யெகோவாவின் ஆசீர்வாதமே நம்மை ஐசுவரியவான்களாக்குகிறது
“கர்த்தரின் [“யெகோவாவின்,” NW] ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.”—நீதிமொழிகள் 10:22.
1, 2. சந்தோஷம் ஏன் பொருள் சம்பந்தமான காரியங்களுடன் சம்பந்தப்பட்டில்லை?
பொருளாசை இன்று கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையை ஆட்டிப்படைக்கிறது. ஆனால் பொருளாதார காரியங்கள் அவர்களுக்கு சந்தோஷத்தைத் தருகின்றனவா? “மக்கள் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி இப்போது கவலைப்படுவது மாதிரி முன்பு எப்பொழுதாவது கவலைப்பட்ட ஒரு காலத்தை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை” என்று ஆஸ்திரேலிய பெண்களின் வார இதழ் (ஆங்கிலம்) சொல்கிறது. “இது முரணாக உள்ளது. பொருளாதார ரீதியில் ஆஸ்திரேலியா மிகச் சிறந்த நிலையில் இருக்கிறதென்றும், வாழ்க்கை முன்னொருபோதும் இவ்வளவு மேம்பட்டதாக இல்லை என்றும் சொல்லப்படுகிறது. . . . ஆனால் உண்மையில் தேசமெங்கும் நம்பிக்கையற்ற நிலையே நிலவுகிறது. தங்கள் வாழ்க்கையில் ஏதோ குறைவுபடுவதாக ஆண்களும் பெண்களும் ஒன்றுபோலவே உணருகின்றனர், ஆனால் அது என்னவென விவரிக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்” என்றும் அது சொல்கிறது. நம்மிடமுள்ள பொருட்களிலிருந்து சந்தோஷமோ ஜீவனோ கிடைப்பதில்லை என வேதவசனங்கள் சொல்வது எவ்வளவு உண்மை!—பிரசங்கி 5:10; லூக்கா 12:15.
2 பெரும் சந்தோஷம் கடவுளுடைய ஆசீர்வாதத்தினால் கிடைப்பதாக பைபிள் போதிக்கிறது. இதன் சம்பந்தமாக நீதிமொழிகள் 10:22 இவ்வாறு கூறுகிறது: “கர்த்தரின் [“யெகோவாவின்,” NW] ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்.” பொருள் சம்பந்தமான காரியங்களை பேராசையுடன் சேர்ப்பது பெரும்பாலும் வேதனையில் விளைவடைகிறது. அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எச்சரித்தது பொருத்தமானதே: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்.”—1 தீமோத்தேயு 6:9, 10.
3. கடவுளுடைய ஊழியர்கள் ஏன் துன்பங்களை அனுபவிக்கிறார்கள்?
3 மறுபட்சத்தில், ‘யெகோவாவின் சத்தத்திற்கு தொடர்ந்து செவிகொடுக்கும்’ அனைவருக்கும் வேதனையற்ற ஆசீர்வாதங்கள் பின்தொடர்கின்றன. (உபாகமம் 28:2, NW) எனினும், ‘யெகோவாவின் ஆசீர்வாதத்தோடு வேதனை கூட்டப்படுகிறதில்லையென்றால், கடவுளுடைய ஊழியர்களில் பலர் ஏன் துன்பப்படுகிறார்கள்?’ என சிலர் கேட்கலாம். நாம் அனுபவிக்கும் துன்பங்களை கடவுள் அனுமதிக்கிறார் என்றும், ஆனால் அவற்றிற்கு சாத்தானும், அவனுடைய பொல்லாத ஒழுங்குமுறையும், நம்முடைய அபூரண தன்மையும்தான் உண்மையில் காரணம் என்றும் பைபிள் வெளிப்படுத்துகிறது. (ஆதியாகமம் 6:5; உபாகமம் 32:4, 5; யோவான் 15:19; யாக்கோபு 1:14, 15) “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும்” அவற்றின் மூலகாரணராகிய யெகோவாவிடமிருந்தே வருகின்றன. (யாக்கோபு 1:17) ஆகையால், அவருடைய ஆசீர்வாதங்கள் ஒருபோதும் வேதனையை அளிப்பதில்லை. ஆகவே, கடவுளுடைய பூரணமான சில வரங்களையும் பரிசுகளையும் பற்றி நாம் இப்பொழுது சிந்திக்கலாம்.
