கடவுளுடைய வார்த்தையை கற்பிப்போர் தங்கள் வேலையை நிறைவேற்ற ஊக்குவிக்கப்பட்டனர்
லட்சக்கணக்கான போதனையாளர்கள் போதனையை பெறுவதற்காக சமீப மாதங்களில் ஒன்றுகூடி வந்தார்கள். கடந்த மே மாதம் தொடங்கி நடைபெற்ற “கடவுளுடைய வார்த்தையை கற்பிப்போர்” என்ற யெகோவாவின் சாட்சிகளுடைய நூற்றுக்கணக்கான மாவட்ட மாநாடுகளுக்கு அவர்கள் கூடிவந்தார்கள். தங்களுக்கு தாங்களே கற்பித்துக்கொள்ளும்படியும், இன்னுமதிக தகுதியுள்ளவர்களாக ஆகும்படியும், கற்பிப்போராக தங்கள் வேலையை நிறைவேற்றும்படியும் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டது.
நீங்கள் இவற்றில் ஏதாவதொரு மாநாட்டுக்கு போய்வந்தீர்களா? அப்படியானால், உண்மை கடவுளாகிய யெகோவாவை வணங்குவதற்கான இந்த கூட்டங்களில் அளிக்கப்பட்ட சிறந்த ஆவிக்குரிய உணவுக்காக நிச்சயமாகவே நன்றியுள்ளவர்களாய் இருந்திருப்பீர்கள். இப்போது இந்த மாநாட்டின் போதனையளிக்கும் நிகழ்ச்சிகளை மறுபார்வை செய்வோமா?
முதல் நாள்—ஆவியால் அருளப்பட்ட வேதவாக்கியங்கள் உபதேசத்துக்கு பிரயோஜனமுள்ளவை
“கடவுளுடைய வார்த்தையை கற்பிப்போரே, கற்றுக்கொள்ளுங்கள்” என்ற பேச்சில் மாநாட்டு சேர்மன் அங்கு வந்திருந்தவர்களை அன்போடு வரவேற்றார். ‘மகத்தான போதகராகிய’ யெகோவாவிடமிருந்து கற்றுக்கொண்டு, இயேசு கிறிஸ்து பெரிய போதகரானார். (ஏசாயா 30:20, NW; மத்தேயு 19:16) கடவுளுடைய வார்த்தையை கற்பிப்போராக நாம் முன்னேற வேண்டுமென்றால் நாமும் யெகோவாவால் கற்பிக்கப்பட வேண்டும்.
“ராஜ்ய போதனை நல்ல பலனை தருகிறது” என்பது அடுத்த பாகம். கடவுளுடைய வார்த்தையை கற்பிப்பதில் அனுபவம் மிக்கவர்களைப் பேட்டி காண்பதன்மூலம் சீஷராக்கும் வேலையின் சந்தோஷங்களும் ஆசீர்வாதங்களும் சிறப்பித்துக் காட்டப்பட்டன.
“‘தேவனுடைய மகத்துவங்களால்’ தூண்டப்படுதல்” என்ற உற்சாகமளிக்கும் பேச்சு தொடர்ந்தது. முதல் நூற்றாண்டில், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய ‘மகத்துவங்கள்’ மக்களை செயல்பட தூண்டின. (அப்போஸ்தலர் 2:11) மீட்கும் பலி, உயிர்த்தெழுதல், புதிய உடன்படிக்கை ஆகியவற்றைப் பற்றிய வேதப்பூர்வ போதனைகளாகிய “மகத்துவங்களை” அறிவிப்பதன்மூலம் நாமும் மக்களை செயல்பட தூண்டலாம்.
‘யெகோவாவின் நீதியில் மகிழ்ச்சி காண’ அடுத்த பேச்சு அனைவருக்கும் உற்சாகம் அளித்தது. (சங்கீதம் 35:27) நீதியானதை நேசித்து தீமையானதை வெறுக்க கற்றுக்கொள்வது, பைபிளை படிப்பது, ஆவிக்குரிய விதத்தில் கேடு விளைவிக்கும் செல்வாக்குகளை பலமாக எதிர்ப்பது, மனத்தாழ்மையை வளர்ப்பது ஆகியவற்றின் மூலம் நீதியை நாடுவதற்கு உதவி பெறுகிறோம். இப்படிப்பட்ட படிகளை எடுப்பது ஆரோக்கியமற்ற கூட்டாளிகளிடமிருந்தும், உலகின் பொருள்சார்ந்த மதிப்பீடுகளிலிருந்தும், ஒழுக்கங்கெட்ட வன்முறையான பொழுதுபோக்கிலிருந்தும் நம்மை காத்துக்கொள்ள உதவும்.
