‘முடிவுபரியந்தம் நிலைத்து நின்றார்’
யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்தின் புதிய அங்கத்தினர்களுக்கு, 1993-ல் தயாரிக்கப்பட்ட ஒரு வீடியோ போட்டுக் காட்டப்படுவது உண்டு. அதில், யெகோவாவின் சேவையைக் குறித்து தன்னுடைய உணர்ச்சிகளை லைமென் அலெக்ஸாண்டர் ஸ்விங்கிள் இவ்வாறு வெளிப்படுத்தினார்: “உயிருள்ளவரை உழைப்பீர்!”a
தொண்ணூறு வயதான சகோதரர் ஸ்விங்கிள் எதைச் செய்யும்படி மற்றவர்களை உற்சாகப்படுத்தினாரோ அதையே அவரும் செய்தார். அவர் ‘முடிவுபரியந்தம் நிலைத்து நின்றார்.’ (மத்தேயு 24:13) நோய்வாய்ப்பட்ட நிலையிலும், மார்ச் 7, புதன்கிழமை அன்று நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளின் ஆளும் குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டார், அவர் ஆளும் குழுவின் ஓர் அங்கத்தினராக இருந்தார். அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை அவரது உடல்நிலை மிகவும் மோசமானது, மார்ச் 14 விடியற்காலை 4:26 மணிக்கு அவர் இறந்துவிட்டதை டாக்டர் அறிவித்தார்.
லைமென் ஸ்விங்கிள், ஏப்ரல் 5, 1930-ல் நியூ யார்க், புரூக்ளினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் உலக தலைமை அலுவலகத்தில் காலடி எடுத்து வைத்தார். சுமார் 71 வருடங்கள் அங்கு சேவை செய்தார். சகோதரர் லைமெனுக்கு முதலில் பைண்டிங் வேலை கொடுக்கப்பட்டது. பின்னர் அச்சாலையில் வேலை செய்தார், அச்சிடும் மை தயாரிக்கவும் உதவினார். சொல்லப்போனால் சுமார் 25 ஆண்டுகள் மை தயாரிக்கும் துறையில் சகோதரர் ஸ்விங்கிள் வேலை செய்தார். பிற்பாடு தலைமை அலுவலக ரைட்டிங் டிப்பார்ட்மெண்ட் அங்கத்தினராகவும் சுமார் 20 ஆண்டுகள் சேவை செய்தார். தன் வாழ்க்கையின் கடைசி 17 ஆண்டுகள் கருவூலத்தில் பணி புரிந்தார்.
சகோதரர் லைமென் கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து அறிவிப்பதில் தீரம் மிக்கவர். புரூக்ளினில் சேவை செய்த ஆரம்ப காலங்களில், தன்னுடன் தங்கியிருந்த ஆர்தர் வொர்ஸ்லி என்பவருடன் சாட்சிகளுடைய படகில் ஹட்சன் ஆற்றில் பயணம் செய்ததுண்டு. இவ்வாறு, சனி ஞாயிறுகளில் ஒலிபெருக்கியை பயன்படுத்தி கரையோரங்களில் வாழும் ஜனங்களுக்கு ராஜ்யத்தைப் பற்றிய செய்தியை அவர்கள் அறிவித்தார்கள்.
சகோதரர் ஸ்விங்கிள் நவம்பர் 6, 1910-ல் நப்ரஸ்காவிலுள்ள லிங்கனில் பிறந்தார். அதற்குப்பின் கொஞ்ச காலத்திற்குள் அவரது குடும்பம் உடா மாகாணத்திலுள்ள சால்ட் லேக் சிட்டிக்கு குடிமாறியது. 1913-ல் அவருடைய பெற்றோர் பைபிள் மாணாக்கராக மாறினர். யெகோவாவின் சாட்சிகள் அப்போது பைபிள் மாணாக்கர் என அறியப்பட்டனர். பல வருடங்களாகவே, புரூக்ளின் தலைமை அலுவலகத்திலிருந்து வரும் சிறப்புப் பேச்சாளர்களை ஸ்விங்கிள் குடும்பத்தார் வரவேற்று உபசரித்து வந்தனர். இந்த சகோதரர்களோடு வைத்திருந்த நெருக்கம் சகோதரர் லைமெனை மிகவும் கவர்ந்தது. 1923-ல் தன்னுடைய 12-ம் வயதில் அவர் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றார்.
புரூக்ளினில் 26 ஆண்டுகளுக்கும் மேல் மணமாகாதவராகவே சேவை செய்தார். ஜூன் 8, 1956-ல் கிறிஸ்டல் ஸெர்ச்சர் என்பவரை கரம்பிடித்தபின் சகோதரர் லைமெனின் வாழ்க்கை இன்னும் பசுமையடைய ஆரம்பித்தது. 1998-ல் கிறிஸ்டல் மரிக்கும்வரை அவர்கள் நகமும் சதையும் போல இணைபிரியாமல் இருந்தார்கள், ஒன்று சேர்ந்தே ஊழியத்திற்கும் செல்வார்கள். சுமார் மூன்று வருடங்களுக்கு முன்பு கிறிஸ்டலுக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டதால் அது அவரைப் படுத்த படுக்கையாக்கி விட்டது. லைமென் தன் மனைவியை தினம் தினம் கண்ணும் கருத்துமாய் கவனித்து வந்தது தன் மனைவியிடம் வைத்திருந்த அளவுகடந்த அன்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. இது, அவரை அறிந்த அனைவரையும் நெகிழ வைத்தது; குறிப்பாக சுற்று வட்டாரத்தின் நடைபாதை வழியே தன் மனைவியை வீல்சேரில் தள்ளிக்கொண்டு செல்வதையும் வழியே செல்பவர்களுக்கு சகோதரி கிறிஸ்டல் காவற்கோபுரம் விழித்தெழு! பத்திரிகைகளை அளிப்பதையும் பார்த்தவர்களுக்கு ஊக்கமளித்தது.
சகோதரர் ஸ்விங்கிள் ஒளிவுமறைவின்றி பேசுபவராகவும், கனிவான உள்ளம் படைத்தவராகவும் இருந்தார். தன்னோடு பழகுபவர்களிடத்தில் அதிக அன்பு காட்டினார். தன்னுடைய அம்மா அப்பாவைப் போன்றே அவரும் இயேசு கிறிஸ்துவுடன் பரலோக ராஜ்யத்தில் வாழும் நம்பிக்கை உடையவராக இருந்தார். அவருடைய நம்பிக்கை நிறைவேறியது என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்.—1 தெசலோனிக்கேயர் 4:15-18; வெளிப்படுத்துதல் 14:13.
[அடிக்குறிப்பு]
a ஒருவர் தனது வேலையை மரணம் வரை முழுமூச்சுடன் செய்வதை குறிக்கிறது.
[பக்கம் 31-ன் படம்]
சகோதரர் ஸ்விங்கிள் சுமார் 25 வருடங்கள் மை தயாரிக்கும் இலாகாவில் வேலை செய்தார்
[பக்கம் 31-ன் படம்]
லைமெனும் கிறிஸ்டலும் நகமும் சதையும் போல் இணைபிரியாமல் இருந்தனர்