கடவுளுடைய வார்த்தை —ஓர் ஒப்பற்ற பரிசு
4. யெகோவாவின் ஜனங்கள் இந்த ‘முடிவு காலத்தில்’ என்ன ஆசீர்வாதத்தையும் ஒப்பற்ற பரிசையும் அனுபவிக்கிறார்கள்?
4 ‘முடிவு காலத்தில்,’ ‘அறிவு பெருகிப்போம்’ என தானியேல் தீர்க்கதரிசனம் சொல்கிறது. எனினும், “துன்மார்க்கரில் ஒருவனும் [அதை] உணரான், ஞானவான்களோ உணர்ந்துகொள்ளுவார்கள்” என்ற வார்த்தைகள் வரையறுப்பதாய் உள்ளன. (தானியேல் 12:4, 10) இதை சற்று கற்பனை செய்து பாருங்கள்! கடவுளுடைய வார்த்தை, அதிலும் முக்கியமாய் தீர்க்கதரிசனங்கள் தெய்வீக ஞானம் நிறைந்தவையாய் உள்ளன; அவற்றின் உண்மையான கருத்தை யெகோவாவின் ஜனங்கள் புரிந்துகொள்கிறார்கள், ஆனால் துன்மார்க்கரால் புரிந்துகொள்ள முடிவதில்லை. “பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்” என கடவுளுடைய குமாரன் ஜெபித்தார். (லூக்கா 10:21) கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிள் என்னும் ஒப்பற்ற பரிசை பெற்றிருப்பதும், யெகோவா ஆவிக்குரிய உட்பார்வையை அளித்திருப்பவர்களோடு இருப்பதும் எத்தகைய ஆசீர்வாதம்!—1 கொரிந்தியர் 1:21, 27, 28; 2:14, 15.
5. ஞானம் என்பது என்ன, அதை நாம் எவ்வாறு பெறலாம்?
5 ‘பரத்திலிருந்து வருகிற ஞானத்தை’ பெற்றிராவிடில், நமக்கு ஆவிக்குரிய உட்பார்வையே கிடைக்காது. (யாக்கோபு 3:17) ஞானம் என்பது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, ஆபத்துகளைத் தவிர்ப்பதற்கு அல்லது அவற்றிலிருந்து விலகியிருப்பதற்கு, இலக்குகளை எட்டுவதற்கு, அல்லது சிறந்த அறிவுரையைக் கொடுப்பதற்கு அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் பயன்படுத்தும் திறமையே ஆகும். கடவுளுடைய ஞானத்தை நாம் எப்படி பெறலாம்? நீதிமொழிகள் 2:6 (தி.மொ.) இவ்வாறு கூறுகிறது: “ஞானம் அளிப்பவர் யெகோவாவே, அறிவும் உணர்வும் அவர் வாயிலிருந்து உதிக்கும்.” ஆம், ஞானத்திற்காக தொடர்ந்து ஜெபிக்கையில், சாலொமோன் ராஜாவுக்கு “ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை” தந்ததுபோல் நமக்கும் ஞானத்தை தந்து யெகோவா ஆசீர்வதிப்பார். (1 இராஜாக்கள் 3:11, 12; யாக்கோபு 1:5-8) ஞானத்தைப் பெறுவதற்கு, யெகோவாவின் வார்த்தையைத் தவறாமல் படிப்பதன் மூலமும் அதற்கிசைய நடப்பதன் மூலமும் தொடர்ந்து அவருக்கு நாம் செவிசாய்க்கவும் வேண்டும்.
6. கடவுளின் சட்டங்களையும் நியமங்களையும் நம்முடைய வாழ்க்கையில் பின்பற்றுவது ஏன் ஞானமான செயல்?
6 பைபிளின் சட்டங்களிலும் நியமங்களிலும் கடவுளுடைய ஞானத்திற்கு முக்கிய உதாரணங்கள் காணப்படுகின்றன. இவை சரீர ரீதியாக, மனோ ரீதியாக, உணர்ச்சி ரீதியாக, ஆவிக்குரிய ரீதியாக என எல்லா வழிகளிலும் நமக்கு நன்மை செய்கின்றன. “யெகோவாவின் பிரமாணம் குறைவற்றது, அது ஜீவனைப் புதுப்பிக்கிறது; யெகோவாவின் சாட்சியம் நம்பிக்கைக்குரியது, அது பேதையை ஞானியாக்குகிறது, யெகோவாவின் கட்டளைகள் நேர்மையானவை, அவை இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கும், யெகோவாவின் கற்பனை தூயது, அது கண்களைத் தெளிவிக்கிறது. யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் சுத்தமானது, அது என்றைக்கும் நிலைத்திருக்கும். யெகோவாவின் நியாயத்தீர்ப்புகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியுள்ளவை. அவை பொன்னிலும் மிகுந்த பசும் பொன்னிலும் விரும்பப்படத்தக்கவை” என பொருத்தமாகவே சங்கீதக்காரன் பாடினார்.—சங்கீதம் 19:7-10, தி.மொ.; 119:72.
