வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
“இயேசுவின் நாமத்தில்” என குறிப்பிடாமல் ஜெபத்தில் கடவுளை அணுகுவது சரியா?
யெகோவாவை அணுக விரும்பும் கிறிஸ்தவர்கள் இயேசுவின் பெயரில்தான் ஜெபிக்க வேண்டும் என்று பைபிள் காட்டுகிறது. இயேசு தம்முடைய சீஷர்களிடம், “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று கூறினார். “நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்” என்றும் கூறினார்.—யோவான் 14:6, 13, 14.
இயேசுவின் ஈடிணையற்ற ஸ்தானத்தைக் குறிப்பிட்டு சைக்ளோப்பீடியா ஆஃப் பிப்ளிக்கல், தியாலஜிக்கல் அண்டு எக்ளிஸியாஸ்டிக்கல் லிட்டரேச்சர் இவ்வாறு கூறுகிறது: “இயேசு கிறிஸ்துவை மத்தியஸ்தராக வைத்து கடவுளிடம் மட்டுமே ஜெபம் செய்ய வேண்டும். ஆகவே புனிதர்கள் அல்லது தூதர்களிடம் செய்யப்படும் வேண்டுதல்கள் யாவும் பயனற்றவை மட்டுமல்ல, அவை தேவதூஷணமும்கூட. படைக்கப்பட்ட ஒன்று எத்தனை உயர்ந்த இடத்திலிருந்தாலும் அதற்குக் கொடுக்கப்படும் வணக்கம் விக்கிரகாராதனையாகும். கடவுளுடைய பரிசுத்த சட்டம் இதை கண்டிப்பாக தடைசெய்கிறது.”
மனதைத் தொட்ட ஒரு அனுபவத்திற்குப்பின், “இயேசுவின் நாமத்தில்” என்று சொல்லாமல் “யெகோவாவே உமக்கு நன்றி” என்று ஒருவர் சொல்லிவிட்டால் அப்போது என்ன செய்வது? அதுவும் தவறா? அப்படி சொல்ல முடியாது. எதிர்பாராத ஆபத்தை சந்திக்கும் கிறிஸ்தவர் “யெகோவாவே, எனக்கு உதவி செய்யும்” என்று சப்தமாக கூப்பிடுகிறார் என வைத்துக்கொள்வோம். “இயேசுவின் நாமத்தில்” என்று தம் ஊழியன் கேட்காததற்காக அவரது உதவிக்கு வர கடவுள் மறுக்கவே மாட்டார்.
ஆனால் கடவுளிடம் சப்தமாக பேசுவது மட்டுமே ஜெபமாகிவிடாது என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும். உதாரணமாக, அவனுடைய சகோதரன் ஆபேலை கொன்றதற்காக யெகோவா காயீனுக்குத் தீர்ப்பு வழங்கிய பின் அவன் இப்படி சொன்னான்: “எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்க முடியாது. இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே.” (ஆதியாகமம் 4:13, 14) காயீன் இந்த வார்த்தைகளை யெகோவாவிடம் சொன்னபோதிலும் பாவத்தின் கசப்பான விளைவைப் பற்றித்தான் உணர்ச்சிவசப்பட்டு படபடவென அவன் பொறிந்து தள்ளிக்கொண்டிருந்தான்.
‘தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்’ என பைபிள் நமக்கு கூறுகிறது. அந்த மகா உன்னத கடவுளை ஒரு மனிதனைப் போல கருதி மிகவும் சாதாரணமாக பேசுவது மனத்தாழ்மை குறைவுபடுவதைக் காட்டும். (யாக்கோபு 4:6; சங்கீதம் 47:2; வெளிப்படுத்துதல் 14:7) இயேசு கிறிஸ்துவின் பங்கு என்ன என்பதை கடவுளுடைய வார்த்தையிலிருந்து அறிந்தும், வேண்டுமென்றே அவரை அங்கீகரிக்காமல் ஜெபிப்பது அவமரியாதை காட்டுவதாக இருக்கும்.—லூக்கா 1:32, 33.
அப்படியென்றால் ஒரு குறிப்பிட்ட பாணியில் அல்லது முறையிலேயே நாம் ஜெபிக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்ப்பதை இது அர்த்தப்படுத்தாது. ஒருவருடைய இருதய நிலைதான் மிகவும் முக்கியம். (1 சாமுவேல் 16:7) பொ.ச. முதல் நூற்றாண்டில், கொர்நேலியு என்னும் ரோம நூற்றுக்கு அதிபதி “எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக் கொண்டிருந்தான்.” விருத்தசேதனம் செய்யப்படாத புறமதத்தினனாக இருந்த அவன் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தவன் அல்ல. அவன் இயேசுவின் பெயரில் ஜெபம் செய்திருக்க மாட்டான் என்றாலும் அவை ‘தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருந்தன.’ ஏன்? ஏனென்றால் அவன் ‘பக்தியுள்ளவன், தேவனுக்குப் பயந்தவன்’ என்பதை “இருதயங்களைச் சோதிக்கிற”வராகிய யெகோவா அறிந்திருந்தார். (அப்போஸ்தலர் 10:2, 4; நீதிமொழிகள் 17:3) “நசரேயனாகிய இயேசுவை” பற்றிய அறிவைப் பெற்றுக்கொண்டபோது கொர்நேலியு பரிசுத்த ஆவியைப் பெற்றார், இயேசுவின் முழுக்காட்டப்பட்ட சீஷனாக ஆனார்.—அப்போஸ்தலர் 10:30-48.
கடைசியாக, கடவுள் எந்த ஜெபங்களைக் கேட்பார் என்பதை தீர்மானிப்பது மனிதனுடைய வேலை இல்லை. ஒரு கிறிஸ்தவன் கடவுளிடம் ஜெபிக்கையில் “இயேசுவின் நாமத்தில்” என்ற சொற்றொடரை எப்போதாவது பயன்படுத்த தவறினால், அவன் குற்றவுணர்வை நெஞ்சில் சுமக்க வேண்டியதில்லை. யெகோவா நம் வரம்புகளை முழுமையாக அறிந்திருக்கிறார், அவர் நமக்கு உதவி செய்யவே விரும்புகிறார். (சங்கீதம் 103:12-14) ‘தேவ குமாரனில்’ விசுவாசம் வைத்து ‘நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார்’ என்பதைக் குறித்து முழு நம்பிக்கையோடிருக்கலாம். (1 யோவான் 5:13, 14) உண்மை கிறிஸ்தவர்கள் முக்கியமாக மற்றவர்களை பிரதிநிதித்துவம் செய்து பொதுவாக ஜெபிக்கையில், யெகோவாவின் நோக்கத்தில் இயேசுவுக்கிருக்கும் வேதப்பூர்வமான பங்கை ஒப்புக்கொள்கிறார்கள். ஆகவே ஜெபங்களை இயேசுவின் மூலமாக கடவுளுக்கு ஏறெடுத்து அவரை மகிமைப்படுத்த அவர்கள் கீழ்ப்படிதலுடன் முயற்சி செய்கிறார்கள்.