அடுத்தது, “கடவுளுடைய வார்த்தையை கற்பிப்போராக முழுமையான தகுதி பெறுதல்” என்ற தலைப்பை உடைய முக்கியப் பேச்சு கொடுக்கப்பட்டது. யெகோவா தம்முடைய வார்த்தை, தம்முடைய பரிசுத்த ஆவி, தம்முடைய பூமிக்குரிய அமைப்பு ஆகியவற்றின் மூலமாக நம்மை தமது தகுதியுள்ள ஊழியக்காரர்களாக்குகிறார் என்பதை அது நினைவூட்டியது. கடவுளுடைய வார்த்தையை பயன்படுத்துவதைக் குறித்ததில் பேச்சாளர் இவ்வாறு புத்திமதி அளித்தார்: “பைபிளின் செய்தியை, அடையாள அர்த்தத்தில், அதன் பக்கங்களிலிருந்து எடுத்து சபையாரின் இதயங்களில் பதிய வைப்பதே நம் குறிக்கோள்.”
“மற்றவர்களுக்கு கற்பிக்கையில் நமக்கும் கற்பித்துக்கொள்ளுதல்” என்பதே இந்த மாநாட்டின் முதல் தொடர்பேச்சு. மற்றவர்களுக்கு கற்பிக்கிற அதே உயர்ந்த கிறிஸ்தவ ஒழுக்க தராதரத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை முதல் பாகம் வலியுறுத்தியது. ‘சத்திய வசனத்தை நிதானமாய் பகுத்து போதிக்கும்படி’ அடுத்த பாகம் நினைவூட்டியது. (2 தீமோத்தேயு 2:15) நமக்கு நாமே கற்பித்துக் கொள்வதற்கு, தனிப்பட்ட வகையில் பைபிளை தவறாமல் ஊக்கமாக படிப்பது அவசியம்; நாம் எவ்வளவு நீண்ட காலம் கடவுளை சேவிக்கிறவர்களாக இருந்தாலும், இது அவசியம். பெருமை, தன்னிச்சையான போக்கு, தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் இயல்பு, பொறாமை, கசப்பு, கடுங்கோபம், குறைகாணுதல் போன்ற மனநிலைகள் நம்மில் இருந்தால் அவற்றை சாதகமாக பயன்படுத்துவதற்காக பிசாசு நம்மை கவனித்துக் கொண்டே இருக்கிறான் என்பதை தொடர்பேச்சின் அடுத்த பாகம் எடுத்துக்காட்டியது. ஆனாலும், நாம் பிசாசை தீவிரமாக எதிர்த்தால் அவன் நம்மைவிட்டு ஓடிப்போவான். அவனை எதிர்ப்பதற்கு, நாம் கடவுளிடம் நெருங்கி வருவது அவசியம்.—யாக்கோபு 4:7, 8.
“உலகெங்கும் பரவிவரும் ஆபாசத்தை வெறுத்துவிடுங்கள்” என்ற சமயோசிதமான பேச்சு, நம் ஆன்மீகத்துக்கு மோசமான அச்சுறுத்தலாக இருக்கும் ஆபாசத்தை எதிர்த்து வெற்றிகரமாக போராட ஆலோசனை வழங்கியது. ஆபகூக் தீர்க்கதரிசி யெகோவாவைப் பற்றி இப்படி சொன்னார்: “தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்க மாட்டீரே.” (ஆபகூக் 1:13) நாம் ‘தீமையை வெறுக்க’ வேண்டும். (ரோமர் 12:9) இன்டர்நெட்டிலும் டெலிவிஷனிலும் பிள்ளைகள் எதைப் பார்க்கிறார்கள் என்பதை எப்போதும் கண்காணிக்கும்படி பெற்றோருக்கு அறிவுரை கூறப்பட்டது. ஆபாசத்திடமாக ஈர்க்கப்படுகிறவர்கள் ஆவிக்குரிய வகையில் முதிர்ச்சியுள்ள ஒரு நண்பரிடமிருந்து உதவி பெற வேண்டும் என்று பேச்சாளர் கூறினார். சங்கீதம் 97:10; மத்தேயு 5:28; 1 கொரிந்தியர் 9:27; எபேசியர் 5:3, 12; கொலோசெயர் 3:5; 1 தெசலோனிக்கேயர் 4:4, 5 போன்ற வசனங்களை தியானித்து அவற்றை மனப்பாடம் செய்து வைத்துக்கொள்வதும் உதவியாக இருக்கும்.