7. கடவுளுடைய நீதியுள்ள தராதரங்களை மதிக்காமல் போனால் என்ன ஏற்படும்?
7 மறுபட்சத்தில், கடவுளுடைய நீதியுள்ள தராதரங்களை மதிக்காதோர், அவர்கள் விரும்பும் சந்தோஷத்தையும் சுதந்திரத்தையும் கண்டடைவதில்லை. தம்மைப் பரியாசம் பண்ண கடவுள் அனுமதிக்க மாட்டார், ஒருவன் எதை விதைக்கிறானோ அதையே அறுவடை செய்வான் என்பதைச் சீக்கிரத்திலோ பிந்தியோ அவர்கள் நிச்சயம் அறிந்துகொள்கிறார்கள். (கலாத்தியர் 6:7) பைபிள் நியமங்களை மதிக்காத கோடிக்கணக்கானோர் வேண்டாத கருத்தரிப்புகள், அருவருக்கத்தக்க நோய்கள் அல்லது பலவீனமடையச் செய்யும் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாதல் போன்ற கடுந்துயரமான விளைவுகளை அறுவடை செய்கிறார்கள். மனந்திரும்பி, வாழ்க்கையில் மாற்றங்களை செய்யாவிட்டால் அவர்கள் போக்கு முடிவில் மரணத்திற்கும், ஒருவேளை கடவுளுடைய கரத்தில் அழிவுக்குமே வழிநடத்தும்.—மத்தேயு 7:13, 14.
8. கடவுளுடைய வார்த்தையை நேசிப்போர் ஏன் சந்தோஷமாயிருக்கிறார்கள்?
8 எனினும், கடவுளுடைய வார்த்தையை நேசித்து, அதைப் பின்பற்றுபவர்களுக்கு இப்போதும் எதிர்காலத்திலும் நிறைவான ஆசீர்வாதங்கள் பின்தொடரும். கடவுளுடைய சட்டத்தால் தாங்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக உணருவதற்கு நல்ல காரணம் இருக்கிறது; அவர்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்; பாவத்திலிருந்தும் சாவுக்கேதுவான அதன் பாதிப்புகளிலிருந்தும் தாங்கள் விடுதலை செய்யப்படும் அந்த நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள். (ரோமர் 8:20, 21; யாக்கோபு 1:25) இந்த நம்பிக்கை நிச்சயம் நிறைவேறும்; ஏனெனில் இது மனிதகுலத்திற்கு கடவுள் அருளிய மிக அன்பான பரிசாகிய தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மீட்பின் கிரய பலியின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. (மத்தேயு 20:28; யோவான் 3:16; ரோமர் 6:23) இத்தகைய ஈடிணையற்ற பரிசு, மனிதகுலத்தின் மீது யெகோவா வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை மெய்ப்பித்து, தொடர்ந்து அவருக்கு செவிசாய்க்கும் அனைவருக்கும் நித்திய ஆசீர்வாதங்களை உறுதிப்படுத்துகிறது.—ரோமர் 8:32.
பரிசுத்த ஆவியின் வரத்திற்கு நன்றியோடிருத்தல்
9, 10. யெகோவா தரும் பரிசுத்த ஆவியின் வரத்திலிருந்து நாம் எவ்வாறு பயனடைகிறோம்? ஓர் உதாரணம் கொடுங்கள்.
