வாழ்க்கை சரிதை
நாங்கள் யெகோவாவை சோதித்து பார்த்தோம்
பால் ஸ்கிரிப்னர் சொன்னபடி
“குட் மார்னிங், மிஸிஸ். ஸ்டேக்ஹெளஸ். இன்று காலை நான் ஈஸ்டர் கேக்குகளுக்காக ஆர்டர் எடுக்கிறேன். நிச்சயம் உங்கள் குடும்பத்துக்கும் ஒரு கேக் தேவைப்படுமே.” 1938-ம் வருடத்தின் வசந்த கால ஆரம்பம் அது. அ.ஐ.மா.-வில் நியூ ஜெர்ஸியிலுள்ள அட்கோ நகரம். ஜெனரல் பேக்கிங் கம்பெனி பொருட்களை நான் விற்பனை செய்யும் பகுதியிலுள்ள சிறந்த வாடிக்கையாளர் ஒருவரிடமே பேசிக்கொண்டிருந்தேன். கேக் வேண்டாம் என மிஸிஸ். ஸ்டேக்ஹெளஸ் சொன்னது எனக்கு பெருத்த ஆச்சரியத்தை அளித்தது.
“எனக்கு தேவைப்படாது. நாங்க ஈஸ்டர் கொண்டாடுவதில்லை” என்றார்கள்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர்கள் ஈஸ்டர் கொண்டாடுவதில்லையா? எப்போதுமே வாடிக்கையாளர் சொல்வது சரி என்பதே வியாபாரத்தின் முதல் நியதி. அப்படியானால், இப்போது நான் என்ன செய்வது? வேறொரு பாணியில் முயற்சி செய்தேன். “பாருங்க, இது ரொம்ப ருசியான கேக். அதுவும் எங்க கம்பெனி பண்டங்கள் எல்லாமே உங்களுக்கு பிடிக்கும்னு எனக்கு தெரியும். ம். . .ம், நீங்க ஈஸ்டர் கொண்டாடல்லன்னாலும் உங்க குடும்பத்தார் இந்த கேக்கை சாப்பிட்டு அனுபவிக்கலாமே?”
“எனக்கு அப்படி தோணல” என்று மீண்டும் சொல்லிவிட்டு, தொடர்ந்து பேசினார்கள். “ஆனாலும் மிஸ்டர் ஸ்கிரிப்னர், உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன், அதுக்கு இதுதான் சரியான நேரம்னு நினைக்கிறேன்.” இந்த உரையாடல் என் வாழ்க்கையை முழுமையாக மாற்றப் போவதாக இருந்தது! மிஸிஸ். ஸ்டேக்ஹௌஸ், நியூ ஜெர்ஸியில் பெர்லினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கம்பெனியின் (அல்லது சபையின்) அங்கத்தினர். ஈஸ்டர் கொண்டாட்டம் எங்கு தொடங்கியது என்பதைப் பற்றி எனக்கு விளக்கிவிட்டு, மூன்று சிறு புத்தகங்களை அவர்கள் எனக்கு தந்தார்கள். பாதுகாப்பு, பகிரங்கமாக்கப்படுதல், ஆதரவு என்னும் தலைப்புகளை உடைய ஆங்கில சிறு புத்தகங்கள் அவை. தெரிந்துகொள்ளும் ஆர்வத்தோடும் அதே சமயம் சற்று தயக்கத்தோடும் அவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்றேன். மிஸிஸ். ஸ்டேக்ஹௌஸ் சொன்னதில் என் பிள்ளைப் பருவத்துடன் சம்பந்தப்பட்ட விஷயம் இருந்தது.
பைபிள் மாணாக்கர்களுடன் ஆரம்ப தொடர்பு
நான் 1907-ம் ஆண்டு, ஜனவரி 31 அன்று பிறந்தேன். 1915-ல் எனக்கு எட்டு வயதானபோது அப்பா புற்றுநோயால் இறந்துபோனார். அதன் காரணமாக, அம்மாவும் நானும், மாஸசூஸெட்ஸிலுள்ள மால்டனில் இருந்த அம்மாவின் பெற்றோருடன் ஒரு பெரிய வீட்டிற்கு குடிமாறினோம். என் மாமா பென்ஜமின் ரான்ஸமும் அவர் மனைவியும்கூட அங்கேயே மூன்றாம் மாடியில் வசித்து வந்தனர். அப்போது இருபதாம் நூற்றாண்டு தொடங்குமுன், சர்வதேச பைபிள் மாணாக்கர்கள் என்று அழைக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் பென் மாமா. எனக்கு பென் மாமாவை ரொம்ப பிடிக்கும். ஆனால் மெதடிஸ்ட்டுகளாக இருந்த என் அம்மாவின் குடும்பத்தார் அவரை விநோதமானவர் என்று நினைத்தார்கள். பல வருடங்களுக்குப்பின், அவருடைய மனைவி அவரை விவாகரத்து செய்யுமுன், மத நம்பிக்கைகள் காரணமாக கொஞ்ச நாட்களுக்கு அவரை ஒரு மனநலக் காப்பகத்தில் சேர்த்துவிட்டார்! பென் மாமாவுக்கு மனநோய் எதுவும் இல்லை என்பதை மருத்துவமனையிலுள்ள மருத்துவர்கள் விரைவில் கண்டுபிடித்ததால், அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அங்கிருந்து அவரை விடுவித்தார்கள்.
