இரகசியத்தை வெளிப்படுத்த ஒரு நேரம்
சில இரகசியங்களை காத்துக்கொள்வது சமாதானத்தை உண்டாக்கி சச்சரவை தவிர்க்கலாம். ஆனால் இரகசியத்தை வெளிப்படுத்த ஒரு நேரம் உண்டா? தன்னுடைய தேவனைப் பற்றி ஆமோஸ் தீர்க்கதரிசி சொல்வதை கவனியுங்கள்: “கர்த்தராகிய [“யெகோவாவாகிய,” NW] ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.” (ஆமோஸ் 3:7) இரகசியம் சம்பந்தமாக ஒரு விஷயத்தை இந்த வார்த்தைகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். குறிப்பிட்ட காலத்திற்கு யெகோவா தமது இரகசியங்கள் சிலவற்றை வெளிப்படுத்தாமல் வைத்திருந்து கடைசியில் அவற்றை சிலருக்கு வெளிப்படுத்தலாம். இந்த விஷயத்தில் நாம் எவ்வாறு யெகோவாவை பின்பற்றலாம்?
சில சமயங்களில், ஒரு விஷயத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதை கிறிஸ்தவ சபையிலுள்ள நியமிக்கப்பட்ட மேய்ப்பர்கள் பயனுள்ளதாக கருதலாம். (அப்போஸ்தலர் 20:28) உதாரணமாக, சபையாருடைய நன்மையை மனதிற்கொண்டு, சில ஏற்பாடுகளை அல்லது சபை பொறுப்புகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றிய தகவல்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வெளிப்படுத்தாமல் மூடி வைப்பதற்கு தீர்மானிக்கலாம்.
ஆனால், இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், ஒரு விஷயத்தை வெளிப்படுத்தலாமா, எப்பொழுது, எப்படி என்பதை சம்பந்தப்பட்டவர்களிடம் தெளிவாக சொல்வது முக்கியம். எப்பொழுது ஒரு விஷயம் பொதுப்படையாக வெளிப்படுத்தப்படும் என்பதை அறிந்திருப்பது இரகசியத்தைக் காத்துக்கொள்ள அவர்களுக்கு உதவலாம்.—நீதிமொழிகள் 25:9.