9 கடவுள் அளித்திருக்கும் மற்றொரு அன்பான வரம், அவருடைய பரிசுத்த ஆவி; இதற்காக நாம் அவருக்கு நன்றியுள்ளோராக இருக்க வேண்டும். பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளில் எருசலேமிற்கு திரண்டு வந்திருந்தவர்களை அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு ஊக்குவித்தார்: “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.” (அப்போஸ்தலர் 2:38) இன்று, தம்முடைய பரிசுத்த ஆவிக்காக ஜெபிக்கிற, தம்முடைய சித்தத்தைச் செய்ய விரும்புகிற தம்முடைய ஒப்புக்கொடுத்த ஊழியர்களுக்கு யெகோவா அதை அளிக்கிறார். (லூக்கா 11:9-13) பூர்வ காலங்களில், அகிலாண்டத்தில் அதிக ஆற்றல் மிக்க சக்தியாகிய கடவுளுடைய பரிசுத்த ஆவி அல்லது செயல் நடப்பிக்கும் சக்தி, ஆரம்பகால கிறிஸ்தவர்கள் உட்பட, விசுவாசிகளான ஆண்களையும் பெண்களையும் பலப்படுத்தியது. (சகரியா 4:6; அப்போஸ்தலர் 4:31) யெகோவாவின் ஜனங்களாக நாம் கடுமையான இடையூறுகளை அல்லது இக்கட்டுகளை எதிர்ப்பட வேண்டியதாக இருந்தாலும், அது நம்மையும் அவ்வாறே பலப்படுத்தும்.—யோவேல் 2:28, 29.
10 லாரலின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவள் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டு இயந்திர நுரையீரலின் உதவியுடன் 37 ஆண்டுகள் வாழ்ந்தாள்.a படுகஷ்டமான சூழ்நிலைமைகளிலும், தன் மரணம் வரையில் அவள் வைராக்கியத்துடன் கடவுளை சேவித்தாள். அந்த ஆண்டுகளில் யெகோவாவின் நிறைவான ஆசீர்வாதம் லாரலை பின்தொடர்ந்தது. உதாரணமாக, 24 மணிநேரமும் இயந்திர நுரையீரல் பொருத்தப்பட்டிருந்தபோதிலும், பைபிள் சத்தியத்தின் திருத்தமான அறிவைப் பெறும்படி 17 பேருக்கு அவளால் உதவ முடிந்தது! அவளுடைய சூழ்நிலை அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளை நினைப்பூட்டுகிறது: “நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்.” (2 கொரிந்தியர் 12:10) ஆம், நற்செய்தியைப் பிரசங்கிக்கையில் நமக்கு கிடைக்கும் எந்த வெற்றியும், நம்முடைய திறமையினாலோ பலத்தினாலோ கிடைப்பதில்லை. ஆனால் தம்முடைய சத்தத்திற்கு தொடர்ந்து செவிசாய்ப்பவர்களுக்கு கடவுள் அளிக்கும் பரிசுத்த ஆவியின் உதவியால் கிடைக்கிறது.—ஏசாயா 40:29-31.
11. ‘புதிய ஆள்தன்மையைத்’ தரித்துக்கொள்வோரில் என்ன குணங்களை கடவுளுடைய ஆவி உண்டு பண்ணுகிறது?
11 நாம் கீழ்ப்படிதலுடன் கடவுளுக்குச் செவிசாய்த்தால் அவருடைய ஆவி நம்மில் அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகிய குணங்களை உண்டு பண்ணும். (கலாத்தியர் 5:22, 23) இந்த ‘ஆவியின் கனிகள்,’ ‘புதிய ஆள்தன்மையின்’ (NW) பாகமாக இருக்கின்றன. ஒருகாலத்தில் அவர்களிடம் இருந்த பேராசைமிக்க, மிருகத்தனமான குணங்களின் இடத்தை இவை நிரப்புகின்றன. (எபேசியர் 4:20-24; ஏசாயா 11:6-9) ‘பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பு,’ இந்தக் குணங்களில் அதிமுக்கியமானது.—கொலோசெயர் 3:14.
கிறிஸ்தவ அன்பு—போற்றி பாதுகாக்க வேண்டிய ஒரு பரிசு
12. தபீத்தாளும், மற்ற முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் எவ்வாறு அன்பை வெளிக்காட்டினார்கள்?