பாஸ்டனில் இருந்த சர்வதேச பைபிள் மாணாக்கர்களின் கூட்டங்களுக்கு பென் மாமா என்னை அழைத்து சென்றார். வெளி இடங்களிலிருந்து பேச்சாளர்கள் வரும்போது அல்லது விசேஷ கூட்டங்கள் நடக்கும்போது முக்கியமாக என்னை கூட்டிக்கொண்டு சென்றார். ஒருமுறை சந்திக்கவந்த பேச்சாளர் வேறு யாருமல்ல, அப்போது பிரசங்க வேலையை மேற்பார்வை செய்து வந்த சார்ல்ஸ் டேஸ் ரசலே ஆவார். இன்னொரு முறை, “ஃபோட்டோ-டிராமா ஆஃப் கிரியேஷன்” காண்பிக்கப்பட்டதே விசேஷ நிகழ்ச்சி. 1915-ல் அதை பார்த்த போதிலும், ஆபிரகாம் ஈசாக்கை பலி செலுத்துவதற்காக மலை மேலே கொண்டு சென்ற சித்தரிப்பு இன்று வரை தெளிவாக ஞாபகம் இருக்கிறது. (ஆதியாகமம், அதிகாரம் 22) யெகோவாவின் மேல் முழு விசுவாசத்துடன், விறகு கட்டைகளை எடுத்துக்கொண்டு ஆபிரகாமும் ஈசாக்கும் சிரமப்பட்டு மலைமேல் ஏறி செல்லும் காட்சி இப்போதும் கண்முன் நிற்கிறது. தகப்பனில்லாத பையனாக இருந்ததால், இந்த காட்சி என்னில் ஆழமாக பதிந்தது.
பின்பு, பென் மாமாவும் அவருடைய மனைவியும் மேனுக்கு குடிபெயர்ந்தனர். அம்மா மறுமணம் செய்துகொண்டார்கள். எங்கள் குடும்பம் நியூ ஜெர்ஸிக்கு குடிமாறியது. ஆகவே அதற்குப்பின் நெடுநாளாக பென் மாமாவை பார்க்கவே இல்லை. நியூ ஜெர்ஸியில் என்னுடைய டீனேஜ் பருவத்தை கழிக்கையில், ஒரு பிரஸ்பிட்டேரியன் குடும்பத்தாருடன் பழக ஆரம்பித்தேன். அவர்களுடைய எட்டு பிள்ளைகளில் ஒருத்தியான மெரியன் நெஃப்பை சந்தித்தேன். அநேக ஞாயிற்றுக்கிழமை மாலைகளை அந்த குடும்பத்தாருடனும் அவர்களுடைய சர்ச்சின் இளைஞர் குழுவுடனும் செலவிட்டேன். முடிவில் நானும் ஒரு பிரஸ்பிட்டேரியன் ஆனேன். இருந்தாலும், பைபிள் மாணாக்கருடைய கூட்டங்களில் கற்றுக்கொண்ட சில விஷயங்கள் இன்னும் என் மனதில் இருந்தன. 1928-ல் மெரியனும் நானும் திருமணம் செய்துகொண்டோம். டாரஸ், லுவீஸ் என்ற இரு பெண் பிள்ளைகள் 1935-லும் 1938-லும் பிறந்தனர். ஒரு சிறு பிள்ளையையும் கைக் குழந்தையையும் வைத்திருந்த நாங்கள், குடும்ப வளர்ச்சிக்கு ஆவிக்குரிய வழிநடத்துதல் தேவைப்பட்டதை உணர்ந்தோம்.
அந்த சிறு புத்தகங்களில் சத்தியம்
எந்த சர்ச்சில் சேருவது என்று தீர்மானிப்பதற்காக மெரியனும் நானும் ஒரு திட்டம் போட்டோம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒருவர் மாற்றி ஒருவர் சர்ச்சுக்கு செல்ல வேண்டும். மற்றவர் வீட்டில் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். மெரியன் வீட்டில் இருக்க வேண்டிய ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று, நான் வீட்டில் இருந்து பிள்ளைகளை பார்த்துக் கொள்வதாக சொன்னேன். மிஸிஸ். ஸ்டேக்ஹெளஸ் தந்த மூன்று சிறு புத்தகங்களில் முதலாவதாக பாதுகாப்பு என்பதை வாசித்துவிடலாம் என்பதற்காகவே வீட்டில் இருந்துவிட்டேன். அதை வாசிக்க தொடங்கியதுதான் தெரியும், கீழே வைக்கவே முடியவில்லை! எந்த சர்ச்சும் தர முடியாத ஒன்றை கண்டடைந்தேன் என்பது மீண்டும் மீண்டும் உறுதியானது. அதற்கடுத்த வாரமும் நானே பிள்ளைகளை பார்த்துக்கொள்வதாக ஒத்துக்கொண்டு, பகிரங்கமாக்கப்படுதல் என்ற இரண்டாம் புத்தகத்தை வாசித்தேன். நான் வாசித்தது, எங்கோ கேள்விப்பட்ட விஷயம் போல தோன்றியது. இவற்றைத்தான் பென் மாமா நம்பினாரா? அவருடைய மதத்தை எங்கள் குடும்பத்தினர் பைத்தியக்காரத்தனமாக கருதினார்களே. மெரியன் என்ன நினைப்பாளோ? நான் இந்தளவுக்கு யோசித்திருக்க வேண்டாம். பகிரங்கமாக்கப்படுதல் சிறு புத்தகத்தை வாசித்து சில நாட்கள் கழித்து நான் வேலையிலிருந்து வீடு திரும்பியபோது, “நீங்கள் கொண்டு வந்த புத்தகங்களை வாசித்தேன். அவை உண்மையிலேயே சுவாரஸ்யமானவை” என்று மெரியன் சொன்னதைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன். என்னே ஒரு நிம்மதி!
