம்மை பொறுத்தவரை ஆடுகள் பயனுள்ள விலங்குகள் மட்டுமே. அவை எதைக் கொடுத்தாலும் சாப்பிடும்; சுவையான இறைச்சியையும் ஊட்டச்சத்துமிக்க பாலையும் நமக்குக் கொடுக்கும். இப்படியிருந்தும் அழகானவை என்று பொதுவாக நாம் அவற்றை அழைக்க மாட்டோம்.

ஆனால், ‘நேசிக்கப்படத்தக்க பெண்மான், அழகான வரையாடு [“மலையாடு,” NW]’ என மனைவியை பைபிள் விவரிக்கிறது. (நீதிமொழிகள் 5:18, 19) இந்த நீதிமொழிகள் புத்தகத்தை எழுதிய சாலொமோனுக்கு இஸ்ரவேலிலிருந்த வனவிலங்குகள் எல்லாம் அத்துப்படி; எனவே காரணத்தோடுதான் இந்த உருவகத்தை அவர் பயன்படுத்தி இருப்பார் என்பதில் துளியும் சந்தேகமில்லை. (1 இராஜாக்கள் 4:30-33) சவக்கடலுக்கு அருகிலுள்ள எங்கேதி எனும் பகுதியில் மந்தை மந்தையாக மேயும் மலையாடுகளை தன் தகப்பனாகிய தாவீதைப் போலவே இவரும் பார்த்திருக்க வேண்டும்.

யூதேய வனாந்தரங்களில் சிறு சிறு மந்தைகளாக மேய்ந்துகொண்டிருக்கும் மலையாடுகள் தங்கள் தாகத்தைத் தணித்துக்கொள்ள எங்கேதியிலுள்ள நீரூற்றுக்கு வருவது வழக்கம். அந்த வறண்ட பகுதியில் இந்த இடத்தில் மட்டுமே எப்போதும் தண்ணீர் கிடைப்பதால் பல நூற்றாண்டுகளாக இதுவே மலையாடுகள் விரும்பி செல்லும் தண்ணீர் தடாகமாக திகழ்கிறது. சொல்லப்போனால், எங்கேதி என்ற பெயருக்கு “வெள்ளாட்டுக் குட்டியின் நீரூற்று” என்ற அர்த்தமும் உண்டு; இந்தப் பகுதியில் எப்போதும் ஆட்டுக்குட்டிகள் இருந்திருக்கும் என்பதை இதிலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம். சவுல் ராஜா துன்புறுத்தியபோது, தாவீது அவரிடமிருந்து தப்பித்துக்கொள்ள ‘மலையாடுகளின் கன்மலைகளில்’ நாடோடி போல ஒளிந்து வாழ்ந்தார்; அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் அவருக்கு அடைக்கலம் தந்து ஆதரித்ததும் இந்த இடமே.​—⁠1 சாமுவேல் 24:1, 2.

செங்குத்தான பாறை மிகுந்த பள்ளத்தாக்குப் பகுதியான எங்கேதியில், ஓர் ஆண் ஆடு தண்ணீரைத் தேடி முன்னால் செல்ல, அதைத் தொடர்ந்து பெண் ஆடு அல்லது மலையாடு நளினமாக நடப்பதை இன்றும் காணலாம். இப்போது யோசித்துப் பாருங்கள், கற்புள்ள மனைவி ஏன் பெண் மலையாட்டுக்கு ஒப்பிடப்படுகிறாள் என்பது உங்களுக்கு மெல்ல மெல்ல புரியும். அந்த ஆட்டின் அமைதியான சுபாவமும் நளினமும் பெண்மையின் இலக்கணத்தை வெளிப்படுத்துகின்றன. இத்தோற்றம்தான் ‘அழகு’ என்று அது வர்ணிக்கப்படுவதற்கு காரணம் என்று தெரிகிறது.a

பெண் மலையாட்டுக்கு நளினம் மட்டுமல்ல, எந்தக் கஷ்டத்தையும் தாங்கும் சக்தியும் இருக்கிறது. யோபுவிடம் யெகோவா சொன்ன விதமாகவே மலையாடுகள் பாறை இடுக்குகளில், யாரும் செல்ல முடியாத மலைப்பாங்கான பகுதிகளில் குட்டிகளை ஈனுகின்றன. இப்படிப்பட்ட இடங்களில் உணவு கிடைப்பதும் கஷ்டம், வெப்பநிலையும் படுமோசமாக இருக்கும். (யோபு 39:1) இத்தனை சிரமங்களின் மத்தியிலும் பெண் மலையாடு குட்டிகளைப் பராமரிக்கிறது; தன்னைப் போலவே செங்குத்தான பாறைகளில் ஏறவும், பாறைக்குப் பாறை லாவகமாக தாவவும் அவற்றிற்கு கற்றுத் தருகிறது. குட்டிகள் மற்ற விலங்குகளுக்கு பலியாகாதபடிக்கு தைரியமாக எதிர்த்துநின்று பாதுகாக்கவும் செய்கிறது. ஒரு தாய் மலையாடு தன் கால்களுக்கிடையே தஞ்சம் புகுந்த குட்டியை கழுகிடமிருந்து காப்பாற்ற அரை மணிநேரம் போராடியதை ஒருவர் பார்த்திருக்கிறார்.

கிறிஸ்தவ மனைவிமாரும் தாய்மாரும் பெரும்பாலும் படுமோசமான சூழ்நிலைமைகளில் தங்கள் பிள்ளைகளை வளர்க்க வேண்டியிருக்கிறது. கடவுள் தங்களுக்குத் தந்திருக்கும் இந்தப் பொறுப்பை சரிவர செய்வதற்கு துளியும் தன்னலமின்றி தங்களையே அர்ப்பணிப்பதில் அவர்கள் அந்த மலையாட்டைப் போல் இருக்கின்றனர். ஆவிக்குரிய ஆபத்துக்களிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க தைரியமாக பெருமுயற்சி எடுக்கின்றனர். ஆகவே இந்த உருவகத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பெண்களை சிறுமைப்படுத்துவதற்கு பதிலாக ஒரு பெண்ணின் நளினத்திற்கும் அழகுக்கும், அதாவது கடினமான சூழ்நிலைமையிலும் அழகாக ஜொலிக்கும் ஆன்மீக குணங்களிடமே சாலொமோன் கவனத்தை ஈர்த்தார்.

[அடிக்குறிப்பு]

a த நியூ ப்ரௌன்-ட்ரைவர்-பிரிக்ஸ்-ஜெசனியஸ் ஹீப்ரூ அண்ட் இங்லிஷ் லெக்ஸிகன்-⁠ன்படி இந்த சூழமைவில், ‘அழகிய’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் சென் என்ற எபிரெய வார்த்தை, ‘மென்மையான சுபாவத்தையும் நளினமான தோற்றத்தையும்’ குறிக்கிறது.

[பக்கம் 30-ன் படங்கள்]

கிறிஸ்தவ மனைவியும் தாயுமானவள் கடவுள் தந்த பொறுப்புகளை சரிவர செய்கையில் அழகான ஆன்மீக குணங்களுடன் ஜொலிக்கிறாள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்