அன்பிலே வளருங்கள்
“உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் [“யெகோவாவிடத்தில்,” NW] உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக.”—மத்தேயு 22:37.
1. (அ) ஒரு கிறிஸ்தவர் என்னென்ன குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்? (ஆ) கிறிஸ்தவர்களின் முக்கிய குணம் எது, ஏன்?
அறிவு, புத்தி, ஞானம் ஆகியவற்றின் மதிப்பை நீதிமொழிகள் புத்தகம் வலியுறுத்திக் காட்டுகிறது. (நீதிமொழிகள் 2:1-10) உறுதியான விசுவாசம், திடநம்பிக்கை ஆகியவற்றின் அவசியத்தை குறித்து அப்போஸ்தலன் பவுல் கலந்தாலோசித்தார். (ரோமர் 1:16, 17; கொலோசெயர் 1:4, 6; எபிரெயர் 10:39) பொறுமையும் இச்சையடக்கமும் முக்கியமானவை. (அப்போஸ்தலர் 24:25; எபிரெயர் 10:36) திறம்பட்ட போதகராவதற்கு ஒரு கிறிஸ்தவர் இப்படி அநேக குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு வளர்த்துக்கொண்டாலும், முக்கியமான ஒரு குணம் இல்லையென்றால் மற்ற அனைத்தும் மதிப்பிழந்து மங்கிவிடும். அந்த முக்கிய குணம்தான் அன்பு.—1 கொரிந்தியர் 13:1-3, 13.
2. அன்பின் முக்கியத்துவத்தை இயேசு எவ்வாறு விளக்கினார், இது என்ன கேள்விகளை எழுப்புகிறது?
2 “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என இயேசு சொன்னபோது அந்த அன்பின் முக்கியத்துவத்தை விளக்கினார். (யோவான் 13:35) அன்பு உண்மை கிறிஸ்தவரின் அடையாள சின்னமாக இருப்பதால், நாம் பின்வரும் கேள்விகளை கேட்டுக்கொள்ள வேண்டும்: அன்பு என்பது என்ன? எல்லாவற்றிற்கும் மேலாக, தம்முடைய சீஷர்களை அடையாளம் காட்டும் என இயேசு சொல்லுமளவுக்கு அது ஏன் அவ்வளவு முக்கியமானது? நாம் எவ்வாறு அன்பை வளர்த்துக் கொள்ளலாம்? யாரிடம் நாம் அன்பு காட்ட வேண்டும்? இந்தக் கேள்விகளை நாம் கலந்தாலோசிக்கலாம்.
அன்பு என்பது என்ன?
3. அன்பை எவ்வாறு விவரிக்கலாம், அது ஏன் மனதுடனும் இருதயத்துடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது?
3 “மற்றவரிடம் காட்டப்படும் நெருங்கிய பாச பிணைப்பு அல்லது அளவுகடந்த நேசம், ஆசை அல்லது பிரியம்” என்பது அன்புக்கு அளிக்கப்படும் ஒரு விளக்கம். மற்றவர்களின் நலன் கருதி செயல்பட தூண்டும் குணம் அது; சில சமயங்களில் அது பெரும் சுயதியாகத்தையும் செய்ய வைக்கும். பைபிளில் விவரிக்கப்படுகிற அன்பு, மனதுடனும் இருதயத்துடனும் சம்பந்தப்பட்டது. மனதுக்கும் அல்லது அறிவுத்திறனுக்கும் அதில் பங்குண்டு. ஏனெனில் அன்பு காட்டுகிற ஒருவர் தனக்கும் தான் நேசிக்கும் மற்ற மனிதருக்கும், நல்ல குணங்களோடு பலவீனங்களும் இருப்பதை அறிந்திருக்கிறார். எனினும், சிலசமயங்களில் பிறரிடம் அன்பு காட்டுவது இயல்பாகவே வருவதில்லை; ஆனாலும், அன்பு காட்டுவதைக் கடவுள் விரும்புகிறார் என்பதை பைபிளில் வாசித்ததனால் கிறிஸ்தவர் ஒருவர் அன்பு காட்டுகிறார்; அவரது அறிவுத்திறன் இவ்விஷயத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. (மத்தேயு 5:44; 1 கொரிந்தியர் 16:14) இருப்பினும், அன்பின் பிறப்பிடம் இருதயமே. பைபிள் சொல்கிற உண்மை அன்பு அறிவுத்திறனால் மட்டும் உருவாவதில்லை. மாறாக, அது உள்ளப்பூர்வமானது, உணர்ச்சிப்பூர்வமானது.—1 பேதுரு 1:22.