அடுத்த பேச்சு, “தேவ சமாதானம் உங்களை காத்துக்கொள்ளட்டும்” என்பதாகும். நாம் கவலைகளால் பாரமடைந்திருக்கும்போது, யெகோவாவின்மீது நம் பாரத்தை வைத்துவிடலாம் என்று உறுதியளித்து இந்த பேச்சு நமக்கு ஆறுதல் தந்தது. (சங்கீதம் 55:22) ஜெபத்தில் நம் இருதயத்தை யெகோவாவிடம் ஊற்றிவிட்டோமானால், ‘தேவ சமாதானத்தை’ அவர் நமக்குத் தருவார்; அவருடன் நாம் வைத்திருக்கும் அருமையான உறவின் காரணமாக கிடைக்கும் அமைதியும் சாந்தமுமான மனநிலையே அது.—பிலிப்பியர் 4:6, 7.
“ஒளியைத் தந்து யெகோவா தம் மக்களை அலங்கரிக்கிறார்” என்ற பேச்சு ஏசாயா 60-ம் அதிகாரத்தின் நிறைவேற்றத்தை விளக்கியது; இந்த பேச்சுடன் சிறப்பாகவும் சந்தோஷமாகவும் நிறைவுற்றது முதல் நாள் நிகழ்ச்சி. உலகின் தற்போதைய இருண்ட நிலையிலும், திரண்டுவரும் செம்மறியாடு போன்ற திரள் கூட்டத்தாராகிய ‘அந்நியர்கள்’ அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுடன் சேர்ந்து யெகோவாவின் ஒளியை அனுபவிக்கின்றனர். 19-ம், 20-ம் வசனங்களைக் குறித்து பேச்சாளர் இவ்வாறு விளக்கினார்: “யெகோவா, சூரியனைப்போல ‘அஸ்தமிக்கவும் மாட்டார்,’ சந்திரனைப்போல ‘மறையவும் மாட்டார்.’ தம்முடைய ஜனங்கள்மீது தொடர்ந்து ஒளியை பிரகாசிப்பதன் மூலம் அவர்களை அலங்கரிப்பார். இருள் சூழ்ந்த இந்த உலகின் கடைசி நாட்களில் வாழ்கையில், அது நமக்கு எவ்வளவு அருமையான வாக்குறுதியாக உள்ளது!” பேச்சை முடிக்கும்போது, ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு புத்தகத்தின் இரண்டாம் தொகுதியின் வெளியீட்டை பேச்சாளர் அறிவித்தார். இந்தப் புதிய புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டீர்களா?
இரண்டாம் நாள்—மற்றவர்களுக்குக் கற்பிக்க போதிய தகுதி பெற்றிருத்தல்
இரண்டாம் நாளன்று, தினவாக்கியத்தை கலந்தாலோசித்தப் பிறகு, மாநாட்டின் இரண்டாம் தொடர்பேச்சுக்கு கூர்ந்து கவனம் செலுத்தினோம். அதன் தலைப்பு, “மற்றவர்கள் விசுவாசிகளாவதற்கு உதவும் ஊழியர்கள்.” மக்களை விசுவாசிகளாவதற்கு உதவும் மூன்று அம்சங்களையும் ஒவ்வொன்றாக இந்த மூன்று பாக தொடர்பேச்சின் பேச்சாளர்கள் சிறப்பித்துக் காண்பித்தார்கள். அவை, ராஜ்ய செய்தியை பரப்புதல், காண்பிக்கப்பட்ட அக்கறையை வளர்த்தல், கிறிஸ்து கட்டளையிட்டதை கடைப்பிடிக்கும்படி அக்கறை காட்டியவர்களுக்கு போதித்தல். சீஷராவதற்கு மற்றவர்களுக்கு குறிப்பாக எப்படி கற்பிக்கலாம் என்பதை பேட்டிகளிலும் நிஜ சம்பவ நடிப்புகளிலும் காண முடிந்தது.