பொய் மதத்தை கடுமையாக அம்பலப்படுத்திய சமீப வெளியீடான சத்துருக்கள் என்ற ஆங்கில புத்தகத்தை பற்றிய தகவல் அந்த சிறு புத்தகங்களின் பின் அட்டையில் காணப்பட்டது. அதை பெற தீர்மானித்தோம். தபால் மூலமாக அதை தருவிக்கும்முன், ஒரு சாட்சி எங்கள் கதவை தட்டி, அதே புத்தகத்தை எங்களுக்கு அளித்தார். அந்த புத்தகம் எங்களை தீர்மானமெடுக்க வைத்து விட்டது! சர்ச் சர்ச்சாக செல்வதற்கு முற்றுப்புள்ளி வைத்தோம். நியூ ஜெர்ஸியில் காம்டனிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கம்பெனியில் நடைபெற்ற கூட்டங்களுக்கு செல்ல ஆரம்பித்தோம். ஒருசில மாதங்கள் கழித்து, 1938-ல் ஜூலை 31, ஞாயிற்றுக்கிழமை அன்று சுமார் 50 பேர் சகோதரி ஸ்டேக்ஹெளஸ் வீட்டிலுள்ள புல்தரையில்—எந்த வீட்டில் ஈஸ்டர் கேக்குகளை விற்க முயன்றேனோ அங்கே—கூடினோம்; ஜட்ஜ் ரதர்ஃபர்ட்டின் பதிவு செய்யப்பட்ட முழுக்காட்டுதல் பேச்சை கேட்டோம். பின்னர் துணிமாற்றிவிட்டு, பக்கத்திலிருந்த நீரோடையில் 19 பேர் முழுக்காட்டுதல் பெற்றோம்.
பயனியராக தீர்மானித்தல்
முழுக்காட்டுதல் பெற்றதும், கம்பெனியிலுள்ள ஒரு சகோதரி, வெளி ஊழியத்தை தங்கள் முக்கிய நடவடிக்கையாக ஆக்கிக்கொண்ட பயனியர்கள் என்று அழைக்கப்பட்டவர்களைப் பற்றி என்னிடம் சொன்னார். உடனடியாக அதில் ஆர்வம் காட்டினேன். குடும்பமாக பயனியர் செய்து வந்த வயதான சகோதரர் கோனிக், அவருடைய மனைவி, அவருடைய பருவ மகள் ஆகியோரோடு பழக ஆரம்பித்தேன். அவர்கள் அனைவரும் பக்கத்து சபையில் பயனியர்கள். இளம் குடும்ப தகப்பனாக இருந்த நான், ஊழியத்தில் கோனிக் குடும்பம் அனுபவித்த ஆழ்ந்த சந்தோஷத்தால் மிகவும் கவரப்பட்டேன். அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு போய் என்னுடைய பேக்கரி வண்டியை சற்று நிறுத்திவிட்டு, அவர்களுடன் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் நேரத்தை செலவிட்டேன். விரைவில் நானும் ஒரு பயனியராக விரும்பினேன். ஆனால் எப்படி? மெரியனுக்கும் எனக்கும் இரண்டு சிறு பிள்ளைகள். என் வேலைக்கும் அதிக கவனமும் நேரமும் தேவைப்பட்டது. உண்மையில், ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போர் தொடங்கி, ஐக்கிய மாகாணங்களில் அதிகமதிகமாக இளைஞர் ராணுவத்தில் சேர்ந்தபோது, படைத்துறை சாராத வேலை செய்பவர்களுக்கு வேலை அதிகமானது. விற்பனைக்காக என்னை இன்னும் நிறைய இடங்களுக்கு போக சொன்னார்கள். இத்தனைக்கும் மத்தியில் என்னால் பயனியர் செய்யவே முடியாது என்று எனக்கு தெரிந்தது.
பயனியர் செய்ய விரும்புவதை சகோதரர் கோனிக்கிடம் சொன்னபோது, “யெகோவாவின் சேவையில் எப்போதும் கடுமையாக உழையுங்கள், உங்கள் இலக்கை ஜெபத்தில் அவரிடம் சொல்லுங்கள். அதை அடைய அவர் உதவி செய்வார்” என்று சொன்னார். ஒரு வருடத்திற்கும் மேல், நான் அதையே செய்து வந்தேன். நாம் கேட்பதற்கு முன்பே யெகோவா நம் தேவைகளை அறிந்திருக்கிறார் என்று உறுதியளிக்கும் மத்தேயு 6:8 போன்ற வேத வசனங்களை நான் அடிக்கடி சிந்தித்தேன். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடிக்கொண்டே இருக்கும்படி சொல்லும் மத்தேயு 6:33-ன் அறிவுரையை பின்பற்ற முயன்றேன். சகோதரர் மெல்வன் வின்செஸ்டர் என்ற மண்டல ஊழியரும் (தற்போது வட்டார கண்காணி என்று அழைக்கப்படுபவர்) எனக்கு உற்சாகம் அளித்தார்.