4. எந்த விதத்தில் அன்பு பலமான பிணைப்பு?
4 தன்னல இருதயம் படைத்தவர்களால் உண்மையான அன்பு காட்ட முடியாது. ஏனெனில் அன்பு காட்டுகிற ஒருவர், மற்றவரின் தேவைகளை தன் தேவைகளுக்கும் முன்னாக வைக்க தயாராய் இருக்கிறார். (பிலிப்பியர் 2:2-4) கொடுப்பது அன்பின் செயலாக இருக்கையில், “வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக சந்தோஷம் உள்ளது” என்ற இயேசுவின் வார்த்தைகள் முழுக்க முழுக்க உண்மையாகிறது. (அப்போஸ்தலர் 20:35, NW) அன்பு என்பது பலமான பிணைப்பு. (கொலோசெயர் 3:14) பெரும்பாலும் பிணைப்பு நட்பை உட்படுத்துகிறது, ஆனால் அன்பின் பிணைப்புகளோ, நட்பின் பிணைப்புகளைவிட உறுதியானவை. கணவன் மனைவிக்கு இடையே நிலவும் காதல் உறவும் அன்பு என சிலசமயங்களில் வர்ணிக்கப்படுகிறது; எனினும், பைபிள் ஊக்குவிக்கிற அன்பு, உடல் கவர்ச்சிக்கும் அப்பாற்பட்டது, சகிப்புத்தன்மை மிக்கது. மாசில்லா அன்புகாட்டும் தம்பதியினர், முதிர்வயதின் தளர்ச்சியால் அல்லது இருவரில் ஒருவரது அங்கவீனத்தால் உடல்ரீதியில் உறவுகொள்ள முடியாமல் போகலாம்; ஆனாலும் அவர்கள் மனரீதியில் ஒன்றாக பிணைந்திருக்கின்றனர்.
அன்பு—முக்கிய குணம்
5. அன்பு கிறிஸ்தவர்களின் முக்கியமான குணம் என அழைக்கப்படுவது ஏன்?
5 அன்பு கிறிஸ்தவர்களின் முக்கியமான குணம் என அழைக்கப்படுவது ஏன்? முதலாவதாக, இயேசு ஒருவருக்கொருவர் அன்பு காட்டும்படி தம்மை பின்பற்றுவோருக்குக் கட்டளையிட்டதே காரணம். “நான் உங்களுக்குக் கற்பிக்கிற [“கட்டளையிடுகிற,” NW] யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள். நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன் [“கட்டளையிடுகிறேன்,” NW]” என்று சொன்னார். (யோவான் 15:14, 17) இரண்டாவதாக, யெகோவா அன்பின் உருவாக இருக்கிறார். அவரை வணங்குகிறவர்களாக நாமும் அவரைப் போல் இருக்க வேண்டும். (எபேசியர் 5:1; 1 யோவான் 4:16) யெகோவாவையும் இயேசுவையும் பற்றிய அறிவை பெறுவது நித்திய ஜீவனைக் குறிக்கிறதென்று பைபிள் சொல்கிறது. கடவுளைப்போல் இருக்க முயற்சி செய்யாமல், அவரை அறிந்திருப்பதாக நாம் எப்படி சொல்ல முடியும்? “அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்ற உண்மையை அப்போஸ்தலன் யோவான் எடுத்துரைத்தார்.—1 யோவான் 4:8.
6. அன்பு எவ்வாறு நம்முடைய வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை சீர்தூக்கிப் பார்த்து செயல்பட வைக்கும்?