அடுத்த பேச்சு, “உங்கள் சகிப்புத்தன்மையோடே தேவபக்தியைக் கூட்டுங்கள்” என்ற தலைப்பில் இருந்தது. மொத்தத்தில் ‘முடிவுபரியந்தம் நிலைநிற்பதே’ முக்கியம் என்பதை பேச்சாளர் எடுத்துரைத்தார். (மத்தேயு 24:13) தேவ பக்தியை வளர்க்க உதவியாக யெகோவா கொடுத்திருக்கும் எல்லா ஏதுக்களையும், அதாவது ஜெபம், தனிப்பட்ட படிப்பு, கூட்டங்கள், ஊழியம் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உலகப்பிரகாரமான ஆசைகளும் நடவடிக்கைகளும் தேவபக்திக்குரிய இடத்தை ஆக்கிரமித்து விடாதபடி அல்லது அதைக் கெடுத்துப் போடாதபடி தடுப்பது அவசியம்.
வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்கள் இன்று எவ்வாறு புத்துணர்ச்சி பெறலாம்? “கிறிஸ்துவின் நுகத்தின்கீழ் இளைப்பாறுதலை கண்டடைதல்” என்ற பேச்சு அதற்கு பதிலளித்தது. இயேசுவைப் பின்பற்றியவர்கள் அவருடைய நுகத்தின்கீழ் வந்து அவரிடம் கற்றுக்கொள்ளும்படி அவர் தயவாக அழைப்பு விடுத்தார். (மத்தேயு 11:28-30) கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி எளிய, சமநிலையான வாழ்க்கை வாழ்வதன்மூலம் நாம் இயேசுவின் நுகத்தின்கீழ் வரலாம். தங்கள் வாழ்க்கையை எளிமையாக்கி இருக்கிறவர்களை பேட்டி காண்பதன் மூலம் இந்த பேச்சின் முக்கிய குறிப்புகள் சிறப்பித்துக் காட்டப்பட்டன.
யெகோவாவின் சாட்சிகள் திரண்டுவரும் பெரும் கூட்டங்களில் ஒரு முக்கிய அம்சம் கடவுளுக்கு தங்களை புதிதாக ஒப்புக்கொடுத்தவர்களின் முழுக்காட்டுதல். “முழுக்காட்டுதல் இன்னுமதிகமான கற்பிக்கும் சிலாக்கியங்களுக்கு வழிநடத்துகிறது” என்ற பேச்சைக் கொடுத்த சகோதரர், முழுக்காட்டுதல் பெறப்போகிறவர்களை அன்புடன் வரவேற்று, இன்னுமதிகமான ஊழிய சிலாக்கியங்களில் பங்குபெற அழைப்பு விடுத்தார். கடவுளுடைய வார்த்தையை கற்பிப்போராக முழுக்காட்டப்பட்ட இந்த புதியவர்களில் வேதப்பூர்வ தகுதியுள்ளவர்கள் சபையில் பல்வேறு பொறுப்புக்களை ஏற்கும் அளவுக்கு முன்னேறலாம்.
“பெரிய போதகரைப் பின்பற்றுங்கள்” என்பதே அன்று பிற்பகலின் முதல் பேச்சு. யுகாயுகமாக பரலோகத்தில் இயேசு தம் பிதாவை கவனித்து, அவரைப் பின்பற்றி பெரிய போதகரானார். பூமியிலிருந்தபோது, சிந்தனையைத் தூண்டும் கேள்விகள் மற்றும் எளிமையான தெளிவான உதாரணங்கள் போன்ற பலன் தரும் கற்பிக்கும் முறைகளைப் பயன்படுத்தினார். கடவுளுடைய வார்த்தையை அடிப்படையாக வைத்து ஆர்வத்தோடும், கனிவோடும், அதிகாரத்தோடும் இயேசு பேசினார். பெரிய போதகரை பின்பற்றும்படி நாமும் தூண்டப்பட்டோம் அல்லவா?
