ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
எதிர்பாராத இடத்தில் கிடைத்த சத்தியம்
“எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்” வேண்டும் என்பதே கடவுளுடைய சித்தம். (1 தீமோத்தேயு 2:3, 4) இதற்காகவே யெகோவாவின் சாட்சிகள் பைபிளையும் பைபிள் அடிப்படையிலான புத்தகங்களையும் கோடிக்கணக்கில் அச்சிட்டு விநியோகிக்கிறார்கள். சில சமயங்களில், இந்தப் பிரசுரங்கள் நேர்மை இருதயமுள்ளவர்கள் கொஞ்சமும் எதிர்பாராத விதங்களில் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள உதவியிருக்கின்றன. இது குறித்து, சியர்ரா லியோனில், ஃப்ரீடெளனிலுள்ள ராஜ்ய அறிவிப்பாளர்கள் பின்வரும் அனுபவத்தைக் கூறுகின்றனர்.
ஒன்பது பிள்ளைகளுள்ள குடும்பத்தில் ஊஸ்மான் இரண்டாவது பிள்ளை. மதப்பற்றுள்ள குடும்பத்தில் வளர்ந்தவர். வழிபாட்டு ஸ்தலத்துக்கு அப்பாவோடு சேர்ந்து தவறாமல் சென்றுவந்தார். ஆனால், அவருடைய மதத்தில் நரகத்தைப் பற்றி போதிக்கப்பட்ட விஷயங்கள் அவருக்கு மிகவும் வேதனை அளித்தன. இரக்கமுள்ள ஒரு கடவுள் எப்படி பொல்லாதவர்களை நெருப்பில் வாதிப்பார் என்பதை அவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. நரக அக்கினி கோட்பாட்டை அவருக்கு புரிய வைப்பதற்கு கொடுக்கப்பட்ட எல்லா விளக்கங்களும் அவருக்கு மன சமாதானத்தை அளிக்கவில்லை.
ஊஸ்மானுக்கு 20 வயது இருக்கையில், அவர் குப்பைத்தொட்டியில் பாதி புதையுண்டு கிடந்த ஒரு நீல நிற புத்தகத்தை கவனித்தார். வாசிப்பது என்றால் ஊஸ்மானுக்கு அலாதி பிரியம். ஆகவே அதை எடுத்தார், துடைத்தார், அதன் தலைப்பை வாசித்தார்—நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம்.a
‘இது என்ன சத்தியம்?’ என்று யோசித்தார் ஊஸ்மான். அதிலுள்ளதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்ததால் அதை வீட்டுக்கு எடுத்துச் சென்றார். ஒரே மூச்சில் உடனடியாக படித்தும் முடித்தார். கடவுளுக்கு யெகோவா என்ற தனிப்பட்ட பெயர் இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தார்! (சங்கீதம் 83:17) அன்பே கடவுளுடைய மேலோங்கிய குணம் என்பதையும் அக்கினியில் மக்களை வாதிக்கும் எண்ணமே அவருக்கு அருவருப்பானது என்பதையும் அவர் தெரிந்துகொண்டார். (எரேமியா 32:35; 1 யோவான் 4:8) கடைசியாக, யெகோவா சீக்கிரத்தில் பூமியை ஒரு பரதீஸாக மாற்றுவார், அதில் மக்கள் என்றுமாக வாழ்வார்கள் என்பதை வாசித்தார். (சங்கீதம் 37:29; வெளிப்படுத்துதல் 21:3, 4) இது இரக்கமும் அன்புமிக்க ஒரு கடவுளிடமிருந்து வரும் எவ்வளவு மகத்தான சத்தியம்! எதிர்பாராத இடத்தில் சத்தியத்தைக் கண்டுபிடிக்க வாய்ப்பளித்ததற்கு ஊஸ்மான் யெகோவாவுக்கு நெஞ்சார நன்றி தெரிவித்தார்.
கொஞ்ச நாட்களுக்குப் பின், சில நண்பர்களின் உதவியோடு யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தார். முதன்முறையாக ஒரு கூட்டத்திலும் கலந்துகொண்டார். அங்கிருந்த ஒரு சாட்சியிடம் தனக்கு பைபிளை கற்றுத்தரும்படி கேட்டார். குடும்பத்தில் கடும் எதிர்ப்பு. ஆனாலும் ஊஸ்மான் தொடர்ந்து ஆவிக்குரிய விதத்தில் முன்னேறினார், முழுக்காட்டுதல் பெற்றார். (மத்தேயு 10:36) இன்று சபையில் அவர் ஒரு மூப்பராக சேவிக்கிறார். குப்பைத்தொட்டியில் ஒரு பைபிள் பிரசுரத்தைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து இந்த எல்லா காரியங்களும் நடந்தது எவ்வளவு ஆச்சரியமாக உள்ளது!
[அடிக்குறிப்பு]
a 1968-ல் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.