6 அன்பு முக்கியமான குணமாக இருப்பதற்கு மூன்றாவது காரணம்: நம்முடைய வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை சீர்தூக்கிப் பார்க்கவும் எல்லாவற்றையும் நல்லெண்ணத்துடன் செய்யவும் உதவுகிறது. உதாரணமாக, கடவுளுடைய வார்த்தையிலிருந்து தொடர்ந்து அறிவைப் பெற வேண்டும். அத்தகைய அறிவு ஒரு கிறிஸ்தவருக்கு உணவைப்போல் உள்ளது. முதிர்ச்சி அடையவும் கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாய் நடக்கவும் அது அவருக்கு உதவும். (சங்கீதம் 119:105; மத்தேயு 4:4; 2 தீமோத்தேயு 3:15, 16) எனினும், “அறிவு இறுமாப்பை [“கர்வத்தை,” NW] உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்” என்று பவுல் எச்சரித்தார். (1 கொரிந்தியர் 8:1) திருத்தமான அறிவை அடைவது தவறு என்று சொல்லவில்லை, அதில் குறையேதும் இல்லை. குறையெல்லாம் நம்மிடம்தான் உள்ளது; அதற்கு நம் பாவ மனப்போக்கே காரணம். (ஆதியாகமம் 8:21) எதையும் சீர்தூக்கிப் பார்த்து செயல்பட வைக்கும் அன்பு மட்டும் இல்லையென்றால், தன்னைப் போல் யாருமில்லை என்ற நினைப்பை அறிவு ஒருவருக்குள் ஏற்படுத்தி அவரை கர்வமடையச் செய்யும். அன்பு அவரை வழிநடத்தினால் இப்படி ஒருபோதும் நிகழாது. “அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது [“கர்வம் கொள்ளாது,” NW].” (1 கொரிந்தியர் 13:4) அன்பால் வழிநடத்தப்படுகிற கிறிஸ்தவர், அறிவில் தேறினவராக இருந்தாலும் செருக்கடைய மாட்டார். அன்பு அவரை மனத்தாழ்மையுடன் இருக்கவும் தனக்குப் பெயரையும் புகழையும் தேடிக்கொள்ளாமல் இருக்கவும் செய்யும்.—சங்கீதம் 138:6; யாக்கோபு 4:6.
7, 8. எவ்வாறு அன்பு, அதிமுக்கியமான காரியங்களில் கவனத்தை ஊன்ற வைக்க நமக்கு உதவும்?
7 பிலிப்பியருக்கு இவ்வாறு பவுல் எழுதினார்: “திருத்தமான அறிவோடும் முழு பகுத்தறிவோடும், உங்கள் அன்பு இன்னும் அதிகமதிகமாக பெருகும்படியும்; அதிமுக்கியமான காரியங்களை நீங்கள் நிச்சயப்படுத்திக் கொள்ளும்படியும் . . . நான் தொடர்ந்து ஜெபிக்கிறேன்.” (பிலிப்பியர் 1:9, 10, NW) அதிமுக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள் என்ற இந்த ஊக்கமூட்டுதலைப் பின்பற்ற கிறிஸ்தவ அன்பு நமக்கு உதவுகிறது. உதாரணத்திற்கு, “கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான்” என தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதிய வார்த்தைகளைக் கவனியுங்கள். (1 தீமோத்தேயு 3:1) இந்த 2000-ன் ஊழிய ஆண்டின்போது, உலகமெங்கும் 1,502 சபைகள் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டன; இதனால் 91,487 என்ற மொத்த எண்ணிக்கையை அடைந்திருக்கிறோம். எனவே சபைகளில் இன்னும் அநேக மூப்பர்களும் தேவைப்படுகின்றனர். இந்த சிலாக்கியத்திற்கு தகுதிபெற உழைப்பவர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
8 எனினும், கண்காணியின் சிலாக்கியத்திற்கு தகுதிபெற உழைப்பவர்கள், அதன் நோக்கத்தை மனதில் வைத்தால், நல்ல விதத்தில் எதையும் சீர்தூக்கிப் பார்க்க முடியும். வெறுமனே அதிகாரத்தைப் பெறுவதோ பிரபலமாவதோ முக்கியமல்ல. யெகோவாவைப் பிரியப்படுத்தும் மூப்பர்கள், அவர்மீதும் தங்கள் சகோதரர்கள் மீதுமுள்ள அன்பினால் ஊக்குவிக்கப்படுகிறார்கள். முதன்மை நிலையையோ செல்வாக்கையோ பெறுவது அவர்களது நோக்கம் அல்ல. சரியான மனப்பான்மையைக் காத்துக்கொள்ளும்படி சபை மூப்பர்களுக்கு அப்போஸ்தலன் பேதுரு அறிவுரை கூறிய பின்பு, ‘மனத்தாழ்மையின்’ அவசியத்தையும் வலியுறுத்தினார். “அவருடைய [கடவுளுடைய] பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்” என சபையிலுள்ள அனைவருக்கும் அறிவுரை கூறினார். (1 பேதுரு 5:1-6) மூப்பராக வேண்டும் என விரும்புகிற ஒவ்வொருவரும் தங்கள் சபைகளுக்கு ஆசீர்வாதமாக திகழும் எண்ணற்ற மூப்பர்களின் முன்மாதிரியை கவனித்துப் பார்ப்பது நல்லது; அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள், மனத்தாழ்மையுடன் இருக்கிறார்கள்.—எபிரெயர் 13:7.