“மற்றவர்களுக்கு சேவை செய்ய மனமுள்ளவர்களாய் இருக்கிறீர்களா?” என்ற ஆர்வமூட்டும் பேச்சு இயேசுவைப் போல் மற்றவர்களுக்கு சேவை செய்ய நம்மை உற்சாகப்படுத்தியது. (யோவான் 13:12-15) தகுதிபெற்ற ஆண்கள், மற்றவர்களுக்கு உதவ கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில் தீமோத்தேயுவைப் போல் இருக்கும்படி பேச்சாளர் நேரடியாக உற்சாகம் அளித்தார். (பிலிப்பியர் 2:20, 21) பிள்ளைகள் முழுநேர ஊழியத்தை தொடர உதவுவதில் எல்கானாவையும் அன்னாளையும் பின்பற்றும்படி பெற்றோருக்கு உற்சாகம் அளிக்கப்பட்டது. தங்களையே மனமுவந்து அளிப்பதில் இயேசு கிறிஸ்து மற்றும் இளம் தீமோத்தேயுவின் உதாரணங்களை பின்பற்றும்படி இளைஞர்களுக்கு புத்திமதி வழங்கப்பட்டது. (1 பேதுரு 2:21) மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டவர்களின் அனுபவங்களும் நம்மை நெகிழ்வித்தன.
“கடவுள் அளிக்கும் கல்வியிலிருந்து இன்னுமதிகமாக பயன் பெறுங்கள்” என்பதே மூன்றாவது தொடர்பேச்சின் பொருள். தொடர்ந்து கவனம் செலுத்தும் நேரத்தை அதிகரிப்பதன் அவசியத்தை முதல் பேச்சாளர் வலியுறுத்தினார். அந்த இலக்கை அடைய, முதலில் தனிப்பட்ட படிப்புக்காக குறைந்தளவு நேரத்தை செலவிடுவதில் தொடங்கி, பின்னர் மெதுமெதுவாக நேரத்தைக் கூட்டலாம். கூட்டங்களில் வசனங்களை எடுத்துப் பார்க்கவும் குறிப்புகள் எடுக்கவும் சபையாரை உற்சாகப்படுத்தினார். ‘ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தை’ பற்றிக்கொண்டிருப்பதன் அவசியத்தைக் குறித்து உணர்வுள்ளவர்களாய் இருக்க இரண்டாம் பேச்சாளர் புத்திமதி அளித்தார். (2 தீமோத்தேயு 1:13, 14) மீடியாக்களில் அளிக்கப்படும் ஒழுக்கங்கெட்ட நடத்தை, மனித தத்துவங்கள், நுட்ப பிழைகாணுதல், விசுவாச துரோக போதனைகள் என அனைத்திலிருந்தும் நம்மை பாதுகாக்க, தனிப்பட்ட படிப்புக்கும் கூட்டங்களுக்கும் நேரத்தை வாங்க வேண்டும். (எபேசியர் 5:15, 16, NW) கடவுள் அளிக்கும் கல்வியிலிருந்து இன்னுமதிகமாக பயன்பெற கற்றுக்கொள்ளும் விஷயங்களை கடைப்பிடிப்பதற்கான அவசியத்தை இந்த தொடர்பேச்சின் கடைசி பேச்சாளர் வலியுறுத்தினார்.—பிலிப்பியர் 4:9.
