உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w02 6/15 பக். 30-31
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • இதே தகவல்
  • உலகளாவிய பிரச்சினை
    விழித்தெழு!—2001
  • தற்கொலை—இளைஞர் படும் பாடு
    விழித்தெழு!—1998
  • ஏன் உயிரை துறந்துவிடுகின்றனர்
    விழித்தெழு!—2001
  • சவ அடக்க பழக்கவழக்கங்களைப் பற்றிய கிறிஸ்தவ கருத்து
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
w02 6/15 பக். 30-31

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

தற்கொலை செய்துகொண்டவருடைய சவ அடக்கத்தின் போது ஒரு கிறிஸ்தவ ஊழியர் பேச்சு கொடுக்கலாமா?

தற்கொலை செய்துகொண்டதாக தோன்றும் ஒருவருடைய சவ அடக்கத்தின் போது கடவுளுக்கு முன்பாக சுத்தமான மனசாட்சியுடன் பேச்சுக் கொடுக்க முடியுமா என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவ ஊழியரும் தனிப்பட்ட விதத்தில் தீர்மானிக்க வேண்டும். அப்படி தீர்மானிக்கையில், பின்வரும் கேள்விகளை அவர் கலந்தாராய வேண்டும்: தற்கொலையை யெகோவா எவ்வாறு கருதுகிறார்? அது உண்மையிலேயே வேண்டுமென்று செய்துகொண்ட தற்கொலையா? அந்தத் தற்கொலைக்கு மனக்கோளாறோ அல்லது உணர்ச்சிப்பூர்வமான கோளாறோ காரணமா? பொதுவாக உள்ளூர்க்காரர்கள் தற்கொலையை எப்படி கருதுகிறார்கள்?

தற்கொலையை யெகோவா எப்படி கருதுகிறார் என்பதிலேயே கிறிஸ்தவர்களாகிய நாம் ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறோம். யெகோவாவைப் பொருத்த வரை மனித உயிர் அருமையானது, பரிசுத்தமானது. (ஆதியாகமம் 9:5; சங்கீதம் 36:9) வேண்டுமென்றே தன்னை மாய்த்துக்கொள்வது, தன்னையே கொலை செய்துகொள்வதாக உள்ளது; எனவே அது யெகோவாவுக்குப் பிரியமில்லாதது. (யாத்திராகமம் 20:13; 1 யோவான் 3:15) இதனால் தற்கொலை செய்துகொண்டவரின் சவ அடக்கத்தின் போது பேச்சு கொடுப்பது தவறா?

இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலைப் பற்றி சற்று சிந்தியுங்கள். பெலிஸ்தருக்கு எதிராக அவர் நடத்திய கடைசி யுத்தத்தில், இனி பிழைக்கப் போவதில்லை என்பதை அவர் அறிந்தபோது, எதிரி தன்னை கொடுமையாய் நடத்தாமலிருக்கும்படி ‘சவுல் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தார்.’ பெலிஸ்தர் அவருடைய பிணத்தைக் கண்டபோது பெத்சானின் அலங்கத்தில் தொங்கவிட்டார்கள். பெலிஸ்தர்கள் செய்ததை அறிந்த கீலேயாத் தேசத்து யாபேஸின் குடியினர், சடலத்தை எடுத்து அதை எரித்தார்கள். பின்னர் அவர்கள் அவருடைய எலும்புகளை எடுத்து அவற்றை அடக்கம் செய்தார்கள். பிறகு, அவர்கள் இஸ்ரவேலர் பின்பற்றிய பாரம்பரிய முறைப்படி ஏழு நாளைக்கு உபவாசமும் இருந்து துக்கம் அனுஷ்டித்தார்கள். (1 சாமுவேல் 31:4, 8-13; ஆதியாகமம் 50:10) கீலேயாத் தேசத்து யாபேஸின் குடிகள் செய்ததை யெகோவாவால் அபிஷேகம் செய்யப்பட்ட தாவீது அறிந்தபோது “நீங்கள் உங்கள் ஆண்டவனாகிய சவுலுக்கு இந்தத் தயவைச் செய்து, அவரை அடக்கம் பண்ணினபடியினாலே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் உங்களைக் கிருபையும் உண்மையுமாய் நடத்துவாராக” என சொன்னார். (2 சாமுவேல் 2:5, 6) அந்திமச் சடங்காக கருதப்பட்டதை சவுல் ராஜாவுக்கு செய்ததற்காக கீலேயாத் தேசத்து யாபேஸின் குடிகள் கண்டிக்கப்பட்டதாக பைபிள் குறிப்பிடுவதில்லை. தங்கள் தவறுகளின் காரணமாக சவ அடக்கம் செய்யப்படாதவர்களின் காரியத்துடன் இதை ஒப்பிட்டுப் பாருங்கள். (எரேமியா 25:32, 33) தற்கொலை செய்துகொண்டவருக்கு சவ அடக்க பேச்சை கொடுப்பதா வேண்டாமா என்பதை தீர்மானிப்பதற்கு ஒரு கிறிஸ்தவ ஊழியர் சவுல் பற்றிய பைபிள் விவரப் பதிவை சிந்தித்துப் பார்க்கலாம்.