சகித்திருக்க உதவும் நல்லெண்ணம்
9. வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கும் யெகோவாவின் ஆசீர்வாதங்களை கிறிஸ்தவர்கள் ஏன் தியானிக்கிறார்கள்?
9 அன்பால் ஊக்குவிக்கப்படுவதன் முக்கியத்துவம் மற்றொரு விதத்திலும் காணப்படுகிறது. அன்பின் காரணமாக தேவபக்தியை நாடுகிறவர்கள், இன்று அபரிமிதமான ஆசீர்வாதங்களையும், எதிர்காலத்தில் கற்பனை செய்ய முடியாதளவு அதிசயமான ஆசீர்வாதங்களையும் அனுபவிக்கலாம் என பைபிள் வாக்குறுதி அளிக்கிறது. (1 தீமோத்தேயு 4:8) ஒரு கிறிஸ்தவருக்கு இந்த வாக்குறுதிகளின்மீது அசைக்க முடியாத நம்பிக்கை தேவை; அத்தோடு, யெகோவா தம்மை ‘தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவர்’ என்ற உறுதியும் தேவை; அப்படிப்பட்டவரே விசுவாசத்தில் நிலைத்திருப்பார். (எபிரெயர் 11:6) நம்மில் அநேகர், கடவுளுடைய வாக்குகள் நிறைவேறும் காலத்தை காண ஆவலோடு காத்திருக்கிறோம்; “ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்” என்று அப்போஸ்தலன் யோவானைப் போலவே சொல்கிறோம். (வெளிப்படுத்துதல் 22:20) ‘தமக்கு முன் வைக்கப்பட்டிருந்த சந்தோஷம்’ சகித்திருக்க இயேசுவுக்கு உதவியது. அது போலவே, நமக்கு கிடைக்கப்போகும் ஆசீர்வாதங்களைத் தியானிப்பது சகித்திருப்பதற்கு நம்மை பலப்படுத்தும்.—எபிரெயர் 12:1, 2.
10, 11. அன்பு எவ்வாறெல்லாம் சகித்திருக்க நமக்கு உதவுகிறது?
10 புதிய உலகில் வாழும் ஆவல் மட்டுமே நாம் யெகோவாவுக்கு சேவை செய்வதற்கான முக்கிய உள்நோக்கமாக இருந்தால்? நாம் சிரமப்படுகையிலோ, அல்லது நாம் எதிர்பார்த்தபடி ஏதாவது நடக்காமல் போகையிலோ, எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்காமல் போகையிலோ, சீக்கிரத்தில் பொறுமை இழந்து, திருப்தியற்றவர்களாக ஆவோம். நாம் கேட்டவைகளை விட்டு விலகிப்போகும் பெரும் ஆபத்திலும் சிக்கிக்கொள்வோம். (எபிரெயர் 2:1; 3:12) ஒருகாலத்தில் தன்னுடைய தோழனாக இருந்து தன்னைவிட்டுப் பிரிந்துபோன தேமா என்பவனைப் பற்றி பவுல் குறிப்பிட்டார். ஏன் பிரிந்து சென்றான்? ஏனெனில், ‘இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசை வைத்தான்.’ (2 தீமோத்தேயு 4:10) தன்னலக் காரணங்களுக்காக மட்டுமே சேவை செய்யும் எவரும் அவ்வாறே விலகிச் செல்லும் ஆபத்து இருக்கிறது. அவர்கள் உலகம் அளிக்கும் உடனடி வாய்ப்பு வளங்களால் கவர்ந்திழுக்கப்படலாம்; எதிர்கால ஆசீர்வாதங்களை நம்பி தற்போது தியாகங்களைச் செய்ய விருப்பமற்றவர்களாக மாறிவிடலாம்.
