“ஏன் பணத்தை கொண்டுவந்து தருகிறேன் தெரியுமா?”
‘எனக்கு உண்மையிலேயே கொஞ்சம் பணம் வேண்டுமே!’ என நினைத்தார் நானா. இவர் ஜார்ஜியா குடியரசில் காஸ்பி மாவட்டத்தில் வசிக்கும் மூன்று பையன்களின் தாய், கணவர் இல்லை. பணம் வேண்டும் என்ற அவளுடைய கனவு ஒருநாள் காலை நனவானது. 300 லாரியை போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் அவள் கண்டெடுத்தாள். அக்கம்பக்கத்தில் யாருமே இல்லை. இது கணிசமான ஒரு தொகை. சொல்லப்போனால், லாரி நேஷனல் கரன்ஸியாக ஆனதிலிருந்து கடந்த ஐந்து வருடங்களில் ஒருமுறைகூட நானா 100 லாரி நோட்டை கண்ணில் கண்டதில்லை. பல வருடங்களுக்கு உழைத்தாலும் உள்ளூர் வியாபாரிகள் இவ்வளவு பணம் சம்பாதிக்க மாட்டார்கள்.
‘இந்தப் பணத்தினால் என்னுடைய விசுவாசத்தை, தேவ பயத்தை, ஆன்மீகத்தை இழக்கப்போகிறேன் என்றால், இது எதற்கு?’ என நானா யோசித்தாள். தன்னுடைய விசுவாசத்திற்காக கடுமையான துன்புறுத்துதலையும் அடி உதைகளையும்கூட சகித்து இதுபோன்ற கிறிஸ்தவ குணங்களை வளர்த்திருந்தாள்.
அவள் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றபோது, ஐந்து அதிகாரிகள் எதையோ அரக்கப்பரக்க தேடிக்கொண்டிருப்பதை நானா கண்டாள். இந்தப் பணத்தைத்தான் அவர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள் என்பதை உணர்ந்துகொண்டாள். ஆகவே அவர்களிடம் சென்று, “நீங்கள் எதையாவது தொலைத்துவிட்டீர்களா?” என்று கேட்டாள்.
“பணத்தை தொலைத்துவிட்டோம்” என அவர்கள் பதிலளித்தார்கள்.
“எவ்வளவு?”
“முந்நூறு லாரி!”
“உங்களுடைய பணத்தை நான் கண்டெடுத்தேன்” என நானா கூறினாள். பின்பு அவர்களிடம், “ஏன் பணத்தை கொண்டுவந்து தருகிறேன் தெரியுமா?” என கேட்டாள். அவர்களுக்கோ தெரியவில்லை.
“ஏனென்றால் நான் ஒரு யெகோவாவின் சாட்சி” என சொன்னாள். “நான் ஒரு யெகோவாவின் சாட்சியாக இல்லாவிட்டால், உங்களுடைய பணத்தை திரும்ப கொண்டுவந்திருக்க மாட்டேன்” என்றாள்.
பணத்தை தொலைத்த அந்த தலைமை போலீஸ் அதிகாரி, அவளுடைய நேர்மையான நடத்தையைப் பாராட்டி நானாவுக்கு 20 லாரி கொடுத்தார்.
இந்தச் செய்தி காஸ்பி மாவட்டம் பூராவும் வேகமாக பரவியது. அடுத்த நாள், போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வெளியே வந்த ஒரு வேலைக்காரி நானாவிடம் இவ்வாறு கூறினாள்: “[அந்தத் தலைமை அதிகாரி] உங்களுடைய புத்தகங்களை எப்பொழுதும் அவருடைய ஆபீஸில் வைத்திருக்கிறார். முன்பைவிட இப்பொழுது அதற்கு அதிக மதிப்பு மரியாதை காட்டுவாரென்று நினைக்கிறேன்.” ஒரு போலீஸ் அதிகாரி, “எல்லாரும் யெகோவாவின் சாட்சிகளாக இருந்தால், குற்றச்செயல்களில் யார் ஈடுபடுவார்கள்?” என்றுகூட சொன்னார்.