மெரியனிடம் என் இலக்குகளைப் பற்றி பேசினேன். யெகோவா ஆசீர்வாதங்களை நம்மீது பொழிய மாட்டாரோவென்று சோதித்துப் பார்க்கும்படி உற்சாகப்படுத்திய மல்கியா 3:10-லுள்ள வார்த்தைகளைக் குறித்து சிந்தித்தோம். அவளுடைய பதில் எனக்கு உற்சாகம் அளித்தது. “உங்களுக்கு பயனியர் ஊழியம் செய்ய ஆசை இருந்தா, என்னால நீங்க செய்யாம இருக்காதீங்க. நீங்க பயனியர் செய்யும்போது நான் பிள்ளைகளை பார்த்துக்குவேன். பணமோ பொருளோ நமக்கு நிறைய தேவையில்லை” என்று சொன்னாள். திருமணமாகி 12 வருடங்கள் ஆகியிருந்ததால், மெரியன் சிக்கனமாகவும் பார்த்து பார்த்து கவனமாகவும் குடும்பம் நடத்தும் மனைவி என்பது எனக்கு ஏற்கெனவே தெரிந்ததுதான். இப்போது பல வருடங்களாக, எனக்கு ஓர் அருமையான பயனியர் துணையாகவும் இருந்திருக்கிறாள். ஏறக்குறைய 60 வருட கால முழுநேர ஊழிய வாழ்க்கையில் எங்கள் வெற்றியின் இரகசியத்தில் ஒன்று என்னவென்றால், கொஞ்சத்தில் திருப்தி அடைந்து அதை அதிகமாக தோன்ற வைக்கும் அவளுடைய திறமைதான்.
1941-ன் கோடை காலத்தில், பல மாதங்களாக ஜெபத்தோடு திட்டமிட்டபின், மெரியனும் நானும் கொஞ்சம் பணம் சேர்த்து, எங்கள் குடும்பம் வாழ்வதற்கு ஏற்றதாக 5.5 மீட்டர் நீளமுள்ள குடியிருப்பு வண்டியை வாங்கினோம். ஜூலை 1941-ல் நான் என் வேலையை விட்டுவிட்டு ஒழுங்கான பயனியர் ஆனேன். அப்போது முதல் முழுநேர ஊழியத்தை தொடர்ந்து செய்து வருகிறேன். நியூ ஜெர்ஸியிலிருந்து ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் மாநாடு நடக்கவிருந்த மிஸ்ஸெளரியிலுள்ள செ. லூயி செல்லும் வழியில் ரூட் 50-லுள்ள பத்து ஸ்டாப்புகளே நான் பெற்ற முதல் நியமிப்பு. வழிநெடுகவிருந்த சகோதரர்களின் பெயர்களும் விலாசங்களும் எனக்கு அனுப்பப்பட்டன. எப்போது என்னை எதிர்பார்க்கலாம் என்று ஏற்கெனவே அவர்களுக்கு எழுதிவிட்டேன். மாநாட்டுக்கு போய் சேர்ந்ததும் பயனியர் இலாக்காவில் சென்று அடுத்த நியமிப்பை பெற வேண்டியிருந்தது.
“நான் யெகோவாவை சோதித்துப் பார்க்கப் போகிறேன்”
எங்கள் சிறிய குடியிருப்பு வண்டியில் பிரசுரங்களை நிரப்பிக் கொண்டு, காம்டனிலுள்ள சகோதரர்களிடம் விடைபெற அங்கே நடந்த கூட்டத்திற்கு கடைசி தடவையாக சென்றோம். இரண்டு சிறு பெண் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு, மாநாட்டுக்கு பின் எங்கு போவோம் என்றே தெரியாத நிலையில் இருந்ததால், எங்கள் திட்டங்கள் சில சகோதரர்களுக்கு நடைமுறையற்றதாகவே தோன்றியிருக்கும். “சீக்கிரத்தில் திரும்பி வருவீர்கள்” என்று அநேகர் சொன்னார்கள். “வரமாட்டோம் என்று நான் சொல்லவில்லை. யெகோவா என்னை கவனித்துக்கொள்வதாக சொல்லியிருக்கிறார், எனவே நான் யெகோவாவை சோதித்துப் பார்க்கப் போகிறேன்” என்று பதிலளித்தது நினைவிருக்கிறது.
மாஸசூஸெட்ஸிலிருந்து மிஸ்ஸிஸிபி வரைக்கும் 20 நகரங்களில் பயனியர் ஊழியம் செய்து அறுபது ஆண்டுகளுக்கு பின்னரும், யெகோவா தாம் கொடுத்த வாக்கை பெரியளவில் காப்பாற்றி இருக்கிறார் என்று எங்களால் சொல்ல முடியும். எனக்கும் மெரியனுக்கும் எங்கள் இரு மகள்களுக்கும் அவர் வழங்கியிருக்கும் ஆசீர்வாதங்கள், அப்போது 1941-ல் நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காதது. பக்கத்து சபைகளில் எங்கள் மகள்கள் உண்மையுள்ள பயனியர்களாக சேவிப்பதும், ஐக்கிய மாகாணங்களின் கிழக்கு கரையோர பகுதியெங்கும் சுமார் நூறு (கடைசியாக எண்ணிப் பார்த்தபோது) ஆவிக்குரிய மகன்களும் மகள்களும் இருப்பதும் இவற்றில் அடங்கும். யெகோவா தேவனுக்கு தங்களை ஒப்புக்கொடுத்திருக்கும் 52 பேருக்கு நானும், 48 பேருக்கு மெரியனும் படிப்பு நடத்தியிருக்கிறோம்.