சவ அடக்க பேச்சின் நோக்கத்தையும் அந்த ஊழியர் யோசித்துப் பார்க்க விரும்பலாம். யெகோவாவின் சாட்சிகள், ஆத்துமா அழியாது என்ற நம்பிக்கையுள்ள ஆட்களைப் போல், மரித்தவர் வேறொரு உலகிற்கு சென்றுவிட்டார் என்ற தவறான கருத்துடன் சவ அடக்கங்களை நடத்துவதில்லை. சவ அடக்க பேச்சு கொடுக்கப்படுவதற்கான முக்கிய காரணம் மரித்தவர் பயனடைவதற்காக அல்ல; மாறாக, துக்கிப்போருக்கு ஆறுதல் அளிப்பதற்கும், வந்திருப்போருக்கு மரித்தவரின் நிலை பற்றி சாட்சி கொடுப்பதற்குமே. (பிரசங்கி 9:5, 10; 2 கொரிந்தியர் 1:3-5) வந்திருக்கும் அனைவரையும் வாழ்க்கை நிலையற்றது என்பதைக் குறித்து சிந்திக்க வைப்பது சவ அடக்க பேச்சு கொடுப்பதற்கு மற்றொரு முக்கியமான காரணம். (பிரசங்கி 7:2) தற்கொலை செய்துகொண்டவரின் சவ அடக்கத்தின் போது பேச்சு கொடுக்கையில் அது இந்த நோக்கங்களை பூர்த்தி செய்யுமா?

யெகோவாவுக்கு விரோதமாக பாவம் செய்வதை முழுமையாக அறிந்திருந்தும் வேண்டுமென்றே அவர் தற்கொலை செய்துகொண்டதாக சிலர் உண்மையில் நினைக்கலாம். ஆனால் அத்தகைய கருத்தை எப்போதுமே உறுதிப்படுத்த முடியுமா? திடீரென ஏற்பட்ட ஏதோவொரு உணர்ச்சி தூண்டுதலால் அது நிகழ்ந்ததாக இருக்குமா? தற்கொலைக்கு முயற்சி செய்த சிலர் தங்கள் மனதை மாற்றிக்கொண்டு அதை தவிர்த்திருக்கிறார்கள். தன் செயலுக்காக ஒருவர் மரணத்திற்குப் பின் வருந்த முடியாது.

மனக்கோளாறும் உணர்ச்சிப்பூர்வ கோளாறும் அநேக தற்கொலைகளுக்கு வழிநடத்துகிற மற்றொரு முக்கிய அம்சம். இவர்களை உண்மையில் தற்கொலைக்கு பலியானவர்கள் என அழைக்கலாம். சில புள்ளிவிவரங்களின்படி, தற்கொலை செய்துகொள்ளும் 90 சதவீதமானோருக்கு ஒருவித மன, உணர்ச்சி, போதை சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கிறது. இத்தகைய மனநிலையில் உள்ளவர்கள் தங்களையே மாய்த்துகொள்ளுகையில் யெகோவா மன்னிப்பாரா? யெகோவாவைப் பொருத்தவரை மரித்தவர் மன்னிக்க முடியாத குற்றத்தை செய்தாரா இல்லையா என்பதை நம்மால் தீர்மானிக்க முடியாது. தற்கொலை செய்துகொண்டவருக்காக சவ அடக்க பேச்சைக் கொடுக்கலாமா என்பதைக் குறித்து கிறிஸ்தவ ஊழியர் சிந்திக்கையில் மரித்தவரின் சூழ்நிலையையும் மருத்துவ பதிவையும் கவனத்தில் கொள்ளலாம்.

சிந்திப்பதற்கு மற்றுமொரு அம்சம் உள்ளது: தற்கொலையையும் அந்த நபரின் மரணத்தையும் உள்ளூர்க்காரர்கள் எப்படி கருதுகிறார்கள்? யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபையின் நற்பெயரின் மீது அக்கறையுள்ள மூப்பர்களுக்கு இது அதிக முக்கியமானது. தற்கொலையைக் குறித்து, அதுவும் இந்தத் தற்கொலையைக் குறித்து பொதுவாக உள்ளூரில் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பொருத்து சவ அடக்க பேச்சை பொதுவில் அல்லது ராஜ்ய மன்றத்தில் கொடுக்காதிருக்க மூப்பர்கள் தீர்மானிக்கலாம்.

இதன் பின்னரும் சவ அடக்க பேச்சு கொடுக்கும்படி ஒரு கிறிஸ்தவ ஊழியரை மற்றவர்கள் கேட்கையில் சபையின் சார்பாக அல்லாமல் தனிப்பட்ட விதத்தில் ஒப்புக்கொள்ள நினைக்கலாம். அப்படி அவர் ஒப்புக்கொண்டால் உயிர்த்தெழுதல் உண்டா இல்லையா என்பதைக் குறித்து திட்டவட்டமான எந்தக் குறிப்புகளையும் சொல்லாதிருப்பதில் விவேகத்தைக் காட்ட வேண்டும். மரித்தவருடைய எதிர்கால வாழ்க்கை யெகோவாவின் கைகளில் உள்ளது; மரித்தவர் உயிர்த்தெழுப்பப்படுவாரா, மாட்டாரா என யாரும் சொல்ல முடியாது. மரணத்தைப் பற்றிய பைபிள் சத்தியங்களைப் பற்றி சொல்லி, துக்கிப்பவர்களுக்கு ஆறுதல் அளிப்பதில் அவர் கவனம் செலுத்தலாம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்