“நம் ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு புதிய ஏற்பாடுகள்” என்ற பேச்சை கேட்பதில் நாம் எவ்வளவாக கிளர்ச்சி அடைந்தோம்! தேவராஜ்ய ஊழியப் பள்ளி கல்வியிலிருந்து பயனடையுங்கள் என்ற புதிய புத்தகம் சீக்கிரத்தில் வெளியிடப்படும் என்று அறிந்தபோது சந்தோஷப்பட்டோம். அதன் பொருளடக்கத்தை பேச்சாளர் விவரிக்கையில் அந்தப் புத்தகத்தை பெற மிக ஆவலாக இருந்தோம். அநேக பேச்சு ஆலோசனை குறிப்புகள் அடங்கிய இந்த புத்தகத்தின் பகுதியைப் பற்றி பேச்சாளர் இவ்வாறு சொன்னார்: “நன்கு வாசிப்பது, பேசுவது, போதிப்பது சம்பந்தப்பட்ட இந்த 53 ஆலோசனை குறிப்புகளையும் இப்புதிய பாட புத்தகம் உலகப்பிரகாரமான பாட புத்தகங்களைப்போல் விளக்குவதில்லை. வேதப்பூர்வ நியமங்களின் அடிப்படையிலேயே விளக்குகிறது.” தீர்க்கதரிசிகளும் இயேசுவும் அவரது சீஷர்களும் எவ்வாறு சிறந்த போதிக்கும் திறமைகளை பயன்படுத்தினார்கள் என்பதை இந்த புத்தகம் காண்பிக்கும். ஆம், இந்த பாட புத்தகமும் தேவராஜ்ய ஊழிய பள்ளியின் புதிய அம்சங்களும், கடவுளுடைய வார்த்தையை இன்னும் சிறந்த முறையில் கற்பிக்க நிச்சயமாகவே நமக்கு உதவும்.
மூன்றாம் நாள்—காலத்தைப் பார்த்தால் போதகராய் இருக்க வேண்டும்
கடைசி நாளன்று, தினவாக்கியத்தை கலந்தாலோசித்தப் பிறகு, “மல்கியாவின் தீர்க்கதரிசனம் யெகோவாவின் நாளுக்காக நம்மை தயார்படுத்துகிறது” என்ற முடிவான தொடர்பேச்சுக்கு எல்லாரும் கூர்ந்து கவனம் செலுத்தினர். யூதர்கள் பாபிலோனிலிருந்து திரும்பி வந்து சுமார் நூறு ஆண்டுகளுக்குப்பின் மல்கியா தீர்க்கதரிசனம் உரைத்தார். அவர்கள் மீண்டும் விசுவாச துரோகத்திற்கும் துன்மார்க்கத்துக்கும் திரும்பினர்; யெகோவாவின் நீதியான சட்டங்களை புறக்கணித்து, குருடான, முடமான, வியாதிப்பட்ட மிருகங்களை பலி செலுத்துவதன்மூலம் யெகோவாவின் பெயரை அவமதித்தனர். மேலுமாக, தங்கள் இளவயதின் மனைவிகளை விவாகரத்து செய்தனர்; புறமத பெண்களை விவாகம் செய்வதற்காக இவ்வாறு செய்திருக்கலாம்.
மல்கியா தீர்க்கதரிசனத்தின் முதல் அதிகாரம், யெகோவா தம் மக்களில் வைத்திருக்கும் அன்பை உறுதிப்படுத்துகிறது. கடவுளிடம் பயபக்தி உள்ளவர்களாகவும் பரிசுத்த காரியங்களுக்கு போற்றுதல் காண்பிப்பவர்களாகவும் இருப்பதன் அவசியத்தை அது சிறப்பித்துக் காட்டுகிறது. நம்முடைய மிகச் சிறந்ததை அவருக்கு கொடுக்கவும், தன்னலமற்ற அன்பால் தூண்டப்பட்டு அவரை வணங்கவும் வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார். நம்முடைய பரிசுத்த சேவை வெறும் சடங்காக இருக்கக் கூடாது, நாம் கடவுளுக்கு கணக்கு கொடுக்க வேண்டும்.
மல்கியாவின் இரண்டாம் அதிகாரத்தை நம் நாளுக்கு பொருத்தி, இரண்டாம் பேச்சாளர் இவ்வாறு கேட்டார்: “தனிப்பட்டவர்களாக ‘நம்முடைய உதடுகளில் அநியாயம் காணப்படாதபடி’ நாம் விழிப்புடன் இருக்கிறோமா?” (மல்கியா 2:6) போதிப்பதில் முன்னின்று வழிநடத்துகிறவர்கள் தாங்கள் சொல்வது கடவுளுடைய வார்த்தையை உறுதியான ஆதாரமாக கொண்டிருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். நியாயமான காரணமின்றி விவாகரத்துக்களை செய்வது போன்ற துரோகங்களை நாம் வெறுக்க வேண்டும்.—மல்கியா 2:14-16.