11 எதிர்கால ஆசீர்வாதங்களைப் பெறவும், எதிர்பார்த்த விதமாகவே சோதனைகளிலிருந்து விடுதலை பெறவும் விரும்புவது சகஜம்தான், அது சரியானதுதான். ஆனால் அன்போ நம் வாழ்க்கையில் முதலிடம் கொடுக்க வேண்டிய காரியங்களிடம் நம் போற்றுதலை அதிகரிக்கச் செய்கிறது. நம்முடையதல்ல, யெகோவாவின் சித்தமே முக்கியமானது. (லூக்கா 22:41, 42) அன்பு நம்மை பலப்படுத்துகிறது; கடவுளுக்காக பொறுமையுடன் காத்திருக்க செய்கிறது; அவர் அருளும் எந்த ஆசீர்வாதத்திலும் திருப்திகொள்ள செய்கிறது; அவர் வாக்குறுதி அளித்திருக்கும் எல்லாவற்றையும், ஏன், இன்னுமதிகத்தையும் ஏற்ற காலத்தில் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருக்க செய்கிறது. (சங்கீதம் 145:16; 2 கொரிந்தியர் 12:8, 9) இதற்கிடையில், தன்னலமற்றவர்களாய் தொடர்ந்து சேவிக்க அன்பு நமக்கு உதவுகிறது, ஏனெனில் “அன்பு . . . தனக்கானதை நாடாது.”—1 கொரிந்தியர் 13:4, 5, திருத்திய மொழிபெயர்ப்பு.
கிறிஸ்தவர்கள் யாரிடம் அன்பு காட்ட வேண்டும்?
12. இயேசு சொன்னபடி, யாரிடம் நாம் அன்பு காட்ட வேண்டும்?
12 மோசேயின் நியாயப்பிரமாணத்திலிருந்து இயேசு இரண்டு குறிப்புகளை மேற்கோள் காட்டுகையில் யாரிடம் அன்பு காட்ட வேண்டும் என்பதில் முக்கிய நியமத்தைக் கொடுத்தார். அவர் சொன்னார்: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் [“யெகோவாவிடத்தில்,” NW] உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக” மேலும், “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.”—மத்தேயு 22:37-39.
13. யெகோவாவைப் பார்க்க முடியாதபோதிலும், அவரிடம் அன்பு காட்ட எவ்வாறு கற்றுக்கொள்ளலாம்?
13 நாம் யெகோவாவிடம் அன்பு காட்டுவது முதன்மையான கடமை என்பது இயேசுவின் வார்த்தைகளில் தெளிவாயுள்ளது. எனினும், யெகோவாவிடம் முழுமையாய் அன்பு காட்டுபவர்களாகவே நாம் பிறக்கவில்லை. அது நாம் வளர்க்க வேண்டிய ஒன்று. அவரைப் பற்றி நாம் முதன்முதல் கேட்ட சங்கதிகள் அவரிடம் நம்மை கவர்ந்திழுத்தன. அவர் மனிதகுலத்திற்காக இந்தப் பூமியை எவ்வாறு உருவாக்கினார் என்பதை மெல்ல மெல்ல கற்றறிந்தோம். (ஆதியாகமம் 2:5-23) மனிதகுலத்தை அவர் கையாண்ட விதத்தைப் பற்றி கற்றறிந்தோம். மனிதர் மத்தியில் பாவம் முதன்முதலில் காலடி எடுத்து வைத்ததையும், அவர்களை அவர் புறக்கணித்து விடாதிருந்ததையும், நம்மை மீட்பதற்கு வழிவகைகளை செய்ததையும் கற்றறிந்தோம். (ஆதியாகமம் 3:1-5, 15) உண்மையுள்ளவர்களை தயவாய் நடத்தினார். முடிவில், நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்காக, தம்முடைய ஒரே பேறான குமாரனை அருளினார். (யோவான் 3:16, 36) படிப்படியாக இந்த விஷயங்களைத் தெரிந்து கொண்டபோது யெகோவாவிடம் நம் போற்றுதல் அதிகரித்தது. (ஏசாயா 25:1) யெகோவாவின் அன்பான பராமரிப்பே அவரை நேசிக்கும்படி தன்னை தூண்டியதாக தாவீது ராஜா சொன்னார். (சங்கீதம் 116:1-9) இன்று, யெகோவா நம்மை பராமரிக்கிறார், வழிநடத்துகிறார், பலப்படுத்துகிறார், உற்சாகமூட்டுகிறார். அவரைப் பற்றி கற்றுக்கொள்ள கற்றுக்கொள்ள அவரிடம் நம் அன்பும் பெருகும்.—சங்கீதம் 31:23; செப்பனியா 3:17; ரோமர் 8:28.
