நீங்கள் விவேகமானவரா?
இஸ்ரவேலில் நியாயாதிபதிகளை நியமிப்பதற்காக, ‘ஞானமும் விவேகமும் அனுபவமுமிக்க மனிதரைக்’ கண்டுபிடிக்க மோசே கடும் முயற்சி செய்தார். (உபாகமம் 1:13, NW) அவர்கள் வயதுமுதிர்ந்த அனுபவசாலிகளாக இருந்தால் மட்டும் போதாது, ஞானமும் விவேகமும் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.
விவேகமுள்ளவரின் பேச்சிலும் நடத்தையிலும் நல் நிதானம் இருக்கும். விவேகமுள்ளவருக்கு, “எப்பொழுது மௌனமாயிருப்பது என்று தெரியும்” என வெப்ஸ்டர்ஸ் நைன்த் நியூ காலேஜியேட் டிக்ஷ்னரி சொல்கிறது. ஆம், “பேச ஒரு காலமுண்டு,” “மௌனமாயிருக்க ஒரு காலமுண்டு.” விவேகி இந்த வித்தியாசத்தை சட்டென்று நிதானித்துவிடுவார். (பிரசங்கி 3:7) பெரும்பாலும் மெளனமாயிருப்பதே நல்லது, ஏனென்றால் “சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற் போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்” என பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 10:19.
கிறிஸ்தவர்கள் ஒருவரோடொருவர் பழகுகையில் விவேகத்தோடு நடந்துகொள்ள வேண்டும். அதிகமாக பேசுகிறவரே அல்லது அதிகாரத்தோடு பேசுகிறவரே முக்கியமானவர் என சொல்ல முடியாது. உதாரணமாக, மோசே ‘வாக்கில் வல்லவராக’ விளங்கினார், ஆனால் பொறுமையையும் சாந்தத்தையும் தன்னடக்கத்தையும் வளர்க்கும்வரை அவரால் இஸ்ரவேல் தேசத்தாரை திறமையோடு வழிநடத்த முடியவில்லை என்பதை மறந்துவிடாதீர்கள். (அப்போஸ்தலர் 7:22) ஆகவே, மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்தும் உரிமை பெற்றோர் அடக்கமுள்ளவராகவும் விட்டுக்கொடுப்பவராகவும் இருக்க வேண்டும்.—நீதிமொழிகள் 11:2.
இயேசு ‘தம்முடைய ஆஸ்திகள் அனைத்தையும்’ யாரிடம் ஒப்படைத்தாரோ அவர்கள் ‘உண்மையும் விவேகமுமுள்ளவர்கள்’ என கடவுளுடைய வார்த்தையில் வர்ணிக்கப்படுகின்றனர். (மத்தேயு 24:45-47) அவர்கள் பணிவின்றி மனம்போன போக்கில் யெகோவாவை மீறி எதையும் செய்வதில்லை; ஒரு விஷயத்தில் கடவுளுடைய வழிநடத்துதல் தெளிவாக இருந்தால், அதைப் பின்பற்றுவதில் சுணங்குவதுமில்லை. பேசுவதற்கான காலம் எது, கூடுதலான விளக்கம் கிடைக்கும் வரை மௌனமாய் இருப்பதற்கான காலம் எது என்பதை அறிந்திருக்கின்றனர். கிறிஸ்தவர்கள் அனைவரும் விசுவாசத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் அடிமை வகுப்பாரைப் பின்பற்றுவது நல்லது.—எபிரெயர் 13:7.