ஆகஸ்ட் 1941-ல், நாங்கள் செ. லூயிக்கு சென்றோம். அங்கு பெத்தேலிலிருந்து வந்த சகோதரர் டி. ஜே. சல்லவனை சந்தித்தேன். நியமிக்கப்பட்ட ஊழியனாக என்னை அங்கீகரிக்கும் கடிதத்தை அவரிடமிருந்து பெற்றேன். போர் மூள வாய்ப்புகள் தென்பட்ட அந்த சமயத்தில் படைத்துறையில் சேராமல் இருப்பதற்கு அது தேவைப்பட்டது. ஊழியத்தில் நான் செலவிடும் அதே நேரத்தை என் மனைவியும் செலவிடுவதையும், என்னுடன் அவளும் பயனியர் செய்ய விரும்புவதையும் சகோதரர் சல்லவனிடம் சொன்னேன். மாநாட்டில் பயனியர் இலாக்கா செயல்பட தொடங்குவதற்கும் முன், சகோதரர் சல்லவன் உடனடியாக மெரியனையும் ஒரு பயனியராக நியமித்து கையொப்பமிட்டார். “மாநாட்டுக்கு பிறகு பயனியர் ஊழியம் செய்ய எங்கே போகிறீர்கள்?” என்று எங்களிடம் கேட்டார். எங்களுக்குத் தெரியவில்லை. “கவலைப்படாதீர்கள். பயனியர்கள் தேவைப்படும் பகுதியிலுள்ள யாரையாவது இந்த மாநாட்டில் சந்திப்பீர்கள். அப்போது பிரச்சினை தீரும். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை மட்டும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். நாங்கள் உங்களுக்கு நியமன கடிதத்தை அனுப்பிவிடுவோம்” என்று சொன்னார். அப்படியே நடந்தது. முன்னாள் மண்டல ஊழியராகிய சகோதரர் ஜாக் டவிட் என்பவருக்கு வர்ஜீனியாவில் நியூ மார்க்கெட்டிலுள்ள சிலரை தெரியும். அவர்களுக்கென ஒரு பயனியர் வீடு இருந்தது. அங்கு இன்னும் ஒருசில பயனியர்கள் தேவைப்பட்டார்கள். ஆகவே மாநாட்டுக்கு பின் நாங்கள் நியூ மார்க்கெட் சென்றோம்.
நியூ மார்க்கெட்டில் நாங்கள் எதிர்பாராத சந்தோஷம் காத்திருந்தது. எங்களுடன் பயனியர் வேலையில் சேர்ந்து கொள்ள ஃபிலடெல்ஃபியாவிலிருந்து வந்தது யார் தெரியுமா? வேறு யாருமல்ல, பென்ஜமின் ரான்ஸம். ஆம், பென் மாமாவேதான்! அன்று பாஸ்டனில் என் இருதயத்தில் சத்தியத்தின் விதைகளை விதைத்து, 25-க்கும் மேற்பட்ட வருடங்களுக்குப்பின் அவரோடு வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வது எவ்வளவு சந்தோஷமாக இருந்தது! பல வருடங்களுக்கு குடும்பத்தாரின் பாரா முகத்தையும், கேலி கிண்டலையும், துன்புறுத்தலையும் சகித்த போதிலும் யெகோவாவிடமும் ஊழியத்திடமும் பென் மாமாவுக்கு இருந்த அன்பு துளியும் தணியவே இல்லை.
நியூ மார்க்கெட்டிலுள்ள பயனியர் வீட்டில் நாங்கள் எட்டு மாதங்களை அனுபவித்து களித்தோம். அப்போது, நாங்கள் பல காரியங்களோடுகூட பிரசுரங்களுக்கு பண்ட மாற்றாக எப்படி கோழிகளையும் முட்டைகளையும் பெற்றுக்கொள்வது என்றும் கற்றுக்கொண்டோம். பின்பு, பென் மாமாவும் மெரியனும் நானும் இன்னும் மூன்று பேரும் பென்ஸில்வேனியாவிலுள்ள ஹானோவரில் விசேஷ பயனியர்களாக நியமிக்கப்பட்டோம். 1942-லிருந்து 1945 வரை பென்ஸில்வேனியாவில் நாங்கள் பெறவிருந்த ஆறு நியமிப்புகளில் இது முதலாவதாகும்.
