செப்டுவஜின்டில் திருநான்கெழுத்துக்கள்
கடவுளின் பெயராகிய யெகோவா என்பது திருநான்கெழுத்துக்களின் வடிவில், அதாவது, יהוה (YHWH)என்ற நான்கு எபிரெய எழுத்துக்களாக காணப்படுகிறது. செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்புகளில் இந்த திருநான்கெழுத்துக்கள் காணப்படுவதில்லை என்று நீண்ட நாட்களாக நம்பப்பட்டு வந்தது. இதனால் கிறிஸ்தவ கிரேக்க வேதாகம எழுத்தாளர்கள், எபிரெய வேதாகமத்திலிருந்து மேற்கோள் காட்டுகையில், அவர்களுடைய எழுத்துக்களில் கடவுளுடைய பெயரை பயன்படுத்தியிருக்க மாட்டார்கள் என்று விவாதிக்கப்பட்டது.
கிட்டத்தட்ட கடந்த நூறு ஆண்டுகளாக செய்யப்பட்டுவரும் கண்டுபிடிப்புகள் செப்டுவஜின்டில் கடவுளுடைய பெயர் காணப்படுவதை வெட்டவெளிச்சமாக்கின. ஒரு புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “எபிரெய பைபிளை கிரேக்க மொழிக்கு மொழிபெயர்த்த கிரேக்க மொழி பேசிய யூதர்கள், கடவுளுடைய பெயரை அப்படியே பாதுகாக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் காட்டியபடியால் கிரேக்க வாசகத்தின் நடுவில் திருநான்கெழுத்துக்களை அப்படியே பதிவு செய்தனர்.”
மீந்திருக்கும் சுவடிகளில், இடதுபுறம் காணப்படும் நாணற்புல் தாளின் துண்டு இதற்கு ஒரு உதாரணம் மட்டுமே. இது எகிப்திலுள்ள ஆக்ஸிரின்கஸில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு 3522 என்ற எண் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் துண்டு பொ.ச. முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது.a இது சுமார் 7-க்கு 10.5 சென்டிமீட்டர் அளவுடையது. இந்தத் துண்டில் யோபு 42:11, 12-ன் ஒரு பகுதி காணப்படுகிறது. படத்தில் வட்டமிட்டுக் காட்டப்பட்டிருக்கும் திருநான்கெழுத்துக்கள் பண்டைய எபிரெய எழுத்துக்களாகும்.b
அப்படியென்றால், கடவுளுடைய பெயர் ஆரம்ப கால கிறிஸ்தவ கிரேக்க வேதாகம பிரதிகளில் காணப்பட்டதா? கல்விமான் ஜார்ஜ் ஹோவார்டு இவ்வாறு கூறுகிறார்: “ஆரம்ப கால சர்ச்சின் வேதாகமமாக இருந்த கிரேக்க பைபிள் [செப்டுவஜின்ட்] பிரதிகளில் திருநான்கெழுத்துக்கள் காணப்பட்டபடியால், புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் வேதாகமத்திலிருந்து மேற்கோள் காட்டும்போது திருநான்கெழுத்துக்களை பைபிள் வாசகத்தில் பாதுகாத்து வைத்திருந்தார்கள் என்று நம்புவதே நியாயம்.” அதற்குப் பின் கொஞ்ச காலத்தில், நகல் எடுத்தவர்கள் கடவுளுடைய பெயருக்கு பதிலாக கைரியாஸ் (ஆண்டவர்), தியாஸ் (தேவன்) என்பவற்றை உபயோகித்ததாக தோன்றுகிறது.
[அடிக்குறிப்புகள்]
a ஆக்ஸிரின்கஸில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நாணற்புல் தாளைப் பற்றிய கூடுதலான தகவலுக்கு 1992, மே 15 தேதியிட்ட காவற்கோபுரம் இதழில் பக்கங்கள் 26-8-ஐக் காண்க.
b பண்டைய கிரேக்க மொழிபெயர்ப்புகளில் கடவுளுடைய பெயர் காணப்படும் மற்ற உதாரணங்களுக்கு பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் ஆங்கில பைபிளின் பிற்சேர்க்கையில் 1சி-ஐக் காண்க.
[பக்கம் 30-ன் படத்திற்கான நன்றி]
Courtesy of the Egypt Exploration Society