“யெகோவாவின் நாளில் யார் தப்பிக்க முடியும்?” என்ற தலைப்பில் பேசிய தொடர்பேச்சின் கடைசி பேச்சாளர், யெகோவாவின் நாளுக்கு தயாராகும்படி நமக்கு உதவினார். “மல்கியா 3-ம் அதிகாரம், 17-ம் வசனம் தங்களிடமே பெரியளவில் நிறைவேறுவதை அறிவது யெகோவாவின் ஊழியர்களுக்கு எவ்வளவாக ஆறுதலளிக்கிறது!” என்பதாக பேச்சாளர் கூறினார். “அது கூறுவதாவது: ‘என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ்செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல நான் அவர்களைக் கடாட்சிப்பேன்.’”
பூர்வகால உடைகளுடன் நடித்துக் காட்டப்பட்ட, “யெகோவாவின் அதிகாரத்திற்கு மரியாதை காட்டுங்கள்” என்ற நாடகம் மாநாட்டின் மற்றொரு சிறப்பு அம்சம். இது கோராகின் குமாரரை சித்தரித்து காட்டியது. மோசேயிடமும் ஆரோனிடமும் தங்கள் தந்தை கலகத்தனமான மனநிலையை காண்பித்த போதிலும், இவர்கள் யெகோவாவுக்கும் அவருடைய பிரதிநிதிகளுக்கும் உண்மையாக இருந்தார்கள். கோராகும் அவனைப் பின்பற்றியவர்களும் அழிந்தபோதும், கோராகின் குமாரர் தப்பிப்பிழைத்தார்கள். “கடவுளுடைய அதிகாரத்திற்கு உண்மையுடன் கீழ்ப்பட்டிருங்கள்” என்ற தலைப்பில் அதைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட பேச்சு, அந்த நாடகத்தின் விஷயங்களை நம் ஒவ்வொருவருக்கும் பொருத்திக் காட்டியது. கோராகும் அவனைப் பின்பற்றியவர்களும் தவறிவிட்ட ஆறு அம்சங்களைக் குறித்து பேச்சாளர் எச்சரித்தார்: யெகோவாவின் அதிகாரத்தை உண்மைப்பற்றுறுதியுடன் ஆதரிக்காதது; பெருமையும், பேராசையும், பொறாமையும் தங்களை ஆதிக்கம் செலுத்த அனுமதித்தது; யெகோவாவால் நியமிக்கப்பட்டவர்களின் குறைபாடுகள்மீதே கவனம் செலுத்தியது; குறைகூறும் மனநிலையை வளர்த்தது; தங்களுடைய ஊழிய சிலாக்கியங்களில் திருப்தி அடையாதது; யெகோவாவிடம் உண்மைப்பற்றுறுதியைக் காட்டுவதைவிட நட்பையோ குடும்ப உறவுகளையோ முக்கியமாக கருதியது.
“எல்லா தேசத்தாருக்கும் சத்தியத்தை யார் கற்பிக்கிறார்கள்?” என்பது பொதுப் பேச்சின் பொருள். அதில் சிந்திக்கப்பட்ட சத்தியம், பொதுப்படையான சத்தியம் அல்ல, ஆனால் யெகோவாவின் நோக்கத்தைப் பற்றிய சத்தியம்; அதைக் குறித்தே இயேசு கிறிஸ்து சாட்சி கொடுத்தார். நம்பிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட சத்தியத்தையும், வணக்கமுறையுடன் சம்பந்தப்பட்ட சத்தியத்தையும், தனிப்பட்ட நடத்தையுடன் தொடர்புடைய சத்தியத்தையும் பற்றி பேச்சாளர் எடுத்துச் சொன்னார். இந்த விஷயங்களில் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களோடு இன்றைய யெகோவாவின் சாட்சிகளை ஒப்பிடுகையில், ‘தேவன் மெய்யாகவே நமக்குள் இருக்கிறார்’ என்ற நமது நம்பிக்கை நிச்சயமாகவே பலப்பட்டது.—1 கொரிந்தியர் 14:25.