இரண்டாம் உலகப் போரின்போது விசேஷ பயனியர்கள்
இரண்டாம் உலகப் போரின்போது நடுநிலை வகித்ததால் பகையை சமாளிக்க வேண்டிய சமயங்கள் இருந்தன. ஆனாலும் யெகோவா ஒருபோதும் எங்களை கைவிடவில்லை. மாஸசூஸெட்ஸிலுள்ள ப்ராவின்ஸ்டவுனில் ஒருமுறை எங்கள் பழைய ப்யூயிக் வாகனம் நின்றுவிட்டது. பகைமை மிக்க கத்தோலிக்க பிராந்தியத்தின் வழியே ஒரு மறுசந்திப்புக்காக பல கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டி இருந்தது. போக்கிரி பையன்களின் கும்பல் ஒன்றை கடந்து சென்றேன். என்னை அடையாளம் கண்டுகொண்டு சத்தம் போட ஆரம்பித்தனர். ‘உஸ்’ என்று பறந்துவந்த கற்களின் இரைச்சல் காதில் விழுந்தாலும், அவற்றின் வேகத்துக்கு ஈடுகொடுத்து, இந்த இளைஞர்கள் விரட்டிக்கொண்டே எனக்குப் பின்னால் வரக்கூடாதென்ற நினைப்பில் விரைந்து சென்றேன். எப்படியோ ஒருவழியாக, அக்கறை காட்டியவரின் வீட்டுக்கு அடிபடாமல் போய் சேர்ந்தேன். அமெரிக்கன் லீஜனின் மதிப்புள்ள அங்கத்தினராகிய அந்த வீட்டுக்காரர், “இன்று நாங்கள் படம்பார்க்க டவுனுக்கு போறோங்கிறதையே மறந்துட்டேன்; அதனால, உங்களுடன் நேரம் செலவிட முடியாது” என்று சொல்லி வருத்தப்பட்டார். நான் திரும்பி வருவதை எதிர்பார்த்து தெருமுனையில் அந்த கல்லெறி கும்பல் காத்திருக்குமே என்று நினைப்பில் நெஞ்சு படபடத்தது. அதற்குள் அந்த வீட்டுக்காரர், “எங்களுடன் சேர்ந்து நீங்களும் நடக்கலாம் அல்லவா? வழியில் பேசிக்கொண்டே போகலாமே” என்று சொன்னபோது என் மனதைத் தேற்றிக்கொண்டேன். ஆகவே என்னால் அவருக்கு சாட்சி கொடுக்கவும் முடிந்தது. தொந்தரவு மிக்க இடத்தை பத்திரமாக கடக்கவும் முடிந்தது.
குடும்பத்தையும் ஊழியத்தையும் சமநிலைப்படுத்துதல்
போருக்குப்பின், வர்ஜீனியாவில் பல நியமிப்புகளைப் பெற்றோம். ஷார்லட்ஸ்வில்லில் விசேஷ மற்றும் ஒழுங்கான பயனியர்களாக எட்டு ஆண்டுகள் இருந்ததும் இதில் அடங்கும். 1956-ற்குள் என் மகள்கள் வளர்ந்து திருமணம் செய்திருந்தனர். மெரியனும் நானும் மீண்டும் இங்கும் அங்கும் போக ஆரம்பித்தோம். வர்ஜீனியாவில் ஹாரஸன்பர்கில் பயனியர்களாகவும் வட கரோலினாவில் லிங்கன்டனில் விசேஷ பயனியர்களாகவும் சேவை செய்தோம்.
1966-ல் வட்டார வேலைக்கு நியமிக்கப்பட்டேன். நியூ ஜெர்ஸியில் 1930-களில் சகோதரர் வின்செஸ்டர் என்னை உற்சாகப்படுத்தியதுபோல் இப்போது நான் சபைகளுக்கு சென்று சகோதரர்களை உற்சாகப்படுத்த வேண்டியிருந்தது. டென்னெஸியிலுள்ள சபைகளின் ஒரு வட்டாரத்தில் இரண்டு வருடங்கள் செலவிட்டேன். பின்னர் மெரியனும் நானும் எங்களுக்கு மிகவும் விருப்பமான விசேஷ பயனியர் வேலைக்கு மீண்டும் திரும்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டோம். 1968-லிருந்து 1977 வரை ஐக்கிய மாகாணங்களின் தெற்கு பகுதியில் ஜார்ஜியாவிலிருந்து மிஸ்ஸிஸிபி வரையுள்ள இடங்களில் விசேஷ பயனியர்களாக ஊழியம் செய்தோம்.
ஜார்ஜியாவிலுள்ள ஈஸ்ட்மனில், (இப்போது நடத்தும் கண்காணி என அழைக்கப்படுகிற) சபை கண்காணியாக நியமிக்கப்பட்டேன். அநேக வருடங்கள் வட்டார கண்காணியாக இருந்த, ஆனால் அப்போது உடல்நலம் குன்றிய நிலையிலிருந்த வயதான அருமை சகோதரர் பவல் கர்க்லன்டிற்கு பதிலாக அந்த நியமனத்தை நான் பெற்றேன். அவர் மிகுந்த போற்றுதலும் ஆதரவும் அளிப்பவராய் இருந்தார். அவருடைய ஆதரவு அவசியமானதாக இருந்தது. ஏனென்றால் சபையில் கொஞ்சம் உட்பூசல் இருந்து வந்தது, அதில் ஒருசில முக்கியமானவர்களும் உட்பட்டிருந்தனர். பிரச்சினை மிகவும் மோசமானது. நான் யெகோவாவிடம் ஜெபத்தில் அதிக நேரம் செலவிட்டேன். நீதிமொழிகள் 3:5, 6 போன்ற வசனங்கள் நினைவிற்கு வந்தன: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.” மனம்விட்டு பேசி கருத்துக்களை பரிமாற கடுமையாக உழைப்பதன் மூலம், எல்லாருக்கும் நன்மை பயக்கும் வகையில் சபையில் ஒற்றுமையை ஏற்படுத்த முடிந்தது.