12 கிறிஸ்தவ அன்பு யெகோவாவின் ஆசீர்வாதத்தால் கிடைக்கும் மற்றொரு பரிசு; இதை நாம் உண்மையிலேயே போற்றி பாதுகாக்கிறோம். இது நியமத்தின் பேரில் சார்ந்தது. ஆனால் இது பாசம் நிறைந்ததாய் இருப்பதால், இரத்த சம்பந்தமான பந்தபாசங்களின் மத்தியில் காணப்படும் நெருக்கத்தைவிட அதிகமாக விசுவாசிகளை நெருங்கி வர செய்கிறது. (யோவான் 15:12, 13; 1 பேதுரு 1:22) உதாரணமாக, முதல் நூற்றாண்டிலிருந்த சிறந்த கிறிஸ்தவ பெண்மணியாகிய தபீத்தாளை எடுத்துக் கொள்ளுங்கள். “அவள் நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டு வந்தாள்”; அதை முக்கியமாக, சபையிலிருந்த விதவைகளுக்கு செய்து வந்தாள். (அப்போஸ்தலர் 9:36) இந்தப் பெண்களுக்கு சொந்தபந்தங்கள் இருந்திருப்பார்கள், ஆனால் தபீத்தாளோ அவர்களுக்கு உதவவும் உற்சாகப்படுத்தவும் தன்னால் முடிந்ததை எல்லாம் செய்ய விரும்பினாள். (1 யோவான் 3:18) எத்தகைய சிறந்த முன்மாதிரியை தபீத்தாள் வைத்தாள்! பவுலுக்காக ‘தங்கள் கழுத்தைக் கொடுக்கவும்’ சகோதர சிநேகம் பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் தூண்டியது. மேலும் ரோமில் இந்த அப்போஸ்தலன் சிறைப்பட்டிருந்தபோது அவருக்கு உதவும்படி, எப்பாப்பிராவையும் லூக்காவையும் ஒநேசிப்போரையும் மற்றவர்களையுங்கூட அன்பு தூண்டியது. (ரோமர் 16:3, 4; 2 தீமோத்தேயு 1:16; 4:11; பிலேமோன் 23, 24) ஆம், இன்றும் அப்படிப்பட்ட கிறிஸ்தவர்கள், ‘ஒருவரிலொருவர் அன்பாயிருக்கிறார்கள்.’ அது, அவர்களை இயேசுவின் உண்மையான சீஷர்கள் என அடையாளம் காட்டும், கடவுளிடமிருந்து வரும் ஆசீர்வாதமிக்க வரமாக இருக்கிறது.—யோவான் 13:34, 35.
13. நம்முடைய கிறிஸ்தவ சகோதரத்துவத்திற்கு ஆழ்ந்த போற்றுதலுடன் இருப்பதை எவ்வாறு காட்டலாம்?
13 கிறிஸ்தவ சபையில் வெளிக்காட்டப்படும் அன்பை நீங்கள் போற்றி பாதுகாக்கிறீர்களா? உலகளாவிய ஆவிக்குரிய சகோதரத்துவத்திற்காக நன்றியுள்ளோராக இருக்கிறீர்களா? இவையும் சந்தோஷத்தையும் ஐசுவரியத்தையும் தரும் யெகோவாவின் பரிசுகள். அவற்றை உயர்வாய் மதிப்பதை நாம் எவ்வாறு காட்டலாம்? கடவுளுக்குப் பரிசுத்த சேவை செய்வதன் மூலமும், கிறிஸ்தவக் கூட்டங்களில் பங்குகொள்வதன் மூலமும், அன்பையும் கடவுளுடைய ஆவியின் மற்ற கனிகளையும் வெளிக்காட்டுவதன் மூலமுமே.—பிலிப்பியர் 1:9; எபிரெயர் 10:24, 25.
“மனிதரில் வரங்கள்”
14. ஒரு கிறிஸ்தவர் மூப்பராக அல்லது உதவி ஊழியராக சேவை செய்வதற்கு அவரிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது?
14 மூப்பர்களாகவும் உதவி ஊழியர்களாகவும் தங்கள் உடன் வணக்கத்தாருக்குச் சேவை செய்ய விரும்புகிற கிறிஸ்தவ ஆண்கள் சிறந்த இலக்கை வைத்திருக்கிறார்கள். (1 தீமோத்தேயு 3:1, 8) இந்த விசேஷ ஊழிய சிலாக்கியங்களுக்குத் தகுதி பெறுவதற்கு ஒரு சகோதரர் ஆவிக்குரிய மனம் படைத்தவராகவும், வேதவாக்கியங்களை நன்கு அறிந்தவராகவும், வெளி ஊழியத்தில் ஆர்வத்தோடு ஈடுபடுகிறவராகவும் இருக்க வேண்டும். (அப்போஸ்தலர் 18:24; 1 தீமோத்தேயு 4:15; 2 தீமோத்தேயு 4:5) அவர் மனத்தாழ்மை, அடக்கம், பொறுமை ஆகியவற்றை வெளிக்காட்ட வேண்டும்; ஏனெனில், அகம்பாவம், பெருமை, புகழாசை பிடித்தவர்களை கடவுளுடைய ஆசீர்வாதங்கள் பின்தொடர்வதில்லை. (நீதிமொழிகள் 11:2; எபிரெயர் 6:15; 3 யோவான் 9, 10) திருமணமானவராக இருந்தால், அவர் அன்புள்ள குடும்பத் தலைவராகவும், தன் முழு குடும்பத்தையும் நல்ல முறையில் நடத்தும் திறமைமிக்கவராகவும் இருக்க வேண்டும். (1 தீமோத்தேயு 3:4, 5, 12) ஆவிக்குரிய ஐசுவரியங்களை அவர் உயர்வாய் மதிப்பதால், அப்படிப்பட்டவருக்கு யெகோவாவின் ஆசீர்வாதங்களைப் பெறும் வாய்ப்பு அதிகமுள்ளது.—மத்தேயு 6:19-21.
