அவர்கள் அனைவரும் அழிந்துபோனார்கள்
“ஆழி அவர்களை மூடிக்கொண்டது; கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்துபோனார்கள்.”
பின்னால் துரத்திக் கொண்டுவந்த எகிப்திய எதிரியாகிய பார்வோன் மற்றும் அவனுடைய இராணுவத்தாரின் கைகளில் சிக்காமல் சிவந்த சமுத்திரத்தை கடந்து வந்தபோது, மோசேயும் இஸ்ரவேலரும் இந்த வெற்றிப்பாடலைப் பாடி அந்த விடுதலையைக் கொண்டாடினர்.—யாத்திராகமம் 15:4, 5.
கண்கொள்ளா அந்தக் காட்சியைக் கண்ட எவரும் பின்வரும் பாடத்தைக் கற்றுக்கொண்டிருப்பார்: எவருமே யெகோவாவின் அதிகாரத்தை எதிர்த்து சவால்விட்டு உயிரோடே இருக்க முடியாது. ஆனால் சில மாதங்களுக்குப் பின், இஸ்ரவேலரில் முக்கியமானவர்கள்—கோராகு, தாத்தான், அபிராம் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் 250 பேர்—மோசேக்கும் ஆரோனுக்கும் கடவுள் கொடுத்திருந்த அதிகாரத்தை எதிர்த்து பகிரங்கமாக சவால்விட்டனர்.—எண்ணாகமம் 16:1-3.
யெகோவா சொன்னபடி, கலகக்காரர்களின் கூடாரத்தைவிட்டு விலகிப்போகும்படி இஸ்ரவேலரை மோசே எச்சரித்தார். தாத்தான், அபிராம் ஆகியோருடைய குடும்பத்தார் அவர்களை ஆதரித்து, தங்கள் மனப்பான்மையை மாற்றிக்கொள்ள மறுத்தார்கள். இந்த மனிதர்கள் ‘யெகோவாவை அவமதித்ததை’ அவர் தமக்கே உரிய விதத்தில் அவர்களுக்கு வெளிக்காட்டுவார் என்று மோசே அறிவித்தார். அப்படிச் சொல்லி முடித்தவுடன் அவர்கள் நின்றிருந்த நிலத்தை யெகோவா பிளந்தார். “அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது.” கோராகுக்கும் மற்ற கலகக்காரர்களுக்கும் என்ன நடந்தது? “அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, தூபங்காட்டின இருநூற்று ஐம்பது பேரையும் பட்சித்துப்போட்டது.”—எண்ணாகமம் 16:23-35; 26:10.
யெகோவாவின் அதிகாரத்தையும், அவருடைய மக்களின் விவகாரங்களில் அவருக்குள்ள அக்கறையையும் ஏற்றுக்கொள்ள தவறியதாலேயே பார்வோனும் அவனுடைய படைகளும் சரி, வனாந்தரத்தில் அந்தக் கலகக்காரர்களும் சரி அழிந்துபோனார்கள். ஆகவே இந்தக் கடினமான காலங்களில் யெகோவாவின் பாதுகாப்பைப் பெற விரும்பும் அனைவரும் யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்வதும் ‘மகா உன்னதமானவராகவும்’ ‘சர்வ வல்லமையுள்ளவராகவும்’ இருக்கும் அவருக்குக் கீழ்ப்படிவதும் அவசரமாகும். அப்படி செய்கையில் யெகோவாவின் பின்வரும் இந்த வார்த்தைகளைக் குறித்து அவர்கள் உறுதியாக இருக்கலாம்: “உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய். ‘யெகோவா என் அடைக்கலமானவர்’ என்று நீ சொன்னதால், மகா உன்னதமானவரையே உனக்கு வாசஸ்தலமாக கொண்டாய்.”—சங்கீதம் 91:1, 7-9; NW.