1977-ல் வயோதிபத்தின் பாதிப்புகளை கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்தோம். ஷார்லட்ஸ்வில் பகுதிக்கு நாங்கள் மீண்டும் நியமிப்பை பெற்றோம். அங்குதான் எங்கள் இரு மகள்களும் தங்கள் குடும்பங்களுடன் வாழ்ந்து வந்தார்கள். கடந்த 23 வருடங்களாக, இந்த பகுதியில் வேலை செய்து, வர்ஜீனியாவில் ரக்கர்ஸ்வில் சபையை தொடங்க உதவ முடிந்தது; இதோடு எங்கள் ஆரம்ப கால பைபிள் மாணவர்களின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் சபை மூப்பர்களாகவும் பயனியர்களாகவும் பெத்தேல் ஊழியர்களாகவும் வளர்ந்து வருவதைக் காண்பதும் எங்களுக்கு சந்தோஷத்தை தருகிறது. மெரியனும் நானும் இப்போதும் சிறந்ததோர் வெளி ஊழிய அட்டவணை வைத்திருக்கிறோம். ஷார்லட்ஸ்வில் ஈஸ்ட் சபையில் மூப்பராக சுறுசுறுப்புடன் செயல்பட்டு, புத்தக படிப்பு நடத்தவும் பொதுப் பேச்சுகள் கொடுக்கவும் சிலாக்கியம் பெற்றிருக்கிறேன்.
இத்தனை வருட அனுபவத்தில், எல்லாரைப் போலவே எங்களுக்கும் பிரச்சினைகள் இருந்தன. உதாரணமாக, எங்கள் முயற்சிகளின் மத்தியிலும், டீனேஜ் பருவத்தின் பிற்பகுதியில் டாரஸ் சில காலம் ஆவிக்குரிய வகையில் பலவீனமடைந்து சத்தியத்தில் இல்லாதவரை திருமணம் செய்தாள். ஆனாலும் யெகோவாவுக்கான அன்பை அவள் முழுமையாக இழக்கவில்லை. அவளுடைய மகன் நியூ யார்க்கில், வால்க்கில்லிலுள்ள பெத்தேலில் 15 வருடங்களாக சேவை செய்து வருகிறான். டாரஸும் லுவீஸும் இப்போது விதவைகளாக இருந்தாலும் பக்கத்து சபையில் ஒழுங்கான பயனியர்களாய் சந்தோஷமாக சேவை செய்கிறார்கள்.
காலங்கள் கற்றுக்கொடுத்த பாடங்கள்
யெகோவாவை சேவிப்பதில் வெற்றியடைய ஒருசில எளிய நியமங்களை பின்பற்ற கற்றுக்கொண்டேன்: எளிய வாழ்க்கை வாழுங்கள். உங்கள் சொந்த வாழ்க்கை உட்பட, எல்லா இடங்களிலும் நீங்கள் நடந்துகொள்ளும் விதத்தில் முன்மாதிரியாக இருங்கள். “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்” கொடுக்கும் வழிநடத்துதலை எல்லா விஷயங்களிலும் பின்பற்றுங்கள்.—மத்தேயு 24:45.
பிள்ளைகளையும் வளர்த்துக்கொண்டு, வெற்றிகரமாக பயனியர் சேவை செய்வதற்கு சிறிய ஆனால் பலன்தரும் ஆலோசனை பட்டியல் ஒன்றை வைத்திருக்கிறாள் மெரியன்: நடைமுறையான அட்டவணை தயாரித்து அதை பின்பற்றுங்கள். பயனியர் ஊழியத்தை நிஜமான வாழ்க்கை பணியாக்கிக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள். போதுமான ஓய்வெடுங்கள். அளவுக்கதிகமான பொழுதுபோக்கை அனுபவிக்காதீர்கள். ஊழியத்தின் எல்லா அம்சங்களும் உட்பட சத்தியத்தை உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையில் இன்பமான அனுபவமாக்குங்கள். எல்லா சமயங்களிலும் அவர்களுக்கு ஊழியத்தை சுவாரஸ்யமான அனுபவமாக்குங்கள்.
இப்போது எங்களுக்கு 90-க்கும் அதிக வயதாகிவிட்டது. ஸ்டேக்ஹௌஸ் வீட்டு புல்தரையில் முழுக்காட்டுதல் பேச்சைக் கேட்டதிலிருந்து அறுபத்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. முழுநேர ஊழியத்தில் 60 வருடங்களை செலவிட்டிருக்கிறோம். எங்கள் வாழ்க்கையில் முழு அளவில், ஆழ்ந்த திருப்தி அடைந்திருக்கிறோம் என்று எங்களால் நேர்மையாக சொல்ல முடியும். இளம் தகப்பனாக ஆவிக்குரிய இலக்குகளை முதலாவதாக வைக்கும்படியும் அவற்றை அடைவதற்காக முயலும்படியும் எனக்கு கிடைத்த உற்சாகத்திற்காக மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இத்தனை வருடங்களாக ஆதரவளித்த என் அன்பு மனைவி மெரியனுக்கும் என் மகள்களுக்கும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எங்களிடம் பொருட்செல்வங்கள் இல்லை என்றாலும், பிரசங்கி 2:25-ன் (NW) வார்த்தைகளை அடிக்கடி எனக்கு நானே பொருத்திக் கொள்வதுண்டு. அதாவது: “என்னைப் பார்க்கிலும் சிறந்த வகையில் சாப்பிடுகிறவனும் குடிக்கிறவனும் யார்?”