15, 16. ‘மனிதரில் வரங்களாக’ நிரூபிப்பது யார்? உதாரணங்கள் கொடுங்கள்.
15 சபையில் மூப்பர்களாக சேவிப்பவர்கள், சுவிசேஷகர்களாகவும், மேய்ப்பர்களாகவும், போதகர்களாகவும் மும்முரமாய் உழைக்கும்போது, ‘மனிதரில் வரங்களான’ (NW) அவர்களை உயர்வாய் மதிக்க நியாயமான காரணங்களை அளிக்கிறார்கள். (எபேசியர் 4:8, 13) அவர்களுடைய அன்புள்ள சேவையிலிருந்து பயனடைகிறவர்கள் தங்கள் நன்றியை வெளிப்படையாக எப்போதும் சொல்லாதிருக்கலாம், ஆனால் உண்மையுள்ள அந்த மூப்பர்கள் செய்யும் அனைத்தையும் யெகோவா காண்கிறார். அவருடைய ஜனங்களுக்குச் சேவை செய்வதன் மூலம் அவருடைய பெயருக்கு அவர்கள் காட்டும் அன்பை அவர் மறக்கமாட்டார்.—1 தீமோத்தேயு 5:17; எபிரெயர் 6:10.
16 கடினமாக உழைக்கும் ஒரு மூப்பரின் உதாரணத்தைக் கவனியுங்கள். ஒரு கிறிஸ்தவ சிறுமிக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்படவிருந்தது. அதற்கு சற்று முன்பு அவர் அவளைப் பார்க்க சென்றிருந்தார். அந்தக் குடும்பத்தாரின் நண்பர் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “அவர் மிகவும் தயவானவராகவும் அதிக ஆதரவளிப்பவராகவும் மிகுந்த அக்கறை காட்டுபவராகவும் இருந்தார். எங்களோடு சேர்ந்து யெகோவாவிடம் ஜெபிப்பதற்கு அனுமதி கேட்டார். அவ்வாறு அவர் ஜெபிக்கையில் [யெகோவாவின் சாட்சியாக இராத] அந்தப் பெண்ணின் தகப்பன் தேம்பித் தேம்பி அழுதார், மருத்துவமனையில் அந்த அறையிலிருந்த எல்லாருடைய கண்களிலிருந்தும் கண்ணீர் வடிந்தது. அந்த மூப்பரின் ஜெபம் எவ்வளவு இதமாக இருந்தது, தக்க சமயத்தில் அந்த நேரத்தில் அவரை அங்கு அனுப்பி வைத்தது யெகோவாவின் பங்கில் எவ்வளவு அன்பான செயல்!” சாட்சியாயிருக்கும் மற்றொரு நோயாளி தன்னைக் காண வந்த மூப்பர்களைப் பற்றி இவ்வாறு சொன்னாள்: “தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த என்னை பார்க்க அவர்கள் வந்ததும், அந்தத் தருணத்திலிருந்து என்ன நேரிட்டாலும் அதைச் சகிக்க என்னால் முடியுமென்று உணர்ந்தேன். எனக்கு பலமும் அமைதியும் கிடைத்தது.” அத்தகைய அன்புள்ள அக்கறையை காசுகொடுத்து வாங்க முடியுமா? முடியவே முடியாது! அது கிறிஸ்தவ சபையின் மூலமாக கடவுள் அளிக்கும் பரிசு.—ஏசாயா 32:1, 2.
வெளி ஊழியம் எனும் வரம்
17, 18. (அ) தம்முடைய ஜனங்கள் அனைவருக்கும் என்ன ஊழிய வரத்தை யெகோவா அளித்திருக்கிறார்? (ஆ) நம் ஊழியத்தை செய்து முடிக்க என்ன உதவியை கடவுள் அளித்திருக்கிறார்?