அந்த வாரத்துக்குரிய காவற்கோபுர படிப்பு கட்டுரையின் சுருக்கத்துக்கு பிறகு, கூடிவந்திருந்த கடவுளுடைய வார்த்தையை கற்பிப்போர் அனைவரும் “நம் கற்பிக்கும் வேலையை அவசரமாக நிறைவேற்றுதல்” என்ற முடிவான பேச்சின் மூலமாக செயல்படும்படி தூண்டப்பட்டனர். போதிக்கையில் வேத வசனங்களை பயன்படுத்துவதன் முக்கியத்துவம், தகுதியுள்ள போதகர்களாவதற்கு வழிமுறைகள், மற்றவர்களுக்கு நாம் கற்பிக்கும் சத்தியத்தில் நாம் நம்பிக்கை வைத்திருப்பதன் அவசியம் ஆகியவை நிகழ்ச்சிநிரலை சுருக்கமாக மறுபார்வை செய்கையில் வலியுறுத்தப்பட்டன. நாம் ‘தேறுவதை விளங்கும்படி செய்யவும்,’ ‘நமக்கும் நம் போதகத்திற்கும் தொடர்ந்து கவனம் செலுத்தவும்’ பேச்சாளர் அறிவுரை கூறினார்.—1 தீமோத்தேயு 4:15, 16, NW.
“கடவுளுடைய வார்த்தையை கற்பிப்போர்” மாவட்ட மாநாட்டில் எப்பேர்ப்பட்டதோர் ஆவிக்குரிய விருந்தை அனுபவித்தோம்! மற்றவர்களுக்கு கடவுளுடைய வார்த்தையை போதிப்பதில், நம் மகத்தான போதகர் யெகோவாவையும் நம் பெரிய போதகர் இயேசு கிறிஸ்துவையும் பின்பற்றுவோமாக.
[பக்கம் 28-ன் பெட்டி/படங்கள்]
விசேஷ தேவைகளை பூர்த்தி செய்ய புதிய பிரசுரங்கள்
உலகில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மக்களுக்கு வேதப்பூர்வ சத்தியத்தை கற்பிக்க உதவும் இரண்டு பிரசுரங்களை “கடவுளுடைய வார்த்தையை கற்பிப்போர்” மாவட்ட மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பெற்றுக்கொண்டார்கள். ‘ஆத்துமாவையும்’ ‘ஆவியையும்’ வேறுபடுத்திக் காட்டாத மொழிகளை பேசும் நாடுகளில் உரையாடல்களை தொடங்குவதற்கு அழியாத ஆவி ஒன்றுண்டா? என்ற தலைப்புடைய துண்டுப்பிரதி பயனுள்ளதாக இருக்கும். ஆவி சக்தி, ஆவி சிருஷ்டியிலிருந்து வேறுபட்டது என்றும் மக்கள் இறக்கும்போது அவர்கள் ஆவி சிருஷ்டிகளாக மாறுவதில்லை என்றும் இந்த புதிய துண்டுப்பிரதி தெளிவாக விளக்குகிறது.
மாநாட்டின் இரண்டாம் நாளின் முடிவில் திருப்தியான வாழ்க்கைக்கு வழி என்ற சிற்றேடு வெளியிடப்பட்டது. சிருஷ்டிகருக்கு பண்புகள் இருப்பதையும் கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்ட ஒரு புத்தகம் இருப்பதையும் ஏற்க முடியாத கருத்துக்களாக நினைப்பவர்களிடம் பைபிள் படிப்புகளை தொடங்கும் நோக்கத்துடன் இந்த சிற்றேடு தயாரிக்கப்பட்டது. உங்கள் ஊழியத்தில் இந்த புதிய பிரசுரங்களை உபயோகிக்க முடிந்ததா?
[பக்கம் 26-ன் படங்கள்]
இத்தாலியிலுள்ள மிலானிலும் உலகெங்கிலும் நடந்த மாநாடுகளில் நூற்றுக்கணக்கானோர் முழுக்காட்டுதல் பெற்றனர்
[பக்கம் 29-ன் படம்]
“யெகோவாவின் அதிகாரத்திற்கு மரியாதை காட்டுங்கள்” என்ற நாடகத்தை பார்த்து, வந்திருந்தவர்கள் நெகிழ்ந்து போனார்கள்