எவ்வாறு அன்பு காட்டலாம்?
14. கடவுளிடமுள்ள நம் அன்பு உண்மையானது என்பதை நாம் எவ்வாறு காட்டலாம்?
14 உலகில் அநேகர் கடவுளிடம் அன்பு காட்டுவதாக சொல்வது என்னவோ உண்மை; ஆனால் அவர்கள் செயல்களோ அதை பொய்யாக்குகின்றன. யெகோவாவை உண்மையிலேயே நேசிக்கிறோமா இல்லையா என்பதை எவ்வாறு அறியலாம்? ஜெபத்தில் நாம் அவரிடம் மனந்திறந்து பேசலாம், நாம் எவ்வாறு உணருகிறோம் என்பதை அவரிடம் வெளிப்படையாக சொல்லலாம். மேலும், நம்முடைய அன்பை செயல்களில் காட்டலாம். அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு சொன்னார்: “அவருடைய [கடவுளுடைய] வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.” (1 யோவான் 2:5; 5:3) அதோடுகூட, ஒன்றுகூடி வரும்படியும் சுத்தமான, ஒழுக்கமான வாழ்க்கை வாழும்படியும் கடவுளுடைய வார்த்தை நமக்கு சொல்கிறது. பாசாங்குத்தனத்தைத் தவிர்க்கிறோம், உண்மை பேசுகிறோம், நம் எண்ணங்களும் கறைபடாதபடி காத்துக்கொள்கிறோம். (2 கொரிந்தியர் 7:1; எபேசியர் 4:15, பொது மொழிபெயர்ப்பு; 1 தீமோத்தேயு 1:5; எபிரெயர் 10:23-25) பொருளாதாரத்தில் குறைவுபடுபவர்களுக்கு கொடுத்து உதவுவதன் மூலம் அன்பு காட்டுகிறோம். (1 யோவான் 3:17, 18) மேலும் யெகோவாவைப் பற்றி மற்றவர்களுக்கு எப்போதும் சொல்லி வருகிறோம். இது, ராஜ்யத்தின் நற்செய்தியை உலகெங்கும் பிரசங்கிப்பதில் பங்குகொள்வதை உட்படுத்துகிறது. (மத்தேயு 24:14; ரோமர் 10:10) இந்தக் காரியங்களில் கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவது, யெகோவாவிடமுள்ள நம் அன்பு உண்மையானது என்பதற்கு அத்தாட்சி அளிக்கிறது.
15, 16. கடந்த ஆண்டில், யெகோவாவிடமுள்ள அன்பு பலருடைய வாழ்க்கையை எப்படி மாற்றியுள்ளது?
15 யெகோவாவிடமுள்ள அன்பு, சரியான தீர்மானங்களைச் செய்ய ஆட்களுக்கு உதவுகிறது. கடந்த ஆண்டில், 2,88,907 பேரை அத்தகைய அன்பு தூண்டியது; இவர்கள் தங்கள் வாழ்க்கையை கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து, தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் தங்கள் தீர்மானத்தை வெளிப்படுத்திக் காட்டினர். (மத்தேயு 28:19, 20) அவர்களுடைய ஒப்புக்கொடுத்தலுக்கு அர்த்தமிருந்தது. அவர்களுடைய வாழ்க்கையில் செய்த மாற்றத்தை அது வெளிக்காட்டியது. உதாரணமாக, அல்பேனியாவில் கூடை பந்தாட்ட முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர்தான் காஸ்மண்ட். அவரும் அவருடைய மனைவியும் சில ஆண்டுகள் பைபிளை படித்து வந்தனர்; பல இடையூறுகளின் மத்தியிலும் ராஜ்ய பிரஸ்தாபிகளாயினர். கடந்த ஆண்டில் காஸ்மண்ட் முழுக்காட்டுதல் பெற்றார்; 2000-ம் ஊழிய ஆண்டில் அல்பேனியாவில் முழுக்காட்டுதல் பெற்ற 366 பேரில் அவரும் ஒருவர். ஒரு செய்தித்தாள் அவரைப் பற்றிய கட்டுரையைப் பிரசுரித்தது. அது இவ்வாறு குறிப்பிட்டது: “அவருடைய வாழ்க்கைக்கு நோக்கம் இருக்கிறது, இதனால்தான் அவரும் அவருடைய குடும்பத்தாரும் தங்கள் வாழ்க்கையில் அதிக சந்தோஷத்தை அனுபவித்து மகிழ்கிறார்கள். வாழ்க்கையில் இன்னும் என்னென்ன லாபம் தனக்கு கிடைக்கும் என்பது அவருக்கு இனி முக்கியமல்ல. மற்றவர்களுக்கு தன்னால் எந்தளவு உதவு முடியும் என்பதே அவருக்கு இனி முக்கியம்.”