17 மகா உன்னதராகிய யெகோவாவுக்கு சேவை செய்வதைக் காட்டிலும் வேறு எதுவும் எந்த மனிதனுக்கும் அதிக மதிப்பை அளிக்காது. (ஏசாயா 43:10; 2 கொரிந்தியர் 4:7; 1 பேதுரு 2:9) இருப்பினும், உண்மையிலேயே கடவுளுக்குச் சேவை செய்ய விரும்புகிற இளைஞர், முதியோர், ஆண், பெண் என எல்லாருக்கும் வெளி ஊழியத்தில் பங்குகொள்ளும் சிலாக்கியம் இருக்கிறது. இந்த அருமையான வரத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்கிறீர்களா? தங்களுக்கு அந்தளவு திறமை இல்லை என நினைக்கும் சிலர் ஒருவேளை பங்குகொள்ளாமல் இருக்கலாம். ஆனால், தம்மைச் சேவிப்போருக்கு பரிசுத்த ஆவியை யெகோவா அளிக்கிறார் என்பதையும் நம்மிடம் குறைவுபடும் எதையும் சரிப்படுத்த அது உதவும் என்பதையும் நினைவில் வையுங்கள்.—எரேமியா 1:6-8; 20:11.
18 பெருமைமிக்கவர்களிடமோ சொந்த திறமைகளின் மீது சார்ந்திருப்பவர்களிடமோ அல்ல, ஆனால் தாழ்மையுள்ள ஊழியர்களிடம் ராஜ்ய பிரசங்க வேலையை யெகோவா ஒப்படைத்திருக்கிறார். (1 கொரிந்தியர் 1:20, 26-29) தாழ்மையும் அடக்கமுமுள்ளவர்கள் தங்கள் வரையறைகளை ஒத்துக்கொண்டு, வெளி ஊழியத்தில் ஈடுபடுகையில் கடவுளுடைய உதவியை சார்ந்திருக்கின்றனர். மேலும், ‘உண்மையுள்ள விசாரணைக்காரன்’ மூலம் அவர் அருளும் ஆவிக்குரிய உதவியையும் அவர்கள் நன்றியோடு மதிக்கின்றனர்.—லூக்கா 12:42-44; நீதிமொழிகள் 22:4.
சந்தோஷமான குடும்ப வாழ்க்கை —சிறந்த ஒரு வரம்
19. பிள்ளைகளை வளர்ப்பதில் வெற்றிக்கு வழிநடத்தும் அம்சங்கள் யாவை?
19 திருமணமும் சந்தோஷமான குடும்ப வாழ்க்கையும் கடவுள் கொடுக்கும் வரங்கள். (ரூத் 1:9; எபேசியர் 3:14, 15) பிள்ளைகளும் “யெகோவாவினால் வரும்” அருமையான “சுதந்தரம்”; கடவுளுக்குப் பிரியமான குணங்களை அவர்களில் வெற்றிகரமாக வளர்க்கும் பெற்றோருக்கு அவர்கள் சந்தோஷத்தைத் தருகிறார்கள். (சங்கீதம் 127:3, தி.மொ.) நீங்கள் ஒரு பெற்றோரா, அப்படியானால் உங்கள் சிறுபிள்ளைகளை யெகோவாவின் வார்த்தைக்கு இசைய பயிற்றுவிப்பதன் மூலம் அவருடைய சத்தத்திற்கு தொடர்ந்து செவிசாயுங்கள். அப்படி செய்பவர்கள் யெகோவாவின் ஆதரவையும் நிறைவான ஆசீர்வாதத்தையும் நிச்சயமாய் அனுபவிப்பார்கள்.—நீதிமொழிகள் 3:5, 6; 22:6; எபேசியர் 6:1-4.
20. உண்மை வணக்கத்தை விட்டு விலகிச் செல்லும் பிள்ளைகளை உடைய பெற்றோருக்கு எது உதவியாக இருக்கலாம்?