நிஜமாகவே, மல்கியா 3:10-லுள்ள வாக்குறுதியை யெகோவா எங்களில் அபரிமிதமாக நிறைவேற்றி இருக்கிறார். அவர் உண்மையிலேயே ‘இடங்கொள்ளாமற்போகுமட்டும் எங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷித்திருக்கிறார்’!
[பக்கம் 29-ன் பெட்டி/படம்]
போர்கால நினைவுகள்
போர் முடிந்து ஏறக்குறைய 60 வருடங்களுக்குப் பின்னும் எங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் அக்காலத்தைப் பற்றிய நினைவுகள் மறக்கவே இல்லை.
“பென்ஸில்வேனியா குளிராகவும் இருக்கும். ஒரு நாள் இரவு மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் இருந்தது” என்று நினைவுகூருகிறாள் டாரஸ். “எங்கள் பழைய ப்யூயிக் காரின் பின் ஸீட்டில் டாரஸும் நானும் எங்களை அனலாக வைத்துக்கொள்வதற்காக ஒருவருடைய பாதங்கள்மீது மற்றொருவர் உட்கார்ந்து கொள்வோம்” என்றாள் லுவீஸ்.
“ஆனால் நாங்கள் ஏழ்மையிலோ தேவையிலோ இருந்ததாக ஒருபோதும் உணரவில்லை. அநேகரைவிட நாங்கள் அடிக்கடி குடிமாறினோம்; எங்களுக்கு சாப்பாட்டுக்கு எந்தக் குறையும் இருக்கவில்லை; ஒஹாயோவில் எங்களைவிட சற்று வயதான மகள்களை உடைய நண்பர்கள் தந்த, பெரும்பாலும் புதிதாகவே இருந்த நல்ல உடைகளை உடுத்தினதெல்லாம் நன்றாக நினைவிருக்கிறது” என்றாள் டாரஸ்.
“அம்மாவும் அப்பாவும் எங்களை நேசித்ததையும் போற்றியதையும் எப்போதும் உணர வைத்தார்கள். அவர்களோடு அதிக நேரத்தை ஊழியத்தில் செலவிட்டோம். அது எங்களை விசேஷமானவர்களாகவும், அவர்களோடு நெருங்கி இருப்பதாகவும் உணர வைத்தது” என்றும் குறிப்பிட்டாள் லுவீஸ்.
“1936 ப்யூயிக் ஸ்பெஷல் காரை வைத்திருந்தேன். சடக்கென அறுந்துவிடும் ஆக்ஸில்களுக்கு பெயர்போனவை அந்த கார்கள். காரின் மீதிபகுதியுடன் ஒப்பிடுகையில் அதன் என்ஜினின் வலிமை அதிகம் என்று நான் நினைக்கிறேன். மாதத்தின் குளிர்மிக்க இரவில்தான் எப்போதுமே ஆக்ஸில் போய்விடும் என தோன்றியது. பின்பு பழைய கார்கள் போடப்பட்டிருக்கும் இடத்திற்கு சென்று இன்னொரு ஆக்ஸிலை கொண்டு வரவேண்டும். முடிவில் ஆக்ஸில் மாற்றுவதில் நிபுணராகிவிட்டேன்” என்று நினைவுகூருகிறார் பால்.
“ரேஷன் கார்டுகளை மறந்துவிடாதீர்கள்” என்கிறார் மெரியன். “இறைச்சி, எரிபொருள், கார் டயர்கள், அனைத்துமே ரேஷனில்தான் வாங்க வேண்டும். ஒவ்வொரு முறை ஒரு புதிய நியமிப்புக்கு செல்லும்போதும், அந்த இடத்திலுள்ள அரசாங்க அமைப்பிடம் சென்று ரேஷன் கார்டுக்காக விண்ணப்பிக்க வேண்டும். அது கிடைக்க மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டும். ஒருவழியாக அது கையில் கிடைக்கையில், நாங்கள் வேறொரு இடத்திற்கு மாற்றலாகி விடுவோம். மீண்டும் அதே கதைதான். ஆனால் யெகோவா எப்போதுமே எங்களை கவனித்துக் கொண்டார்.”
[படங்கள்]
மெரியனும் நானும் டாரஸ் (இடது), லுவீஸுடன், 2000
[பக்கம் 25-ன் படம்]
1918-ல் எனக்கு 11 வயதாய் இருக்கையில் அம்மாவுடன்
[பக்கம் 26-ன் படம்]
1948-ல் மகள்கள் முழுக்காட்டுதல் பெற்றபோது லுவீஸ், மெரியன், டாரஸ் ஆகியோருடன்
[பக்கம் 26-ன் படம்]
எங்கள் திருமண ஃபோட்டோ, அக்டோபர் 1928
[பக்கம் 26-ன் படம்]
என் மகள்களும் (இடது கோடியிலும் வலது கோடியிலும்) நானும் யாங்கீ ஸ்டேடியத்தில், 1955