16 இன்னொரு உதாரணம், குவாமில் பெட்ரோலியம் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்த புதிதாக முழுக்காட்டப்பட்ட சகோதரி. இவருக்கு எக்கச்சக்கமான சம்பளம் கிடைக்கும் வேலை கிடைத்தது. பல ஆண்டுகள் படிப்படியாய் பல பதவி உயர்வுகளைப் பெற்ற பின்பு கடைசியாக, அந்தக் கம்பெனியின் உப தலைவராகும் வாய்ப்பைப் பெற்றார்; அந்தக் கம்பெனியில் சரித்திரத்திலேயே முதல் பெண் உப தலைவராகும் வாய்ப்பு அது. எனினும் அவர் இப்போது யெகோவாவுக்குத் தன் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்திருந்தார். எனவே தன் கணவரோடு காரியங்களைக் கலந்துபேசிய பின்பு, அந்தப் பதவி உயர்வை மறுத்துவிட்டார். அதற்குப் பதிலாக முழுநேர ஊழியராக, அதாவது பயனியராக படிப்படியாய் முன்னேறும் எண்ணத்தில் பகுதிநேர வேலையைத் தேடிக்கொண்டார். இந்த உலகில் பணத்தை சேர்ப்பதற்கு பதிலாக பயனியராக சேவை செய்ய யெகோவாவிடமிருந்த அன்பே அவரை ஊக்குவித்தது. உண்மையில் அத்தகைய அன்பு, 2000-ம் ஊழிய ஆண்டில் உலகெங்குமுள்ள 8,05,205 பேரை, பயனியர் ஊழியத்தின் பல்வேறு அம்சங்களில் பங்குகொள்ள உந்துவித்தது. எப்பேர்ப்பட்ட அன்பையும் விசுவாசத்தையும் அந்தப் பயனியர்கள் காண்பித்திருக்கிறார்கள்!
இயேசுவிடம் அன்பு காட்ட தூண்டுதல்
17. அன்பின் என்ன ஒப்பற்ற முன்மாதிரியை இயேசு வகித்துள்ளார்?
17 அன்பின் தூண்டுதலால் செயல்பட்ட இயேசு தலைசிறந்த முன்மாதிரி. மனிதராக வருவதற்கு முன் தம்முடைய பிதாவிடமும் அன்பு காட்டினார், மனிதகுலத்திடமும் அன்பு காட்டினார். ஞானத்தின் உருவான அவர் சொன்னதாவது: “நான் அவர் [யெகோவாவின்] அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன் [“தேர்ச்சிப்பெற்ற வேலையாளாக இருந்தேன்,” NW]; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன். அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு, மனுமக்களுடனே மகிழ்ந்து கொண்டிருந்தேன்.” (நீதிமொழிகள் 8:30, 31) இயேசுவுக்கு இருந்த அன்பு, தம்முடைய பரலோக வாசஸ்தலத்தை விட்டுவிட்டு, சாதாரண குழந்தையாக பிறக்க தூண்டுவித்தது. பணிவும் தாழ்மையுமுள்ளோரை பொறுமையுடனும் தயவுடனும் நடத்தினார்; யெகோவாவின் பகைஞரின் கைகளில் துன்புறுத்துதலை அனுபவித்தார். முடிவில், முழு மனிதகுலத்திற்காகவும் வாதனையின் கழுமரத்தில் உயிர்நீத்தார். (யோவான் 3:35; 14:30, 31; 15:12, 13; பிலிப்பியர் 2:5-11, NW) சரியான உள்நோக்கத்துடன் செயல்பட எத்தகைய ஒப்பற்ற முன்மாதிரி!
