ஓடிப்போவது எப்போது ஞானமானது
எதையும் நேருக்கு நேர் சந்தித்து தைரியமாக எதிர்த்துப் போராட வேண்டும் என்று நினைப்பதும் ஆசையைத் தூண்டும் சூழ்நிலைகளை சந்திப்பதும்தான் இன்றைய உலகின் போக்கு. எந்தவொரு சூழ்நிலையிலும் ஓடிப்போகிற ஒருவர் பொதுவாக கையாலாகாதவர் அல்லது கோழை என்று கருதப்படுகிறார். அவர் கேலி கிண்டலும் செய்யப்படுகிறார்.
ஆனால் சில சமயங்களில் ஓடிப்போவது ஞானமான செயல், தைரியத்திற்கு அடையாளம் என்று பைபிள் தெளிவாக கூறுகிறது. இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களை ஊழியத்துக்கு அனுப்புவதற்கு முன்பு அவர்களிடம் சொன்ன விஷயம் இதை உறுதி செய்கிறது. “ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்” என்றார். (மத்தேயு 10:23) ஆம், இயேசுவின் சீஷர்கள் தங்களைத் துன்புறுத்துகிறவர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள முயல வேண்டும். ஏதோ மதப் போர் புரிந்து மற்றவர்களை பலவந்தமாக மதமாற்ற அவசியமில்லை. அவர்கள் சமாதான செய்தியை அறிவிக்கிறார்கள். (மத்தேயு 10:11-14; அப்போஸ்தலர் 10:34-37) ஆகவே, கிறிஸ்தவர்கள் கோபப்படுவதற்கு பதிலாக அங்கிருந்து ஓடிவிட வேண்டும், கோபத்திற்கு ஆளாகும் அந்த இடத்திலிருந்து தூரமாகப் போய்விட வேண்டும். இப்படி செய்வதால் அவர்கள் நல்மனச்சாட்சியைக் காத்துக்கொள்வதுடன் யெகோவாவோடு அவர்களுக்கிருக்கும் அருமையான உறவையும் காத்துக்கொள்வார்கள்.—2 கொரிந்தியர் 4:1, 2.
இதற்கு எதிர்மாறான ஒரு உதாரணம் நீதிமொழிகள் புத்தகத்தில் காணப்படுகிறது. சோதனையை சந்திக்கையில் ஓடுவதற்குப் பதிலாக, ‘ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வது போல’ ஒரு விலைமகளுக்குப் பின்னால் சென்ற ஒரு வாலிபனைப் பற்றி அது சொல்கிறது. விளைவு? கவர்ச்சிக்கு விலகி ஓடாததால் அவன் உயிரே நஷ்டத்துக்குள்ளானது.—நீதிமொழிகள் 7:4, 6, 7, 9, 21-23.
ஒழுக்கக்கேட்டில் ஈடுபட வைக்கும் ஒரு சோதனையையோ ஆபத்தான வேறு ஏதாவதொரு சூழ்நிலையையோ நீங்கள் எதிர்ப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? கடவுளுடைய வார்த்தை சொல்கிறபடி, அங்கிருந்து ஓடிப்போவதே, அந்தச் சூழ்நிலையைவிட்டு உடனடியாக தூரமாக போய் விடுவதே சரியான நடவடிக்கையாக இருக்கும்.—நீதிமொழிகள் 4:14, 15; 1 கொரிந்தியர் 6:18; 2 தீமோத்தேயு 2:22.