20 கடவுள் பயமுள்ள பெற்றோர் கண்ணும் கருத்துமாய் முயற்சிகள் எடுத்தும், அவர்களுடைய பிள்ளைகளில் சிலர், வளர்ந்து வருகையில் உண்மையான வணக்கத்தை விட்டு விலகிச் செல்லலாம். (ஆதியாகமம் 26:34, 35) இது பெற்றோருக்கு பெரும் மன வேதனையை அளிக்கலாம். (நீதிமொழிகள் 17:21, 25) எனினும், முழுமையாய் நம்பிக்கை இழப்பதற்குப் பதிலாக, கெட்டக் குமாரனைப் பற்றிய இயேசுவின் உவமையை நினைவுபடுத்திக் கொள்வது அவர்களுக்கு நல்லதாக இருக்கலாம். அந்தக் குமாரன் வீட்டை விட்டு வெளியேறி மோசமான வாழ்க்கை வாழ்ந்தான்; எனினும் பின்னர் தன் தகப்பனிடம் திரும்பி வந்தான், அவரும் சந்தோஷத்துடன் அன்பான முறையில் ஏற்றுக்கொண்டார். (லூக்கா 15:11-32) என்ன நேரிட்டாலும், யெகோவா புரிந்துகொள்கிறார், அன்புள்ள அக்கறை காட்டுகிறார், தவறாமல் ஆதரவளிக்கிறார் என்பதைக் குறித்து உண்மை கிறிஸ்தவ பெற்றோர் நிச்சயமாய் இருக்கலாம்.—சங்கீதம் 145:14.
21. யாருக்கு நாம் செவிசாய்க்க வேண்டும், ஏன்?
21 ஆகவே, நம்முடைய வாழ்க்கையில் எது உண்மையில் முக்கியம் என்பதை நாம் ஒவ்வொருவரும் தீர்மானிப்போமாக. நமக்கும் நம் குடும்பத்தாருக்கும் வேதனையை ஏற்படுத்தும் பொருட்செல்வங்களை அதிகமாய் சேர்க்க விரும்புகிறோமா? அல்லது, “சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து” வருகிற ‘நன்மையான ஈவுகளையும் பூரணமான வரங்களையும்’ நாடுகிறோமா? (யாக்கோபு 1:17) பொருள் சம்பந்தமான காரியங்களுக்காக ஓடாய் உழைத்து, சந்தோஷத்தையும் ஜீவனையும் நாம் இழந்துவிடும்படி செய்ய ‘பொய்க்குப் பிதாவாயிருக்கிற’ சாத்தான் விரும்புகிறான். (யோவான் 8:44; லூக்கா 12:15) யெகோவாவோ நம்மீது உண்மையான அக்கறை காட்டுகிறார், நமக்கு மிகச் சிறந்தது எதுவோ அதையே விரும்புகிறார். (ஏசாயா 48:17, 18) அப்படியானால், நம்முடைய அன்புள்ள பரலோக தகப்பனுக்கு தொடர்ந்து செவிசாய்ப்போமாக, எப்போதும் அவரில் ‘மனமகிழ்ச்சியாயிருப்போமாக.’ (சங்கீதம் 37:4) இத்தகைய போக்கை நாம் பின்பற்றினால், யெகோவாவின் மதிப்புமிக்க பரிசுகளும் வரங்களும் அபரிமிதமான ஆசீர்வாதமும் சேர்ந்து, வேதனையின் சுவடே இல்லாமல் நம்மை ஐசுவரியவான்களாக்கும்.
[அடிக்குறிப்பு]
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• மிக அதிக சந்தோஷத்தை எங்கே கண்டடையலாம்?
• யெகோவா தம்முடைய ஜனங்களுக்கு தரும் வரங்கள் சில யாவை?
• வெளி ஊழியத்தை ஏன் ஒரு வரம் என சொல்லலாம்?
• பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வளர்க்கையில் கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு என்ன செய்யலாம்?
[பக்கம் 16-ன் படம்]
கடவுளுடைய பரிசாகிய அவருடைய வார்த்தைக்கு போற்றுதலைக் காட்டுகிறீர்களா?
[பக்கம் 17-ன் படம்]
மிகவும் இக்கட்டான சூழ்நிலைமைகளிலும், லாரல் நிஸ்பட் வைராக்கியத்துடன் கடவுளைச் சேவித்தாள்
[பக்கம் 18-ன் படங்கள்]
தபீத்தாளைப்போல், இன்றைய கிறிஸ்தவர்கள் தங்கள் அன்பான செயல்களுக்காக நன்கு அறியப்பட்டிருக்கின்றனர்
[பக்கம் 19-ன் படம்]
கிறிஸ்தவ மூப்பர்கள் உடன் விசுவாசிகளிடம் அன்புள்ள அக்கறை வைத்திருக்கிறார்கள்