18. (அ) நாம் எவ்வாறு இயேசுவிடம் அன்பை வளர்க்கிறோம்? (ஆ) இயேசுவிடம் அன்பு இருப்பதை எப்படி நாம் காட்டுகிறோம்?
18 சரியானவற்றை இருதயத்தில் ஏற்றுக்கொள்ளும் இயல்புடையவர்கள், சுவிசேஷங்களிலுள்ள இயேசுவின் வாழ்க்கை விவரங்களை வாசித்து, அவரது உத்தமத்தன்மையால் தாங்கள் பெற்ற எண்ணற்ற ஆசீர்வாதங்களை தியானிக்கையில் அவரிடம் அளவுகடந்த அன்பு வேர்விட்டு வளரலாம். “அவரை [இயேசுவை] நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்” என பேதுரு யாருக்கு எழுதினாரோ அவர்களைப் போல் நாமும் இருக்கிறோம். (1 பேதுரு 1:8) நாம் அவர்மீது விசுவாசம் வைத்து, அவருடைய சுயதியாக வாழ்க்கையின் அடிச்சுவட்டில் நடப்பதன்மூலம் அவர்மீது அன்பு காட்டலாம். (1 கொரிந்தியர் 11:1; 1 தெசலோனிக்கேயர் 1:6; 1 பேதுரு 2:21-25) 2000, ஏப்ரல் 19 அன்று இயேசுவின் மரண நினைவு ஆசரிப்புக்கு மொத்தம் 1,48,72,086 பேர் வந்திருந்தனர்; அப்போது, இயேசுவிடம் அன்பு காட்டுவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கின்றன என்பது நமக்கு நினைப்பூட்டப்பட்டது. உண்மையிலேயே அது மாபெரும் எண்ணிக்கை! இயேசுவின் பலியால் வரும் மீட்பில் இத்தனை அநேகர் ஆர்வம் காட்டுவதைக் காண்பது எவ்வளவாய் நம்மை பலப்படுத்துகிறது! மெய்யாகவே, யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் நம்மீது இருக்கும் அன்பின் காரணமாகவும், அவர்களிடம் நமக்கு இருக்கும் அன்பின் காரணமாகவும் நாம் பலப்படுகிறோம்.
19. அன்பைப் பற்றிய என்ன கேள்விகள் அடுத்த கட்டுரையில் கலந்தாலோசிக்கப்படும்?
19 முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் மனதோடும் பலத்தோடும் யெகோவாவிடம் அன்பு காட்ட வேண்டுமென்று இயேசு சொன்னார். மேலும், நம்மீது நமக்கு அன்பு இருப்பதுபோல் அயலாரிடமும் அன்பு காட்ட வேண்டும் என்றும் சொன்னார். (மாற்கு 12:29-31) அந்த அயலார் யார்? எதையுமே நன்றாக சீர்தூக்கிப் பார்க்கவும் நல்லெண்ணத்தை உடையவர்களாயிருக்கவும் அயலாரிடம் காட்டும் அன்பு நமக்கு எப்படி உதவும்? இந்தக் கேள்விகளுக்கான பதில் அடுத்த கட்டுரையில் கலந்தாலோசிக்கப்படும்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• அன்பு ஏன் ஓர் இன்றியமையாத பண்பு?
• யெகோவாவிடம் அன்பு காட்ட எவ்வாறு கற்றுக்கொள்ளலாம்?
• யெகோவாவிடம் அன்பு இருப்பதை நடத்தையின் மூலம் எவ்வாறு நிரூபிக்கிறோம்?
• இயேசுவிடமுள்ள அன்பை நாம் எவ்வாறு காட்டுகிறோம்?
[பக்கம் 10, 11-ன் படங்கள்]
விடுதலைக்காக பொறுமையுடன் காத்திருக்க அன்பு உதவுகிறது
[பக்கம் 12-ன் படங்கள்]
இயேசுவின் மகத்தான பலி அவர்மீது அன்புகூர நம்மை உந்துவிக்கிறது